காவிரி பிரச்சினையும் அதிகாரப் பரவலாக்கலும்…!!

Read Time:19 Minute, 51 Second

article_1474432855-aubeகடந்த வாரம் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக இலங்கையில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும் போது ஊடகங்களின் பார்வை எந்தளவு குறுகியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

கர்நாடகாவில் தமிழர்களுக்குச் சொந்தமான பல நூறு வீடுகள் கடைகள், வாகனங்கள் ஆகியன அந்த வன்முறைச் சம்பவங்களின் போது தீக்கிரையாக்கப்பட்டன. தமிழ் நாட்டிலும் சில இடங்களில் கன்னட மக்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் இடம்பெற்றன. தமிழகத்தில் பிரபல கன்னட நடிகர்களான ரஜினிகாந்த், பிரபுதேவா போன்றவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததாகச் செய்திகள் கூறின.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தீக்குளித்தார். இலங்கையிலும் வட பகுதியில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஆனால், இவ்வளவு நடந்தும் அவற்றைப்பற்றி சிங்கள பத்திரிகைகள் எதிலும் எந்தவொரு செய்தியும் வெளிவரவில்லை. ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் உள்பக்கத்தில் கண்ணில் படாத இடத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.அதிகாரப் பரவலாக்கலோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தும், அதிகாரப் பரவலாக்கல் நாட்டில் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தும், இந்த விடயத்தைச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் புறக்கணித்தமையை எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்? சிலவேளை அவர்கள் இந்தப் பிரச்சினையின் பின்னாலுள்ள அரசியலைப் புரிந்து கொள்ளவில்லைப் போலும்.

ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொண்டமை இதுதான் முதலாவது முறை அல்ல! உதாரணமாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கையையும் ஏனைய பல நாடுகளையும் சுனாமி தாக்கிய போதும் இந்த நிலைமை காணப்பட்டது. சுனாமி போன்ற பாரியதோர் அழிவின் போதும் ஊடகங்கள் தத்தமது வாசகர்களின், நேயர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பிரிந்தே செயற்பட்டன.

சுனாமியின் போது சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் தென் பகுதி நிலைமையை மையமாக வைத்து அல்லது அதனை மட்டுமே அறிக்கையிட்டன. தமிழ் ஊடகங்கள் வடக்கு, கிழக்கு நிலைமையை முதன்மையாகக் கொண்டு அறிக்கையிட்டன. சுனாமி தாக்கிய நாளுக்கு அடுத்த நாள் ஒரு தமிழ்ப் பத்திரிகை ‘கடல் கொந்தளித்து; வடக்கு கிழக்கில் பாரிய அழிவு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. அன்று சிங்கள் ஊடகங்களில் வடக்கு, கிழக்கு அழிவுகளைப் பற்றிய விவரமான செய்தி எதுவுமே வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக கொழும்பு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுத்தனர். சிங்களவர்கள் காலி, மாத்தறை போன்ற பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களுடன் படையெடுத்தனர். முஸ்லிம்கள் அம்பாறைக்குச் சென்றனர்.

தமது வாசகர்களின், நேயர்களின் ஆர்வத்தை தூண்டாத ஊடகம் அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு தமது இருப்பையே இழந்துவிடும் என்பது ஊடக நியதியாகும். அது உண்மை தான்! ஆனால் தொடர்ச்சியாக அவ்வாறு தமது வாசகர்களின், நேயர்களின் விருப்ப வெறுப்புக்களை புறக்கணித்தாலேயே அவ்வாறு நடக்கும். ஏனைய பகுதிகளில் சுனாமி அல்லது கர்நாடக வன்செயல்கள் போன்ற பாரிய சம்பவங்கள் தமது வாசகர்களின், நேயர்களின் ஆர்வத்தை தூண்டாது என்று கூற முடியாது. அவ்வாறு தூண்டாவிட்டாலும் அவ்வாறான பாரிய விடயங்களைத் தமது வாசகர்களுக்கு, நேயர்களுக்கு தெரிவிப்பது ஊடகத்தின் கடமையாகும்.

காவிரி நதி நீர்ப் பகிர்வு தொடர்பான சர்ச்சை காரணமாகவே கர்நாடகாவிலும் பின்னர் தமிழகத்திலும் வன்செயல்கள் வெடித்தன. இந்தியாவில் மாநிலங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தனித்தனியாகச் சிந்தித்து நதிநீருடன் தொடர்புடைய அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது எனலாம். அதாவது இது நேரடியாகவே அதிகாரப் பரவலாக்கலுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,340 மீட்டர் உயரத்திலுள்ள ’கூர்க்’ என்று அழைக்கப்படும் கோடாகு பகுதியில் அமைந்துள்ள பிரம்மகிரி மலைகளில் இருந்து தோன்றி கர்நாடகா, தமிழகம் மற்றும் புதுவை ஆகிய மாநிலங்கள் ஊடாக 850 கிலோமீட்டர் கடந்து தமிழ்நாட்டில் பூம்புகாரில் வங்கக் கடலில் சங்கமமாகிறது

