சர்வதேச நாணய நிதியம்: நவதாராளவாதத்தின் முடிவு…!!

Read Time:16 Minute, 45 Second

article_1470284285-IMசில உண்மைகளைப் பலகாலத்துக்கு மறைக்கவியலாது. எப்படித்தான் பொத்திப் பொத்தி வைத்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்கவியலாது. அதுவே உண்மையின் வலிமை. நாமறிந்தவை, நாமறியாதவை, நம்மிடம் மறைக்கப்பட்டவை, நாம் அறியவிரும்பாதவை என உண்மைகள் பலவகைப்பட்டாலும், உண்மை ஈற்றில் தன்னை வெளிப்படுத்தி நிலைநாட்டும். சில உண்மைகள் ஏற்கக் கடினமானவை சில நம்பக் கடினமானவை. எவ்வாறும் உண்மை எம்மைக் கனவுலகத்திலிருந்து நனவுகுக்குக் கொண்டு வருகிறது.

உலகளாவ நன்கறிந்த ஒரு கோட்பாட்டின் முடிவை அக்கோட்பாட்டை உலகெங்கும் பரப்பிச் செயற்படுத்தியோரே அறிவிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சி தாங்கக் கூடியதல்ல. அண்மையில் சர்வதேச நாணய நிதியம் நவதாராளவாதத்தின் தோல்வியை ஏற்றதோடு அதன் முடிவையும் அறிவித்தது. இது எவரும் எதிர்பாராதது. நவதாராளவாதத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றாயும் அதன் பிரதானமான காப்பாளராயும் கடந்த 40 ஆண்டுகளாகச் செயற்பட்ட சர்வதேச நாணய நிதியம் அதன் முடிவை வெளிப்படையாக அறிவித்தமை உலகப் பொருளாதாரத்தின் மோசமான நிலையைக் காட்டுகிறது.

நவதாராளவாதம் பற்றிய விவாதங்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பல்வேறு தளங்களில் நடந்து வந்துள்ளன. நவதாராளவாதம் என்றால் என்ன எனத் தொடங்கி அதுவே உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது வரை பல்வேறு கட்டங்களில் இவ்விவாதம் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை இரண்டு விடயங்களை உறுதிப்படுத்துகிறது. முதலாவதாக நவதாராளவாதம் என்றவொன்று இல்லை என வாதாடுபவர்களுக்கு அவ்வாறொன்று உள்ளது எனச் சொல்லியிருக்கிறது. இரண்டாவதாக நவதாராளவாதம் பிரச்சினை எதற்கும் தீர்வாகவன்றிப் பிரச்சினைகளின் அடிப்படையாக இருக்கிறது என உறுதி செய்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்நிலைப் பொருளியலாளர்கள் மூவர் இதைத் தெரிவித்துள்ளதன் மூலம் சொல்லும் செய்தி வலியது. ஒரு கோட்பாட்டைக் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விடாது முன்னெடுத்ததோடன்றி அக்கோட்பாட்டின் பிரதான பிரசாரகனாகவும் திகழ்ந்த ஓர் அமைப்பு அக்கோட்பாட்டின் தோல்வியை ஏற்கிறதென்றால் அதை எவ்வாறு பொருள் கொள்வது? இப்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி அதுவே.

இதை விளங்கவேண்டின் வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்ட வேண்டும். அதிகார நோக்கங்களுக்காக உலகைக் கூறுபோடுவதற்காகத் தொடங்கிய இரண்டு உலகப் போர்களும் முடிவடைந்த பின்னர் பொருளாதார ரீதியில் உலகை ஒன்றிணைத்து முதலாளிய அதிகாரத்தை நிறுவும் தேவை இருந்தது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும் உலகளாவிய நிதி மூலதனத்தை ஒழுங்குபடுத்தவும் 1944 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரெட்டன் வூட்ஸில் நடந்த மாநாடு, அதற்கான அடிப்படைகளை உருவாக்கியது. அம்மாநாட்டின் விளைவாக உலக வங்கி என அறியப்படும் மீள்கட்டுமானத்துக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் தோன்றின.

அடிப்படையில், இரண்டு விடயங்களைச் செய்வதற்காக சர்வதேச நாணய நிதியம் உருவானது. முதலாவதாக, உறுப்பு நாடுகளிடையே நாணயமாற்று வீதங்களைச் சீராக்கி மேற்பார்வை செய்வது. இரண்டாவதாக, உறுப்பு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் போது கடன் வழங்கி நாடுகளைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது.

