உலகப் பொலிஸ்காரனின் பொலிஸ் பிரச்சினை…!!

Read Time:14 Minute, 28 Second

article_1469035609-ggஇலங்கையில், வட பகுதியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, இரு பிரிவினருக்குமிடையிலான உறவுகள், சிறுபான்மையினரின் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு ஆகியன தொடர்பான கரிசனை அல்லது கலந்துரையாடலொன்று ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று தான், இலங்கை மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் சிறுபான்மையினரின் உரிமை தொடர்பாக அடிக்கடி கருத்துத் தெரிவித்து, அவ்வப்போது ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்ட நாடான அமெரிக்காவிலும், சிறுபான்மையினரின் உரிமை தொடர்பான கலந்துரையாடல்கள் மீளவும் எழுந்துள்ளன. உலகப் பொலிஸ்காரன் என அழைக்கப்படும் அமெரிக்காவில், பொலிஸாருக்கும் கறுப்பினத்தவர்களுக்குமிடையிலான சீரற்ற உறவு காரணமாகவே, இக்கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

தாமிர் றைஸ், ட்ரைவொன் மார்ட்டின், மைக்கல் ப்ரௌண், பிரெடி கிரே, எரிக் கார்னர், அகய் கேர்லி, வோல்ட்டர் ஸ்கொட், லக்குவன் மக்டொனால்ட், அல்ட்டன் ஸ்டேர்லிங், பிலான்டோ கஸ்டிலே… இவையெல்லாம், கிரிக்கெட், கால்பந்தாட்டம் அல்லது பேஸ்போல் வீரர்களோ அல்லது வேறு பிரபலங்களோ கிடையாது. அண்மைக்காலத்தில், அமெரிக்காவில் வைத்து, அந்நாட்டுப் பொலி ஸாரால் கொல்லப்பட்ட (அனேகமானோர் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்) கறுப்பின இளைஞர்கள்.

உலகி;லுள்ள பல நாடுகளைப் போன்றே அமெரிக்காவிலும், ஒரு கட்டத்தில் ஓர் இனத்தால் மற்றைய இனம், ஆளப்பட்டிருந்தது. சில மேற்குலக நாடுகளைப் போன்று, அடிமைத்தனம் பரவலாகக் காணப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால், உத்தியோகபூர்வமாக அது ஒழிக்கப்பட்ட பின்னர், அடிமைகளாக இருந்த கறுப்பின மக்கள், அமெரிக்காவில் சம உரிமைகளைக் கொண்ட, சம அளவில் மதிக்கப்படுகின்ற, சம அளவில் மரியாதையைப் பெறுகின்ற இனமாக மாறுவதற்குக் கடுமையான சவாலை எதிர்கொண்டிருந்தது.

அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக பராக் ஒபாமா, 2008ஆம் ஆண்டில் பதவியேற்றமை, அந்நாட்டின் வரலாற்றில் முக்கியமானதொரு மைல்கல்லாக அமைந்தது. ஆனால், கறுப்பினத்தவர் ஒருவர் பதவியேற்றால் மாத்திரமே, கறுப்பினத்தவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என எதிர்பார்ப்பது தவறானது. அந்த மாற்றம் முக்கியமான சமிக்ஞை என்ற போதிலும், அடிப்படையான விடயங்களை மாற்றாமல், கறுப்பின ஜனாதிபதியால் மாத்திரம் எல்லாவற்றையும் உடனடியாக மாற்ற முடியுமென எதிர்பார்ப்பது தவறானது. அதுவும், அமெரிக்க அரசியல் நடைமுறைகளின்படி, புதிதாகச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு, அமெரிக்க காங்கிரஸினதும் உச்சநீதிமன்றத்தினதும் ஆதரவு, ஜனாதிபதிக்குத் தேவையானது. அமெரிக்க காங்கிரஸ், குடியரசுக் கட்சியால் கட்டுப்படுத்தப்படுவதோடு, அண்மையில் நீதியரசர் ஸ்கேலியா இறக்கும் வரை, உச்சநீதிமன்றத்தில் பழைமைவாதிகள், 5-4 என முன்னிலை வகித்தனர். இப்போது, 4-4 என்ற நிலை காணப்படுகிறது.

பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடையவுள்ள நிலையில் தான், அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்ற கறுப்பினத்தவர்கள் மீதான பாகுபாட்டுக் குற்றச்சாட்டும் வன்முறைகளும் அவருக்கு நிச்சயமாக கடுமையான அழுத்தத்தை வழங்குகின்றன.

காலங்காலமாக, சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால், கறுப்பினத்தவர்கள் இலக்குவைக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். வீதிகளில் பொலிஸாரால் நிறுத்தப்படுவது அதிகம்ƒ கறுப்பினத்தவர்களை விட ஐந்து மடங்கு அதிகமாக, வெள்ளையினத்தவர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்துகின்ற போதிலும், கறுப்பினத்தவர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு, வெள்ளையினத்தவர்களை விட 10 மடங்கு அதிகம்ƒ அமெரிக்காவின் சிறுபான்மையினராக இருந்த போதிலும், அமெரிக்கச் சிறைகளில் 58 சதவீதமாக கறுப்பினத்தவர்களும் ஹிஸ்பானியர்களும் காணப்படுகின்றனர்ƒ அமெரிக்காவிலுள்ள கறுப்பினத்தவரில் ஏறத்தாழ நான்கிலொருவர், தமது வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் சிறைக்குச் செல்வாரெனக் கருதப்படுகிறதுƒ வன்முறைசார்ந்த குற்றங்களுக்காக வெள்ளையினத்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படும் கால அளவும், போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்காக கறுப்பினத்தவர்களுக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனைக் கால அளவும் ஏறத்தாழ ஒன்றுƒ ஆகியன, அமெரிக்காவில் காணப்படும் வேறுபாட்டை எடுத்துக் காட்டும் சில தகவல்கள்.

இவற்றுக்கு மேலதிகமாக, ஆயுதமேந்தாத அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்தாத கறுப்பின இளைஞர்கள், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவது அல்லது வேறு வகையில் கொல்லப்படுவது, அண்மைக்காலமாக அதிகமாகப் பேசப்பட்டது. இவ்வாறான கொலைகள், அண்மைக்காலத்தில் அதிகரிக்கின்றனவா என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விரிவான கேள்வி, ஆனால் இவ்வாறான கொலைகளின் காணொளிகள் வெளியாகின்றமை அதிகரித்துள்ளதால், முன்பை விட இச்சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன. காணொளி இல்லாத முன்னைய காலங்களில், ‘அவரிடம் துப்பாக்கி இருந்தது. எம்மைச் சுட வந்தார், நாம் திருப்பிச் சுட்டோம்’ என்றோ, ‘நாம் கைது செய்ய முயன்றபோது, எம்மைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றார். சுட்டோம்’ என்றோ சொல்லப்படும் பொய்கள், தற்போது காணொளிகளின் காரணமாக, சொல்லப்பட முடியாதனவாக மாறிப் போயுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்கதாக, கறுப்பினத்தவர்கள், அமெரிக்கப் பொலிஸாரால் (அனேகமான சந்தர்ப்பங்களில் வெள்ளையினத்தவர்களைச் சேர்ந்தவர்களால்) சுட்டுக் கொல்லப்படும் போது, உயிரிழந்தவர்களின் பக்கம் தவறு இல்லாத நிலையிலும் கூட, சட்டத்தின் பிடியில், அந்தப் பொலிஸார் சிக்கியதில்லை. வழக்கு இடம்பெற்றால், அவரைக் குற்றமற்று விடுவிப்பதாகவே அறிவிப்புக் கிடைக்கும்.

அண்மையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில், அல்ட்டன் ஸ்டேர்லிங், பிலான்டோ கஸ்டிலே என்ற இரு இளைஞர்களின் உயிர் பறிபோனது. இருவரின் கொலைகள் தொடர்பான காணொளிகளும் வெளியாகியிருந்தன. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுமளவுக்கு, பொலிஸாரைத் தாக்க முயலவோ அல்லது அவர்களிடமிருந்து தப்பியோடவோ அவர்கள் முயன்றிருக்கவில்லை. ஆனால், மிக மிக அருகில் வைத்து, துப்பாக்கிச் சன்னங்களால் அவர்களது உடல்கள் துளைக்கப்பட்டன.

