By 2 September 2016 0 Comments

தாய்க்கு செய்யும் கடமை…!!

201609021416387365_obligation-to-mother_SECVPFஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை அடைவது மிகப்பெரிய சந்தோசம். அந்த தாய்க்கு பிரசவ கால விடுப்பை 9 மாதமாக அறிவித்து அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி இருக்கிறார்.

இது எந்த மாநிலத்திலும் இல்லாத புரட்சிகர திட்டம். மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு கூட 6 மாதம் தான் லீவு வழங்கப்படுகிறது.

பெண் ஊழியர்களுக்கு பிரசவ கால விடுப்பு 9 மாதமா? இவ்வளவு லீவு அவசியமா? என்ற முணு முணுப்பு ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்யும். ஆழ்ந்து சிந்தித்தால் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த விடுமுறை என்பது வீணானது அல்ல. எதிர்கால சந்ததியை உருவாக்க விதைக்கப்படுவது.

தாய்ப்பால் கொடுப்பதே குழந்தைக்கு ஆரோக்கியம். உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி நோய்கள் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து ஆரோக்கியமாக வளரவும், வாழவும் வழி வகுக்கும் என்று பிரசாரம் செய்கிறோம். அதற்காக தாய்ப்பால் வாரமே கொண்டாடுகிறோம்.

குழந்தை பிறந்தது முதல் குறைந்தபட்சம் 6 மாதமாவது தாய் உடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தைக்கு தாயின் அரவணைப்பும், தாய்ப்பாலின் சத்தும் முழுமையாக கிடைக்கும்.

ஆனால் வளர்ந்து வரும் கால சூழ்நிலையில் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.

திருமணம் முடிந்ததும் வாரிசு வேண்டும் என்ற ஆசை மனதில் அலைமோதினாலும் உடனே குழந்தை பிறந்தால் கவனிப்பது கஷ்டம் என்று தாய்மை அடைவதையே தள்ளிப்போடும் தம்பதிகளும் இருக்கிறார்கள்.

குழந்தை பராமரிப்புக்காக பல பெண்கள் வேலையை கூட கைவிடும் நிலைக்கு செல்கிறார்கள்.

அடுத்த தலைமுறைகளை வாழையடி வாழையாக தழைக்க செய்து உலகை காப்பவள் தாய். அந்த தாய்க்கும் குழந்தைக்கும் கர்ப்பகால கவனிப்பும், பராமரிப்பும் மிக முக்கியமானது.

எனவேதான் உலக சுகாதார நிறுவனம், சர்வதேச தொழிலாளர் ஆணையம் ஆகிய அமைப்புகள் தாய்மார்களுக்கு அதிக விடுமுறை கொடுங்கள் என்று வலியுறுத்துகின்றன.

உலகம் முழுவதும் 178 நாடுகள் மகப்பேறு விடுமுறையை அளித்து வருகின்றன. ஒரு சில முன்னேறாத நாடுகள் மட்டும் அதை கண்டு கொள்வதில்லை.

சுவீடன் நாட்டில் 1½ வருடம், டென்மார்க், செர்பியா, குரேஷியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 13 மாதங்கள் விடுப்பு வழங்கப்படுகிறது. ஜெர்மனியில் 14 மாதங்கள் வழங்கப்படுகிறது. இந்த மாதிரி 43 நாடுகள் அதிக அளவில் விடுமுறை அளித்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் குழந்தை பிறந்ததும் தந்தைக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஒன்றே நன்று! இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்ற கட்டுப்பாடான வாழ்க்கையைத்தான் இப்போது பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கிறார்கள். கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்பது எங்கேயோ, எப்போதோ கேட்டது போல் ஆகிவிட்டது. பணி நிமித்தம் காரணமாய் பலர் தனிக்குடித்தனமே செல்கிறார்கள்.

இந்த மாதிரி சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்களை சொந்த பந்தங்கள் அருகில் இருந்து கவனிப்பதும் குறைந்துவிட்டது. எனவே நமக்கு நாமே என்றுதான் பெண்கள் வாழ வேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில் 9 மாத விடுமுறை என்பது தாய்க்கும், சேய்க்கும் நல்ல பலனை கொடுக்கும்.

அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

இந்த திட்டத்தின் மூலம் ஆரோக்கியமான தலைமுறைக்கு வலுவான அடித்தளத்தை தமிழக அரசு போட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

பல விசயங்களை பெண்கள் பகிர்ந்து கொள்ளவே தயங்குவார்கள். தற்போதைய உணவு முறை உடல்நிலை காரணமாக மாதவிடாய் காலங்களில் பல பெண்கள் தவியாய் தவிக்கிறார்கள். கடுமையான வயிற்று வலியால் துடித்து போகிறார்கள். வேறு வழியின்றி வலியையும் தாங்கி கொண்டு வேலையை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த மாதிரி நாட்களிலும் அவர்களுக்கு தற்காலிக விடுப்பு அனுமதித்து அந்த நாட்களை அடுத்து வரும் நாட்களில் ஈடு செய்து கொள்ளலாம் என்ற கருத்தும் பெண்கள் மத்தியில் நிலவுகிறது. இது பற்றியும் அரசு பரிசீலிக்கலாம்.

‘அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா ஸ்தானத்தில் இருந்து தாய்மை அடையும் தன்மகளுக்கு செய்ய வேண்டிய கடமையாக இத்திட்டத்தை அறிவித்துள்ளார். தாய்மைக்கு துணைநிற்போம். வளரும் தலைமுறையை வலுவான தலைமுறையாக வாழ வைப்போம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..Post a Comment

Protected by WP Anti Spam