கர்நாடக அரசாங்கம் காவிரியை மறித்து மூன்று பாரிய அணைக்கட்டுகளை அமைத்துள்ளது. இவற்றில் ஹரங்கி அணைக்கட்டின் மூலம் அமைந்த ஹரங்கி நீர்த்தேக்கத்தில் 8.5 ஆயிரம் மில்லியன் கன அடி (டீ.எம்.சி) தண்ணீர் தடுத்து வைத்துக் கொள்ள முடியும். அடுத்து வரும் கபினி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 19.5 டீ.எம்.சி ஆகும். 1924 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கிருஷ்ணராஜசாகர் நீர்தேக்கத்தின் கொள்ளளவு 45 டீ.எம்.சி ஆகும். இதுவே கர்நாடகாவிலுள்ள மிகப் பாரிய அணையாகும். அதன் மூலம் சுமார் 200,000 ஏக்கர் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. பெரும்பாலும் அந்த நீர் கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் கரும்பு செய்கைக்காகவே உபயோகிக்கப்படுகிறது.

காவிரி ஒரு நீர்வீழ்ச்சியின் ஊடாக தமிழகத்தின் மேட்டூர் பகுதிக்குள் நுழைகிறது. அங்கு பிரசித்திபெற்ற மேட்டூர் அணை அமைந்திருக்கிறது. கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளில் அதாவது 1930 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட மேட்டூர் அணையின் மூலம் 93.5 டீ.எம்.சி. தண்ணீரை தடுத்து வைத்துக் கொள்ள முடியும். கர்நாடகாவிலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களையும் விடப் பாரியதாக இருந்தபோதிலும், கர்நாடகா தண்ணீரை விடுவித்தால் மட்டுமே மேட்டுர் அணைக்குத் தண்ணீர் கிடைக்கும்.

காவிரியின் நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. 1807 ஆம் ஆண்டு முதன் முதலாக இரு தரப்பினர்களிடையே இந்தப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. அதனை அடுத்து 1892 ஆம் ஆண்டிலும் கர்நாடகா கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டை நிர்மாணித்த 1924 ஆம் ஆண்டிலும் இரு மாநிலங்களுக்கிடையே காவிரி நதி நீர் பங்கீடு விடயத்தில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி கர்நாடகா நதியின் குறுக்கே அணைக்கட்டுகள் நிர்மாணிப்பதாக இருந்தால் அதற்கு தமிழகத்தின் சம்மதத்தைப் பெறவேண்டும். 1924 ஆம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தலையீட்டில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி இரு மாநிலங்களும் இரண்டு அணைகளை கட்டிக் கொள்ள இணக்கம் காணப்பட்டது. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் வகையிலேயே வரையப்பட்டது.

அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும் முன்னரே, கர்நாடகா தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் இரண்டு அணைக்கட்டுகளை நிர்மாணித்தது. ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதன் பின்னரும் சில அபிவிருத்தித் திட்டங்களை கர்நாடகா ஆரம்பித்தது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசாங்கம் கர்நாடகாவின் கபினி, ஹேமாவதி, ஹரங்கி, சுவர்ணாவதி, யாகச்சி மற்றும் வருணா ஆகிய நீரோடைகள் தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நதி நீர் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாளாந்தம் அகில இந்திய வானொலியின் தமிழ்ச் சேவையை கேட்போரால் உணர்ந்து கொள்ள முடியும். ஏறத்தாழ நாளாந்தம் அந்த வானொலிச் செய்தியின் இறுதியில் மேட்டூர் அணைக்கு எந்தளவு தண்ணீர் கிடைக்கிறது என்பதும் எந்தளவு தண்ணீர் அணையிலிருந்து திறந்துவிடப்படுகிறது என்ற செய்தியும் வாசிக்கப்படுகிறது.

காவிரி கர்நாடகாவிலிருந்து ஆரம்பிப்பதனால் தமக்கே நதி நீர்ப் பங்கீட்டின் போது முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது கர்நாடக அரசின் நிலைப்பாடாகும். நதியின் பெரும் பகுதி தமிழகத்தின் ஊடாகப் பாய்வதால் தமக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனத் தமிழகம் வாதிடுகிறது. எவ்வாறாயினும் கடந்த காலங்களில் கர்நாடகா மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாகத் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளதை நன்றாக அவதானிக்க முடிகிறது.

உதாரணமாக, 1940 ஆம் ஆண்டு மேட்டூர் நீர் மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1974 ஆம் ஆண்டு வரை, அதாவது 1974 ஆம் ஆண்டு நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் காலாவதியாகும் வரை அந்த மின் நிலையத்தினால் வருடமொன்றுக்கு 175 மில்லியன் மின் அலகுகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதன் பின்னர், படிப்படியாக இந்த மின் உற்பத்தி குறைந்து 1990 ஆம் ஆண்டாகும் போது அங்கு 93 மில்லியன் மின் அலகுகளே (அரைவாசியே) உற்பத்தி செய்யப்பட்டன.

