நிஷாவின் ஆணையும் அடங்கும் கூட்டமைப்பும்…!!

Read Time:15 Minute, 13 Second

article_1468987530-prujothஅமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய பிரத்தியேக அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்துக் கொள்ளும் அளவுக்கான ஆர்வத்தோடு இருக்கின்றார். அவர், கடந்த 20 மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள், இலங்கை வந்து சென்றிருக்கின்றார். அண்மைய காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அதிக நேசத்தோடு அழைக்கப்படும் இராஜதந்திரியாகவும் அவர் இருக்கின்றார். பல நேரங்களில் அவர், வெளிநாட்டு இராஜதந்திரி என்கிற நிலைகள் கடந்து உள்ளூர் அரசியல்வாதி போல வலம் வருகின்றார். அவரை கோயில்களிலும், விகாரைகளிலும் காண முடிகின்றது. ஏன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட காண முடிகின்றது.

அமெரிக்காவினால் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் களமிறக்கப்பட்ட வெற்றிகரமான இராஜதந்திரியாக நிஷா தேசாய் பிஸ்வாலை கொள்ள முடியும். குறிப்பாக, இலங்கை விடயங்களில் அவர் பாரிய அடைவுகளைப் பதிவு செய்திருக்கின்றார். இலங்கை மீதான சர்வதேசத்தின் பிடியை தேவைக்கு ஏற்ப இறுக்கியும் தளர்த்தியும் வைத்துக் கொள்வதில் அமெரிக்கா எப்போதுமே கவனமாக இருந்து வருகின்றது. தன்னுடைய ஆளுகையை மீறி இலங்கை செல்கின்ற போதெல்லாம் அமெரிக்கா, சர்வதேசத்தின் பிடியை அழுத்தமாக இறுக்கியிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்கொண்ட அழுத்தங்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் போக்கில் நிகழ்ந்தவை. இன்றைக்கு, மைத்திரி-ரணில் ஆட்சி சர்வதேச ரீதியில் பெரும் அன்புக்கும் அரவணைப்புக்கும் உள்ளகியிருப்பதிலும் அமெரிக்காவின் பங்கு மிகமுக்கியமானது. அந்த இயங்கு நிலையின் ஒரு முகமாகவே நிஷா தேசாய் பிஸ்வால் செயற்படுகின்றார். அவர் சிரித்தாலும் முறைத்தாலும், அது அமெரிக்காவின் வெளிப்பாடு.

நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஒவ்வொரு தடவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார். பேச்சுக்களின் முடிவில் கூட்டமைப்பின் தலைவர்கள் புன்னகைத்தவாறு சூழ்ந்திருக்க நிஷா தேசாய் பிஸ்வால் நிற்கும் படங்களும் வெளியாகும். அந்தப் படங்கள் ஆரம்பத்தில் ஆரோக்கியமான அரசியல்- இராஜதந்திர சந்திப்பொன்றின் நீட்சியாக பார்க்கப்பட்டது. ஆனாலும், அது ஒரு கட்டத்துக்கு மேல் தாம் அலைக்கழிக்கப்படுகின்றோம் என்கிற உணர்நிலையை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் படங்களாகப் பார்க்கப்பட்டன. கடந்த வாரமும் அப்படியொரு படம் வெளியானது. அந்தப் படத்திலும் கூட்டமைப்பின் தலைவர்கள் புன்னகைத்தவாறு இருந்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நிஷா தேசாய் பிஸ்வால் சந்திக்கின்ற ஒவ்வொரு தடவையும் இலங்கை அரசாங்கத்தின் மீதான உள்ளூர் பிடியைத் தளர்த்துவதிலும் கவனமாக இருந்திருக்கின்றார். அதற்கு இணங்க கூட்டமைப்பு மறுக்கின்ற போதெல்லாம், ஆணையிடும் தொனியில் விடயங்களை அவர் கையாண்டு வந்திருக்கின்றார். இன்றைக்கு அது, ஒட்டுமொத்தமாக நிஷா தேசாய் பிஸ்வால் இழுக்கும் திசை வழியில் இயங்கும் கூட்டமைப்பொன்றினை உருவாக்கி விட்டதோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றது. அத்தோடு, தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளை காணாமற்போகச் செய்வதிலும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தின் வலுவை சிதைப்பதிலும், ‘ஊசியேற்றப்பட்ட வாழைப்பழமொன்று தொண்டைக்குள் செய்யும் அறுத்தலுக்கு’ ஒப்பான அச்சுறுத்தலை உருவாக்கிவிட்டிருக்கின்றது.

இலங்கையின் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கைகள் இன்றைக்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை. சர்வதேச விசாரணைக் கோரிக்கையோடு இருந்த தமிழ்த் தரப்பினை இன்றைக்கு உள்ளக விசாரணையொன்றுக்குள் கொண்டு வந்தது சேர்த்ததில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. நடைமுறைச் சந்தியங்கள் சார்ந்து தமிழ்த் மக்களின் பெரும்பான்மைத் தரப்பும் சர்வதேச பங்களிப்போடு உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலான முன்வைப்பினை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டது. அல்லது அதற்குத் தலைப்பட்டது. ஆனால், அந்த விடயத்திலும் ஒட்டுமொத்தமான ஏமாற்றமே கிடைக்கும் சூழலொன்று உருவாக்கப்பட்டு விட்டது.

தென்னிலங்கையின் இனவாதத் தலைமைகளையும், அவை உருவாக்கும் அலைகளையும் கவனத்திற்கொண்டு, புதிய அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியிருக்கின்றார். குறிப்பாக, கடந்த வாரம் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வெளியிட்ட கருத்துக்களும், கூட்டமைப்பிடம் வலியுறுத்திய விடயங்களும் தமிழ் மக்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

குறிப்பாக, ‘இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமைக்கும் போதே, அதில் வெளிநாட்டு நீதித்துறை உள்ளிட்டவற்றின் பங்களிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி நிலைப்பாட்டினை அறிவிக்கும். மாறாக, தற்போது நெருக்கடிகளை வழங்க விரும்பவில்லை’ என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பில் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்திருக்கின்றார்.

இந்தச் சந்திப்பில், நிஷா தேசாய் பிஸ்வாலுடன் கலந்து கொண்டிருந்த ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொம் மாலினோவ்ஸ்கி, பின்னராக இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில், ‘நீதிப் பொறிமுறைகள் குறித்த இலங்கையின் உள்ளக விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பினை வலியுறுத்துவதில் அமெரிக்கா தற்போதைக்கு அதிக ஆர்வத்தினை வெளியிடவில்லை.’ என்பது மாதிரியான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக, இலங்கையின் இறைமையை கேள்விக்குள்ளாக்கும் விடயங்களில் அமெரிக்கா தலையீடுகளைச் செய்யத் தயாரில்லை என்கிற வார்த்தைகளினூடு உப்புக்குசப்பான உள்ளக விசாரணையொன்றை ஏற்படுத்தி விடயங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது. இங்கு, அமெரிக்கா குறிப்பிடும் உள்ளக இறைமை என்பது, இலங்கையில் பாரம்பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் தமிழ் மக்களின் இறைமை மற்றும் உரித்துப் பற்றியும் எந்தவிதமான அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை. நாடொன்றின் இறைமை என்பது அங்கு வாழும் அனைத்து இன-மத- சமூகங்களையும் பாதுகாக்குமாறு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், சர்வதேச நியமங்களினூடு நீதி கோருதல் என்பது இறைமை மறுதலிப்பாக எவ்வாறு அமைய முடியும் என்கிற கேள்வியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்தை மாத்திரமின்றி, அமெரிக்காவை நோக்கியும் கேட்க வேண்டிய தருணம் இது.

இன்னொரு பக்கம், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தற்போதைக்கு அடுத்த படிநிலையில் கவனம் செலுத்தியிருக்கும் அமெரிக்கா,

மைத்திரி- ரணில் அரசாங்கத்தினை சங்கடத்துக்கு உள்ளக்காத வகையில் தீர்வு பற்றிய உரையாடல்களை நிகழ்த்தவும், நடைமுறைப்படுத்தவும் விரும்புகின்றது. தனி நாட்டுக் கோரிக்கைகளின் பக்கத்திலிருந்து ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்வதற்கு தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் அறிவித்து விட்டதன் பின்னரான இன்றைய காலத்தில், அந்தப் படிநிலைகளிலும் ஒட்டுமொத்தமான நெகிழ்வினைச் செய்து விடுவதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதில் அமெரிக்கா கரிசனையோடு இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தன்னுடைய காலத்துக்குள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்தினைக் கொண்டிருக்கின்றார். அது, தன்னுடைய வரலாற்றில் முக்கிய பதிவாக இருக்கும் என்றும் அவர் கருதுகின்றார். அப்படியான உணர்நிலையோடு இருக்கும் இரா.சம்பந்தனை மிக இலாவகமாக கையாள்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்கெனவே வெற்றிகரமான அடைவுகளை கண்டிருக்கின்றார். அந்த அடைவுகளுக்கான உதவியை அமெரிக்காவின் நிஷா தேசாய் பிஸ்வாலும் இலகுபடுத்தி வருகின்றார். கூட்டமைப்புடனான அண்மைய சந்திப்புக்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்களை தனித்துவமாக கொள்ள அவர் முனைந்திருக்கின்றார்.

இப்படிப்பட்டதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தொன்று கவனம் பெறுகின்றது. அதாவது, சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று தொடர்பிலேயே கூட்டமைப்பு கவனம் செலுத்துவதாக கூறிய அவர், ‘ஒற்றையாட்சி- சமஷ்டி’ என்கிற புதிய வடிவம் குறித்துக் கூறியிருக்கின்றார். ஒருங்கிணைந்த நாடொன்றுக்குள் சமஷ்டி சாத்தியமானது. அதுதான், சமஷ்டித் தத்துவங்களின் அடிப்படை. அப்படியிருக்க, ஒற்றையாட்சி-சமஷ்டி என்கிற வடிவம் எவ்வகையானது.

அது, அதிகாரங்களை பகிர்வதற்கான சாத்தியப்பாடுகளை எவ்வாறு உறுதிப்படுத்தும்?, அல்லது, தடுமாற்றத்தின் காரணமாக அவர் ஒற்றையாட்சி- சமஷ்டி என்கிற வார்த்தையை வெளியிட்டாரா என்று தெளிபடுத்தப்பட வேண்டிய தருணம் இது. இல்லையென்றால், தென்னிலங்கையும், அமெரிக்காவும் விரும்புவது மாதிரி குறைபாடுகளுள்ள தீர்வொன்றை தமிழ் மக்களின் தலைகளில் இறக்கி வைக்கும் நிகழ்ச்சி நிரலின் அடுத்த படிநிலைகளின் போக்கில் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தாக அதனைக் கொள்ள வேண்டிய வரும். அது, உண்மையிலேயே தமிழ் அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்குப் பதிலாக அச்சுறுத்தலொன்றை இறுதி செய்வதாக அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளத்தில் வீழ்ந்து குழந்தை சாவு…!!
Next post தொடரும் கொடூரம்.. சென்னையை தொடர்ந்து ஐதராபாத்தில் 3 நாய்க் குட்டிகள் உயிருடன் எரிப்பு…!!