By 22 July 2016 0 Comments

பூனைக்கு மணிகட்டுதல்…!!

article_1469159724-Phoஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்குக்கு மாற்ற வேண்டும் என்ற கோஷத்தோடு தன்னை முன்னிலைப்ப டுத்தியிருக்கும் கிழக்கின் எழுச்சி அமைப்பை மட்டம்தட்ட ஒரு தரப்பும், தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க இன்னுமொரு தரப்பும் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மு.காவின் தலைவருக்கு எதிரானவர்களும் அவருடைய செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்தோரும் கிழக்கின் எழுச்சியை பலமாக ஆதரிக்கின்றனர்.

கட்சி உறுப்பினர்களில் அநேகமானோர் இதனை உள்ளார்ந்தமாக ஆதரித்துக் கொண்டு, வெளியில் எதிர்ப்பது போல காட்டிக் கொள்கின்றனர். ரவூப் ஹக்கீம் தலைவராக இருந்தால் அனுகூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்ற அவரது சிஷ்யர்களும் கணிசமான மக்களும் இதனை எதிர்க்கின்றனர். அதேநேரத்தில், கிட்டத்தட்ட 50 வீதமான கிழக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கின் எழுச்சி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.

ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணத்துக்கு பிற்பாடு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்தைக் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கண்டியைச் சேர்ந்த அப்துல் ரவூப் ஹிபதுல் ஹக்கீமுக்கு கொடுத்து, கொடுத்தனர் என்ற வரலாற்றை, பிரதேசவாதம் பற்றி பேசுவோர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஹக்கீமை விட்டால் ஆள் இல்லை என்ற நிலைப்பாட்டில் கிழக்கின் அரசியல்வாதிகள், ஹக்கீமுக்கு இப்பதவியை கொடுக்கவில்லை. ரவூப் ஹக்கீமை விட அனுபவம் வாய்ந்த, மு.காவின் மூத்த உறுப்பினர்கள் பலர் கிழக்கில் இருக்கின்ற நிலையிலேயே ஹக்கீம் இணைத் தலைவராகவும் பின்னர் தனித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ரவூப் ஹக்கீம், தானாக விரும்பிக் கேட்டு, காதுக்குள் குசுகுசுத்து, சூட்சுமமான முறையில் தலைமைப் பதவியை பெறுவதற்கு அவர் இலக்கு வைக்கின்றார் என்று நன்றாகவே சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அப்போது விளங்கியது. ஆனாலும், அவருக்கு தலைவர் என்ற ஒரு மிகப் பெரும் கிரீடத்தைச் சூட்டி அழகுபார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ், தலைமையை இழந்து, துடுப்பிழந்த படகைப் போல நட்டாற்றில் தவித்துக் கொண்டிருந்த வேளையில் அதனை ஏதோ ஒரு தைரியத்தில் பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக ரவூப் ஹக்கீமை பாராட்டவே வேண்டும். ஆனால், தலைவர் அஷ்ரப் மரணித்த பின்னரான ஒன்றரை தசாப்தங்களிலும் மு.கா என்ற பேரியக்கத்தின் தலைவர் பொதுவாக நாட்டின் முஸ்லிம்களுக்கும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுக்கு என்ன இமாலய சேவையை செய்திருக்கின்றார் என்று புரட்டிப் பார்த்தால் – சில கட்சித் தாவல்களும் அமைச்சுப் பதவிகளுக்கான பேரம் பேசல்களும் பணம் உழைத்தல்களுமே பெரிதாக தெரிகின்றன. சமூகத்திற்காக முக்கியமான சாதனைகளை நிகழ்த்தவில்லை என்பதை விடவும், சிறுபான்மை மக்களுக்கு கேடான பல காரியங்களை ஹக்கீம் தலைமையிலான மு.கா செய்திருக்கின்றது என்பது மிக மோசமான அனுபவமாகும்.

