By 27 September 2016 0 Comments

வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!!

the-causes-and-solutions-abdominal-pain_secvpf-585x333உடல் வலிகளில் சில வலிகள் மிக சாதாரணமாக அனைவராலும் சொல்லப்படும் ஒன்றாகின்றது. அவற்றுள் ஒன்றுதான் வயிற்று வலி.

உடல் வலிகளில் சில வலிகள் மிக சாதாரணமாக அனைவராலும் சொல்லப்படும் ஒன்றாகின்றது. அவற்றுள் ஒன்றுதான் வயிற்று வலி. ஆபீஸ் லீவ் லெட்டர்களில் அநேகமாக குறிப்பிடப்படும் ஒரு காரணம் வயிற்றுவலி தானாம். சிறு குழந்தைகளும் அடிக்கடி கூறும் ஒன்று வயிற்று வலி. இதனை வாழ்நாளில் சில முறையேனும் அனுபவிக்காதவர் இருக்க முடியாது. பல நேரங்களில் சாதாரண காரணங்களால் ஏற்படும் இந்த வலி சின்ன மருத்துவ கவனத்தில் சரியாகி விடக்கூடியது. ஆனால் சில நேரங்களில் பெரிய பாதிப்பின் வெளிப்பாடாகவும் அமையலாம்.

அநேகர் சொல்லும் பிரச்சனை திடீரென வயிறு உப்பசமாய் பிடித்துக் கொண்டது போல இருக்கின்றது என்பதுதான். இது மந்தமான வலியாகவும் இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம். உள்ளே சுற்றி சுற்றி வலிப்பது போல் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் உள்ளே சுற்றி மாட்டிக் கொண்ட காற்றுதான். பொதுவில் இது விருந்து, மசாலா உணவு, நீண்ட இடைவெளி கடந்த உணவு இவற்றால் ஏற்படுகின்றது. வயிற்றில்

* அதிக காற்று

* செரிமானக் குறைவு

* அதிக காற்று உட்செல்லுதல்

(நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருப்பவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் இவ்வாறு ஏற்படும்.)

* காரம், மசாலா உணவு

* சில மருத்துவ காரணங்கள் இவற்றினால் ஏற்படும். பொதுவில்

* பீன்ஸ்

* வெங்காயம்

* முட்டைகோஸ்

* ப்ரோகலி

* முளை கட்டிய தானியங்கள்

* காலிபிளவர்

போன்றவை வயிற்றில் காற்றை அதிகம் ஏற்படுத்தக் கூடியவை. மலச்சிக்கல் வயிற்றில் அதிக காற்றினை உண்டு செய்யும் என்பதால் நார்சத்து உணவு, 6-8 டம்ளர் நீர், 20-30 நிமிட உடற்பயிற்சி இவைகளை மேற்கொண்டால் பிரச்சனை தீர்ந்து விடும். அதிகம் காற்றடைக்கப்பட்ட பானங்கள் கண்டிப்பாய் வயிற்று உப்பிசம், வலியினை ஏற்படுத்தும். இப்பிரச்சனை மாணவ சமுதாயம், கல்லூரி சமுதாயம் இவர்களிடையே மிக அதிகமாக காணப்படுகிறது.

சில உணவுகள் உங்களது வயிற்றினால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். கோதுமை, க்ளூடன் கொண்ட உணவுகள், பால், பால் சார்ந்த பொருட்கள் இவைகள் பலருக்கு ஒத்துக் கொள்ளாத பொருளாக இருக்கும். இவைகளை தவிர்ப்பதே இதற்குத் தீர்வாக அமையும்.
எரிச்சல் குடல் நோய் எனும் பாதிப்பில் இதே போன்ற உப்பிசம், வலி, வயிற்றுப் போக்கு போன்றவை இருக்கும். அநேகமாக மாலை நேரங்களில் இப்பாதிப்பு ஏற்படும். நார்சத்து உணவு, பெப்பர்மின்ட் டீ, கொளுப்பில்லாத தயிர் போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும் இதற்கு மருத்துவ ஆலோசனை அவசியம்.

