நாட்டில் அச்சுறுத்தும் கொலைகள்…!!

Read Time:14 Minute, 12 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4நாட்டில் கொலைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளை, பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.

சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் இன்றைய காலங்களில் அதிகரித்துள்ளன.

அதுமட்டுமன்றி கொலை செய்யப்படும் சம்பவங்களும் பாரிய அளவில் அதிகரித்து செல்கின்றன.

இவ்வாறான கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்னதான் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மட்டக்களப்பு ஏறாவூரில் கடந்த சனிக்கிழமை இரவு தாயும் மகளும் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியது.

இரவு நேரத்தில் வீட்டில் உறங்கச் சென்ற தாயும் மகளும் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்தவர்கள் இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இதேவேளை, வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய நபர் ஒருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். மணிப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அத்துடன் பெரியநீலாவணைப்பகுதியில் வயோதிபப் பெண்ணொருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியிருக்கிறது.

இது இவ்வாறிருக்க, அண்மையில் கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கொழும்பில் கடத்தப்பட்டிருந்த குறித்த வர்த்தகர் மாவனல்லைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு பல்வேறு கொலைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.

அதுமட்டுமன்றி சிறுமிகளை கடத்தி துஷ்பிரயோகம் செய்துவிட்டு படுகொலை செய்யும் சம்பவங்களும் பாரிய அளவில் அதிகரித்து செல்கின்றன.

அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியிருந்தன.கடந்தவாரம்கூட திருகோணமலை சம்பூர் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அதுமட்டுமன்றி கம்பஹா கொட்டதெனியப்பகுதியில் சிறுமியொருவர் கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

வவுனியா பகுதியிலும் சிறுமியொருவர் சில மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

மாவத்தகம பகுதியில் 13 வயது சிறுமியொருவர் காமுகன் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு அருவருக்கத்தக்க வகையில் சிறார்களை கசக்கிப் பிழிந்துவிடும் மிகவும் கொடூரமான காமுகர்கள் இருக்கின்ற சமூகமொன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமானது முழு உலகையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அது தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.அத்துடன் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்தே செல்கின்றன.

வங்கியில் பணம் கொள்ளை, வழிப்பறிக்கொள்ளைகள், வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல் போன்ற கொள்ளைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக பாரிய அளவில் அதிகரித்து செல்கின்றன.

இவற்றை கட்டுப்படுத்த பொலிஸார் எவ்வளவு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிப்பதையே காண முடிகின்றது.

இவ்வாறு பார்க்கும் போது நாட்டில் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.

அதாவது சட்டம் ஒழுங்கு என்பன உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டதா என்ற கவலையும் மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

உண்மையில் இவ்வாறான கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்து செல்வதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நாகரிகமான இந்த உலகில் சமூக மட்டத்தில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டு வருகின்றது.

கல்வியறிவிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மனிதன் உயர்ந்த இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் அதிகரித்து செல்கின்றமையானது வேதனைக்குரியதாகும்.

குறிப்பாக எழுத்தறிவு வீதம் மற்றும் கல்வி வளர்ச்சி கூடிய பகுதிகளிலும் இவ்வாறு மனிதாபிமானமற்ற கொடூர சம்பவங்கள் இடம்பெறுகின்றமை எமது சமூக முன்னேற்றத்திலும் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றமையை எடுத்துக்காட்டுகின்றது.

இதேவேளை, 2015ம் ஆண்டு முதல் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நாட்டில் 777 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சு பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

குறிப்பாக 2015ம் ஆண்டில் 443 கொலைச் சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. மேலும் கடந்த 20 மாதகாலத்தில் 267 கொலை முயற்சி சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில் கடந்த 20 மாதகாலத்தில் 777 கொலைகள் இடம்பெற்றுள்ளமையானது அதிர்ச்சிகரமான தகவலாகவே காணப்படுகின்றது.

அதுமட்டுமன்றி, தற்போதுகூட இவ்வாறு கொலைச்சம்பவங்களும் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து செல்கின்றமையானது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

விசேடமாக கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலை, மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பிலும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்தும் சட்ட நடவடிக்கைகள் மிகவும் கடினமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அவை குறைந்து செல்வதை காண முடியவில்லை.

மாறாக தொடர்ச்சியான முறையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்லும் போக்கையும் காணமுடிகின்றது.

எனவே, இவ்வாறு அதிகரித்து செல்கின்ற கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டமும், ஒழுங்கும் மிகவும் தீவிரமான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும்.

ஆனால், சட்டம், ஒழுங்கை உரிய முறையில் அமுல்படுத்துவதன் ஊடாக மாத்திரம் இவ்வாறான சம்பவங்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்திவிட முடியாது என்பதும் யதார்த்தமாகும்.

சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் நிறுவனங்கள் அதனை உரிய முறையில் முன்னெடுக்கவேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவிற்கு சமூக ரீதியான முன்னேற்றமும் இவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பாரிய பங்காற்றுகின்றது.

விசேடமாக கல்வியறிவுடன் கூடிய பண்புகள் வலுவான முறையில் சமூகங்களை கட்டியெழுப்புவதன் ஊடாகவே இவ்வாறு குற்றச்செயல்கள் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்த முடியும் என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது இவ்வாறு கல்வியறிவுடன் கூடிய பண்பான சமூகத்தை கட்டியெழுப்புவதில் மத தலைவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் முக்கிய பங்களிப்பை ஆற்ற முடியும்.

மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொலை, கொள்ளை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடியும்.

இது தொடர்பில் அரசாங்கம் அனைத்து மதத்தலைவர்களுடனும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் இணைந்து பண்பான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வரவேண்டும்.

அதேநேரம் மனிதாபிமான ரீதியிலான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தையும் மிகவும் கடுமையாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக சின்னஞ்சிறு பிஞ்சுகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காமக்கொடூரர்களுக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

அண்மைக்காலத்தில் நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து செல்வதையும், சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது அதிகரிப்பதையும் அவதானிக்க முடிகின்றமையானது நாட்டின் சமூகக் கட்டமைப்பு மேலும் பண்பான வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டியதை எடுத்துக் காட்டுகின்றது.

இது தொடர்பில் அரசாங்கம் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து நழுவிச் செல்வதற்கு இடமளிக்கக்கூடாது.

சிறுவர், சிறுமியர்களுக்கு சுதந்திரமாக பாதுகாப்பாக வாழும் சூழலை பெற்றுக்கொடுக்கவேண்டியது அரசாங்கத்தினதும் சிவில் சமூக நிறுவனங்களினதும் கடமையாகும்.

அந்தவகையில் பண்பான ஒழுக்க ரீதியில் வளர்ச்சியடைந்த சமூகத்தை கட்டியெழுப்புவதில் அனைத்துத் தரப்பினரும் விழிப்புடனும், பொறுப்புடனும் தூர நோக்குடனும் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுறுசுறுப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் எறும்புகளைப் பற்றி இதெல்லாம் தெரியுமா?
Next post யாழ்.நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை வான் – இளைஞர்களிடையே பதற்றநிலை…!!