ஓதுவீராக…!!

Read Time:13 Minute, 39 Second

article_1473402115-unnamedமுகம்மது தம்பி மரைக்கார்

அந்த எழுதத் தெரியாத பையன்

இன்று என்னைச் சந்தித்தான்

பெரிய பரிதாபத்தின் முழுமொத்த வடிவமாய்

என் முன்னே நின்றான்

மீசைக்கு விதை தூவி, இளமை மழை பெய்ய

பயிர் முளைத்த பருவம்

ஏதோ அலுவலுக்கு வந்திருந்தான்

கையொப்பம் இடு என்றேன்

இடது கையின் பெருவிரலை ஊன்றி

வெட்கிச் சிரித்தான்

அது ஒரு செத்த சிரிப்பு

என் இதயம் கழன்று

அவன் இட்ட

ஒப்பத்தின் மேல் விழுந்து

கத்தியது பின் கருகிப் பற்றியது
அவன் காதல் உணர்வுகளை என்னென்று ஒருத்திக்கு

எழுதுவான் வருங்காலம்

அழகு முகம்
கீழுதடு இரத்தச் சிறப்பு

பெண் விழுவாள் இவற்றில் மயங்கி

காகம் போல் அவன்,

விழுந்தவளின் வேலி ஓரமெல்லாம்

கரைந்து திரிவானோ,
எழுத வருகின்ற உணச்சிகளை

ஒலியாக்கி வந்திருக்கக்கூடாது அவன்
இன்று அலுவலகத்தில்
எனக்கு நிறைய வேலைகள்

இருக்கின்ற தினம் இன்று

இனியென்ன

நானில்லை
அந்த எழுதத் தெரியாத வருங்கால மனித நதி

போனாலும் நான்

இருந்தபடி கதிரையிலே

உலகப் பாடசாலை அனைத்தையும் நினைத்துவிட்டு

எண்ணுகிறேன்

அந்த நதி
வரும் நாளில் சீறி ஒலியெழுப்பி பாய்ந்து ஓடாது

உறையும் சிறு துளியாய்

மேலேயுள்ள கவிதை கவிஞர் சோலைக்கிளி எழுதியது. ‘சீறி ஓடாத வருங்கால மனித நதி’ என்பது இந்தக் கவிதையின் தலைப்பாகும். அவருடைய ‘பாம்பு நரம்பு மனிதன்’ என்கிற கவிதைத்தொகுதியில் இந்தக் கவிதை வெளிவந்தது.

கவிஞர் சோலைக்கிளி தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு விருதுகளை இலக்கியத்துக்காக வென்றவர். அம்பாறை மாவட்டம் கல்முனையைச் சேர்ந்தவர். தொழில் ரீதியாக கிராம சேவை உத்தியோகஸ்தர். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். தனது அனுபவங்களை இலக்கியமாக்குபவர் சோலைக்கிளி. எழுத வாசிக்கத் தெரியாத ஓர் இளைஞனைச் சந்தித்த நாளொன்றின் அவஸ்தையை அவர் இந்தக் கவிதையில் பதிவு செய்துள்ளார்.

செப்டெம்பர் 08ஆம் திகதி, இன்று உலக எழுத்தறிவு தினமாகும். ‘யுனெஸ்கோ’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார நிறுவனம் 1965ஆம் ஆண்டு உலக எழுத்தறிவு தினத்தைப் பிரகடனம் செய்தது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகில் 122 மில்லியன் இளைஞர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இவர்களில் 60 சதவீதமானோர் யுவதிகளாக உள்ளனர் என்பது கவலை தரும் செய்தியாகும்.
உலக நாடுகளில் இலங்கை எழுத்தறிவு வீதத்தில் 83ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில் 92.6 சதவீதமானோர் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். பிரேசிலும் இதே இடத்தில் உள்ளது.

உலகில் மிக சர்வதிகார நாடு என்று விமர்சிக்கப்படுவதோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடைக்கு உள்ளாகிவரும் வடகொரியாவே எழுத்தறிவில் சர்வதேச ரீதியாக முதலிடத்தில் உள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். நைகர், உலகில் எழுத்தறிவு வீதம் குறைந்த நாடாகும். மேற்கு ஆபிரிக்க நாடான நைகரில் 15 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானோர் இஸ்லாமியர்கள். இந்த நாட்டின் எழுத்தறிவு வீதம் 19.1 ஆகும்.

கல்வியில் போட்டி நிலவும் இன்றைய நவீன உலகில் எழுத, வாசிக்கத் தெரியாமல் ஒருவர் வாழ்வது என்பது மிகச் சிரமமான காரியமாகும். ஓரிடத்துக்கு பயணிப்பது என்றால் கூட, நாம் செல்ல வேண்டிய பஸ் வண்டியின் பெயர்ப் பலகையை வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆங்கிலம், கணினி ஆகிவற்றின் தேவை குறித்துப் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், சொந்த மொழியை எழுதவும் வாசிக்கவும் தெரியாமலிருப்பது என்பதை நினைத்துப் பார்க்க முடியாமலுள்ளது.

உலகிலுள்ள வயது வந்தவர்களில் 17 சதவீதமானோர் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்களாக இருக்கின்றனர். எழுத, வாசிக்கத் தெரியாதவர்கள் எம்மிடையே இன்று மிகக் குறைந்தளவானவர்களே உள்ளனர் என்பது ஆறுதலான செய்தியாகும். இரண்டு, மூன்று தலைமுறைக்கு முன்னர், பெருவிரல் ஊன்றி கையொப்பம் இடுகின்றவர்கள் கணிசமானோர் இருந்தனர்.

பாடசாலைக்குச் செல்வதற்கு முன்பாகவே எழுதவும் வாசிக்கவும் இப்போது குழுந்தைகள் தெரிந்து கொள்கின்றனர். வீட்டின் சூழல், குழந்தைகளின் கல்வி மீது பெற்றோர் காட்டும் அக்கறை இதற்குக் காரணமாக அமைகின்றன. ஆனால், தரம் இரண்டு, மூன்றுகளில் கற்கும் சில மாணவர்கள் கூட எழுத, வாசிக்க முடியாத நிலையில் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு மொழியை எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவராக இருக்கின்ற ஒருவர், எழுத்தறிவுள்ளவராகக் கருதப்படுகின்றார்.

எழுத்தறிவற்ற சிலர் வாழ்க்கையில் வெற்றி பெற்று, உலகளவில் பேசப்படுகின்றவர்களாக இருந்துள்ளமை குறித்து எம்மிடையே உதாரணங்கள் உள்ளன. அந்த உதாரணங்கள் இப்போது எடுபடுமா என்று தெரியவில்லை. எழுத்தறிவற்றவர்களால் வாழ்வின் சவால்களை இலகுவாக எதிர்கொள்ள முடியாது என்பதே இன்றைய நிலைவரமாகும்.
எழுத்தறிவற்றவர்கள் அதிகமாக வாழ்ந்த காலத்தில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சிகள் மந்த நிலையிலும் குறைந்தளவிலும் காணப்பட்டன. எழுத்தறிவற்றவர்கள் அதிகம் வாழ்ந்த காலத்தில், குழந்தை இறப்பு வீதம் அதிகமாக இருந்தது. மனித ஆயுட்காலம் குறைவாக இருந்தது. பிரசவத்தின்போது பெண்களில் இறப்பு அதிகமாக இருந்தது. எழுத்தறிவு வீதம் உயர, உயர, ஏனையவற்றிலும் நாம் நல்ல நிலைக்கு உயரத் தொடங்கினோம்.

அறிவைக் கற்றுக்கொள்வதற்கு மொழி ஓர் ஊடகமாக உள்ளது. ஆகக்குறைந்தது எம்மைச் சுற்றியுள்ள உலகில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிவதற்கு பத்திரிகைகளைப் படிக்க வேண்டிய தேவை உள்ளது. எழுத, வாசிக்க முடியாத ஒருவர், எவ்வாறு பத்திரிகைகளைப் படிக்க முடியும்? கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட ஒருவருக்கும் எழுத, வாசிக்கத் தெரியாத ஒருவருக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் கிடையாது.

வாசித்தல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும். வாசிப்புப் பழக்கத்தினுள் தன்னை அறியாமலேயே ஒரு குழந்தை நுழைந்துவிட வேண்டும். அதற்குரியதாக அந்தக் குழந்தையின் சூழல் இருக்க வேண்டும். தந்தை பத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ளவராக இருப்பாராயின், அவர் வீட்டுக்கு எடுத்து வரும் பத்திரிகையை அங்குள்ள குழந்தைகளும் வாசிக்கத் தொடங்குவார்கள். குழந்தைகளுக்கு நாம் வாசிக்கக் கற்றுக்கொடுப்பதை விடவும் அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானதாக உள்ளது.

எழுத, வாசிக்கத் தெரியாதவர்களின் வலி எமக்குத் தெரிவதில்லை. வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள் பற்றி அவர்களிடம் மனம் விட்டுப் பேசும்போது தெரிந்துகொள்ள முடியும். ஆகக்குறைந்தது பாடசாலைக்குச் சென்ற ஒருவர் எழுத, வாசிக்கத் தெரிந்தவராக இருப்பார். அதனாலேயே, இலங்கையில் ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவர் எழுத, வாசிக்கத் தெரியாதவராக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் பாடசாலைக்கு அறவே செல்லாத சிறுவர்களை இப்போது காண்பது மிகவும் அரிதாகும். ஆனால், மிகப் பின்தங்கிய பிரதேசங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் பாடசாலை அதிபராகக் கடமையாற்றும் நண்பர் ஒருவர் இது விடயமாக தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். அநேகமான சந்தர்ப்பங்களில் சில பிள்ளைகளில் வீடுகளுக்குச் சென்று, அவர்களை பாடசாலைக்கு அழைத்துவர வேண்டியுள்ளதாக அவர் அடிக்கடி கூறுவார். பிள்ளைகளின் குடும்பத்தில் நிலவும் வறுமை மற்றும் பிள்ளைகளுக்கு பராமரிப்பாளர்கள் இல்லாமை போன்ற காரணிகள், பாடசாலைக்கு பிள்ளைகள் செல்லாமைக்கான பிரதான காரணமாக உள்ளன.

எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள்ளும் பருவத்தில் பாடசாலைக்குச் செல்லாமல் விடுகின்றவர்கள், கவிஞர் சோலைக்கிளியின் கவிதையில் வருகின்ற இளைஞனைப் போல், சீறி ஓடாத மனித நதியாகவே எதிர்காலத்தில் இருப்பார்கள்.

கற்றுக்கொள்வதை அநேகமாக எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன. முதன்முதலாக அருளப்பட்ட குர்ஆன் வசனம் ‘இக்ரஹ்’ என்பதாகும். இக்ரஹ் என்கிற அரபுச் சொல்லுக்கு ‘ஓதுவீராக’ என்று தமிழில் அர்த்தமாகும். ஓதுதல் என்பது வாசித்தல் என்பதற்கு இணையானதொரு சொல்லாகும். முகம்மது நபியவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாதவராக இருந்தார். ஆனால், அவருக்கு இறைவனிடமிருந்து அருளப்பட்ட குர்ஆனின் முதல் வசனம் ‘ஓதுவீராக’ என்பதாகும்.

ஆனால், சில நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால் பெண்களை பாடசாலைக்கு அனுப்பாமல், அவர்களை எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக வீடுகளுக்குள் முடக்கும் அவலங்கள் அரங்கேறுகின்றமையையும் அறிந்து கொள்ள முடிகிறது.

உலகில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் எழுத்தறிவற்றவர்;கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக ஜப்பான் அழகியாக இந்திய கலப்பினப் பெண் – (வீடியோ)
Next post யாழில் புதிய பொலிஸ் கட்டடம் ஜனாதிபதியால் கோலாகலமாக திறந்து வைப்பு..!!