தொடர்ந்து உப்பிசம் பெண்களுக்கு இருந்தால் கர்ப்ப உறுப்புகளின் பரிசோதனை அவசியம். வயிற்றில் வைரஸ் அல்லது பாக்டீரியாக்களின் கிருமி பாதிப்பின் காரணமாக உப்பிசம், வலி ஏற்படலாம். பாதிக்கப் பட்டவருடன் மிக அருகில் கூட இருப்பதும், கிருமி பாதிக்கப்பட்ட உணவினை உட்கொள்வதும் இது ஏற்பட காரணம் ஆகின்றது. மேற்கூறியது தவிர மேலும் சில சாதாரண பொதுவான காரணங்கள் வயிற்று வலிக்கு இருக்கும்.

* அஜீரணம் * கருப்பை வீக்கம்

* மலச்சிக்கல் * குடல் புண்

* வைரஸ் * கருப்பை கோளாறு

* மாதவிலக்கு * ஹெர்னியா

* உணவில் கிருமி * பித்தப்பை கற்கள்

* குடல் எரிச்சல் * சிறுநீரக கற்கள்

* உணவு அலர்ஜி * சிறுநீரக குழாய் கிருமி

* லக்டோஸ் ஒவ்வாமை * உணவு எதிர்ப்பு

* வயிற்று புண் * குடல் வால் பாதிப்பு ஆகியவை ஆகும்.

மேற்கூறியவைகளுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் என்றாலும், கீழே கூறப்படுபவை வயிற்று வலியுடன் சேர்ந்து இருந்தால் தாமதிக்காத உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.

* ஜுரம்

* உடலில் நீர் வற்றுதல்

* வாந்தி

* கழிவுப் பொருள் வெளியேறாமை

* அடிக்கடி சிறுநீர் செல்லுதல்

* அடிபட்டு காயம்

* பல மணி நேரம் தொடர்ந்து வலி ஆகியவை உடனடி மருத்துவ கவனம் தேவைப்படு பவை.

* வாந்தியில் ரத்தம்

* கழிவுப் பொருளில் ரத்தம்

* மூச்சு விட முடியாமை

* கர்ப்ப கால வலி

ஆகியவை அவசர சிகிச்சை தேவைப்படுபவை ஆகும். நம் நாட்டு மருத்துவர்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அறிகுறிகளை வைத்தே நோய்க்கான காரணத்தை கண்டு பிடித்து விடுவர். மேலும் பல பரிசோதனைகளும் சிகிச்சையினை எளிதாக்கி விடுகின்றது.

* உங்கள் வலி வயிற்றின் பாதிப்பினால் மட்டும் தானா?

* வயிற்றின் எந்த பகுதியில் வலி உள்ளது.

* அவ்வலி மந்தமானதா? பரவுகின்றதா? துடிக்கும் வலியா?

* வலி எப்பொழுது வருகின்றது? காலையிலா? இரவிலா? உணவிற்கு முன்பா? உணவிற்கு பின்பா?

* மாத விலக்கின் பொழுது வலியா?

* எவ்வளவு நேரம்?

* வலி கீழ் முதுகு, கை, தொடை வரை பரவுகின்றதா?

* மருந்து ஏதேனும் உட்கொள்கின்றீர்களா?

* கர்ப்பமாக இருக்கின்றீர்களா?

* காயம், அடி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?

போன்ற வினாக்களே அநேகமாக காரணத்தினை விளக்கி விடும். பித்தப் பையில் சிறு சிறு கற்கள் உருவாகி சிலருக்கு இருக்கும். இவை பித்தப்பை வீக்கத்தினை உருவாக்கி பித்த நீர் குடலுக்குச் செல்வதனை தடுக்கலாம். இதனால் வலி ஏற்படும். குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவினை உண்ணும் பொழுது பித்தப்பை சுருங்கி பித்த நீரினை குடலுக்குள் செரிமானத்திற்காக செலுத்த முயலும். அச்சமயம் கற்களால் ஏற்படும் அடைப்பாலும் பித்தப்பை வீக்கத்தாலும் தாங்க முடியாத வலி ஏற்படும். இதற்கு தீர்வு பித்தப்பை நீக்கும் அறுவை சிகிச்சையே.

கணையம் எனப்படும் பான்கிரியர்ஸ் வீக்கம் அடையும் பொழுது தாங்க முடியாத வலியும், எரிச்சலும் ஏற்படும். இதற்கு உடனடி மருத்துவ மனை சிகிச்சை தேவைப்படுகிறது. சிலருக்கு உணவு, ஆசிட் இரண்டுமே வயிற்றிலிருந்து மேலெழும்பி வரலாம். காரணம் வராது தடுக்கும் வயிற்றின் வால்வு தளர்ந்து இருக்கும். அதிக உணவு, கொழுப்பு மிகுந்த உணவு உட்கொள்ளும் பொழுது பாதிப்பும், வலியும் கூடுதலாக இருக்கும். உடல் இளைப்பது, உணவில் கவனம், மருந்து இவையே முதல் பிரிவு தீர்வாக அமையும்.

