15 ஆயிரம் படையினருடன் தந்திரமாக விரிக்கப்பட்ட, ‘ஒபரேசன் லிபரேசன்’ இராணுவ வலை!! :அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பாகம் -87) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

Read Time:18 Minute, 10 Second

timthumbயாழ்-குடாநாட்டை எப்பாடுபட்டாவது தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டது அரசாங்கம்.

ஏனைய இயக்கங்கள் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தமையால் புலிகளும் ஈரோஸ் அமைப்பினனரும் மட்டமே இருந்தனர்.

எனவே-அதுதான் சரியான தருணம் என திட்டமிட்டார் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி.

யாழ்-குடாநாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைக்கு ‘ஒபரேசன் லிபரேசன்’ என்று பெயர் சூட்டியது அரசாங்கம்.

பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைல் இருந்து நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

பிரபாகரனும் அப்போது வல்வெட்டித்துறையில் தான் தங்கியிருந்தார். அத்தகவலும் புலனாய்வுத்துறை மூலமாக அரசாங்கத்துகு கிடைத்திருந்தது.

ஒபரேசன் லிபரேசன்’ நடவடிக்கையை திட்டமிடும்போது இஸ்ரேலிய மொசாட்டின் ஆலோசனையும் பெறப்பட்டது.

பாலஸ்தீன இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது பலஸ்தீன மக்களின் உயிரிழப்புக்கள் தொடர்பாக கவலையேபடாமல் படுகொலைத் தாக்குதல் நடத்துவது இஸ்ரேலின் பாணியாகும்.

‘ஒபரேசன் லிபரேசன்’ நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கிய மொசாட் அவ்வாறான ஒரு யோசனையை வழங்கியிருக்கும் என்பது ஊகிக்கக்கூடியதே.

யாழ்-குடாநாட்டிலுள்ள இராணுவ முகாம்களுக்கு நீண்ட தூர பீரங்கிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

புலிகளுக்கு போக்குக் காட்டுவதற்காக யாழ்-குடாநாட்டிலுள்ள சகல முகாம்களிலும் படை குவிக்கப்படுவது போல் காட்டப்பட்டது.

மே18

1987 மே 18ம் திகதி ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து படையினர் வடமேற்கு திசை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள்.

புலிகளின் அணிகளை அங்கு இழுப்பதற்கான ஒரு தந்திரோபாயமான நடவடிக்கையே அதுவாகும்.

புலிகளின் அணிகளை வெவ்வேறு திசைகளில் இழுத்துப் பலவீனமாக்கிவிட்டு, வடமராட்சி ஊடாக பிரதான நடவடிக்கையை மேற்கொள்வதுதான் தந்திரம்.

ஆனையிறவில் இருந்து முன்னேறிய படையினர் பாதைகளில் மரங்களைப் போட்டு தடை செய்திருந்தனர்.

இராணுவத்தினரின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதை அறியாத தனியார் பஸ் வண்டி ஒன்று பயணிகளோடு சென்று கொண்டிருந்தது.

பாதையின் குறுக்கே மரம் போடப்பட்டிருப்பதைக் கண்ட பஸ் சாரதியும், பயணிகளும் மரத்தை தூக்கி ஓரத்தில் போட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.

பஸ் சிறிது தூரம் சென்றதும் பாதையின் இருமருங்கிலும் பதுங்கி இருந்த இராணுவத்தினர் பஸ்ஸை நேக்கி சரமாரியாக சுட்டுத்தள்ளினார்கள்.

பஸ்ஸிலிருந்த பயணிகள் அபயக் குரல் எழுப்பினார்கள்.துப்பாக்கிப் பிரயோகம் நிறுத்தப்பட்டது.

பயணிகளில் பலர் படுகாயமடைந்திருந்தனர், பஸ்ஸில் பயணம்செய்தவர்களில் டாக்டர் ஒருவரும் இருந்தார்.

