By 17 July 2016 0 Comments

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “புலிகள் இனவாதிகள்”.. இந்திய பத்திரிகையாளர் நிருபாமா தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-6)

timthumb2002 ம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நோர்வே வெளியுறவு அமைச்சருடன் எரிக் சோல்கெய்ம் கொழும்பு வருகிறார்.

இவர்களின் பிரதான நோக்கம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை ஏற்படுத்துவதாகும். நோர்வே தரப்பினர் ஏற்கெனவே அதற்கான நகலை இரு தரப்பினருடனும் பேசிய அடிப்படைகளை வைத்து தயாரித்திருந்தனர்.

லண்டனில் பாலசிங்கத்துடன் நடத்திய உரையாடலின் பின்னணியில் விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ் ஒப்பந்தம் வவுனியாவில் 22-2-2002 இல் பகிரங்கமாக கைச்சாத்திடப்பட்டது.

இவ் ஒப்பந்த தயாரிப்பின்போது பல சிக்கல்களைத் தாம் எதிர்நோக்கியதாக சோல்கெய்ம் கூறுகிறார்.

தனக்கு ஒப்பந்தம் தொடர்பான சட்ட நுணுக்கங்கள் தெரியாததால் நோர்வே வெளியறவு அமைச்சு அதற்கான உதவிகளை வழங்கியது.

அத்துடன் அந் நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் அனுபவங்களும் பெறப்பட்டது.

இதன் காரணமாக இவ் அமைச்சின் அதிகாரிகள் இருவர் பின்னர் கண்காணிப்புக் குழுவின் தலைவர்களானார்கள்.

போர் நிறுத்தம் குறித்து இரு தரப்பிலும் அதிக ஆர்வம் காட்டப்பட்டது. இருப்பினும் ராணுவம் சில அம்சங்களில் அதாவது பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் அணுகுமுறைகளில் சில வரம்புகளை விதித்தது. அவற்றை பாலசிங்கம் ஏற்றுக்கொண்டார்.

உதாரணமாக சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ராணுவம் தடை விதித்தது.

ஓப்பந்தம் முதலில் பிரபாகரனிடம் கொடுக்கப்பட்டு கைச்சாத்து பெறப்பட்டது.

இதற்காக நோர்வே தூதுவர் 21-02-2002 இல் கிளிநொச்சி சென்று பெற்றுக்கொண்டார். இப் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் எதுவும் ஜனாதிபதி சந்திரிகாவிற்குத் தெரியப்படுத்திவில்லை.

இரு சாராரும் அதனை விரும்பவில்லை.

குறிப்பாக புலிகள் சந்திரிகா மீது நம்பிக்கையற்று இருந்தனர். ஆனால் சந்திரிகாவை இவற்றில் சம்பந்தப்படுத்தாதது மிகப் பெரும் தவறு என தற்போது சோல்கெய்ம் கருதுகிறார்.

பேர்னார்ட் குணதிலகா கூறுகையில் அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகள் பல தடவைகள் இடம்பெற்ற போதிலும் அவை இரு நிறுவனங்களுக்கிடையேயானதாக இல்லை.

சமாதானத்திற்கான வளங்களைக் கொண்ட செயலகம் இரு தரப்பிலும் இருந்ததில்லை. அரசு இதனை உணர்ந்த காரணத்தால் சமாதான செயலகம் ஒன்றை அமைக்கும்படி என்னைக் கோரினர்.

புலிகள் தரப்பில் பாலசிங்கமே முழுப் பேச்சுவார்த்தைகளிலும் காணப்பட்டார்.

இவ் ஒப்பந்தம் குறித்து இந்திய தூதுவர் தெரிவிக்கையில் நோர்வே – இலங்கை அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் தாம் பங்குபற்றாத போதிலும் சந்திரிகா, கதிர்காமர் ஆகியோருடன் தாம் பேசியதாக கூறுகிறார்.

தனது சந்தேகங்களுக்கு மத்தியிலும் அவர்கள் ஒப்பந்தம் செயற்பட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தியதாக குறிப்பிடுகிறார்.

ஒப்பந்தம் தொடர்பாக இந்தியப் பத்திரிகையாளர் நிருபாமா சுப்ரமணியம் தெரிவிக்கையில்

விடுதலைப்புலிகள் என்பது ஒட்டுமொத்தமான பாசிச அமைப்பு எனவும், அவர்கள் தமிழீழம் என்ற தனிநாட்டை கட்டுப்படுத்தினால் அது பெரும் அழிவில்தான் முடியும்.