இவ்வாறான பிரச்சினையெல்லாம் கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த நிலையில், தேசியப்பட்டியல் நியமன விடயத்தில் ஹக்கீம் நடந்துகொண்ட விதம், செயலாளரின் அதிகாரங்களை சூறையாடியமை போன்ற உடனடிக் காரணங்களால், ஹக்கீம் எதிர்ப்பு பிரசாரம் இன்று பெரிய பிழம்பாக பரிணாமம் எடுத்துள்ளது. மு.கா தலைவர் என்கின்ற தனிநபர் பல பக்கங்களில் இருந்து அழுத்தங்களை அல்லது எதிர்ப்புக்களை சம்பாதித்திருக்கின்றார் என்று சொல்லலாம். ஒன்று, குறிப்பிட்டளவான மக்களின் மனவெறுப்பு. இரண்டாவது தவிசாளரின் கடிதக் குண்டுகளும் செயலாளரின் சத்தமில்லா தாக்குதல்களும். மூன்றாவது, கிழக்கின் எழுச்சி. இந்த எதிர்ப்பலைகள், மு.காவை எதிர்த்து அரசியல் செய்வோருக்கு மறுபுறத்தில் சாதகமான பிரசாரக் களத்தை திறந்து விட்டிருக்கின்றது.

இருப்பினும், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் இன்னும் முற்றாக பலமிழந்து விடவில்லை. அவருக்கு இன்னும் பெருமளவான மக்கள் ஆதரவளிக்கின்றனர். இதில் 99 வீதமானோர் ஹக்கீம் என்ற தனிமனிதனுக்காக அன்றி நமது கட்சியின் தலைவர் என்ற காரணத்துக்காகவே இத்தனை பிரளயங்களுக்கு மத்தியிலும் அவருக்கு பரிந்து பேசுகின்றனர். அத்தோடு, ஹக்கீமினால் நன்மை பெறுகின்ற, அவர் தலைவராக இருந்தால் தம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்பியிருக்கின்ற பேர்வழிகளும் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். சம்பளத்துக்காகவும் இணைப்பதிகாரி பதவிக்காகவும் தலைவரின் எல்லா காரியங்களிலும் சரிகண்டு, கொட்டு முழக்கம் கொட்டுகின்றவர்களும் தலைவருக்கு ஜால்ரா அடிக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக உருவாக்கப்பட்டது என்ற தார்ப்பரியம் அறியாத ஒரு கூட்டம் எப்போதும் ஹக்கீமுடன் கூடவே இருக்கின்றது. இந்த தரப்பினரின் பலத்தை மட்டமாக மதிப்பிட முடியாது என்பது உண்மையே. ஆனாலும் இவர்களில் அதிகமானோர் ஒரு நிலையான கொள்கை இல்லாதவர்கள். இன்னும் ஒரு குழுவினர் இருக்கின்றனர். அவர்கள் தலைவரோடு ஒட்டி உறவாடுவது போல காட்டிக்கொண்டு இரகசியமாக சதித்திட்டங்களை மேற்கொள்பவர்கள். கடைசியாக குறிப்பிட்ட இரண்டு பிரிவினரும் ஹக்கீம் பலமாக இருக்கும் வரை மட்டுமே அவருடன் ஒட்டிக் கொண்டிருப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இவ்வாறாக, மு.கா தலைவருக்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் இருக்கின்றனர் என்றாலும், ரவூப் ஹக்கீம் செய்த சமூக சிந்தனையற்ற காரியங்களாலும், செய்யாமல் விட்ட கடமைகளாலும் இன்று அவருக்கு எதிரான விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அவரை தலைமைப் பதவியில் இருந்து உடனடியாக வீழ்த்த முடியுமா என்பது சந்தேகமே. ஆயினும் மு.கா தலைவர் தனது கடமைகளை செவ்வனே செய்திருக்கின்றாரா? என்பதை கிழக்கு முஸ்லிம்கள் மீள்வாசிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இது மிகப் பெரும் மனநிலை மாற்றமாகும். “ஹக்கீம் இப்போது திருந்துவார், அப்போது திருந்துவார்” என்ற நம்பிக் கொண்டிருந்தோருக்கும், “திருந்தா ஜென்மங்களின் பட்டியலில்” அவரும் இருக்கின்றாரா என்ற சந்தேகம் ஏற்படத் தொடங்கியிருக்கின்றது.

