இலங்கையின் வடகிழக்கில் மீண்டும் கடும் மோதல்கள்

Read Time:3 Minute, 47 Second

LTTE-SLK.jpgஇலங்கையின் கிழக்கே இன்று திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பொதுமக்கள் உட்பட பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில், இலங்கை இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் ஈடுபட்டதாகவும், அணை மதகுகளுக்கு அருகே வரை அவர்கள் முன்னேறிவந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் சார்பில் இராணுவ விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல இளந்திரையன் தெரிவித்தார்.

அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு பகுதிக்கு அருகே அல்லை என்னும் இடத்தில் உள்ள இராணுவமுகாமில் இருக்கின்ற ஆயுத கிடங்கு, எறிகணை வீழ்ந்து வெடித்து எரிந்ததாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. கிடங்கு எரிந்ததாக கூறப்படுவதை உறுதி செய்த இராணுவ தரப்பில் பேசவல்ல ஒரு அதிகாரி, ஆனால் அதற்கான காரணம் என்னெவென்று உடனடியாக தெரியவில்லை என்றும் கூறினார்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் வெருகல் பகுதியிலும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தியதில் சுமார் 50 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாகவும் இளந்திரையன் கூறினார். தமது தரப்பில் இன்றைய மோதல்களில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெருகல் பகுதியில் பொதுமக்கள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதாகவும், எறிகணைகளும் அங்கு வீழ்ந்ததாகவும் அங்கிருந்து மட்டக்களப்பு வந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

மாவிலாறு பகுதியை பலப்படுத்தவே இன்று தாம் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் அத்துல ஜயவர்த்தன, ஆனால் தாம் பொதுமக்கள் இலக்குகள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதில்லை என்றும் கூறினார்.

அதேவேளை நேற்று சுமார் நான்காயிரம் குடும்பங்கள் வரை அகதிகளாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், இன்று அவ்வாறு ஏழாயிரம் குடும்பங்கள் வந்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். புண்ணியமூர்த்தி கூறினார். அதேவேளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு உதவிப்பொருட்களை அனுப்புவதிலும் சிரமங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லெபனானில் முன்னேறிச்செல்லும் இஸ்ரேல் டாங்கிப்படை தடுத்து நிறுத்த ஹிஸ்புல்லா ராக்கெட் வீசித்தாக்குதல்
Next post 80 வயது வரை செக்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன் என்கிறார் ஜானெட்