காயமடைந்தவர்களுக்கு உடணடியாக அவர் சிகிச்சை மேற்கொண்டதால் பயணிகளில் பலர் உயிர் பிழைத்துக் கொண்டார்கள்.

லங்கா சீமெந்து கம்பனி பொறியலாளரான ஜெகதீசனும் பயணிகளில் ஒருவர், துப்பாக்கிசூடு காரணமாக அவர் பலியானார்.

மே மாதம் 20ம் திகதி நாவற்குழி இராணுவ முகாமிலிருந்தும் நடவடிக்கைகள் ஆரம்பித்தன. முன்னேறே முயன்ற இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும்மோதல் இடம்பெற்றது.

பலாலியிலிருந்து படையினர் முன்னேற்றத்தை தடுப்பதில் புலிகளது மற்றுமொரு அணி ஈடுபட்டிருந்தது.

ராதாவுக்கு குறி

கட்டுவன் பகுதியில் புலிகளின் காவலரண்கள் இருந்தன. இராணுவத்தினரின் காவலரண்களுக்கும் புலிகளின் காவலரண்களுக்கும் இடையே தூரம் குறைவாகவே இருந்தது.

காவலரண்களில் இருந்த தமது உறுப்பினர்களை பார்வையிட சென்றார் யாழ் மாட்ட புலிகளின் தளபதி ராதா.

ராதாவின் நடமாட்டத்தை இராணுவக்காவலரணில் இருந்து தொலைநோக்கி மூலம் இராணுவத்தினர் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

புலிகளின் முதலாவது காவலரணில் இருந்து இரண்டாவது காவலரண் நோக்கி ராதா சென்று கொண்டிருந்த போது, இராணுவக்காவலரணில் இருந்து குறிவைக்கப்பட்டது.

புலிகளின் இரண்டாவது காவலரணை ராதா நெருங்கிக்கொண்டிருக்க, இராணுவக்காவலரணில் இருந்து வேட்டுத் தீர்க்கப்பட்டது.
பின் தலையில் குண்டுபட்டு விழுந்தார் ராதா.

இராணுவக் காவலரணை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி ராதாவைக் காப்பாற்ற விரைந்தனர் புலிகள். ஆனால்-ராதா குண்டடிபட்டவுடனே பலியாகியிருந்தார்.

புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு அதுவாகும்.

விக்ரர்

மன்னார் தளபதியாக இருந்த விக்ரர் பலியானபின்னர் மன்னார் தளபதியாக இருந்தவர் ராதா. கிட்டுமீதான தாக்குதலையடுத்து யாழ் மாவட்டத் தளபதியாக ராதாவை நியமித்தார் பிரபாகரன்.

கொழும்பில் வங்கியொன்றில் அதிகாரியாக பணியாற்றிய ராதா 1983 இனக்கலவரத்தின் காரணமாக யாழ் சென்று புலிகளோடு தன்னை இணைத்துக்கொண்டார்.

ஹரிச்சந்திர என்பதுதான் ராதாவின் சொந்தப்பெயர் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்.

இறுதி மரியாதை

யாழ்ப்பாணத்தில் சிவலிங்கப்புளியடியில் இருந்த ராதாவின் வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் சோகமே உருவாக இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.

ராதாவின் உடல்வைக்கப்பட்டிருந்த பேழையை புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா உட்பட முக்கிய பிரமுகர்கள் சுமந்து சென்றனர்.

வண்ணார்பண்ணையில் உள்ள கோம் பயன்மணல் மயானத்தில் ராதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராதாவின் இறுதிச் சடங்கில்தான் முதன் முதலாக ஆயுதம் தாங்கிய பெண் புலிகளை மக்கள் கண்டனர். ராதாரவின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பாக பெண்புலிகள் வானத்தை நோக்கி இறுதி மரியாதை வேட்டுக்களை தீர்த்தனர்.

பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. “பெண்களும் சோக்காச் சுடுகிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள்.

