வியாசர்பாடியில் செல்போன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது…!!
வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரில் செல்போனில் ரீசார்ஜ் கடை நடத்தி வருபவர் கார்த்திக். இவரது கடைக்கு வியாசர்பாடி கென்னடி நகரை சேர்ந்த ஊமை கார்த்திக், செந்தமிழன் ஆகிய 2 பேர் வந்து செல்போனில் ரீசார்ஜ் செய்ய சொன்னார்கள். அதற்கான பணத்தை கார்த்திக் கேட்டார். ஓசியில் ரீசார்ஜ் செய்யுமாறு கூறி கார்த்திக்கிடம் தகராறு செய்தனர். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ஊமை கார்த்திக், செந்தமிழன் ஆகியோர் அரிவாளால், கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை, கழுத்தில் வெட்டு விழுந்தது. உடனே 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் மன்னர்மன்னன் உத்தரவின்பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஊமை கார்த்திக், செந்தமிழனை கைது செய்தனர்.