மாணவியை துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குடும்பஸ்த்தர் கைது…!!
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த 22 வயதுடைய குடும்பஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதோடு, சந்தேக நபரை அப்பகுதியைச் சேர்ந்த மக்களே பொலிஸாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
திஸ்பனை பகுதியில் இருந்து ஆகரா தோட்டத்திற்கு சென்று தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை சந்தேக நபர் பின் தொடர்ந்ததுடன் மாணவியை வன்புணர்வுக்கு முயற்சித்த போது அப்பாதையின் ஊடாக சென்ற சிலரால் மாணவி காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை பிடிக்க முயற்சித்தபோதும் சந்தேக நபர்தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் அப்பகுதிக்கு சென்று மேற்படி நபரை பிடிக்க முயற்சித்த போது சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகியுள்ளார்.
சந்தேக நபர் தனது வீட்டுக்கு வருவதை கண்டதையடுத்து பொதுமக்கள் சுற்றிவளைத்து முடக்கியதோடு அவரை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சம்பந்தபட்டவரின் உடம்பில் காயங்கள் காணப்பட்டதால் அவரை பொலிஸாரின் பாதுகாப்பில் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுசிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாணவி தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு குறித்த நபரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.