இவ்வாறு, ஆண்டாண்டு காலமாக மு.கா தலைவரின் செயற்பாடுகளில் ஏற்பட்ட நீண்டகால வெறுப்பே இன்று கிழக்கின் எழுச்சியாக வெளியாகி இருக்கின்றது என்றும் கருத இடமுள்ளது, “கிழக்கின் எழுச்சி என்பது, முஸ்லிம் காங்கிரஸை அழிக்க நினைப்போரின் சதித்திட்டம்” என்று சிலர் கருத்து வெளியிடுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். இன்று ஏற்பட்டிருக்கின்ற எல்லா நெருக்கடிகளுக்கும் பொறுப்பாளி கட்சித் தலைவராவார். இவ்வளவு தவறுகளை செய்திருந்தாலும், இந்தக் கணம் வரைக்கும் அவற்றுக்கு பிராயச்சித்தம் தேடும் எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் அவர் மேற்கொண்டதாக தெரியவில்லை. தேசியப்பட்டியலுக்கு நிரந்தர எம்.பி நியமனம், செயலாளரின் அதிகாரங்களை மீள வழங்குதல், முக்கிய உறுப்பினர்களின் கடிதங்களுக்குப் பதிலளித்தல், கட்சிக்குள் ஜனநாயக நடைமுறைகளை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கான எந்த முன்முயற்சிகளையும் ஹக்கீம் மேற்கொள்ளவும் இல்லை.

முஸ்லிம் காங்கிரஸ் யாருக்காக பிரதானமாக உருவாக்கப்பட்டதோ அந்த மக்களின் அபிலாஷைகளை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்வதற்கு மு.கா தலைவர் தவறியிருக்கின்றார். வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளடங்கலாக இனப்பிரச்சினை தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக எடுத்துரைப்பதில் இன்னும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார். கடந்த வாரம் அம்பாறைக்கு விஜயம் செய்த ஹக்கீம் ஏதாவது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், கிழக்கில் தனது வரவுப் பதிவை செய்துவிட்டு போவது மாதிரி, அவர் கொழும்புக்குத் திரும்பியிருக்கின்றார்.

இந்த நிலையிலேயே கிழக்கின் எழுச்சி குழுவினர் சமூகத்தின் முன்னால் தோன்றியுள்ளனர். இதன்மூலம், இரண்டு மாதங்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை மையமாக வைத்து செயற்பட்டுக் கொண்டிருந்த கிழக்கின் எழுச்சி என்ற இந்த பிரசார இயக்கம் தாம் யார் என்பதை இப்போது சமூகத்துக்கு காட்டியிருக்கின்றது. தாம் மறைந்திருந்து கள்ளத்தனமாக செயற்படும் கூட்டமல்ல என்பதையும் பகிரங்கமாக களநிலைமைகளை எதிர்கொள்ள தாம் தயார் என்பதையும் அவர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கின்றனர். கிழக்கின் எழுச்சி அமைப்பு சாய்ந்தமருதில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், மு.காவின் ஆரம்பகால பொருளாளர் வபா பாறூக், கிழக்கின் எழுச்சியின் தலைவராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், எச்.ஏ.ஆலிப் சப்ரி பிரதித் தலைவராகவும் எஸ்.ஐ.அஷூர் செயலாளர் நாயகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

“கிழக்கின் எழுச்சி” பற்றி இருந்த மர்மங்களுக்கும் சில கேள்விகளுக்கும் இங்கு பதில் சொல்லப்பட்டுள்ளது. கிழக்கின் எழுச்சி பிரதேசவாதம் என்ற ஒரு கருத்தை இவ்வியக்கம் முற்றாக மறுத்துள்ளது. முஸ்லிம்களின் செறிவான ஆதரவைப் பெற்ற மாகாணமான கிழக்கில் இருந்து உருவாகின்ற காரணத்தினாலேயே இது கிழக்கின் எழுச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கிழக்கில் உருவானபோதும், பின்னர் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபித்துச் செல்ல வேண்டும் என்று கிழக்கின் எழுச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. “18ஆவது திருத்தத்துக்கு சார்பாக வாக்களித்தது போன்று வடக்கு, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இணங்கி விடக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ள இவ்வமைப்பு, “முஸ்லிம்களை தனியொரு தேசியமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கோரியுள்ளது. அத்துடன், “பொருத்தமான ஒரு தலைமையை மு.கா பொறுப்பேற்கும் பட்சத்தில், கிழக்கின் எழுச்சி இந்த போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளும்” என்று பகிரங்க அறிவிப்பு செய்துள்ளது.

