சிங்கத்துக்கு அஞ்சாத கண்ணாடி…!!

Read Time:20 Minute, 39 Second

article_1471840103-ttஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அதேபோல, சிங்கமும் முயலும் கதையையும் கேள்விப் பட்டிராதோர்; இருக்கமாட்டார்கள். அந்தச் சிங்கத்தின் கர்ஜனை, காட்டில் வாழ்ந்த ஏனைய மிருகங்களையெல்லாம் கிலி பிடிக்கச் செய்திருந்தது.

அந்தளவுக்கு அராஜகமாகவே சிங்கத்தின் செயற்பாடுகள் இருந்தன. நான், என்ற மமதையில் கண்மூடித்தனமாகச் செயற்பட்ட அந்தச் சிங்கம், தன்னைவிடவும் பெரிய சிங்கமொன்று இருப்பதாக முயலார் (முயல்) கொடுத்த இத்த கயிற்றை உண்மையென நம்பி, மூர்க்கமடைந்து, ஒருநிமிடமேனும் சிந்திக்காது, தானாகவே கிணற்றுக்குள் விழுந்து பலியானது, இதுவே கதையின் சாராம்சமாகும்.

சரி, இனி விடயத்துக்கு வருவோம்.

இப்படிதான் இலங்கை அரசியலில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தசாப்தகால ஆட்சியில், எடுக்கப்பட்ட ஒருசில முடிவுகள், கட்சிக்குள்ளும் அரசாங்கத்துக்குள்ளும் இருந்தவர்களை முகஞ்சுழிக்கவைத்திருந்தது. அதில், அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை ஏற்படுத்தியமை, கட்சியில் மற்றும் அரசாங்கத்தில் இருந்த இரண்டாம் நிலைத் தலைவர்களின் மனங்களில் பெரும் நெருடல்களை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, பொது எதிரணியின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டதன் பின்னர், அந்த அகங்காரமும் சர்வாதிகாரமும் முடிவுக்குகொண்டுவரப்பட்டது.

அதன்பின்னர் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, அவர் எடுத்த மிகச்சடுதியான, காத்திரமான முடிவுகளினால், மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் கனவும் அவரோடிருந்த கூட்டாளிகளின் நாடாளுமன்றப் பலத்தைக் கைப்பற்றும் கனவும் சுக்குநூறாக்கப்பட்டது.

கடுமையான நெருக்குவாரங்களின் பின்னர் ஆட்சிபீடம் ஏறிய இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பயணம், ஆரம்பத்தில் சிக்கல் நிறைந்ததாகவும் கொஞ்சம் கரடுமுரடானதாகவும் இருந்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால ஒரு மிதவாதப்போக்குடைய ஜனாதிபதி என்றும் சொல்வதைச் செய்கின்ற கிளிப்பிள்ளை அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் கைக்கூலி என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அவ்வாறான விமர்சனங்களையெல்லாம் நியாயப்படுத்தும் வகையில்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட சில முடிவுகளும், அரசியல் களம் சூடுபிடித்திருந்தபோதெல்லாம் ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட சிற்சில அறிவிப்புகளும் இருந்தன.

உதாரணமாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் நியமனம் மட்டுமன்றி, அவரின் பதவிக்காலம் நிறைவடையும் தறுவாயில், ஆளுநரை நீக்கவோ அல்லது புதிய ஆளுநரை நியமிக்கவோ ஜனாதிபதி பின்னடிக்கின்றார் என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினாரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

எனினும், பதவிக்காலம் நிறைவடையும் நாளன்று, கொழும்புக்கு வெளியிலிருந்து அறிவிப்பொன்றை விடுத்திருந்த ஜனாதிபதி, இந்தப்பிரச்சினைக்கு ஒரு மணிநேரத்துக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவித்திருந்தார். எனினும், அவ்வறிப்பு விடுக்கப்பட்டு 24 மணிநேரத்தின் பின்னர் புதியவர் நியமிக்கப்பட்டார்.

இவ்விடத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுப்பதற்குத் தாமதமானதால், அவர், கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டுகள், ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்படக் கூடியனவாக அமைந்தன அல்லது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள், மக்கள் மனங்களுக்குக் கொண்டு செல்வதற்கு இடமளிக்கப்பட்டுவிட்டன.

அதற்கப்பால், தொழிலாளர் தினத்தை (மே தினத்தை) கிருலப்பனையில் தனியாக நடத்திய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எவ்விதமான அதிரடியான நடவடிக்கைகளையும் எடுக்காது விட்டமை, ஜனாதிபதி மென்மையானவர் என்பதையே எடுத்துக்காட்டியது.

அதற்குப் பின்னரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சிந்தனையெல்லாம், அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை மக்களின் மத்தியில் கொண்டுசெல்பவையாக இருந்தாலும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் பாரிய தவறுகளை இழைத்துவிட்டது.