ஏற்கெனவே எரிச்சலடைந்திருந்த கறுப்பின மக்கள், ஒரே நாளில் இடம்பெற்ற இந்த இரண்டு சம்பவங்களாலும் கொதிப்படைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கறுப்பின மக்களின் உரிமைக்காகப் போராடும் அமைப்பான „கறுப்பின உயிர்கள் பெறுமதியானவை… என்ற அமைப்பு, மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்தது. சில பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அந்த ஆர்ப்பாட்டம், மிக அமைதியாகவே இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து, புகைப்படங்களையும் பொலிஸார் எடுத்திருந்தனர். அந்தளவுக்கு இயல்பாக இருந்த நிலைமை, அந்தக் குழுவில் காணப்பட்ட நபரொருவர் மேற்கொண்ட ஸ்னைப்பர் தாக்குதலால் நிலைகுலைந்தது. 5 பொலிஸார் கொல்லப்பட்டனர்.

அதுவரை நேரமும் கறுப்பின மக்கள் மீது காணப்பட்ட அனுதாபத்துக்கு மத்தியில், இந்தச் சம்பவம், சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியது. கறுப்பின மக்கள், உண்மையில் வன்முறையாளர்கள் என்பதால் தான் சுடப்படுகிறார்களோ? என்ற சந்தேகம் எழ, மற்றொரு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. அதில், மூன்று பொலிஸார் இறந்துள்ளனர்.

இப்போது, கறுப்பின மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையிலான உறவு, சிறப்பான நிலையில் காணப்படவில்லை என்று சொல்வது, வெளிப்படையான ஒன்றைத் திரும்பச் சொல்லுதல் போன்றதாகும். இந்தப் பிரச்சினை, தீர்க்கப்பட வேண்டியதென்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும், எவ்வாறான தீர்வைக் கொண்டு வருதல் என்பது தொடர்பாக முரண்பாடுகள் காணப்படுகின்றன.

வெள்ளையினத்தைச் சேர்ந்த கடும்போக்குவாதிகளைப் பொறுத்தவரை, கறுப்பினத்தவர்கள், தங்களது வன்முறைப் போக்கைக் – குறிப்பாக, தங்கள் இனத்துக்குள் காணப்படும் வன்முறையை – குறைப்பதே, இப்பிரச்சினையின் தீர்வுக்கான ஆரம்பமாகும். ஆனால், தரவுகளின்படி, கறுப்பினத்தவர்களுக்குள் காணப்படும் வன்முறைக்கும் வெள்ளையினத்தவர்களுக்குள் காணப்படும் வன்முறைக்குமிடையில் பாரிய வித்தியாசமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆக, பொலிஸார் தான் முதற்படியை எடுத்து வைக்க வேண்டுமென்பது தெளிவாகிறது. உண்மையில், பொலிஸார்

மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதன என்ற போதிலும், தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்ட இனமொன்று, பொறுமையின் எல்லையில் நின்று வழங்கிய பதிலடியாகவே,

பொலிஸார் மீதான தாக்குதல்களைக் கருத முடியும். தாக்குதல்கள் தவறானவையா என்றால், ஆம், நிச்சயமாக‚ தாக்குதல்களுக்கான காரணங்களை உணர்ந்துகொள்ள முடிகிறதா என்றால், நிச்சயமாக‚ ஆகவே தான்,

பொலிஸாருக்கும் கறுப்பின மக்களுக்குமிடையிலான முரண்பாட்டைத் திருத்திக் கொள்வதற்கு, முதலில் பொலிஸாரின் பக்கத்தில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே, ஏனைய மாற்றங்கள் குறித்து ஆராயப்பட முடியும். இன்னமும் கூட, கறுப்பினத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், வெள்ளையினப் பொலி ஸாரே பெரும்பான்மையாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்னமுமே கறுப்பினத்தவர்கள் மீது தேவையற்ற பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது குறித்து போதிய பயிற்சிகள் வழங்கப்படாத நிலையில், கறுப்பின மக்கள் மீதான பாகுபாடு என்பது, தொடர்ந்தும் நீடித்துக் கொண்டே இருக்கப் போகிறது என்பது வெளிப்படையானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிஸ்கட், தாமரை விதைகள் மற்றும் மென்பானம் உண்டமையினால் 6 வயது சிறுமி பலி…!!
Next post கொளு கொளு குழந்தையை பராமரிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கு இந்த டிப்ஸ்…!!