EPDP. TELO போன்ற அமைப்புகளின் ஆயுதங்களைக் களைவது புலிகளை ஏக பிரதிநிதியாக மாற்றுவதற்கான முயற்சி எனவும், போர் நிறுத்தம் நாட்டை இரு கூறாக்குவதோடு, புலிகளும் அரசும் சமமான தரத்தில் காட்ட முற்படுவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் ரணில் யாழ்ப்பாணம் சென்றபோது பலத்த வரவேற்பு காணப்பட்டது.

கிறிஸ்ரினா ரோக்கா

இச் சந்தர்ப்பத்தில் அமெரிக்க தென்னாசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரோக்கா (Christina Rocca ) அவர்கள் ரணிலைச் சந்திக்க யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அப்போது அங்குள்ள நிலமைகளை அவதானித்த பின் புலிகள் குறித்து மிகவும் கடுமையான தொனியில் பேசினார்.

பயங்கரவாதத்தைக் கைவிடுவதோடு, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட சகல அம்சங்களையும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், தமிழீழம் என்பது பொருத்தமற்றது, அடைய முடியாதது என்பதால் அதனைக் கைவிட வேண்டும்.

அவ்வாறு செய்தால் தடைகளை நீக்குவது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த பாலசிங்கத்தினை மீண்டும் இலங்கைக்கு அழைக்க முடிவுகள் செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு சென்னையில் அவரைத் தங்க வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மாலைதீவு வழியாக கடல் விமானத்தில் அவர் வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

இச் சந்தர்ப்பத்தில் தாய்லாந்து அரசு தனது நாட்டில் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புதல் அளித்திருந்தது.

2002 ம் ஆண்டு ஏப்ரல் 10ம் திகதி பிரபாகரன் முதன்முதலாக சுமார் 12 வருடங்களுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க தயாராகிறார்.

அரசாங்கம் மிக நீண்ட காலமாக யு9 பாதையை மூடியிருந்ததால் அங்குள்ள நிலமைகள் குறித்து மக்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.

பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விதம், அவர்களை நடத்திய விதம், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட விதம் குறித்து பல வர்ணனைகள் பின்னர் வெளியாகின.

மேற்குலக பெண் பத்திரிகையாளர் இது குறித்து தெரிவிக்கையில் பிரபாகரன் யாரையும் கவரவில்லை. பெரும் தொகையானோரைக் கண்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்த போதும் அம் மாநாட்டினை பாலசிங்கமே நடத்தினார் என்கிறார்.

பிரபாகரன் சுருக்கமாக கூற பாலசிங்கம் விபரிப்பதாக அமைந்திருந்தது.

ஆனால் நிருபாமா சுப்ரமணியத்தின் பார்வை வேறுவிதமாக அமைந்திருந்தது.

“புலிகள் இனவாதிகள். முழு உலகமும் வன்னியில் இருப்பதாக உணர்ந்தார்கள். வெள்ளை இனப் பத்திரிகையாளர்கள் தரமான தங்குமிடங்களில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்திய ஆண் பத்திரிகையாளர்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். சுமார் 3 பெண் பத்திரிகையாளர்கள் பங்கர்களில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

மேற்குலக பத்திரிகையாளர்களையும், தென்னாசிய பத்திரிகையாளர்களையும் வேறுபடுத்தி நடத்திய விதம் புலிகளின் போக்கை உணர்த்தியதாக குறிப்பிடுகிறார்.

அத்துடன் அவர்கள் இந்திய ஆதரவை விட மேற்குலக ஆதரவையே எதிர்பார்க்கிறார்கள் என்பதும் புரிந்தது.

இச் சந்திப்பில் இந்தியப் பத்திரிகையாளர்களே அதிகளவில் இருந்தனர். ராஜிவ் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள்? எனக் கேட்டபோது அது முடிந்த கதை என பாலசிங்கம் தெரிவித்தார்.

நீங்கள் உங்களைத் தமிழீழத்தின் தலைவராக கருதுவீர்களாயின் இத்தனை கறுப்புக் கண்ணாடி அணிந்த அடியாட்கள் ஏன்? என இந்தியப் பத்திரிகையாளர் கேட்டபோது பலரும் அதிர்ந்து போனார்கள்?

கேள்விகளும், பிரபாகரனின் பதில்களும், பாலசிங்கத்தின் விளக்கங்களும் பேச்சுவார்த்தைகள் மூலமாக நிரந்தர தீர்வை எட்டுவது என்பது வெகு தூரத்தில் காணப்படுவதாக கலந்துகொண்ட தமிழ் தெரிந்த பத்திரிகையாளர்கள் சிலரின் அபிப்பிராயமாக இருந்தது.

தொடரும்…Post a Comment

Protected by WP Anti Spam