இவ்விரண்டு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு இன்று உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளின் எதிர்காலத்தையும் அவற்றின் பொருளாதாரத் திசைவழியையும் தீர்மானிக்கும் சக்தியாகியிருக்கிறது. இம்மாற்றம் திடீரென நிகழவில்லை. அதேவேளை, இவ்வமைப்பு தொடர்ச்சியாக நாடுகளுக்கு விதித்துவந்த பொருளாதாரக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கிப் போராடியும் உயிர்த் தியாகம் செய்தும் இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலக ஒழுங்கில் அரசின் வகிபாகம் பற்றிய முக்கிய கேள்விகள் எழுந்தன. 1970கள் வரை மக்களின் சமூக நலன்கள் பற்றி அரசு அக்கறை காட்டியது. 1970களின் நடுக்கூற்றிலிருந்து, அரசு தனது முக்கிய கடமையாகிய
மக்க​ைள நிர்வகித்தலை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தலில் ஈடுபடக்கூடாதென்றும் வலியுறுத்தும் போக்கு வலுப்பட்டது. நீண்ட போராட்டத்தின் பின், அரசின் சமூக நலன்பேணும் கடப்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. முதலாளியம் ஏகாதிபத்தியமாக மாறியதையொட்டி உருவான நிதி மூலதனத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் 1980களிலிருந்து உலகமயமாதலுடனும் மூலதனத்தின் அசைவாற்றலுடனும் ஓர் அரசியல் சக்தியாக எழுச்சிகண்ட நவதாராளவாதத்துடன் இணைந்தன.

இந்நவதாரளவாதத்தின் காவலனாகச் செயற்பட்ட சர்வதேச நாணய நிதியம் முன்னேறிய முதலாளிய நாடுகளில் சமூகப் பாதுகாப்பினதும் சமூக நலனினதும் பிரதான ஆதாரமாக அரசு ஆற்றிய பங்குக்கு குழிபறித்தது. மூன்றாம் உலகில் அது விதித்த கட்டுப்பாடுகளின்; விளைவுகள் மேலும் கடுமையானவை. பல நாடுகளில் தனது சமூகப் பொறுப்பைக் கைவிடுமாறு அரசு கட்டாயப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, அரசாங்கம் வழங்கிவந்த சொற்ப சமூகப் பாதுகாப்பு நிவாரணம் மட்டுமன்றி அரசாங்கம் பொறுப்பாயிருந்த கல்வி, உடல் நலன், பொதுசனப் போக்குவரத்து, நீர் வழங்கல் ஆகிய அத்தியாவசிய சேவைகள் மெல்லச் சிதைய விடப்பட்டன அல்லது ஒரே வீச்சில் வெட்டிக் குறுக்கப் பட்டோ கைவிடப் பட்டோ உள்ளன.

கடந்த மூன்று தசாப்தங்களாக மூன்றாம் உலகில் அரசாங்கங்கள் சமூகப் பொறுப்புக்களைக் கைவிட்டு வரக் காரணம் சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குவாரமே ஆகும். குறிப்பாக 1980கள் தொட்டு, பொருளாதார நெருக்கடிக்குட்பட்ட பல்வேறு மூன்றாமுலக நாடுகளுக்குக் கடன் வழங்க முன்நிபந்தனையாக அந் நாடுகளில் ‘சீர்திருத்தங்கள்’, ‘மீள்கட்டமைத்தல்’ என்ற பெயர்களில் அந்நாடுகளின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களைத் திணித்து, அரசின் வகிபாகத்தைக் குறைத்து, அனைத்தையும் தனியார் கைகட்கு மாற்றி அந்நாடுகளின் பொருளாதாரத்தைச் சர்வதேச நிதி மூலதனத்தின் கோரப் பிடியில் சிக்கச் செய்யும் வேலையை சர்வதேச நாணய நிதியம் கச்சிதமாகச் செய்து வருகிறது.

இவ்வடிப்படையில், மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் ஓர் அமைப்பு எனும் வகையில் அமைந்த சமூகப் பாதுகாப்பை வழங்கும் அரசாங்கத்தையா ‘ஆயா அரசாங்கம்’ என இழிவுசெய்த நவதாராளவாதம் அரசாங்கத்தின் வகிபாகத்தை முற்றாக இல்லாமற் செய்தது. உலகமயமாக்கல், சுயாதீனமான சந்தை, சந்தைச் சக்திகள் என்பனவே நாட்டின் எல்லா அலுவல்களையும் நடத்துவதில் பிரதான பங்குவகிக்குமாறு அரசாங்கத்தின் நிலை கீழிறங்குகிறது.

இவ்வாறு அரசாங்கத்தின் வகிபாகத்தை நவதாரளவாதம் குறைத்தாலும் தனியார் உடைமை உரிமையையும் உற்பத்திச் சாதனங்கள் மீது தனியார் கட்டுப்பாட்டையும் உற்பத்தி மீதும் விநியோகத்தின் மீதும் வணிகக் கும்பல்களின் ஏகபோகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அது எதிர்பார்க்கிறது.

மக்களின் சமூக நலன்களைக் குறைப்பதன் மூலம் ஊதிப்பெருத்த நிதி மூலதனத்தின் காவலர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அம் மக்களுக்கெதிராக அரசு தனது பொலிஸ், இராணுவக் கட்டமைப்பின் மூலம் வன்முறையை ஏவி எதிர்ப்பை அடக்க வேண்டும் என அது எதிர்பார்க்கிறது. இதை ‘அரசு பொறுப்புணர்வுடன் நடத்தல்’ என நவதாராளவாதச் சொல்லாடல் அழைக்கிறது.

