By 21 September 2016 0 Comments

நலம் வாழ வெள்ளை உணவுகள்…!!

white_vege-615x503-585x478அன்றாடம் உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய வெள்ளை உணவுகள் சத்துக்கள் நிறைந்தவை. அவற்றை தாராளமாகச் சாப்பிடலாம்.

ஆனால், செயற்கை முறையில் வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை, உப்பு போன்ற உணவுகள்தான் உடலுக்குக் கெடுதியை ஏற்படுத்தக் கூடியவை. வெள்ளை உணவுகள் உடலுக்குக் கெடுதியானவை என்ற பரவலான கருத்தை நம்பி, சத்தானவற்றையும் சாப்பிடாமல் இருக்க கூடாது.

காலிஃப்ளவர்

விட்டமின் பி, பி6, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்துள்ளன. குறைந்த கலோரிகள் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. இதில் உள்ள கொலைன் (Choline) மற்றும் விட்டமின் பி , மூளைக்கு உதவுகின்றன. விட்டமின் சி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. காலிஃப்ளவரை, மிதமாகவே வேகவைக்க வேண்டும். தற்போது, பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுவதால், மஞ்சள் நீரில் போட்டு, சில நிமிடங்கள் ஊறிய பிறகு, சமைப்பது நல்லது.

முள்ளங்கி

விட்டமின் சி, இரும்புச் சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்ஸிடன்ட், சல்ஃபோரோபேன் (Sulforaphane) போன்ற சத்துக்கள் உள்ளன. மார்பகம், பெருங்குடல், சினைப்பை புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தப் பிரச்னையை சீராக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்கள் இதைச் சாப்பிட்டால், கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும். இதில் உள்ள நீர்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்கும். சருமத்துக்கும் நன்மைகளைச் செய்யும். தைராய்டு நோயாளிகள், முள்ளங்கியை அளவோடு சாப்பிட வேண்டும். வேகவைக்காமல், சாப்பிடக் கூடாது. இதில் உள்ள சாலிசிலேட் (Salicylate) சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும்.

பூண்டு

ரத்த அழுத்தம் உடல் பருமன் உடையோர், புற்றுநோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு. கிருமிகள், வைரஸ், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காக்கும். சுவாசப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும். தாய்ப்பால் சுரக்க உதவும். சர்க்கரை நோயாளிகள் தினமும் உண்ணலாம். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும், கணையத்துக்கு நன்மைகளைச் செய்யும். பூண்டு சாப்பிட்டால் துர்நாற்றம் வீசும் என்று, பூண்டை ஒதுக்கக் கூடாது. பெருங்குடல், ப்ராஸ்டேட், நுரையீரல், மார்பகம், மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். கொழுப்பைக் கரைத்து, இதய நோய்கள் வராமல் காக்கும்.

காளான்

அசைவத்தில் உள்ள சுவையும், சத்துக்களும் காளானில் கிடைப்பதால், அசைவ உணவு சாப்பிடாதவர்கள் எடுத்துக்கொள்ளலாம். தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோஅமிலங்கள், புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஹார்மோன்கள் சுரப்பதற்கும், நரம்பு மண்டலத்துக்கும், பாண்டோதினிக் (Pantothenic acid) என்ற அமிலம் உதவுகிறது. சிவப்பு ரத்த அணுக்களை ஆரோக்கியமாக்க ரிபோஃபிளேவின் உதவுகிறது. இதில் உள்ள செலினியம் (Selenium), உடலில் உள்ள செல்களுக்குக் கவசம். வைட்டமின் டி இருப்பதால், எலும்புகள் வலுப்பெறும். கொழுப்பு இல்லை. கலோரிகளும் இதில் மிகக் குறைவுதான். இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுவது நல்லது.

தேங்காய்

உடனடி ஆற்றலைக் கொடுக்கும் மிகச் சிறந்த உணவு. விட்டமின்கள், தாதுக்கள், கலோரிகள், நார்ச்சத்துக்கள், அமினோஅமிலங்கள் இதில் நிறைந்துள்ளன. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். தேங்காயில் நல்ல கொழுப்பு அதிகம். ஆதலால் கொழுப்பு என்று தேங்காயைத் தவிர்க்க வேண்டாம். பாக்டீரியா, பூஞ்சை, வைரல் தொற்றுகளிலிருந்து சருமத்தைக் காக்கும். தேங்காய், இளநீரில் உள்ள தாதுக்கள், உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து புத்துணர்வைத் தருகின்றன.

முட்டைகோஸ்

விட்டமின் சி, நார்ச்சத்து உள்ளன. அதிக அளவில் பீட்டாகரோட்டீன் உள்ளதால், கண்களுக்கு நல்லது. எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சூப் அல்லது சாலட்டாக சாப்பிடலாம். தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளதால், எலும்பு மெலிதல் பிரச்னையைப் போக்கும். இதில் உள்ள பொட்டாசியம் சத்து, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மையைச் செய்யும். உடலில் கட்டிகள், புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கும். பெருங்குடல், மார்பகம், கர்ப்பப்பை, சினைப்பை புற்றுநோய்கள் வராமல் காக்கும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். வாயு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அதிகம் சாப்பிட வேண்டாம்.

வெள்ளை வெங்காயம்

ஆன்டிவைரல், ஆன்டி கார்சினோஜெனிக், ஆன்டிபாக்டீரியல், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை இதில் இருப்பதால், பாக்டீரியல் கிருமிகள், வைரஸ் தொற்று, புற்றுநோய் செல்கள் போன்றவற்றை எதிர்த்து, வரவிடாமல் செய்யும். பூச்சிக் கடிகளுக்கு மருந்தாகிறது. உடலில் உள்ள இன்சுலினைச் சரியாக வேலை செய்யவைக்கும். உடலில் கெட்ட கொழுப்பை (LDL) நீக்கும், இதிலிருக்கும் நைட்ரிக் அமிலம், ரத்தக் குழாய்களுக்கு நல்லது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.Post a Comment

Protected by WP Anti Spam