By 24 July 2016 0 Comments

றோ-புலிகள் கூட்டுத் திட்டம்: 150 சிங்கள பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 80) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

timthumb1987 சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன்.

போர் நிறுத்தத்துக்கு உடன்படமறுத்த பிரபாகரன் திருமலையில் இருந்த புலேந்திரனுக்கு தாக்குதல் ஒன்றுக்கான உத்தரவை அனுப்பினார்.

ஏப்ரல் 14ம் திகதி அநுராதபுரத்தில் புதுவருடக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பெருந்திரளான சிங்கள மக்கள் அதில் கலந்து கொண்டனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அநுராதபுரக் கொண்டாட்டத்துக்கு சிங்கள் மக்கள் சென்றிருந்தனர்.

திருக்கோணமலையில் குடியேறியிருந்த சிங்கள மக்கள் பலரும் கொண்டாட்டங்களுக்குச் சென்றிருந்தனர்.

வழிமறித்து தாக்குதல்

புதுவருட கொண்டாட்டங்கள் முடிந்து திருமலை நோக்கி பஸ்சில் சென்றுகொண்டிருந்தனர். ‘கித்துலுத்துவ’ என்னுமிடத்தில் வைத்து பஸ் வண்டிகள் வழி மறிக்கப்பட்டன.

மறித்தவர்கள் புலிகள் அமைப்பினர். பஸ்சிலிருந்து அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினார்கள் புலிகள்.

ஆயுத பாணிகளாக அவர்கள் நின்ற கோலத்தில் இருந்தே ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று பஸ்சில் இருந்தவர்களுக்கு புரிந்து விட்டது.

அவர்கள் எதிர்பார்த்தது நடந்தது. பஸ்சிலிருந்து இறங்கியவர்கள்மீது சரமாரியாக சுடத்தொடங்கினார்கள் புலிகள்.

எங்கும் மரண ஓலம். துப்பாக்கி வேட்டொலிகள். உயிர்தப்பி ஓட நினைத்தவர்களும் துரத்திச்சென்று தாக்கப்பட்டனர்.

150 பேர் வரையான சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர்.

புலேந்தி அம்மான் என்றழைக்கப்படும் புலேந்திரன் தலைமையில்தான் அத்தாக்குதல் இடம்பெற்றது.

‘றோ’ போட்டதிட்டம்

இலங்கை அரசை வழிக்கு கொண்டு வர வேண்டுமானால் தலைநகரில் பாரிய தாக்குதல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று இந்திய உளவுப்பிரிவான ‘றோ’ திட்டமிட்டது.

‘றோ’ சார்பாக ஈழப்போராளி அமைப்புக்களைக் கையாண்டவர் சந்திரன். ஏனைய இயக்கங்களை விட புலிகள்மீது சநதிரனுக்கு ஒரு பிடிப்பு இருந்தது.

கொழும்பில் அக்காலகட்டத்தில் தாக்குதல் நடத்துவதானால் ஈரோசினால் மட்டுமேதான் முடியும் என்ற கருத்து இருந்தது.

கொழும்பில் குண்டுத்தாக்குதல்களையும் ஈரோஸ் நடத்தியிருந்தது. (அவை பற்றி பின்னர் குறிப்பிடப்படும்)

எனவே கொழும்பில் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவது தொடர்பாக ஈரோஸ் அமைப்பை முதலில் அணுகியது ‘றோ’. வெடிமருந்தும், தேவையான பணமும் தரப்படும் என்று ‘றோ’ சார்பாக சொல்லப்பட்டது.

தமது அமைப்பினருடன் பேசிவிட்டு முடிவு சொல்வதாக ஈரோஸ் சார்பில் பேசியவர் சொல்லிவிட்டு வந்துவிட்டார். ‘றோ’வின் திட்டம் குறித்து ஈரோசில் முக்கியமானவர்கள் கூடி விவாதித்தனர்.

ஈரோசினால் கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பொருளாதார இலக்குகள், இராணுவ இலக்குகளை குறி வைத்தே நடத்தப்பட்டவையாகும்.

‘றோ’ வின் திட்டப்படி தாக்குதல் நடத்தினால் பொதுமக்களே பெருமளவில் பலியாக வேண்டியிருக்கும்.

‘றோ’வின் திட்டத்துக்கு உடன்பட முடியாது என்று ஈரோஸ் முடிவு செய்தது. என்றாலும் அதனை நேரடியாகச் சொல்லாமல் ஈரோஸ் பின்னடித்துக் கொண்டிருந்தது.

ஈரோஸ் தாமதம் செய்து இழுத்தடித்தமையால் புலிகளிடம் கேட்டது ‘றோ’.