பால், பால் சார்ந்த உணவு ஒத்துக் கொள்ளாதவர்கள் உலகில் அநேக மக்கள் உள்ளனர். இதனால் அதிக வயிற்று வலி ஏற்படும். இதன் தீர்வு இவைகளை தவிர்த்து விடுவதே. சில வலி நிவாரண மருந்துகளும் வயிற்றில் வலியினை ஏற்படுத்தலாம். மருத்துவ உதவி அவசியம்.
குடல் வீக்கம் இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ளவும். பார்லி, கோதுமையில் இருக்கும் க்ளூடன் என்ற புரதம் பலருக்கு ஒத்துக் கொள்ளாமல் வயிற்று வலி ஏற்படுத்தலாம். இவர்களுக்கு சிறு குடல் சரிவர வேலை செய்யாததே இதற்கு காரணமாகின்றது. இவைகளை தவிர்ப்பதே இதற்கு தீர்வு.
என்டேமெட்ரியோஸிஸ் எனப்படும் கருப்பை கோளாறு, வயிற்று வலி, முறையற்ற ரத்த போக்கு, கருத்தரிப்பின்மை ஆகியவற்றினை உருவாக்கும்.

இதற்கு மருந்து ஹார்மோன் சிகிச்சை, அறுவை சிகிச்சை என தேவைக்கேற்ப அளிக்கப்படுகின்றது. தைராய்டு சுரப்பி கழுத்தில் இருந்தாலும் இதனால் வயிற்றில் வலியும், வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். இது அதிகமாக சுரந்தால் இவ்வாறு இருக்கும். குறைவாய் சுரந்தால் செரிப்பது அதிக தாமதப்படும். இதனால் வயிற்றில் காற்றும், மலச்சிக்கலும் சேர்ந்து வயிற்று வலி உண்டாகும்.

எனவே தைராய்டு பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.
சுத்தமற்ற நீரினை குடிப்பதனாலும், சுத்தமற்ற ஏரி, நீச்சல் குளங்களில் நீந்துவது, குளிப்பதனால் சில கிருமிகள் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு இவற்றினை ஏற்படுத்தலாம். இவை 2-10 நாட்களில் ஏற்படலாம்.

மருத்துவ சிகிச்சை தீர்வு அளிக்கும். குடல் வால் வீக்கம் எனப்படும் அப்பென்டிசைட்டிஸ் திடீர் வலியும் ஏற்படும். அவசர சிகிச்சையை விரைந்து செய்யவும். இது திடீரென ஏற்படுவதோ, சற்று நாளாக இருந்தாலும் அறுவை சிகிச்சை மிக அவசியம். இல்லையெனில் உள்ளே வெடித்து ஆபத்தான நிலைமையினை ஏற்படுத்தி விடலாம்.

அதிக மன உளைச்சல், வேலைச்சுமை போன்றவை ஜீரணக் கோளாறுகளையும், குடல் எரிச்சல் நோயினையும் உருவாக்கலாம்.

சுகாதாரமற்ற உணவின் மூலம் ஏற்படும் வயிற்று வலி பாதிப்பு நம் நாட்டில் மிக அதிகம். இதற்கு சுகாதார முறை பாதுகாப்பே அவசியம்.

உணவுப் பாதை, வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் புற்று நோய் பாதிப்பு இருந்தால் பல அறிகுறிகள் இருக்கும். அத்துடன் வலியும் இருக்கும். மருத்துவ பரிசோதனையே இதனை உறுதி செய்ய உதவும். தகுந்த சிகிச்சை அவசியம். மருத்துவ முன்னேற்றம் இன்று அநேக பாதிப்புகளை எளிதில் சரி செய்ய முடிகின்றது. பொதுவில் நார்சத்து மிகுந்த உணவு, காய்கறிகள், பழங்கள், கொழுப்பு குறைந்த உணவு, உட ற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு இவை உங்களை என்றும் ஆரோக்கியமாகவே வைக்கும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.Post a Comment

Protected by WP Anti Spam