By 16 July 2016 0 Comments

சேலத்தில் ராக்கிங் கொடுமை: மாடியில் இருந்து குதித்த மாணவர்…!!

201607161202320851_student-jumps-from-terrace-over-struggling-with-ragging_SECVPFசேலம் உடையாப்பட்டி பகுதியில் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.

இந்த கல்லூரியில் தர்மபுரி மாவட்டம் பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் கோகுல்ராஜ் விடுதியில் தங்கி (வயது 18)பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக சீனியர் மாணவர்கள் அவரிடம் ராக்கிங்கில் ஈடுபட்டனர். அப்போது எல்லை மீறிய அந்த மாணவர்கள் கோகுல் ராஜின் பேண்டை கழற்றினர். பின்னர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். சினிமா பாணியில் ஜட்டியுடன் டான்ஸ் ஆட சொல்லி வற்புறுத்தினர்.

வெட்கத்தில் கூனி, குறுகி போன கோகுல்ராஜ் கதறி அழுதார்.அதை பொருட்படுத்தாத 4 மாணவர்களும் சேர்ந்து அவரை தொடர்ந்து டான்ஸ் ஆட சொல்லி வற்புறுத்தி திட்டினர்.

இதில் மனம் உடைந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த கோகுல்ராஜ் வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து விடுதியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் கோகுல்ராஜின் 2 கால்களும் முறிந்தது. முதுகு தண்டும் பாதித்ததால் அவர் வலியால் அலறி துடித்தார்.

அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த மாணவனின் பெற்றோர் கதறி துடித்தனர்.

சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் ராக்கிங்கில் ஈடுபட்ட அதே கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படிக்கும் மாணவரான விழுப்புரம் மாவட்டம் அய்யனார்புரத்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர்(21), பி.எஸ்.சி.2–ம் ஆண்டு மாணவர்களான தர்மபுரி மாவட்டம் கோணம்பட்டியை சேர்ந்த பூபதி (19), தர்மபுரி மாவட்டம் பள்ளிபட்டியை சேர்ந்த பாலாஜி (20), அரியலூர் மாவட்டம் ரெட்டிபுத்தூரை சேர்ந்த ஆஜித்கரன் (20) மற்றும் சேலத்தை சேர்ந்த விடுதி வார்டன் கிருஷ்ணமூர்த்தி (45) ஆகிய 5 பேரையும் கைது செய்தார்.

பின்னர் கைதான 5 பேரையும் சேலம் 5-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மாணவர்கள் 4 பேரையும் ராசிபுரம் கிளை சிறையிலும், வார்டனை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

இதற்கிடையே மாணவனின் தந்தை சிவலிங்கம் கண்ணீருடன் கூறியதாவது:-

மகன் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி தான் விடுதியில் சேர்த்து விட்டேன். அன்றிருந்தே எனது மகனுக்கு விடுதியில் படிக்கும் மாணவர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களின் அறைக்கு சென்று மதுகுடிக்க வலியுறுத்தினர். மதுகுடிக்கும் பழக்கம் இல்லை என்றதால் அடித்து உதைத்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக டார்ச்சர் செய்த அவர்கள் பேண்டை கழற்றி வைத்து டான்ஸ் ஆட வற்புறுத்தினர். அதனை செல்போனிலும் பதிவு செய்து அவர்கள் அழைக்கு போதெல்லாம் வந்து டான்ஸ் ஆடாவிட்டால் செல்போனில் பதிவு செய்துள்ள அரை நிர்வாண டான்சை வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர்.

இதனால் அவமானம் அடைந்த எனது மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகத்தினர் அங்கு வந்து பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.Post a Comment

Protected by WP Anti Spam