“கொழும்பில் உங்களால் தாக்குதல் நடத்தமுடியுமா?” “முடியும்” என்றார்கள் புலிகள். ஆனால் றோவுக்கு சந்தேகம்தான். கொழும்பில் புலிகள் அக்காலகட்டத்தில் தாக்குதல் எதனையும் செய்திருக்கவில்லை.

தாக்குதலுக்குத் தேவையான வெடிமருந்து ‘றோ’வினால் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நூறுகிலோ nடிமருந்து கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து வெடிமருந்தை யாழ்ப்பாணம் கொண்டுவந்து சேர்த்தார்ள் புலிகள். அடுத்து-அதனை கொழும்புக்கு கொண்டு செல்ல வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் ‘தளிர்’ என்னும் பத்திரிகையை வெளியிட்டவர்களில் முக்கியமானவர் குரு.

‘தளிர்’ புலிகளுக்கு சார்பான சஞ்சிகை. பொதுவான சஞ்சிகை போன்று வெளியிட்டு வந்தனர்.

கொழும்பு நடவடிக்கைக்கு குருநாதன் பொறுப்பாக அனுப்பப்பட்டார். குண்டைத் தயாரிக்கும் பொறுப்பு சிவரூபன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

நீர்வேலி பப்பனின் லொறியில் சாமான்களோடு வெடிமருந்து கொழும்புக்கு வந்து சேர்ந்தது.

குண்டு கார் (புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு)
கொழும்பில் கார் ஒன்றை வாங்கி அதிலே குண்டு பொருத்தப்பட்டது. ஏப்ரல் 21ம் திகதி குண்டு பொருத்தப்பட்ட கார் கொழும்பு புறக்கோட்டை நோக்கிப் புறப்பட்டது.

மாலை நேரமானதால் கொழும்பு புறக்கோட்டை ஜனங்களால் நிரம்பிவழிந்து கொண்டிருந்தது. வானம் சற்று இருளத் தொடங்கியிருந்தது.

மழை வரமுன்னர் பஸ்ஸைப் பிடித்து வீடு செல்லும் அவசரத்தில் சனங்கள் ஓட்டமும், நடையுமாக பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

குண்டு பொருத்தப்பட்ட கார் புறக்கோட்டை பஸ் நிலையம் அருகே வந்து நின்றது. சாரதி ஆசனத்தில் இருந்தவர் இறங்கிச் சென்றுவிட்டார்.

காருக்குள் பொருத்தப்பட்டிருந்த நேரக் குண்டு தனது நேரம் வரும்வரை காத்திருந்தது. நடக்கப்போகும் கோரத்தை காணச் சகியாமல் வானம் கடும்போர்வைக்குள் தன்னை மூடிக்கொண்டது.

கார்க் குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. நகர் அதிர்ந்தது.

அதேநேரம் வானம் இடிமுழக்கம் எழுப்பி மழை பொழியத் தொடங்கியது.

புறக்கோட்டை பஸ் நிலையம் உருமாறிப் போயிருந்தது. பஸ் நிலையத்தில் காத்திருந்தவர்கள் உட்பட பலியான மக்களது எண்ணிக்கை நூற்றுக்கும் மேல்.

மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பலியானவர்களில் அடங்கியிருந்தனர்.

புறக்கோட்டை சம்பவத்தின் கோரத்தை விடாது பெய்துகொண்டிருந்த அடைமழை சற்றுத் தணித்துக் கொண்டிருந்தது.

அடைமழை பொழியத் தொடங்கி இருக்காவிட்டால் கலவர சூழ்நிலை ஒன்று உருவாகியிருக்கக்கூடும்.

கொழும்பில் அதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் பெருமளவில் பலியான தாக்குதல் அதுதான்.

பொதுமக்களை இலக்காக வைத்து கொழும்பில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலும் அதுதான்.

பழி வேறிடத்தில்

குண்டுவெடிப்பை அடுத்து நாடெங்கும் ஊரடங்கு சட்டத்தை உடனடியாகப் பிறப்பித்தது அரசாங்கம்.

கொழும்பின் சில பகுதிகளில்மட்டும் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் தாக்கப்பட்டன. கலவர சூழல் ஏற்படாமல்

தடுப்பதில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சம்.

1977, 1983ம் ஆண்டுகளில் ஜே.ஆர். அரசாங்கம் நினைத்திருந்தால் இனக்கலவரங்களை கட்டுப்படுத்தி இருக்கலாம் என்பதற்கு 1987ல் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒரு சான்று.

