வெளியில் சொல்ல வேண்டும்…!!

Read Time:18 Minute, 9 Second

article_1473569739-northதீர்வுத்திட்டம் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றியும் அதில் முஸ்லிம்களுக்கான உப தீர்வு பற்றியும் பிரதான முஸ்லிம் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கமாகச் சொல்லாமல் இருப்பது நல்ல சகுணமல்ல. ‘சேதாரமில்லாத விட்டுக் கொடுப்புக்கு தயார்’ என்று பேசுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முஸ்லிம்களையும் திருப்திப்படுத்தப் போவதான ஒரு பிரக்ஞையை உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான ‘பங்கு’ தொடர்பில் என்ன நிலைப்பாட்டுடன் இருக்கின்றார்கள்? என்பது புதிராகவே இருக்கின்றது. இந்த விவகாரத்தில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடுவதற்கு சிங்களத் தேசியம் என்ற எண்ணமும் மேற்கிளம்புகின்றது.

இத்தனை காலமும் உயிர்களையும் உடமைகளையும் பலிகொடுத்துப் போராடிய தமிழர்களுக்கு மேலும் காலதாமதமின்றித் தீர்வு கிடைக்க வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் தங்களாலான அனைத்து அழுத்தங்களையும் பங்களிப்புக்களையும் வழங்க வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள், இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்று வருகின்ற போது, இணைந்த வட-கிழக்கிலான கடந்தகால அனுபவங்கள் பற்றிப் பேசுகின்ற தோரணையில் விடுதலைப் புலிகளை நச்சரிப்பதாகச் சொல்லிக் கொண்டு, தமிழ்ச் சகோதரர்களின் மனங்களை நோக வைத்துவிடக் கூடாதுƒ இருக்கின்ற நல்லிணக்கத்தை கெடுத்துவிடக் கூடாது. இதே நடைமுறையை தமிழர்களும் பின்பற்றுவது நல்லது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பையும் அதனுள் ஒரு தீர்வுத் திட்டத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது. இதற்கான வியூகங்கள் செவ்வனே மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா செயற்பாடுகளிலும் எல்லாத் தமிழர்களும் உடன்படுவதாக சொல்ல முடியாது. என்றாலும் ‘தீர்வைப் பெற்றுக் கொள்ளுதல்’ என்ற நோக்கத்திற்காக 99 சதவீதமான தமிழர்கள் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றனர். இவ்விரு மாகாணங்களையும் இணைத்தல் என்ற உத்தேச திட்டத்துக்கு வடபுலத் தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்கின்றனர். கிழக்கில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்களின் கடந்தகால மற்றும் நிகழ்கால செயற்பாடுகளால் கிழக்கில் வாழும் தமிழர்கள் கொஞ்சம் அச்சம் கொண்டுள்ளனர். வட மாகாணத்தோடு இணைவதன் மூலம் தமக்கு ஏற்படக்கூடிய பாதக நிலைமைகள் குறித்து குறிப்பிட்டளவான கிழக்கு தமிழர்கள் சிந்தித்தாலும் மேற்குறிப்பிட்ட காரணத்துக்காக கிழக்கு வடக்குடன் இணைந்திருப்பது ஓரளவுக்கு பரவாயில்லை என்ற நிலைப்பாட்டில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.

வட மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், கிழக்கு மாகாணம் தம்மோடு இணைக்கப்படுமாயின் தாம்சார்ந்த இனக்குழுமத்தின் பரம்பல் அதிகரிக்கும் என்று கருதினாலும் தமிழ்த் தேசியவாதிகளைக் கொண்ட ஆட்சி என்பது அவர்களைப் பொறுத்தமட்டில் மர்மங்கள் நிறைந்ததாக இருக்கின்றது. இதேவேளை, இந்த இணைப்பு விடயத்தில் கிழக்கு முஸ்லிம்களுக்கு உடன்பாடு கிடையாது. வடக்குடன் நாங்கள் எதற்காக இணைய வேண்டும்? என்ற அவர்களின் கேள்விக்கு தமிழ் கூட்டமைப்பிடமோ அல்லது வேறு யாரிடமோ திருப்திப்படும் பதில்கள் எதுவுமே இல்லை. வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த போது, தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கசப்பான நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, இந்த உத்தேச இணைப்பை அவர்கள் பொதுவில் எதிர்க்கின்றார்கள். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் செறிவாக வாழும் கிழக்கு மாகாணம் என்ற அடையாளம் இழக்கப்படுவதுடன் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் சிறுபான்மையாவார்கள்.

முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக நியமனம் பெற்றாலும் ஆட்சியதிகாரங்களும் வரப்பிரசாதங்களும் அபிவிருத்திகளும் எத்திசை நோக்கிச் செல்லும் என்பது ஊகிக்க முடியாத விடயங்கள் அல்ல‚ எனவே, பரவலாக கிழக்கு முஸ்லிம்கள் வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என்றே கருதுகின்றனர். அதையும் மீறி இணைக்கப்பட்டால், ‘இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம்’ என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும், இனப்பிரச்சினை தீர்வு என்பது, கள்ளக்காதல் அல்ல‚ அது பெற்றோரால் பேசப்பட்டு, ஊர்பார்த்திருக்க நிச்சயிக்கப்படும் திருமணமாகும். இதில் எந்த ஒளிவுமறைவுகளும் மூடுமந்திரங்களும் அறவே தேவையில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? அதில் தமிழர்களுக்கு என்ன கிடைக்கும்? முஸ்லிம்களுக்கான பங்கு என்ன? என்பதைப் பகிரங்கமாக அறிவிப்புச் செய்ய வேண்டும். பேச்சுக்கள் இரகசியமாக இடம்பெற்றாலும் தீர்மானங்கள் பரகசியமாக முன்வைக்கப்படுதல் அவசியமானது. எல்லாவற்றையும் காதும்காதும் வைத்தால்போல் செய்துவிட்டு, கடைசிக் கட்டத்தில் இதுதான் தீர்வென அறிவித்தால் அதனால் பாரிய சிக்கல்கள் ஏற்படக் கூடும். முஸ்லிம்களுக்கு இவ்வாறான தீர்வை வழங்குவதற்கு நாம் தாயராக இருக்கின்றோம் என்று அரசாங்கமோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனோ இன்னும் விலாவாரியாகக் கூறவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வழக்கம்போல் ‘விட்டுக்கொடுப்பு’, ‘சேதாரம்’ என்று பேசிக்கொண்டிருக்கின்றாரேயொழிய முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்று திட்டவட்டமாக சொல்லவில்லை. எதனை தருவீர்கள்? என்று மற்றைய தரப்பிடம் நேரிடையாகக் கேட்கவும் இல்லை.

வடக்கில் பிறந்தவரும் அகில இலங்கை மக்கள்

காங்கிரஸின்

தலைவருமான ரிஷாட் பதியுதீன், தனது கட்சி சார்பாக பாரிய பிரசாரத்தை முன்னெடுக்கவில்லை. என்றாலும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். கிழக்கில் பிறந்தவரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாவுல்லா மேடைபோட்டுப் பேசி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது மட்டுமன்றி ‘சுதந்திர கிழக்கு’ எனும் பெயரில் ஒரு பிரசாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் மட்டும் இன்னும் தனது எதிர்ப்பை வெளியிடவும் இல்லைƒ ஆதரவை பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லை. அல்லது இதுதான் தேவை என்று அறுதியும் உறுதியுமாக மக்கள் சாட்சியாகக் கூறவும் இல்லை. பிரதான முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவரும் சர்வதேசத்தால் மதிக்கப்படும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பற்றி எல்லோருக்கும் தெரியும். சாணக்கியம்மிக்க ஒரு தலைவர் எனச் சொல்லப்படுபவர். அத்தோடு யாருக்கும் நோகாமல் அரசியல் செய்வதற்கே அவர் பெரிதும் விரும்புவார். மத்திய மாகாணத்தில் உள்ள சிங்களவர்களையும் வடபுலத் தமிழர்களையும் கிழக்கு முஸ்லிம்களையும் சமகாலத்தில் திருப்திப்படுத்துவதற்கு கடுமையான பிரயத்தனங்களை எடுப்பார்.

இந்நிலையில், வடக்கையும் கிழக்கையும் இணைத்துக் கொடுப்பதற்கு ஹக்கீம் முழுமையாக உடன்பட்டுவிட்டார் என்று பேசப்படுகின்ற போதிலும் அவர் அவ்வாறு உடன்பட்டிருக்க மாட்டார் என்பதும், அவ்வாறு உடன்பட்டிருந்தாலும் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக்கூடும் என்பதும் அவர் பற்றி ஆழமான அறிவுள்ளோருக்குத் தெரியும். ஏனெனில் அஷ்ப்பின் மரணத்துக்குப் பின்னர், மக்களின் முடிவுகள் என்னவாக இருக்கின்றதோ, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதனுடன் வந்து ஒட்டிக்கொண்ட சம்பவங்கள் பல உள்ளன. மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் முடிவும் அவ்வாறே எடுக்கப்பட்டது. இப்போது, கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு இணங்கப் போவதில்லை. அவ்வாறு இணைவதென்றாலும் முஸ்லிம் மாகாணம் நிபந்தனையை முன்வைப்பார்கள். எனவே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இரகசியமாக என்னதான் வாக்குறுதி அளித்திருந்தாலும் கடைசியில் மக்களின் முடிவின் பக்கம் வருவார் என்று எடுத்துக் கொண்டால், தமிழர்கள் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்படலாம்.

முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தவாறு முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை முன்வைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ‘ஹக்கீம் சம்மதம் தெரிவித்துவிட்டார்’ என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ள சூழ்நிலையில், இன்னுமொரு கருத்தும் உலவுகின்றது. அதாவது, ‘எப்படியும் இந்த சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு நூறுவீதம் திருப்தியான தீர்வை வழங்கப் போவதில்லை. கடைசியில் எவ்வாறோ இதைக் கைவிடப் போகின்றது. அல்லது சிறியதொரு தீர்வுப் பொதியையே கொடுக்கப் போகின்றது. எனவே நாம் இப்போது இதனை எதிர்த்து தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கத் தேவையில்லை. ஆதரிப்பது போல காட்டிக் கொள்வோம். கடைசியில் எல்லாம் குலைந்துவிடும் தானே’ என்று ரவூப் ஹக்கீம் மிகவும் சூட்சுமமான முறையில் செயற்படுவதாக சிலர் சொல்கின்றனர்.

அது உண்மையாக நடக்குமென்றால், மேலே நாம் குறிப்பிட்ட அனுமானம் இன்னும் வலுவடைகின்றது. அதாவது, தனது நிலைப்பாட்டை பகிரங்கமாகத் தாம்சார்ந்த மக்களுக்குச் சொல்லாமல் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தீர்வுத்திட்டம் இற்றைப்படுத்தப்படுகின்ற வேளையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம் அல்லது ஏதாவது ஓர் அறிவிப்பை விடுத்துவிட்டு, தான் முன்னர் எடுத்த தீர்மானம் இதுதான் என்று கூறலாம்.

அவர் தனது எதிர்கால அரசியல் பற்றி சிந்திப்பவராகவும் முஸ்லிம் காங்கிரஸுக்கான மக்களின் ஆதரவை தக்கவைக்க விரும்புபவராகவும் அப்போது இருப்பாராயின், அந்த அறிவிப்பு, தமிழர்களின் இப்போதைய நம்பிக்கையை சிதறடிக்க வாய்ப்புள்ளது என்றே ஊகிக்க முடிகின்றது.

முஸ்லிம்களுக்கு என்ன தேவை? என்று முஸ்லிம் காங்கிரஸ் இப்போது கூறாமல் எல்லா வரைபுகளும் தயாரான பின்னர் அதை முன்வைக்குமாயின் எல்லாத் திட்டங்களும் குழம்பிப் போக வாய்ப்பிருக்கின்றது.

தமிழர்கள் ‘இது என்னடா முஸ்லிம்கள் இப்படிச் செய்து விட்டார்கள்’ என்று கவலை கொள்ள நேரிடலாம். முஸ்லிம்கள் நம்பவைத்து கடைசியில் கைவிட்டு விட்டார்கள் என்று சொல்லலாம்.

இது விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் பாரிய பொறுப்பிருக்கின்றது. அவர் தன் மௌனத்தை கலைத்து, முஸ்லிம்களுக்கு உயர்ந்த பட்சம் எதை வழங்குவோம் என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாக, நிலைப்பாட்டை அறிவித்த முஸ்லிம் கட்சித் தலைவர்களை ஏதாவது ஒரு வியூகத்தின் ஊடாக தமிழ் தேசியம் கையாளலாம். ஆனால் யாராவது எதையும் தெளிவாக, பகிரங்கமாக அறிவிக்காமல் இருப்பது, கடைசி நேரத்தில் பாரிய நெருக்கடிகளை உண்டு பண்ணும் என்பதைத் தமிழ் அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, பிரதான முஸ்லிம் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம், முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதையும்? தீர்வுத் திட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு எதுவாக இருக்க வேண்டும் என்பதையும்? பகிரங்கமாக சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர் மீதான தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு பாதிக்கப்படாமல் பேணப்பட வேண்டியது அவசியமானது. என்றபடியால், தமது நிலைப்பாடுகளை தமிழ் தரப்பும் முஸ்லிம் தரப்பும் வெளிப்படுத்துவது அவசியம்.

‘முஸ்லிம்களுக்கு இதிலென்ன பங்கு?’ என்று கேட்பதை விடுத்தை எதைத் தரமுடியும் என்று தமிழ் கூட்டமைப்பு சொல்ல வேண்டும்.

கடைசி மட்டும் தெளிவற்ற வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டை வெளியில் சொல்ல வேண்டும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சயனைட் குப்பியைக் கடிப்பதா?, என்னை நானே சுட்டுக் கொல்வதா?: மக்களோடு, மக்களாகக் கலந்தேன்.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)
Next post சுட்ட மீன் சாப்பிடாதவரா நீங்கள்?… இதை படித்த பின்னர் விரும்பி சாப்பிடுவீங்க…!!