பாறசாலை அருகே எலும்புக் கூடு மீட்பு! ரப்பர் தோட்ட அதிபரின் மனைவி எங்கே..!!
பாறசாலை அருகே ஆலம்பாறை பகுதியில் ரப்பர் தோட்டத்தில் அஸ்திவாரத்துக்கான குழி தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பக்கத்து ரப்பர் தோட்டத்தில் மனித எலும்பு கூடு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடம் விரைந்த சென்று விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் எலும்புக் கூடாக கிடந்தவர் ரப்பர் தோட்ட உரிமையாளரான கருமானுார் பகுதியை சேர்ந்த அச்சுதன் மகன் செல்வராஜ் (55) என்பது தெரியவந்தது.
அந்த பகுதியில் உள்ள ஹலோபிளாக் கம்பெனியில் வேலை பார்த்ததும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை எனவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் அவரது மனைவி சரஸ்வதி (50), என்பவரையும் கடந்த இரு மாதங்களாக காணவில்லை எனவும் கூறினர். தம்பதியின் 13 வயது மகள் ஒரு கான்வென்டில் தங்கி படித்து வருவதாகவும் தெரியவந்தது. ஆனால் இது தொடர்பாக யாரும் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. தற்போது சாவில் சந்தேகம் இருப்பதாக கருதி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதன்படி நேற்று மாலை செல்வராஜின் எலும்பு கூட்டை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பளுகல் பேரூராட்சி தலைவர் பிஜூ போலீசில் புகார் அளித்தார். போலீசார் செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வீடு மற்றும் ரப்பர் தோட்டம் உள்ளதால் உறவினர்கள் யாராவது சொத்தை அபகரிக்கும் நோக்கில் சதி வேலையில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.