By 27 July 2016 0 Comments

ஸ்லிம்மா இருக்க யாருக்குத்தான் பிடிக்காது?… இதோ ஸ்பெஷல் டிப்ஸ்…!!

slim_body_002.w540சேலை, சுடிதாருக்கு டாட்டா காட்டிவிட்டு டைட் ஜீன்ஸ், குட்டி டாப், குர்தி, லெகின்ஸ் என நவநாகரிக உடைகளை அணிவதே இளம்பெண்களின் விருப்பமாக உள்ளது. இந்த ஆடைகளுக்கு உடல்வாகும் ஒத்துழைக்க வேண்டும்.

மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், வயதுக்கு மீறிய உடல்பருமனோடு இருக்கும் இளம்பெண்கள் இந்த உடைகளை நினைத்து பார்க்கவே முடியாது. இவர்களுக்கு டிரெண்டி டிரஸ்ஸிங் மிகப்பெரிய கனவு. உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்தினால் கனவு நனவாகும் என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.

உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்கள், ஆசைப்பட்டாலும் இன்றைய டிரெண்டி உடைகளை அணிய முடியாது. தவறான உணவு பழக்கத்தால், பல பெண்களுக்கு சிறு வயதிலேயே தொப்பை மற்றும் தொடைப் பகுதிகளில் சதை போட்டு விடுகிறது. இவர்கள் ஜீன்ஸ் அணியவே முடியாது.

அப்படியே போட்டுக் கொண்டாலும், தர்ம சங்கடமாகவே இருக்கும். கையில் கொழுப்பு சேர்ந்தால் ஸ்லீவ்லெஸ், குட்டைக் கை டாப்ஸ் போடுவது முடியாமல் போகும். இது போன்ற அவஸ்தை வயது வித்தியாசம் இன்றி பெண்களை பாடாய்படுத்துகிறது. கட்டுடலோடு இருக்க வேண்டும் என்றே பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள்.

உங்களது நார்மலான எடையை கண்டுபிடிக்க சிறிய கணக்கு இருக்கிறது. உங்கள் உயரத்தை அளவிடுங்கள். அதிலிருந்து 100 செ.மீட்டரை கழித்தால் அதுதான் நார்மலான எடை. உதாரணமாக உயரம் 150 செ.மீட்டர் உயரம் இருப்பவரின் நார்மல் எடை 50 கிலோ. இதற்கு மேல் பருமனாக இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

இதே போல் உயரத்துக்கு தகுந்த இடுப்பு அளவையும் வைத்து கொள்ள வேண்டும். தற்பொழுது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அதிகபட்ச கொழுப்பை கண்டறிந்து அதனை சரி செய்து கொள்ள பிசியோதெரபி முறையில் வாய்ப்புகள் உள்ளன. கொழுப்பின் அளவைக் கண்டறியும் மெஷின் உள்ளது. உடலில் கை, மார்பு, வயிறு, இடுப்பு, தொடை மற்றும் கால் என எந்தப் பகுதியில் அதிக கொழுப்பு உள்ளது என்பதைக் கண்டறியலாம்.

உடலின் எடுப்பான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவர்கள், இந்த ஆய்வு அடிப்படையில் உடற்பயிற்சி செய்து உடல் பாகங்களில் சேரும் கெட்ட கொழுப்பை குறைத்துக் கொள்ளலாம். அந்தந்த பகுதிக்கு என தனித்தனி பயிற்சிகள் மூலம் எந்த உடைக்கும் பொருந்தும் உடல் வாகைப் பெற முடியும். பெண்கள் வயது வித்தியாசம் இன்றி மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி மற்றும் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

அதிகபட்சம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரையிலான பயிற்சி மூலம் உடல் அழகைத் திரும்பப் பெறலாம். அதை தக்க வைத்துக் கொள்ள நடை பயிற்சி அவசியம். உணவில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். உடல் அழகுக்காக இப்பயிற்சிகளை எடுத்துக் கொண்டாலும் ஆரோக்கியத்துக்கும் துணைபுரிகிறது. கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்ப்பதன் மூலம் இதயநோய்களில் இருந்தும் காத்துக் கொள்ளலாம் என்கிறார் ரம்யா.

வெந்தயக் கீரை சப்பாத்தி:

வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்தில் பிசையவும். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை சேர்த்துப் பிசையவும். இதனை வழக்கமான சப்பாத்தி போல போட்டு எடுக்கலாம் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

வாழைப்பூ குழம்பு:

வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து பொடியாக நறுக்கி வைக்கவும். அத்துடன் உப்பு தண்ணீர் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்புக்குத் தேவையான அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும். சீரகத்தை தனியாக நல்லெண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டு, வறமிளகாய் ஆகியவற்றையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளிக் கரைசலில் போட்டு வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

அன்னாசி பழ பச்சடி:

அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இதுவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.

பாட்டி வைத்தியம்

வேளைக்கீரை, குடை மிளகாய், பூண்டு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிக கொழுப்பு குறையும்.

பூண்டு இரண்டு பல், ஓமம் கால் ஸ்பூன், மிளகு 3 மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.

வாழை இலையை சமைத்து சாப்பிட்டால் தோல் பளபளக்கும்.

லெட்டூஸ் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தொப்பையைக் குறைக்கலாம்.

லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

உலர்ந்த ரோஜா இதழ், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.

முள்ளிக் கீரை சாறு எடுத்து அதில் நெல்லிக்காயை ஊற வைக்கவும். அதை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தொப்பை குறையும்.

மகிழம் பூவை பெண்கள் மார்பகங்கள் மீது வைத்துக் கட்டிக் கொண்டால் மார்புகள் இறுகி எடுப்பாகத் தோன்றும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் இளைக்கும்.

பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.

நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடல் கொழுப்பு கரையும்.

டயட்

உடையில் கவனம் செலுத்துவதைப் போலவே உடலை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் வேண்டும். அதன் இளமை, வடிவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதும் அவசியம். உடல் புத்துணர்ச்சிக்கு டீ, காபிக்கு பதிலாக நேரம் கிடைக்கும் போது, ஒரு நாளில் ஒரு முறையாவது பிரஷ் ஜூஸ் குடிக்கலாம். பச்சை காய்கறிகளை உணவில் கட்டாயம் சேர்ப்பது முக்கியம். பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட சாலட், சூப் ஆகியவையும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம். உடலின் தேவையற்ற கொழுப்பை குறைத்துக் கொள்ள நீர்க்காய்கள் அதிகம் சாப்பிட வேண்டும். புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், பூசணி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் எண்ணெய், உப்பு அளவைக் குறைப்பது மிகவும் அவசியம்.

கடலை எண்ணெய் அல்லது ரீபைண்டு ஆயில் ஆகியவற்றில் ஒன்றை மட்டும் பயன்படுத்துவதற்கு பதிலாக நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீபைண்டு ஆயில் ஆகிய மூன்றையும் 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து உணவில் பயன்படுத்தலாம். வெந்தயத்தை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளும் போது கெட்ட கொழுப்பு உடலில் சேர்வது தடுக்கப்படும். பீட்சா, பர்கர், காபி, சாக்லெட் உள்ளிட்ட உணவு வகைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும். மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயில் தயாரிக்கப்படும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இவற்றை சாப்பிடும் போது கெட்ட கொழுப்பு உடலில் படியும். நார்ச்சத்து உள்ள அவரை, வெண்டை, வாழைப்பூ, வாழைத்தண்டு, புதினா, வெந்தயக்கீரை ஆகியவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். இதன் மூலம் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதை தடுத்து வடிவழகை தக்கவைத்துக்கொள்ள முடியும்.Post a Comment

Protected by WP Anti Spam