ராணுவத்துடன் நடந்த சண்டையில் 40 விடுதலைப்புலிகள் பலி

Read Time:6 Minute, 9 Second

ltte-Sl.army-l.jpgஇலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று நடந்த சண்டையில் 40 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் தங்கள் தரப்பில் 5 வீரர்கள் பலி ஆனதாகவும் ராணுவம் தெரிவித்து உள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. திரிகோணமலை மாவட்டம் சேருநுவராய் என்ற இடத்தில் நேற்று முன்தினம் விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் வீரர்கள் 18 பேர் பலி ஆனார்கள்.

திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மாவிலாறு என்ற இடத்தில் உள்ள அணைக்கட்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்டு அங்கிருந்து தண்ணீர் திறந்து விடும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது.

திரிகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நேற்று 8-வது நாளாக இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. தரைவழி தாக்குதலிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

பீரங்கி குண்டுகள் வீச்சு

விடுதலைப்புலிகளும் பதிலடி தாக்குதல் நடத்தினார்கள். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் நேற்று அதிகாலை விடுதலைப்புலிகள் அதிரடியாக ஊடுருவி குண்டுகளை வீசினார்கள். கட்டைபறிச்சான், காந்திநகர், பாலதோப்பூர், பாச்சானூர், மகிந்தபுரா ஆகிய இடங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது அவர்கள் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

சேதம்

மூதூர் என்ற இடத்தில் உள்ள முகாம் மீதும் குண்டுகளை வீசினார்கள். மேலும் ராணுவத்துடன் நேரடி மோதலிலும் ஈடுபட்டனர். விடுதலைப்புலிகள் வீசிய பீரங்கி குண்டு ஒன்று மூதூர் ஆஸ்பத்திரியின் அருகே விழுந்தது. அங்கு இருதரப்பினருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் சண்டை நடந்தது. இதில் மூதூர் துறைமுகம் சேதம் அடைந்தது.

40 விடுதலைப்புலிகள் பலி

போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியதிலும், துப்பாக்கி சண்டையிலும், விடுதலைப்புலிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 70 பேர் காயம் அடைந்ததாகவும், தங்கள் தரப்பில் 5 வீரர்கள் பலியானதாகவும் இலங்கை ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

மூதூர் ஆஸ்பத்திரி அருகே விடுதலைப்புலிகள் வீசிய பீரங்கி குண்டு விழுந்து வெடித்ததில் கடற்படை வீரர்கள் 3பேர் பலியானதாகவும், மேலும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த குண்டு வீச்சில் ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் உள்பட பொதுமக்கள் 2 பேர் உயிர் இழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ராணுவ முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 24 பேர் காயம் அடைந்ததாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. போரின் காரணமாக மூதூரில் இருந்து பலர் வெளியேறி இருக்கிறார்கள்.

இலங்கை அரசு மறுப்பு

கட்டைபறிச்சான், காந்திநகர், பாலதோப்பூர், பாச்சானூர், மகிந்தபுரா உள்ளிட்ட 17 ராணுவ முகாம்களை தாங்கள் கைப்பற்றி விட்டதாக விடுதலைப்புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மூதூர் நகருக்குள் அவர்கள் 1 கிலோ மீட்டர் தூரம் முன்னேறி விட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலை இலங்கை தேசிய பாதுகாப்பு துறை தகவல் மையம் மறுத்து உள்ளது. மேற்கண்ட முகாம்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக அந்த மையம் தெரிவித்து இருக்கிறது.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நேற்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் டெலிபோனில் பேசினார். அப்போது திரிகோணமலை மாவட்டத்தில் தற்போது உள்ள நிலவரம் குறித்து விளக்கி கூறினார்.

போர்நிறுத்த கண்காணிப்பு குழு

விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் மோதல் நிச்சயமாக அவர்களுக்குள் போர் ஏற்பட்டு விட்டதைப் போன்றே உள்ளது என்றும் பதட்டத்தை தணிப்பதற்கான முயற்சியை இருதரப்பினரும் மேற்கொள்வதாக தெரியவில்லை என்றும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ltte-Sl.army-l.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 12 ஆயிரம் இஸ்ரேல் வீரர்கள் லெபனானுக்குள் புகுந்து தாக்குதல்: ஏவுகணை வீசி தீவிரவாதிகள் பதிலடி
Next post லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 7 பேர் பரிதாப பலி