‘ஈ.பி.ஆர்.எல் எஃப் சுபத்திரன் புலிகளால் படுகொலை!: அடுத்த சில மணிநேரங்களில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது! (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-13)

Read Time:20 Minute, 59 Second

timthumb• யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு.
• யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தம்பிராஜா சுபத்திரன் புலிகளால் படுகொலை.

• சில நாட்களில் புலிகளின் இடைக்கால நிர்வாக கோரிக்கை பற்றி ஆராய அரச சட்ட மா அதிபர் கந்தப்பர் கமலசபேசன் லண்டன் பயணம்.

அமெரிக்காவில் இடம்பெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்புக் கிடைக்காத புலிகள் தம்மை சர்வதேச வலைப் பின்னலிற்குள் சிக்க வைக்க அரசு முயற்சிப்பதாக எண்ணி பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

புலிகள் தமது முடிவுக்கான காரணங்களை பிரதமர் ரணிலிற்கு எழுத்து மூலம் அறிவித்தனர்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச உதவியை எதிர்பார்த்துப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த அரச தரப்பினருக்கு இச் செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பிரச்சனைகளைத் தீர்க்க தாம் தயார் எனத் தெரிவித்த நிலையில், புலிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்த பின்னணியில் பேச்சுவார்த்தை குழம்பியது நோர்வே தரப்பினருக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் போரில் ஈடுபடுவதோ, அல்லது நிரந்தரமாக பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதோ மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புலிகள் நன்கு தெரிந்திருந்னர்.

சர்வதேச தரப்புடன் இப் பேச்சுவார்த்தைகளை இணைப்பது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தணிக்க உதவும் என தாம் நம்பியதாக எரிக் சோல்கெய்ம் குறிப்பிடுகிறார்.

சமஷ்டி அடிப்படையில் பிரச்சனைகளைத் தீர்ப்பது, பொருளாதார நிலமைகளை மேம்படுத்துவது முக்கியமான தேவை என்பதால் அரசாங்கத்தையும் புலிகளின் கோரிக்கைகள் தொடர்பாக துரிதமாக முடிவுகளை எடுக்குமாறு நோர்வே வற்புறுத்தியது.

பேச்சுவார்த்தைகளிலிருந்து புலிகள் விலகுவதற்கு மேற் குறித்த காரணங்கள் இருப்பினும் இன்னொரு அம்சம் பிரதான பாத்திரம் வகித்ததாக எரிக் சோல்கெய்ம் கூறுகிறார்.

அதாவது.., பாலசிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து பிரபாகரனுக்கு சந்தேகம் காணப்பட்டது.

அது மட்டுமல்லாமல் ரணிலின் நோக்கங்களை நம்பியபோதும் அவரால் அதை நிறைவேற்ற முடியுமா? என்பது குறித்தும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் தலைவர் சந்திரிகா ஆகியோரின் பலம் குறித்தும் பிரபாகரன் நன்கு தெரிந்திருந்தார்.

அத்துடன் ரணில் ஏற்படுத்தி வரும் சர்வதேச வலைப்பின்னல் குறித்தும் கவலை கொண்டிருந்தார். ஏற்கெனவே ராஜிவ் காந்தி கொலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள புலிகள் தொடர்ந்தும் தற்போதைய சர்வதேச ஈடுபாடுகளால் மேலும் தனிமைப்படுத்தப்படக்கூடும் என்ற கவலையும் காணப்பட்டது.

அத்துடன் மனித உரிமைகளைப் பேணுதல் சம்பந்தமாக நாட்டின் சிவில் சமூகத்தினதும், சர்வதேச அழுத்தங்களும் பேச்சுவார்த்தைகளிலிருந்து அவர்கள் விலகுவதற்கு காரணிகளாக அமைந்தன.

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்காமல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது, அரசினால் மேலும் விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்வது கடினம் என்பதை பிரபாரனால் புரிந்து கொள்ளாவிடினும், பாலசிங்கம் புரிந்துகொண்டார்.

சர்வதேச உதவிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை புலிகள் எதிர்பார்த்தனர். ஏனெனில் ஏற்கெனவே வடக்கு, கிழக்கு பகுதிகளின் பொருளாதாரக் கட்டுப்பாடு அவர்கள் கையில் இருந்தது.