இவ்வளவு காலமாக மு.காவுக்கு உள்ளேயும் வெளியிலும் பல முரண்பாடுகள் இருந்தன. ஆனால், தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தனிப்பட்ட அரசியல்வாதிகளே விமர்சனங்களை முன்வைத்து அரசியல் செய்தனர். பகிரங்கமாக ஓர் இயக்கம் களத்தில் இறங்கவில்லை. “முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வழிதவறிச் சென்று கொண்டிருக்கின்றது” என்ற உணர்வு பல வருடங்களுக்கு முன்னரே பரவலாக ஏற்பட்டு விட்டது. ஆனால், மு.கா ஒரு பலம் பொருந்திய கட்சியாக இருப்பதால், ஹக்கீமை எதிர்த்தால் அது எடுபடாது என்று வெளியில் உள்ளவர்கள் நினைத்தனர், கட்சி சீர்குலைந்து விடும் அன்றேல் கட்சியின் யாப்பின் 3.1 உப பிரிவின்படி தலைவர் நடவடிக்கை எடுத்துவிடுவார் என்று உறுப்பினர்கள் எண்ணினர். இதனால் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலை காணப்பட்டது. அந்த நிலைமை இன்று மாறியிருப்பதை, கிழக்கின் எழுச்சியும் அதற்கு பலம் சேர்க்கும் நகர்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன.

கிழக்கின் எழுச்சி பற்றியும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், ரவூப் ஹக்கீமின் தவறுகள் எல்லாமே இவ் அமைப்பினால். மிக இலகுவாக சந்தைப்படுத்தப்படக் கூடியவை என்பதால், கிழக்கின் எழுச்சியின் வளர்ச்சியில் ஹக்கீமும் மறைமுகமாக முக்கிய பங்களிப்பை செய்வார் என்றால் மிகையில்லை. கிழக்கின் எழுச்சியை பஷீர் – ஹசன்அலி அணி கைப்பற்றலாம் அல்லது பஷீர் – ஹசன்அலியின் நகர்வுகளை கிழக்கின் எழுச்சி தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம்.

இரண்டுமில்லை என்றால், ஹக்கீமுக்கு எதிரான தரப்பெல்லாம் ஓரணியில் திரளலாம். அப்போது மு.கா தலைவர் இன்னும் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படுவார். எனவே, ஒவ்வொன்றும் பதிலடி கொடுத்து பலப்பரீட்சை நடாத்துவதை விடவும், தனது பிழைகளை திருத்திக் கொண்டால் மிக இலகுவாக இந்த எதிர்க் குரல்களை எல்லாம் அடக்கி விடலாம். ஆனால், மு.காவின் சாணக்கியத் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.

இவ்வளவு சவால்களுக்கும் தலையிடிகளுக்கும் காரணம் என்ன என்பதை தேடியறிந்து அதற்கு தீர்வுகாண முற்படாது தொடர்ந்து தனது வழக்கமான ஆறப்போட்டு ஆற்றும் பாணியில் செயற்படுவது மிகவும் ஆபத்தானது. எதிரிகளை குறைவாக அல்லது இளக்காரமாக மதிப்பிட்டுள்ள ஹக்கீம், கிழக்கின் எழுச்சி உள்ளடங்கலாக தனக்கு எதிரான அனைத்து தரப்பினருக்கும் பதிலடி கொடுக்க தீட்டங்களை தீட்டுவதாக கூறப்படுகின்றது. அதுமேலும் வேண்டாத விளைவுகளை தரக்கூடும். இவ்விவகாரத்தையடுத்து, ஒருவேளை தலைவர் திருந்த நினைத்தாலும் அவருக்கு கூடவே இருக்கின்ற சிலர் “இவற்றையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை” என்று அறிவுரை சொல்வதாக தகவல்கள் கசிந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, களநிலைவரங்கள் எல்லாம் வெளிப்படையாகத் தெரிந்திருக்கையில், தனது சகோதரர்களையும் சில தளபதிகளையும் நம்பிக் கொண்டு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருந்தார். அதனால்தான் மக்கள் அவரையே மாற்றினார்கள் என்பதை, மு.கா தலைமை சிந்தித்து பார்க்க வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam