தமிழக சட்டமன்றத்துக்கு போட்டிச் சட்டமன்றம்…!!

Read Time:13 Minute, 50 Second

article_1471839918-kasinathதமிழக சட்டமன்ற வரலாற்றில் மீண்டுமொரு போட்டிச் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) 79 சட்டமன்ற உறுப்பினர்களைக் கூண்டோடு தற்காலிக நீக்கம் செய்தார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி (அ.தி.மு.க) இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வந்த பிறகு, நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதல் நீக்கம் இது. கடந்த ஜுலை மாதம் 25 ஆம் திகதி நிதி நிலை மீதான பொது விவாதம் தொடங்கி, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதங்கள் வருகின்ற செப்டெம்பர் இரண்டாம் திகதி வரை நடைபெறும் என்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அடங்கிய சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் இரண்டாம் திகதி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் ஓகஸ்ட் 15 வரை அமைதியாகப் போய் விட்டது. தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்றாலும் ஏதாவது ஒரு வகையில் மீண்டும் அவை நடவடிக்கைகள் நடைபெற்றே வந்தன. அ.தி.மு.க சார்பில் அவை முதல்வர்

ஓ. பன்னீர் செல்வம் தலையிட்டு சமாதானம் செய்வார். அப்படியில்லையென்றால் தி.மு.க சார்பில் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு சமாதானம் செய்வார். ஆனால் இதற்கு ஒரு ‘பிரேக்கிங் பொயின்ட்’ என்பது போல் கடந்த 17.8.2016 அன்று இரு தரப்பிற்கும் ஏற்பட்ட விவாதம், மோதல் விவகாரமாகி இறுதியில் தி.மு.க உறுப்பினர்கள் 79 பேரை கூண்டோடு ஒரு வாரத்துக்கு தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இந்த ஒரு வார நீக்கம் என்பது இடையில் வரும் விடுமுறைகளையும் சேர்த்துப் பார்த்தால் வருகின்ற ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். அதுவரை 89 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களில் 79 பேர் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது.

இந்த அறிவிப்பு வந்ததும் முதலமைச்சர் ஜெயலலிதா 22 ஆம் திகதி காவல்துறை மானியத்தில் பேச வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு எங்களை நீக்கி விட்டார்கள் என்று எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார். அடுத்த நாள் 18 ஆம் திகதி தலைமைச் செயலகத்துக்கு வந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளே விட மறுத்தனர் காவல்துறை அதிகாரிகள். அதே போல் சட்டமன்ற வளாகத்தில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அறைக்கும் செல்ல மு.க. ஸ்டாலினுக்கு அனுமதி மறுத்தனர். அதன் விளைவாக அங்கு வந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்;தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு புறப்பட்டு சென்றனர். ஆனால் 19 ஆம் திகதிதான் சற்று வித்தியாசமான போராட்டத்தை தி.மு.கவினர் நடத்தினார்கள். அது தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளே இரு சட்டமன்றங்கள் நடைபெறும் வகையில் அந்த போராட்டம் அமைந்தது. உள்ளே ‘ஒரிஜினல் சட்டமன்றம்’. வெளியிலோ ‘போட்டிச் சட்டமன்றம்’! இதன் சபாநாயகராக தி.மு.கவின் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் துரைமுருகன் இருந்தார். அந்தப் போட்டிச் சட்டமன்றத்தில் கேள்வி நேரம், மானியக் கோரிக்கைகள் எல்லாமே ஒரு மணி நேரத்தில் முடிக்கப்பட்டன.

தமிழகச் சட்டமன்ற ஜனநாயக வரலாற்றில் இப்படிப் போட்டிச் சட்டமன்றம் நடத்தப்படுவது புதிதல்லƒ ஆனால் கடந்த ஐந்து வருடத்தில் இதுதான் முதல் முறையாக தி.மு.க நடத்தியிருக்கிறது. இதற்கிடையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் தற்காலிக நீக்கத்தை இரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை. ‘எவ்வளவோ பொறுமையாக இருந்தேன். ஆனாலும் அவர்கள் சபையை நடத்த விடவில்லை. அதனால் நீக்கியிருக்கிறேன். என் முடிவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை’ என்று இறுதியாக கூறி விட்டார் சபாநாயகர் தனபால்.

அவை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. அதிலும் சபைக்குள் எடுக்கப்படும் அவரது நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் கூட பெருமளவில் தலையிடுவது இல்லை. அதனால் அவை நடவடிக்கையை ஒழுங்கு படுத்தும் பொருட்டு சட்டமன்ற உறுப்பினரை தற்காலிக நீக்கம் செய்வதோ, அல்லது ஒரு கூட்டத் தொடருக்கு பங்கேற்க விடாமல் நீக்கம் செய்வதோ அல்லது ஒரு சில நாட்களுக்கு பங்கேற்க விடாமல் செய்வதோ சட்டமன்ற விதிகளின் படி அவையை நடத்தும் சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்கள்தான். ஆனால் சபாநாயகருக்கு இருப்பது அதிகாரமா அல்லது வானளாவிய அதிகாரமா என்ற கேள்வி எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது எழுந்தது. அப்போது சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன், ‘எனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது’ என்று உறுதிபடக் கூறியிருந்தார்.