நிழல் அமைச்சரவை நியமித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியானது, அதில் சிறுபான்மையினரை உள்ளடக்கவில்லை. குடும்ப ஆட்சியதிகாரம் எனும் ஆயுதத்தினால் தன்னையே கவிழ்த்துக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, நிழல் அமைச்சரவையிலும் தன்குடும்ப அங்கத்தவர்களுக்கு முக்கிய பதவிகளுக்காகப் பரிந்துரை செய்து, மண்ணைவாரிப் போட்டுக்கொண்டார் எனலாம்.

அதன்பின்னர், நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள், மக்களிடத்தில் செல்லாக்காசாகிவிட்டன. கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய பாதயாத்திரையின் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நீதிமன்றங்களால் விடுக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவுகள், கட்டளைகள் மற்றும் உத்தரவுகள், நாட்டில் சுயாதீனமான நீதிமன்றமொன்று இயங்குகின்றனது என்ற உண்மையை உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேசத்துக்கும் எடுத்துச்சென்றுவிட்டது.

மக்கள் மனங்களிலிருந்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரை ஓரளவுக்குத்

தூரவிலக்கிச் சென்றுகொண்டிருக்கின்ற நிலையில், அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய கட்டுக்கோப்புக்குள் வைத்துக்கொள்ளவேண்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையொன்றே ஏற்பட்டிருந்தது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் சேர்ந்தவர்கள், அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போதெல்லாம், கட்சியின் மத்தியகுழு முடிவெடுக்கும் என்ற அறிவிப்புகளைத் தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஆனால், கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி புதன்கிழமையன்று எடுத்த முடிவானது, அவர், பிரதமரின் செல்லப்பிள்ளையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் கைப்பிள்ளையோ அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருக்கின்ற சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்கு அஞ்சுபவரோ அல்ல என்பதைத் தெட்டத்தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட 44 பேரை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து உடன் அமுலுக்குவரும் வகையில் விலக்கி, அவ்வெற்றிடங்களுக்குப் புதியவர்களை நியமித்துவிட்டார்.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே (கெஸ்பேவ), ரோஹித அபேகுணவர்தன (களுத்துறை), மஹிந்த யாப்பா அபேகுணவர்தன (வெலிகம), கெஹலிய ரம்புக்வெல (குண்டசாலை), சி.பி.ரத்னாயக்க (வலப்பனை), பவித்ரா வன்னியாராச்சி (எஹலியகொடை) ஆகியோரும் அடங்குகின்றனர்.

கட்சியின் கொள்கை, கட்சியின் மத்தியகுழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழேயே, அவ்வனைவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

மஹிந்தவினால் வழிநடத்தப்படுவதாகக் கூறப்படுவோரை அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கியமை, சுதந்திரக் கட்சிக்குப் பெரும் தலைவலியாக இருக்காது என்பது உண்மையாக இருந்தாலும், புதிதாக நியமிக்கப்பட்டவர்களில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த, ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் தலைவர் எராஜ் காவிந்த பெர்ணான்டோவின் நியமனம் சில கசப்புணர்வுகளை ஞாபகப்படுத்தி, முகஞ்சுளிக்கவைத்துவிட்டது எனலாம்.

ஏனெனில், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தலை விமான நிலையம் ஆகியவற்றை, 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதியன்று பார்வையிடுவதற்குச் சென்றிருந்த அன்றைய எதிர்க்கட்சியின் உறுப்பினரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் மீது, எராஜ் காவிந்த தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடத்தினர்.

எராஜ், கைத்துப்பாக்கியுடன் ஓடிவந்ததைப் புகைப்படங்கள் சான்றுப்படுத்தின. எனினும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் மீது தாக்குதல் நடத்துவதற்குக் குழுவொன்று தயாராகியிருந்ததாகவும் அதனைக் கட்டுப்படுத்தவே தான் அங்கு சென்றதாகவும், தன் கையில் விளையாட்டுத் துப்பாக்கியையே வைத்திருந்ததாகவும் அவர் பின்னர் வியாக்கியானம் செய்திருந்தார்.

இந்த விவகாரம், இலங்கை அரசியலில் பெரும் பிரச்சினையைக் கிளப்பிவிட்டிருந்தாலும் அன்றைய அரசாங்கத் தரப்பிலோ அல்லது கட்சியினாலோ, அவருக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதே வெட்கித் தலைகுனியவைக்கும் செயலாகும்.

சுதந்திரக் கட்சிக்கு நியமிக்கப்பட்ட புதிய அமைப்பாளர்கள், கட்சியின் சாதாரணமான மறுசீரமைப்பின் போது மேற்கொள்ளப்படவில்லை. மிகவும் இக்கட்டான சூழ்நிலையின்போதே, புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகையினால், கடந்த பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் எவ்வாறு களையெடுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதோ, அவ்வாறானதொரு நடைமுறை, சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளிலும் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு கட்சியானது நெருக்கடியான நிலைமைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றபோது, ஒவ்வொரு நகர்வுகளிலும் மிகவும் நிதானமாக அடியெடுத்து வைக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிடின், அடுத்தகட்டத்துக்கு நகர்வதற்கு முன்னர் பாரிய நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைமை ஏற்பட்டுவிடும்.