தமிழகத்தில் காவிரியினால் பயனடைந்த மிக முக்கிய மாவட்டமாக தஞ்சாவூரை சுட்டிக் காட்டலாம். எனவே, கர்நாடகாவின் அபிவிருத்தித் திட்டங்களினால் நதியின் நீர் குறைவடைந்ததன் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாவும் தஞ்சாவூர் காணப்படுகிறது. ஒரு காலத்தில் தஞ்சாவூரின் கோடைக் காலப் பயிர்ச் செய்கையான குருவை நாலரை லட்சம் ஏக்கராக இருந்தது. அது 1990 ஆம் ஆண்டாகும் போது 75,000 ஏக்கராக, அதாவது எட்டில் ஒன்றாகக் குறைந்து விட்டிருந்தது.

இதன் விளைவாக பெரும் எண்ணிக்கையானோர் தொழில்களை இழந்துள்ளனர். சனத் தொகைப் பெருக்கத்தோடு தொழில் பிரச்சினை மேலும் கடுமையாகியுள்ளது. நீர்ப் பற்றாக்குறையின் காரணமாக நில உரிமையாளர்கள் புதிய தொழில்நுட்ப முறைகளை நாட முற்பட்டதனாலும் மேலும் தொழில் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பலர் தொழில் தேடி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தனர். ஆனால் 1974 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பலர் ஏனைய மாவட்டங்களுக்கு தொழில் தேடிச் செல்ல ஆரம்பித்தனர். கர்நாடகாவின் அபிவிருத்தித் திட்டங்களால் அம் மாநில மக்கள் பயனடைந்த போதிலும் தமிழக மக்கள் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.

காவிரியானது கர்நாடகாவிலும் தமிழகத்திலும் மக்களின் பொருளாதாரத்தோடு மட்டுமன்றி சமயம், கலாசாரம் ஆகியவற்றோடும் கலந்துள்ள மக்களின் வாழ்வியலின் ஓரங்கமாகும். கர்நாடகாவில் நதி ஆரம்பிக்கும் தலைக்காவிரியில் நதிக்காக ஓர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவிரியோடு சம்பந்தப்பட்ட ஆடி பதினெட்டு, ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. ஆனால், இப்போது ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நெருங்கும் போது திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் ஆடிப் பெருக்கிற்காக தண்ணீர் வருமா என்று ஏங்கிக் கொண்டு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையை தீர்க்க, இரு அரசாங்கங்களும் பல முறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு முதல் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதன்படி நிலைமையை ஆராய்ந்து பரிந்துரைகளை செய்வதற்காக தீர்ப்பாயம் ஒன்றை நியமிக்குமாறு 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசாங்கத்தைப் பணித்தது.

தீர்ப்பாயம் தமிழகத்துக்கு வந்த முதல் நாள், அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்காக பழைமை வாய்ந்த கல்லணையிலிருந்து நதி கடலோடு சங்கமிக்கும் பூம்புகார் வரையிலான மனிதச் சங்கிலியொன்று அவர்களை வரவேற்றது. இரண்டாவது நாள் அந்த மனிதச் சங்கிலி 416 கிலோமீட்டர் வரை நீடித்தது. சுமார் 22 லட்சம் மக்கள் இந்த மனிதச் சங்கிலியில் சம்பந்தப்பட்டு இருந்தனர். தமிழகம் இந்தப் பிரச்சினையால் எந்தளவு பாதிக்கபப்பட்டுள்ளது என்பதை அது நன்றாக எடுத்துக் காட்டியது.

தமிழகத்துக்கு 205 டீ.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய போது கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. 12 தமிழர்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக் கணக்கான தமிழர்கள் மாநிலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டனர்.

இம் முறையும் தமிழகத்துக்கு குறிப்பிட்டதோர் அளவு தண்ணீர் வழங்குமாறு நீதிமன்றம் கடந்த 5 ஆம் திகதி உத்தரவிட்டது. கர்நாடகா அதற்கு எதிராக மேன்முறையீடு செய்தது. நீதிமன்றம் அதனை ஏற்காது தமிழகத்துக்குச் செப்டம்பர் 20 ஆம் திகதி வரை தண்ணீர் வழங்குமாறு கடந்த 12 ஆம் திகதி உத்தரவிட்டது. அதுவே இம் முறை கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் காரணமாகும்.

அதிகாரப் பரவலாக்கல் இனப்பிரச்சினைக்கு தீர்வாகலாம். ஆனால் அதில் இவ்வாறான பிரச்சினைகளும் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விட முடியாது. காவிரிப் பிரச்சினைக்கு ஒத்ததாக இல்லாவிடாலும் அண்மையில் இலங்கையில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அத்திட்டத்தில் வட பகுதி மக்களுக்குரிய பங்கினைப் பற்றி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமது ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தார். ஆனால், அதிகாரப் பரவலாக்கலை எவ்வளவு கவனமாக அமுல் செய்ய வேண்டும் என்பதையே காவிரி எடுத்துக் காட்டுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபான தயாரிப்பு நிலையங்களில் சுற்றிவளைப்பு…!!
Next post தென் ஆப்பிரிக்காவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பு…!!