அமெரிக்காவில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இந்தியர் கைது..!!
அமெரிக்காவில், குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் பென்ஸ்வில்லி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிதின் சிங், அவருடைய மனைவி சீமா ஆகியோர் 3 குழந்தைகளுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பென்ஸ்வில்லி நகர போலீசாருக்கு நள்ளிரவில் ஒரு போன் வந்தது.
அதில் பேசிய நிதின் சிங், தனது மனைவிக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் எனவே போலீசாரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
அங்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது, சமையல் அறையில் நிதின் சிங்கின் மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய உடலின் பல்வேறு பகுதிகளில் ஆழமான கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டன. அருகில் நிதின் சிங் கத்தியுடன் நின்றிருந்தார். பக்கத்து அறையில் அவருடைய 3 குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து விசாரணைக்காக போலீசார் நிதின் சிங்கை பிடித்துச் சென்றனர். மேலும் அவருடைய 3 குழந்தைகளையும் தாயார் இறந்தது தெரியாமல் இருக்க வீட்டின் வேறொரு கதவு வழியாக அழைத்துச் சென்றனர்.
போலீசார் நிதின்சிங்கிடம் விசாரணை நடத்தியபோது, மனைவியை அவர் குடும்பத் தகராறில் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.