அரச நிர்வாக கட்டுமானங்கள், நீதிமன்றங்கள் நிர்வகிக்கப்பட்டன. இவை புலிகளின் அணுகுமுறைகளோடு ஒப்பிடுகையில் எதிர்பார்த்ததுதான் என்பதை நோர்வே தரப்பினர் ஏற்றுக்கொண்ட போதிலும் பலமான அரசியல் கட்டுமானங்கள் படிப்படையாக வேர்கொள்ள வேண்டுமென தாம் எதிர்பார்த்ததாக நோர்வே தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தாம் பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக புலிகள் தரப்பினர் ரணிலுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து ரணிலின் பதில் 2003ம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி அனுப்பப்பட்டது.

(Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader Velupillai Prabhakaran presented a gold carved map of the separate state Eelam and the Tiger insignia as a gift to Japan’s Special envoy Yasushi Akashi at the end of the three hour long discussions the Japanese team held with the rebel group at their Kilinochchi stronghold. )

புலிகள் பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டும் என்பதை வற்புறுத்த யப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி மே மாதம் 7ம் திகதி பிரபாகரனைச் சந்தித்தார்.

அச் சந்திப்பின்போது யப்பானில் நடைபெறவுள்ள உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் புலிகளையும் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.

உதவியும், பேச்சுவார்த்தைகளும் சமாந்தரமாக செல்லவேண்டுமெனவும், யாரும் உதவிகளைப் பெறும்போது சமாதான முயற்சிகளில் தமது பங்கினைத் தட்டிக் கழிக்க முடியாது எனவும் கூறினார்.

இச் சந்தர்ப்பத்தினை விடுதலைப் புலிகள் நழுவ விட்டால், அவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்க நீண்ட காலம் எடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

அடுத்த நாள் அதாவது மே 8ம் திகதி நோர்வே தூதுக் குழுவினர் பாலசிங்கத்துடன் புலிகளின் ராணுவத் தலைவர்களான சூசை, பானு, பால்ராஜ் ஆகியோரை முதன்முதலாக சந்தித்தனர்.

இச் சந்தர்ப்பத்தில் கடலில் சுதந்திரமாக செயற்படும் உரிமை குறித்த அம்சங்கள் குறிப்பாக கடலில் பயிற்சி செய்தலுக்கான எல்லைகள் பற்றி பேசப்பட்டன.

இக் காலகட்டத்தில் தென்னாசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரீனா றோக்கா இலங்கை வந்திருந்தார். அவரும் பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு புலிகளை வற்புறுத்தினார்.

சமாதான முயற்சிகளை மேலும் எடுத்துச் செல்வதற்கு யப்பான் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும் வற்புறுத்தினார்.

அமெரிக்க அமைச்சர் புலிகளை நோக்கி இக் கோரிக்கையை வைத்த விதம் பற்றி எரிக் சோல்கெய்ம் குறிப்பிடுகையில் ஆப்கானிஸ்தான் தலிபான், பாலஸ்தீன குழுக்கள் தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த அணுகுமுறைக்கும், புலிகளைக் கையாளும் முறைக்கும் வேறுபாடு காணப்பட்டதாகவும், குறிப்பாக பேச்சுவார்த்தைகளில் புலிகளை இணைப்பது, சமாதான முயற்சிகளைச் சாதகமாக்குவது என்பதில் அவர்களின் கவனம் சென்றது என்கிறார்

பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இன்னொரு தடை பாலசிங்கத்தின் வெளியேற்றமாகும்.

பாலசிங்கத்திற்கும், பிரபாகரனுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறபாடுகள் அவரையும், அவரது மனைவி அடேல் பாலசிங்கத்தையும் உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வைத்தது.

வைத்திய காரணங்களைக் கூறி 11-05-2003 இல் இவர்கள் வெளியேறிய போதும் அதன் பின்னர் அவருக்கு பதிலாக தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டதும் நிலமைகளைத் தெளிவு படுத்தின.

இதனைத் தொடர்ந்து மே 15ம் திகதி நோர்வே தூதுக் குழுவினர் கிளிநொச்சி சென்று பிரபாகரன், தமிழச்செல்வன், மகேஸ்வரன், ருத்ரகுமாரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.