எனினும், கொழும்பில் இருந்த தமிழர்கள் பலர் அரசாங்கத்தைவிட மழைக்கே நன்றி சொல்லிக்கொண்டனர். குண்டுத்தாக்குதலை நடத்தியவர்கள் புலிகள்தான். பழி விழுந்தது ஈரோஸ்மீது.

ஈரோஸ்தான் தாக்குதலை நடத்தியது என்று அரசாங்கமும் சந்தேகம் தெரிவித்தது. புலிகளும், ஈரோசும் இணைந்து செய்திருக்கலாம் என்றும் ஒரு ஊகம் வெளியானது.

தமக்கும், புறக்கோட்டைத் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று ஈரோஸ் திட்டவட்டமாக மறுத்திருந்தது.
ஈரோசின் மறுப்பை யாருமே நம்பவில்லை.

புறக்கோட்டை பஸ் நிலைய குண்டுவெடிப்பை ஈழப்போராளிகளுக்கு எதிரான சர்வதேச பிரசாரத்திற்கு பயன்படுத்தியது அரசாங்கம்.

பொதுமக்களை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் சர்வதேச கண்டனமும் எழுந்தது.

இத்தாக்குதலின் பின்னர் ‘றோ’வுக்கு புலிகளால் கொழும்பிலும் தாக்குதல் நடத்தமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

புறக்கோட்டை குண்டுவெடிப்பின் பின்னர்தான் கொழும்பில் தமது நடவடிக்கைகளை தொடரலாம் என்ற நம்பிக்கையும் புலிகள் அமைப்பினருக்கு ஏற்பட்டது.

‘றோ’ அமைப்பால் புலிகள் இயக்கத்திற்கு ஒரு பெருந்தொகை வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபது இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் உறுதியான தகவல் கிடைக்கப்பெறவில்லை.

‘றோ’ கொழும்பு அரசாங்கத்தை அதன் காலடியில் வெடிக்கும் குண்டுகளால் அதிர்ச்சிக்குள்ளாக்க நினைத்தது.

பொதுமக்கள் பெருமளவில் பலியாகும் நடிவடிக்கை தெற்கிலும் பிரச்சனையின் தீவிரத்தை உணரச்செய்யும் என்பதும் நோக்கமாக இருந்திருக்கலாம்.

அரசாங்கத்தின் காலடியில் குண்டுகளை வெடிக்கச் செய்து நெருக்கடியை ஏற்படுத்தியது மூலம், இலங்கை அரசாங்கம் இந்திய மத்தியஸ்தத்தை நாடியே தீரவேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

இந்தியா தவிர்ந்த வேறுநாடுகளை நம்பிக்கொண்டு இலங்கை அரசும், ஜே.ஆரும் வடக்கு-கிழக்கு நிலவரத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற செய்தியையும் குண்டு வெடிப்பு மூலம் ‘றோ’ வெளிப்படுத்த முயன்றிருக்கலாம்.

தமது நாட்டின் நலன் என்ற பக்கத்தில் இருந்து உளவுப்பிரிவுகள் தீட்டும் திட்டங்கள் நம்பமுடியாதளவுக்கு கொடூரம் நிறைந்தவையாக இருக்கலாம்.

ஆனால் காலம் காலமாக அவ்வாறான நடிவடிக்கைகள் தொடரவே செய்கின்றன.

உதாரணமாக, இந்தியாவில் நடைபெற்ற பம்பாய் குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு நிறுவனம் இருந்தது.
உளவு நிறுவனங்களது செயற்பாடுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாதளவுக்கு மிக இரகசியமாக திட்டமிடப்படுவதால் நிரூபிப்பது கடினம்.

புறக்கோட்டை குண்டு வெடிப்பு தனது திட்டப்படிதான் நடந்தது என்று ‘றோ’வும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. ‘றோ’ சொல்லியே செய்யப்பட்டது என்று புலிகளும் வெளியே சொல்லப்பபோவதில்லை.

சொன்னால் இரு தரப்புக்குமே அது பாதகம்தான். அதனால் இரகசியம் இறுதிவரை பாதுகாக்கப்படும்.

புறக்கோட்டை குண்டுவெடிப்பை தமது அரசியல், இராணுவ நோக்கங்களுக்கும் சாதகமாக இருக்ம் என்பதற்காகவே புலிகளும் செய்வதற்கு ஒப்புக்கொண்டனர்.

மற்றுமொரு தாக்குதல்
கொழும்பு புறக்கோட்டை குண்டு வெடிப்பை அடுத்து, கொழும்பில் புலிகள் மற்றொரு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கும் திட்டமிட்டனர்.

நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் மூர்த்தி. கொழும்பில் விபச்சாரம் செய்துவந்த மனோகரி என்னும் பெண் மூர்த்திக்கு பழக்கமானவர்.

மனோகரியை தன் அருகில் வைத்துக்கொண்டால் யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தார் மூர்த்தி. குறிப்பிட்ட தொகைப் பணம் தருவதாக சொல்லப்பட்டதால் மனோகரியும் ஒத்துழைக்க உடன்பட்டார்.

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மனோகரியுடன் தங்கியிருந்தார் மூர்த்தி.

இரண்டாவது நடவடிக்கைக்கும் நீர்வேலி பம்பனின் லொறியில் வெடிமருந்துகள் கொழும்புக்குள் பத்திரமாக கொண்டுவந்து சேர்க்கப்பட்டன.

நிஷாந்தன் என்னும் விக்கிதான் கார்க்குண்டை தயார்படுத்தினார். தாக்குதல் இலக்காக தெரிவு செய்யப்பட்ட இடம்தான் பயங்கரமானது.

மருதானை பொலிஸ் நிலையம், ரயில் நிலையம், பஸ்நிலையம் என்பவற்றை பாதிக்கக்கூடிய பொது இடத்தில் காரை நிறுத்த வேண்டும்.

கார்க் குண்டு வெடிக்கும் நேரம் பாடசாரைகள் விட்டு மாணவர்கள் திரும்பும் மத்தியான வேளையாக இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாமல், ரயில் நிலையம், பஸ்நிலையம் என்பவற்றில் மத்தியான வேளையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

புறக்கோட்டை பஸ் நிலைய குண்டுவெடிப்பைவிட மருதானை குண்டுவெடிப்பு பயங்கரமாக இருக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.

குறைந்தது 300 பேராவது பலியாகக் கூடும் என்று கணிப்பிட்டே திட்டம் தீட்டப்பட்டது.

கார்க்குண்டு தயாராகியதும் மூர்த்தியிடம் காரை ஒப்படைத்தார் நிஷாந்தன். மூர்த்தி காரைச் செலுத்தினார். அருகில் மனோகரி அமர்ந்திருந்தார்.

பொலிசாரும் தள்ளினர்.

மருதானை பொலிஸ் நிலையம் அருகே வந்ததும், போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்ட பதட்டத்தில் கார் நின்று விட்டது.
மீண்டும் ஸ்டாட் செய்தால் குண்டுவெடித்துவிடுமோ என்று பயந்தார் மூர்த்தி. அதனால் அவரும், மனோகரியும் காரை விட்டு இறங்கி, தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

இருவராலும் தொடர்ந்து தள்ளிச் செல்ல முடியவில்லை. பொலிஸ் நிலைய வாயிலருகே வந்ததும் பதட்டம் வேறு வந்துவிட்டது.

இதனைக் கவனித்த மருதானைப் பொலிசார் சிலர், “என்ன பிரச்சனை?” என்று கேட்டனர். மனோகரிக்கு நன்கு சிங்களம் தெரியும். ‘ஸடாட் வரவில்லை’ என்று சொன்னார்.

பொலிஸ் நிலைய வாயிலில் கார் நின்றால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டியிருக்குமே. அதனால் பொலிசாரும் சேர்ந்து காரைத் தள்ளி நிறுத்தினார்கள்.

ஆனால், காரை நிறுத்த வேண்டிய இடம் அதுவல்ல. இன்னமும் முன்னே செல்ல வேண்டும். மேலும் தள்ளிச் சென்றால் பொலிசார் சந்தேகப்படுவார்களோ என்று இருவரும் பயந்து விட்டனர்.

அதனால் காரை அப்படியே நிறுத்திவிட்டு ‘மெக்கானிக்கை’ அழைத்து வருவதாககக் கூறிவிட்டு, இருவரும் நழுவி விட்டனர்.

குறித்த நேரத்தில் கார்க்குண்டு வெடித்தது.

மருதானைப் பொலிஸ் நிலையத்தில் இருந்த பொலிசார், பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் உட்பட 150 பேர்வரை பலியானார்கள். நடைபாதை வியாபாரிகள் 7 பேரும் பலியானார்கள்.

இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட மனோகரி பின்னர் கைது செய்யப்பட்டார்.

மூர்த்தி, நிஷாந்தன் ஆகியோர் தப்பிச் சென்றனர். விசாரணையின் போது சகல விபரங்களையும் ஒப்புவித்தார் மனோகரி.

மூர்த்தி, நிஷாந்தன் ஆகியோர் பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். நி~hந்தன் சமீபத்தில் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

(தொடர்ந்து வரும்)Post a Comment

Protected by WP Anti Spam