ஏகபோக மூலதனமாக வளர்ந்துள்ள மூலதனம் தன் தேச எல்லைகளைத் தாண்டி அந்நிய நாடுகளின் உற்பத்தியையும் வணிகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. இதற்கு மூன்றாம் உலக நாடுகளின் மீது முழுமையான கட்டுப்பாடு அவசியம். அக்கட்டுப்பாடே அந்நாடுகளின் இயற்கை வளங்களை வரையற்றுச் சுரண்டவும் குறைந்த கூலியில் வேலையாட்களைப் பெறவும் வழி செய்யும். எனவே அதை இயலுமாக்க சர்வதேச நாணய நிதியம் ‘கடன்’ என்கிற ஆயுதத்துடன் வருகிறது. அதன் மூலம் கடன் பெற்ற நாடு ஏகபோக மூலதனத் தேவைகளுக்கமைய வழிநடத்தப்படுகிறது. எனவே தேசியப் பொருளாதாரம் என ஒன்றை உருவாக்க இயலாது போகிறது. ஏற்றுமதியை மையமாகக் கொண்ட ஒரு நுகர்வுப் பொருளாதாரம் ஒவ்வொரு நாட்டின் மீதும் திணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதை விட உலகமயமாதல் என்ற பெயரில் நாடுகள் தமது சகல பொருளாதாரச் செயற்பாடுகளையும் தனியார் துறையிடம் கையளிக்கவும் தாராளமயம் என்கிற பேரில் அந்நிய மூலதனம் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவும் திறந்த பொருளாதாரம் என்ற பெயரில் கட்டுப்பாடின்றி ஆடம்பரப் பொருட்களையும் தனது மிகை உற்பத்திகளையும் நாட்டினுள் கொண்டுவந்து குவிக்கவும் இயலுமாகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் வரலாறு இரத்தம் தோய்ந்தது. அது நவதாரளவாதத்தின் முடிவை அறிவித்ததன் பொருள், பிரட்டன் வூட்ஸ் உடன்பாட்டின் அடிப்படையிலான பொருளாதார கட்டமைப்பு அதன் முடிவை எட்டுகிறது எனக் கொள்ளலாம். இன்று உலகளாவிய நிதி நெருக்கடித் தீர்வுக்கான பதில்களைத் தேடுகிறது. பதில்கள் கிடையாத போது பழியை யார் மீதாவது போடுவது எளிது. எனவே நவதாரளவாதத்தின் மீது பழி விழுந்துள்ளது.

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில் நவதாரளவாதம் தனித்த ஒரு கோட்பாடல்ல. கொலனியாதிக்கத்தின் முடிவில் நாடுகளை நவ-கொலனிகளாக வைத்திருக்கும் பொருட்டு முதலாளித்துவம் உலகமயமாக்கலின் உதவியுடன் திறந்த சந்தை, கட்டற்ற வர்த்தகம் என்பவற்றை நடைமுறைப்படுத்த உருவான கருவியே அது. நவதாரளவாதத்தின் தோல்வி பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பானது உண்மையில் முதலாளித்துவத்தின் தோல்வியை இன்னொரு வகையில் மறைமுகமான வகையில் ஒத்துக் கொள்ளலாகும்.

முதலாளித்துவம் இன்று பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் அதிர்வலைகள் இன்னமும் வலுவாயுள்ளன. உலகின் முக்கியமான பொருளாதாரக் கட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் மோசமான பொருளாதார நிலையில் உள்ளது. மத்திய கிழக்கின் உறுதியின்மை எண்ணெய் விலைகளைத் தொடர்ந்தும் குறைவாக வைத்திருக்கிறது. இவை முதலாளித்தியத்தின் வெளிப்படையான நெருக்கடிகளைச் சுட்டுவன.

ஆனால், உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவினுள் வறுமையும் வேலையின்மையும் அதிகரித்திருக்கையில், அமெரிக்கா உலகெங்கும் போர்களை நடத்தப் பல மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழிக்கிறது. இது முதலாளியத்தின் உள்ளார்ந்த நெருக்கடியை, முதலாளித்துவம் கட்டியெழுப்பப்பட்டுள்ள அடிப்படைகளில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. முதலாளியம் இன்று உற்பத்தியினின்றும் சமூகத் தேவைகளினின்றும் அந்நியப்பட்ட முகமற்ற, நாடற்ற, கொடிய, அருவ அமைப்பாகியுள்ளது. ஆனால் அதன் தோல்வி உடனடியாக நிகழாது. அதற்குக் காலமெடுக்கும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டில் 2500 பேருக்கு வாய் புற்று நோய்…!!
Next post ஆயுள் குறைய பிரதான காரணம் மதுபானம்..!!