யாழ்.அராலி கிழக்கில் குடும்பஸ்தர் கழுத்தறுத்துக் கொலை…!!
யாழ். வட்டுக்கோட்டை- அராலி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்கானை-துணைவி பகுதியிலேயே இன்று காலை 7.30 மணியளவில் குறித்த சடலம் பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அராலி கிழக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய செல்வரட்ணம் குணரத்தினம் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், இன்று காலை பொருட்கொள்வனவிற்காக மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்று வந்த போது இந்த கோரப்படுகொலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.