மருத்துவராக பணியாற்றவுள்ள முன்னாள் மிஸ் இங்கிலாந்து அழகுராணி..!!
மிஸ் இங்கிலாந்து அழகுராணியாக முடிசூட்டப்பட்ட முன்னாள் அழகுராணி ஒருவர் மருத்துவராக பணியாற்றவுள்ளார்.
அழகும் அறிவும் இணைவதில்லை என சிலர் கூறுவர். ஆனால், அக்கருத்து தவறானது என்பதை நிரூபித்துள்ளார் கரீனா டைரெல் எனும் இந்த யுவதி.
26 வயதான கரீனா டைரெல் ஒக்ஸ்போர்ட்ஷயர் பிராந்திய அழகுராணியாகத் தெரிவானதுடன் 2014 ஆம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சிய (மிஸ் யுனைடெட் கிங்டம் 2015) அழகுராணியாகவும் அவர் தெரிவானார்.
பிரிட்டனிலுள்ள உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவியாக இருந்த வேளையிலேயே அவர் மிஸ் இங்கிலாந்து அழகு ராணியாகத் தெரிவாகியிருந்தார்.
2014 ஆம் ஆண்டு உலக அழகுராணி போட்டியில் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்ட கரீனா டைரெல், அப்போட்டியில் முதல் 5 அழகிகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
கடந்த வாரம், அவர் தனது 6 வருடகால மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்து மருத்துவப் பட்டதாரியானார்.
கடந்த 3 வருடங்களில் பரீட்சைகளில் விசேட சித்திகள், பல்வேறு பரிசுகளை வென்ற கரீனா டைரெல் முதல் வகுப்பில் சித்தியடைந்து மருத்துவப் பட்டதாரியாகியுள்ளார்.
மருத்துவராக பணியாற்றுவதற்கான அழைப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தின் போட்டிக்குரிய பல்கலைக்கழகமாக விளங்கும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஒக்ஸ்போர்ட் நகரிலேயே அவர் மருத்துவராக பணியாற்றவுள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மகளிர் கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கரீனா டைரெல், யாசகர்களுக்கு உதவுவதற்கான தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating