By 11 September 2016 0 Comments

பான் கீ மூன்: செயற்கரிய செய்யார் பெரியர்…!!

article_1473569818-unதிக்விஜயங்கள் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்களுக்காக நிகழ்வதில்லை. ஆனால், அவை பெறும்; கவனமும் ஊடக ஒளியும் அவற்றை முக்கியப்படுத்துகின்றன. நிகழும் அனைத்து விஜயங்களும் திக்விஜயங்கள் அல்ல என இங்கு நினைவுறுத்தல் தகும்.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் இலங்கை வருகை சர்வதேச கவனத்தைப் பெற்றது. தனது நீண்ட ஆசியப் பயணத்தின் ஓர் அங்கமாக அவர் இலங்கைக்கு வந்தது தற்செயலல்ல. எவ்வாறாயினும் உலகளாவிய பெருமன்றமாகிய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் என்ற வகையில் அவரது ஆசிய சுற்றுப்பயணத்தை திக்விஜயமாகவே கொள்ளத் தகும்;. இவ்வாண்டுடன் தனது பதவிக் காலம் முடிவதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கும் எதிர்பார்ப்பில் உள்ள பான் கீ மூன், தன்னை ஆசியாவில் நிலைநிறுத்தும் திட்டத்தின் ஓர் அம்சமாக அவரது திக்விஜயத்தைக் கொள்வது பொருத்தம்.

ஐ.நா சபை தனது அடுத்த செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்யத் தயாராகையில், கடந்த எட்டு ஆண்டுகளாக ஐ.நா செயலாளர் நாயகமாகப் பதவிவகித்த பான் கீ மூனின் பங்களிப்பை மீள்நோக்குவது பொருந்தும். குறிப்பாக அவரது இலங்கை விஜயம் அவர் மீதான நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளதால் அவர் செய்தது என்ன? செய்ய மறுத்தது என்ன? செய்யாமல் தவிர்த்தது என்ன? என்பன முக்கியமான வினாக்களாகும்.

ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஐ.நா செயலாளர் நாயகம் பதவியை வழங்குவதாக எட்டு ஆண்டுகளுக்கு முன் எட்டிய உடன்பாட்டின்படி தென் கொரிய வெளி விவகார அமைச்சராக இருந்த பான் கீ மூன் தெரிவாகி, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் நடத்திக் கொண்டிருந்த வேளை, ஐ.நா சபையின் எட்டாவது செயலாளர் நாயகமாகப் பொறுப்பேற்றார்.

இவருக்கு முன்னைய செயலாளர் நாயகமான கொபி அனான், ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானது என்று அறிவித்தார். அப்போது அந்த ஆக்கிரமிப்புப் பற்றி வாய்; திறவாத மூன், அதைத் தொடர்ந்த பல்வேறு சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான ஆக்கிரமிப்புக்களுக்கு, குறிப்பாக லிபியா, மாலி, ஐவரி கோஸ்ட் ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் அளித்ததன் மூலம் ஆக்கிரமிப்பாளர்களின் பக்கத்தில் நின்றார்.

அதைவிட, கொசோவோவை தனிநாடாக அறிவிப்பதில் முன்னிலைப் பாத்திரத்தை வகித்த பான் கீ மூன், சேர்பியாவில் இருந்து பிரிந்த கொசோவோவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க முன்னின்றார். அவ்வாறே, 2011 இல் தென் சூடான் தனிநாடானதைத் தொடர்ந்து, அதை ஐ.நா அங்கத்துவ நாடாக அங்கீகரித்ததில் பான் கீ மூனின் பங்கு குறிப்பிடத்தக்கது. இன்று தென் சூடான் உள்நாட்டு யுத்தத்தில் சிக்கித் தவிக்கிறது.

அண்மையில் ஜெமன் நிலவரம் பற்றிய ஐ.நா அறிக்கை, பாடசாலைகள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டு நடத்திய தாக்குதல்களில் கடந்த ஆண்டு 510 குழந்தைகள் இறந்ததாகவும் ஜெமனில் நடக்கும் அட்டூழியங்களுக்;கு சவூதி அரேபியா வழிநடத்தும் குழுக்களே காரணம் எனவும் அறிவித்தது.

அறிக்கை வெளியாகிய சில நாட்களில் சவூதி அரேபியா பற்றிய பகுதிகளை அறிக்கையில் இருந்து நீக்க உத்தரவிட்ட பான் கீ மூன், அந்த விடயத்தைப் பற்றிக் கலந்துரையாட சவூதி அரேபிய அதிகாரிகளை அழைத்தார். அதைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர், ‘சவூதி அரேபியா ஐ.நாவுக்கு நிதி வழங்கும் பிரதானமான நாடு. அதன் நிதியுதவி நின்றால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் வாடநேரும்’ என்றும் கூறியிருந்தார்.

தனது எட்டு ஆண்டு காலச் சாதனைகளாக மூன்று விடயங்களை பான் கீ மூன் தொடர்ந்து கூறி வருகிறார். முதலாவது, பருவநிலை மாற்றங்கள் தொடர்பில் ஐ.நா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்ƒ இரண்டாவது, ஐ.நாவில் நிர்வாகச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியமைƒ மூன்றாவது, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தமை ஆகியவையாகும். இம் மூன்றும் ஐ.நா சபையைப் பொறுத்தவரை சிக்கலான, சர்ச்சைக்குரிய, தீர்வு

காணப்படாத விடயங்களாகத் தொடர்கின்றன.

பருவகாலநிலை மாற்றங்கள் பற்றி ஐ.நா இதுவரை எதையும் சாதிக்கவில்லை. கடந்த ஆண்டு கொபன்ஹேகனில் நடைபெற்ற மாநாடு எந்த முடிவையும் எட்டாமல் முடிந்தது. இன்றுவரை பருவகாலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவது பற்றிய ஒருமித்த கருத்தை ஐ.நாவால் உருவாக்க முடியவில்லை.

பான் கீ மூனின் கீழ் நிர்வாக அதிகாரியாக இருந்து வெறுப்படைந்து பதவியைத் துறந்த துணைச் செயலாளர் நாயகம் அந்தனி பான்பெரி, ஐ.நா நிர்வாகச் சீர்கேடுகள் மிகுந்த இடமாக இருப்பதாகவும் ஒருவரை ஒரு வெற்றிடத்துக்கு நியமிக்கச் சராசரியாக 213 நாட்கள் எடுப்பதாகவும் நிதியியல் பலவீனமான, மேற்பார்வையற்ற அமைப்பாக ஐ.நா இருப்பதாவும் ஐ.நா பற்றிய தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

இவ்வாறே, ஐ.நா அமைதி காக்கும் படையில் உள்ள பிரெஞ்சுப் படையினர், பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வதை வெளிக்கொணர்ந்த சுவிஸ் நாட்டு ஐ.நா அதிகாரி அண்டேல் கொம்பாஸ் பதவி நீக்கப்பட்டார். இவை அனைத்தையும் விட தனது மருமகனான சித்தார்த் சட்டர்ஜிக்குப் பதவி உயர்வைத் தொடர்ச்சியாக வழங்கி வந்தார் என்பது மூன் மீது வைக்கப்படும் விமர்சனமாகும்.

பான் கீ மூனின் தலைமைத்துவத்தில் ஐ.நா நிகழ்த்திய மிகப்பெரிய சேதத்தில் ஒன்று ஹெயிட்டியில் உருவாக்கிய கொலரா நோயாகும். நூறாண்டுகளுக்கு மேல் கொலரா நோய்த் தொற்று இல்லாமல் இருந்த ஒரு நாட்டில் கொலரா நோய் உருவாகவும் அதன் விளைவால் 10,000 பேர் கொல்லப்படவும் 770,000 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகவும் வழிவகுத்தது.

2010 ஆம் ஆண்டு ஹெயிட்டியில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு வந்த நேபாள நாட்டின் அமைதிகாக்கும் படையினரிடமிருந்தே கொலரா பரவியது என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ச்சியாக ஐ.நா மறுத்து வந்தது. அண்மையில் ஹெயிட்டியில் கொலரா பரவியதில் ஐ.நாவின் பங்கை ஏற்ற அதேவேளை, அதை உருவாக்கியமையை ஏற்க மறுத்துள்ளது.

மனித உரிமைகள் விடயத்திலும் ஐ.நாவின் பங்களிப்பு மிகவும் மட்டுப்பட்டதாகவே உள்ளது. மத்திய கிழக்கிலுள்ள பல நாடுகளில் சர்வாதிகார முடியாட்சி நிலவுகிறது. உலகெங்கும் நடக்கும் போர்களின் விளைவால் மனித உரிமைகள் அன்றாடம் மீறப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் உலகம் மேலும் பாதுகாப்பற்றதாகியுள்ளது. இவையனைத்தும் ஒரு கேள்வியை எழுப்புகின்றன. ஐ.நா சபைச் செயலாளர் நாயகமாக பான் கீ மூன் விட்டுச் செல்வது எதை என்பதே அக் கேள்வியாகும்.

மோசமாகத் தோல்வியடைந்த நாடுகளையும் அரசுகளே அற்ற நிலையில் உள்ள பல ஆபிரிக்க நாடுகளையும் உள்ளடக்கிய ஐ.நா சபையையே இன்று காணமுடிகிறது. ஐ.நா சபை முன்னில்லாதளவு, தன் காலம்கடந்த, பயனற்ற ஓர் அமைப்பாகியுள்ளது. உலகின் முக்கிய பிரச்சினைகளில் தீர்மானம் எதனையும் எடுக்க வல்லமையற்ற ஓர் உலகப் பெருமன்றமாக ஐ.நா காட்சி தருகிறது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நாடுகளுக்கு இடையிலான பிணக்குகளைத் தீர்த்து, உலகில் அமைதியை நிலைநிறுத்த உருவாக்கப்பட்ட ஐ.நா சபை, இன்று பல வகைகளில் காலம் கடந்ததாகி விட்டது. அன்றைய முரண்பாடுகள் இன்று நாடுகளுக்கிடையே இல்லை. மாறாக, ஐ.எஸ்.ஐ.எஸ்., போக்கோ ஹராம், சோமாலியக் கடற்கொள்ளையர்கள் என முரண்பாடுகளும் போர்களும் புதுவடிவங்களை எடுக்கும்போது, அவற்றைக் கையாளக் கூடியதாக ஐ.நா தன்னைத் தகவமைக்க வேண்டும்.

பான் கீ மூன் தனது அடுத்த இலக்குக்குத் தயாராகி விட்டார். அதற்கான முன்னாயத்தங்களில் ஒன்றாகவே அவரது ஆசிய விஜயத்தைக் கருத வேண்டும். சிங்கப்பூர், மியன்மார் எனத் தொடங்கிய பயணம் திடீரெனத் திசைமாறி இலங்கை நோக்கி நகர்ந்தது. கிழக்காசியாவில் மையம்கொண்ட பயணம் தென்னாசியக் கோடியில் உள்ள இலங்கையை நோக்கி வீசியதில் வியக்க அதிகம் இல்லை. பான் கீ மூனைப் பொறுத்தவரை, அவரது பதவிக் காலத்தில் அவர் குத்திக் கொள்ளக் கூடிய வெற்றிப் பதக்கங்களில் ஒன்று இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தியமை எனத் திசைமாறிய திக்விஜயத்தை விளங்குவதில் சிரமங்கள் இருக்க மாட்டாது.

இவருக்கு முந்திய செயலாளர் நாயகங்கள் போலல்லாது பலமைய உலக அரங்கில், ஐ.நா சபையைக் கொண்டு நடத்தும் வாய்ப்பு இவருக்கு இருந்தது. அமெரிக்காவை விமர்சித்தமைக்காக இரண்டாம் முறையாகத் தெரிவாகாத பூட்ரஸ் பூட்ரஸ் காலி, நியாயத்துக்காக குரல் கொடுத்ததற்காகக் கொல்லப்பட்ட டக் ஹமர்ஷீல்ட் போன்றோர் வகித்த பதவியில் அமர்ந்த பான் கீ மூன், மிக இலகுவாக ஐ.நாவை சர்வதேச அரசியலின் பிரதான அரங்காடியாக நிலைமாற்றும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

வரலாறு பொதுவாகக் கனிவாக நடப்பதில்லை. பான் கீ மூனைப் பற்றிய வரலாறு எழுதும் கணிப்பீட்டைப் பொழிப்பாகக் கூறின்: ‘செயற்கரிய செய்யார் பெரியர்’.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.Post a Comment

Protected by WP Anti Spam