ஆனால் இந்த வானளாவிய அதிகாரம் பற்றி இந்திய உச்சநீதிமன்றத்திற்கோ, உயர்நீதிமன்றங்களுக்கோ உடன்பாடு இல்லை. ஆகவே பல்வேறு தீர்ப்புகளில் சபாநாயகருக்கு சபைக்குள் அதிகாரம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளும் நீதிமன்றங்கள், சபாநாயகரின் நடவடிக்கை ‘இயற்கை நீதிக்குப் புறம்பாக இருக்கும்’ போது அதில் தலையிட முடியும் என்றே அறுதியிட்டு கூறியுள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணம், தமிழகத்தில் சென்ற சட்டசபை கூட்டத் தொடரின் போது நீக்கம் செய்யப்பட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கு ஆகும். கடந்த 2011-16 சட்டமன்ற காலத்தில் 19.2.2015 அன்று தே.மு.தி.கவைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ‘பேரவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி’ இதே சபாநாயகர் தனபால் தற்காலிக நீக்கம் செய்தார். பிறகு உரிமைக் குழுவிற்கு அந்த விவகாரம் அனுப்பப்பட்டு 31.3.2015 அன்று தே.மு.தி.கவின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களைப் பத்து நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்று நீக்கினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கில் ‘சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச்சுரிமை என்பது சட்டமன்றத்துக்குள் அடிப்படை உரிமை. அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறது. ஆனால் இயற்கை நீதிக்குப் புறம்பாக ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட்டத் தொடரில் பங்கேற்க விடாமல் நீக்கி வைப்பதை ஏற்க முடியாது. அதுபோன்ற நேரங்களில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடும்’ என்ற ரீதியில் அந்த தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர்களின் நீக்க உத்தரவை இரத்து செய்து உத்தரவிட்டது இந்திய உச்சநீதிமன்றம்.

ஆகவே, சபாநாயகர் தனது அதிகாரத்தை இயற்கை நீதிக்கு புறம்பாக பயன்படுத்தும் போது சட்டமன்ற நடவடிக்கைகளில் உச்சநீதிமன்றமோ அல்லது உயர்நீதிமன்றங்களோ தலையிடும் என்பதற்கு தமிழகத்தில் சமீபத்தில் தே.மு.தி.க வழக்கு’ உதாரணம். அதேநேரத்தில் சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட்ட வழக்கு உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேசவ் சிங் வழக்கு ஆகும். 1963 இல் ஏற்பட்ட இந்த நிகழ்வு இந்திய சட்டமன்ற ஜனநாயகத்தையே உலுக்கிப் போட்டது.

உத்தர பிரதேச சட்டமன்றத்தில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த கேசவ் சிங் என்பவர் துண்டு பிரசுரம் வீசியதால் அவருக்கு சபாநாயகர் ஒரு வாரம் ஜெயில் தண்டனை விதித்தார். அதை எதிர்த்து கேசவ் சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அப்படித் தடை கொடுத்த இரு நீதிபதிகளையும் அந்த வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞரையும் கைது செய்ய உத்தர பிரதேச சட்டமன்ற சபாநாயகர் 21.3.1964 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து அந்த இரு நீதிபதிகளும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் உள்ள 28 நீதிபதிகளும் ஒரு சேர அமர்ந்து விசாரித்து சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதித்தனர். நீதித்துறைக்கும்- சட்டமன்றத்துக்கும் உள்ள இந்த மோதல் பற்றி ஆலோசனை கூறுமாறு அப்போதைய குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். அப்படி உச்சநீதிமன்றம் கொடுத்த ஆலோசனையில் ‘சபாநாயகர் உத்தரவை நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது. சபாநாயகர்களின் வானளாவிய அதிகாரம் இந்திய சட்டமன்ற ஜனநாயகத்தில் கட்டுப்படுத்தப்பட்டது.

இப்போது மீண்டும் சபாநாயகரின் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வரப் போகிறது. தி.மு.க சார்பில் 79 எம்.எல்.ஏக்களை தற்காலிக நீக்கம் செய்த வழக்கு வருகின்ற 22.8.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது இன்னும் பல பரபரப்பு காட்சிகள் உருவாகும். சபாநாயகரின் ‘தற்காலிக நீக்க’ அதிகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றே தெரிகிறது. சட்டமன்ற ஜனநாயகத்தில் அதுவும் ஒரு மைல்கல்லாக மாறுமா என்பது அந்த வழக்கில் ஏற்படும் முடிவைப் பொறுத்தே அமையும். ஆனால் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.கவும், ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவும் எலியும் பூனையுமாக இருக்கும் காட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் நீடிக்கும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்ன ஒரு பாதுகாப்பு: இவரோட அறிவ பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க…!! வீடியோ
Next post அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் மாயம்…!!