இச் சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு மீள் கட்டுமானம், அபிவிருத்திக்கென நிர்வாக கட்டுமானம் ஒன்றின் அவசியத்தை பிரபாகரன் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ரணில் அரசு இரண்டு நாட்களுக்குள் புதிய திட்டத்தை நோர்வே அதிகாரிகள் மூலமாக தமிழ்ச் செல்வனிடம் கையளித்தது.

அதில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்களை அங்குள்ள தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகள் மூலமாக செயற்படுத்துவது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மே 21ம் திகதி பாலசிங்கம் சுகதேகியாகி செய்தி ஒன்றினை ரணிலுக்கு அனுப்பியிருந்தார்.

“அதில் ரணிலின் ஆலோசனைகள் பிரபாகரனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை எனவும், தம்மால் தரப்பட்ட இடைக்கால நிர்வாக யோசனைகள் என்பன தீர்மானங்களை இயற்றுவது, நிறைவேற்றுவது, தாயக நிலமைகளை மாமூல் நிலைக்கு எடுத்தச் செல்வது என்பதில் சிறந்த பொறிமுறை என தெரிவித்திருந்தார்.

பாலசிங்கத்தின் பதில்கள் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியதாலும், யப்பான் மாநாடு அண்மித்ததாலும் யப்பான், நோர்வே ஆகிய நாடுகளைப் பொருத்தமான பொறிமுறையை வரையுமாறு ரணில் கேட்டிருந்தார்.

இதன் பிரகாரம் புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. சகல பிரிவினரின் உண்மையான பிரதிநிதிகளைக் கொண்ட உயர் மட்ட குழு குழு ஒன்றினை அமைப்பது எனவும், அதுவே கொள்கைகளை வகுப்பதையும், ஆலோசனைகளை வழங்கும் அமைப்பாகவும் அதன் தலைவராக அரசினால் நியமிக்கப்படும் விசேட ஆணையாளர் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ் யோசனைகளை நிராகரிப்பதாக பாலசிங்கத்தின் பதில் மே 30ம் திகதி அனுப்பப்பட்டது.

அதில் அரச நிர்வாகம் சீரற்றது. ஊழல் நிறைந்தது, மிகப் பெரும் மனிதத் தேவையை நிறைவேற்றும் சக்தி அதற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாலசிங்கத்தின் சந்தேகங்களை நிவர்த்திக்கும் வகையில் ரணில் மே 1ம் திகதி பதில் அனுப்பியிருந்தார்.

கடிதப் போக்குவரத்து எந்த முடிவுக்கும் செல்லவில்லை என்பதாலும், பாரிய கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாலும் இரு தரப்பாரும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம் என பாலசிங்கம் கேட்டிருந்தார்.

அதில் தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக யோசனைகளுக்கு உடன்பாடான முன்மொழிவுகளை வைத்தால் தாம் கலந்துகொள்வதாக தெரிவித்தனர்.

இந் நகர்வுகள் மிகவும் தீவரமாகச் சென்றமைக்குக் காரணம் யப்பான் மாநாட்டிற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது.

புலிகளை யப்பான் மாநாட்டிற்கு வரச் செய்யும் நோக்குடன் எஞ்சிய பிரச்சனைகளைப் பேசி முடிவு செய்யும் பொருட்டு விசேட குழு ஒன்றினை ரணில் புலிகளிடம் அனுப்பினார்.

அரசு தமது இடைக்கால நிர்வாக யோசனைகள் பற்றிப் பேச உடன்படுமாயின் தாம் கலந்துகொள்ளத் தயார் என புலிகள் தெரிவித்தனர்.

இந் நிகழ்வுகளை அவதானித்து வந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில் அரச உதவிகள் எதுவும் கட்டுப்பாடுகள் அற்றதாக இருப்பதில் புலிகள் கவனம் செலுத்தியதாக குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல் புலிகள் அமைப்பின் உள் கட்டுமானம், அதன் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பவற்றின் பின்னணியில் அவர்கள் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் ஜனநாயகம், மனித உரிமை, சமாதானம் என்பவற்றில் அதிக அக்கறை செலுத்துவார்கள் என்பது சந்தேகமே.. எனவே அவர்களைப் பொறுத்த மட்டில் ஜப்பான் செல்வதை விட தற்போதுள்ள நிலமைகளை மேலும் இறுக்குவது அவர்களுக்கு உகந்தது எனக் கருதுவார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

யூன் 9ம் திகதி புலிகளின் பங்குபற்றல் இல்லாமலே யப்பான் மாநாடு நடந்தேறியது. அம் மாநாட்டில் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் இணையுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அங்கு சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளுக்கு சம்மதம் கிடைத்தது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் ஏனைய பிரதேச அபிவிருத்தி என்பவற்றிற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான உதவி குறித்து பேசப்பட்டது.

இம் மாநாட்டின் முக்கிய விளைபொருளாக இலங்கைக்கு உதவி வழங்க கூட்டுத் தலைமை ஒன்று உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, யப்பான், நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அக் கூட்டுத் தலைமை நாடுகளாகும்.

தற்போது இலங்கைப் பிரச்சனையில் மேலும் பல நாடுகள் இணைவதை நாம் அவதானிக்கலாம்.

இவை யாவற்றிலும் புலிகளின் அணுகுமுறை எதிர்வினையாகவே இருந்தது.

அரசினால் முன்வைக்கப்பட்ட தற்காலிக அபிவிருத்தி நிர்வாகக் கட்டுமானத்தை தாம் ஏற்கவில்லை எனவும், தமது திட்டங்களை திணிக்க எண்ணுகிறார்கள் எனவும், நாட்டில் காணப்படும் மோசமான பொருளாதார பற்றாக்குறையும், அரசியல் வறுமையும் தவிர்க்க முடியாமல் சர்வதேச வலைப்பின்னலுக்குள் சிக்க வைத்திருப்பதாகவும்….,

இலங்கை அரசு மூன்றாவது தரப்பாரின் உதவியுடன் சமாதானம் பேசுவதாகக கூறி தற்போது சர்வதேச விசாரணை என்ற மட்டத்திற்கு பலமான சர்வதேச சக்திகளின் உதவியுடன் நிலமைகளை எடுத்துச் சென்று சிங்கள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயற்படுவதாக யூன் 23ம் திகதி வெளியிட்ட தமது அறிக்கையில் தெரிவித்தனர்.

eprlf தம்பிராசா சுபத்திரன் (ஈ.பிஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

யப்பான் மாநாடு முடிந்த ஒரு வாரத்தில் நிலமைகள் மோசமாகின.

விடுதலைப்புலிகளை மிக மோசமாக விமர்ச்சித்து வந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்களின் ஒருவரான தம்பிராஜா சுபத்திரன் அதிகாலை மேல் மாடியில் உடற்பயிற்சி செய்யும் வேளை யூன் 14ம் திகதி புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

அடுத்த சில மணி நேரங்களில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்குவது, கடல் வழியாக ஆயுதங்களைக் கடத்துவது தொடர்ந்ததால் கடல் உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சாத்தியமாக அமையவில்லை.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகள் அரசியல் வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டதால் மாற்றுக் கருத்தாளர்கள், மாற்றுக் குழுக்கள் பாதிக்கப்படடார்கள்.

படுகொலைகளும் தொடர்ந்தன.

மறு பக்கத்தில் அரசியல் அமைப்பு விடயங்கள் தொடர்பான அலுவல்கள் ஆரம்பமாகின. புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனைகளை அரசியல் அமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசியல் அமைப்பு ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு பிரதமர் ரணில், பிரதான சமாதான பேச்சாளர் மிலிந்த மொறகொட, சட்டமா அதிபர் கந்தப்பர் கமலசபேசன் ஆகியோர் லண்டன் சென்றனர்.

அங்கு பாலசிங்கம், எரிக் சொல்கெய்ம் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ரணில், சோல்கேய்ம் ஆகியோர் பேசினர்.

இதன் காரணமாக மீண்டும் ஓர் நம்பிக்கை துளிர்விட்டது.

(Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்)

தொடரும்…

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘எழுக தமிழ்’ எதிர்கொள்ள வேண்டியவையும் அடைவும்…!!
Next post 21 வயது இளைஞனால் சிறுமி ஒருவருட காலம் துஷ்பிரயோகம்…!!