அந்த நிலைமையே, எராஜ் காவிந்தவின் நியமனத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், குறிப்பாக அக்கட்சியின் தலைவர் முகங்கொடுப்பார். ஏனெனில், ஹம்பாந்தோட்டையில் அன்று அவர், துப்பாக்கியை ஏந்திக்கொண்டு ஓடிவந்த படத்தை, பிரேஸிலின் றியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற (இலங்கை நேரப்படி இன்று 22 நிறைவடையும்) ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற, உலகிலேயே மிகவேகமான நபரென்று வர்ணிக்கப்படும் உசைன் போல்டின் படத்துக்கு அண்மையில் போட்டு, கடும் விமர்சனத்து உட்படுத்தி, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உசைன் போல்ட் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி, தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். அதனை உலகளாவிய மக்களுக்குச் செய்தியாகக் கொண்டுசெல்வதில் ஊடகங்களே முன்னிற்கின்றன. அதேபோல, எராஜ் காவிந்தவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்காது விட்டாலும், அமைப்பாளர் பதவி வழங்கப்பட்ட விவகாரத்தை ஊடகங்களே ஊதிப் பெருப்பித்துவிட்டன.

உசைன் போல்டுக்கோ அல்லது அவ்வணிகோ கிடைத்த பதக்க விவரங்களை, ஏதாவதோர் ஊடகத்தைச் சேர்ந்தோர் படம்பிடித்துவிட்டு அதனைக் வெளிக்கொணராது விட்டால், அந்தவிவகாரம் மக்களுக்குத் தெரிந்துவிடாது என்று நினைப்பது, பூனை கண்ணை மூடிக்கொண்டு, முழு உலகமுமே இருண்டுவிட்டது என்றெண்ணும் முட்டாள்த் தனமான சிந்தனைக்குச் சமமானதாகும்.

அதேபோல, பாதயாத்திரை கொழும்பை நோக்கி வந்துகொண்டிருந்த போது, எதிர்ப்புக் கூட்டத்தை எங்கு நடத்துவதென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திண்டாடிக்கொண்டிருந்தார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், நாட்டின் சிங்கமென வர்ணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, லிப்டன் சுற்றுவட்டத்தில் அலைந்துதிரிந்து, தங்களுடைய போராட்டத்தை தெளிவுபடுத்த வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் கைப்பொம்மை அல்லது கண்ணாடி என்று வர்ணிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதயாத்திரை, பேராதனையில் ஆரம்பிக்கப்பட்டபோது, கால்களை கொப்புளங்கள் போடும் வரை நடப்பதனால் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்றும் அப்பாயாத்திரை கொழும்புக்கு வந்தடைவதற்கு முதல்நாளன்று, கற்பனைக் கதைகளைக் கூறிக்கொண்டு வீதிவலம் வருகின்ற நிலையில், கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருந்த பொருளாதாரப் பிரச்சினைகளின் விளைவுகளையே தற்போது மக்கள் அனுபவிக்கவேண்டிய நிலைஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அரசியலிலும் சரி, ஏனைய விவகாரங்களிலும் சரி, என்னதான் பல ஆண்டுகள் அனுபவம் இருப்பதாகத் தம்மைக் கூறிக்கொள்கின்ற சிங்கமும் அதனோடு இணைந்தாடுகின்ற வால்களும், அதிகாரங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, தனித்து நடைபோடுகின்ற கண்ணாடி என்று வர்ணிக்கப்படுகின்றவர்களுக்கு அஞ்சியே இருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை, நினைத்ததைப்போல அழித்துவிடமுடியாது. அதேபோல, ஏனைய தலைவர்களின் பெயர்களை வரலாற்றிலிருந்தே அழிப்பதற்கு முயன்ற அவருடைய செயற்பாட்டுகளையும் மறக்கவே முடியாது.

ஆகையால், வரலாற்றை அழிக்க நினைப்பவர்களும், சம்பவங்ளை மக்களுக்கு கொண்டுசெல்லவிடாமல் மறைக்க முயல்கின்றவர்களுக்கும் சிங்கம், தன்னையே பார்த்து கிணற்றுக்குள் விழுந்து மடிந்ததை ஞாபகப்படுத்திகொண்டால், கண்ணாடி போல இருக்கும் தண்ணீரில் தன்னுடைய உருவமே இருக்கிறது என்பது புலப்பட்டால் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பிரயோசனமானதாகவே இருக்கும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியா, ஈரோஸ் இயகத்துக்கு வழங்கிய மோட்டார் ஷெல்கள்: யாழ்கோட்டைக்குள் சரமாரியாக ஏவிய ஷெல்கள்..! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -83) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”..!!
Next post உங்கள் அன்புக்குரியவள் உங்களை சுற்றி வர…!!