பெண்கள் சைக்கில் ஓடத் தொடங்கிய போதே வியப்போடு பார்த்தவர்களுக்க, பெண் புலிகள் ஆயுதங்களோடு தோன்றியதும்இ வேட்டுக்களைத் தீர்த்ததும் நீண்ட நாட்களாக பேசப்படக்கூடிய ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

லெப்டினன்ட் கேணல் ராதாவின் பின்னர் யாழ் மாவட்ட புலிகளின் தளபதியாக குமரப்பா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் மட்டக்களப்பு புலிகளின் தளபதியாக செயற்பட்டவர் குமரப்பா.

புலிகளான படையினர்

பலாலியிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் இடைக்காடுவரை சென்றபோது புலிகளும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

படையினரில் மூவர் பாதை தெரியாமல் தடுமாறி புலிகளிடம் மாட்டிக்கொண்டனர். மூவரையும் கைதுசெய்த புலிகள் அவர்களை அழைத்துச் சென்ற போது, ஹெலிகொப்டரிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறாது என்று கருதினார் புலிகளின் தாக்குதல் பிரிவுப் பொறுப்பாளர் கோணேஷ். எனவே பதுங்குநிலை எடுக்காமல் சென்று கொண்டிருந்தனர்.

ஆனால், ஹெலிகொப்டரிலிருந்து குண்டு வீசப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று இராணுவத்தினரும் பலியானார்கள். அவர்களோடு நின்று புலிகளின் லெப்டினன்ட் கோணேசும் பலியானார்.

மறுநாள் மே மாதம் 24ம் திகதி இலங்கை வானொலி பின்வருமாறு செய்தி வெளியிட்டது.

“நான்கு புலிகள் இடைக்காட்டில் கொல்லப்பட்டனர்”

மே மாதம் 25ம் திகதி வரை படையினரின் பிரதான இலக்கு எது? எந்தப் பாதை வழியாக படையினர் முன்னேறப்போகிறார்கள் என்பதனை புலிகள் திட்டவட்டமாக அறியவில்லை.

குறிப்பாக வடமராட்சியில் படைகள் முன்னேறக்கூடும் என்று புலிகள் எதிர்பார்க்கவில்லை.

ஆனையிறவில் இருந்து இயக்கச்சி, பளைப்பகுதிகளை நோக்கி படையினர் முன்னேறக்கூடும் அல்லது பலாலி இராணுவ தளத்திலிருந்து படையினர் முன்னேறக்கூடும் என்றே புலிகள் எதிர்பார்த்தனர்.

ஆனையிறவில் இருந்து முன்னேறும் இராணுவத்தினரை தடுத்து நிறுத்துமாறு ஈ.ரோஸ் இயக்கத்திடம் பொறுப்பை ஒப்படைத்தனர் புலிகள்.

யாழ் கோட்டை இராணுவ முகாம் பகுதியிலும் புலிகளின் அணி ஒன்று நிறுத்தப்பட்டடிருந்தது.

பலாலி இராணுவ முகாமிலிருந்து முன்னேறும் படையினரை எதிர்கொள்ளவும் புலிகளின் அணியொன்றும், ஈரோஸ் அணியொன்றும் தயார் நிலையில் காத்திருந்தது.

கிட்டு வந்தார்.

யாழ்-கோட்டை முகாமிலிருந்து சரமாரியான ஷெல் வீச்சுக்கள் நடைபெற்றன.

கோட்டை முகாடை சமீபமாகவுள்ள புலிகளின் காவலரண் பகுதிக்கு காரில் சென்றார் கிட்டு. காரில் இருந்தபடியே கோட்டை முகாமை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.

கிட்டுவைக் கண்டதும் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு உற்சாகம் வந்துவிட்டது.

“கிட்டண்ணா வந்து விட்டார் அடியுங்கோ” என்று உற்சாகமாகச் சொல்லியபடியே கோட்டை முகாமை நோக்கி புலிகளும் மோட்டார் தாக்குதல் நடத்தினார்கள்.

யாழ்-குடாநாடெங்கும் ஷெல் வீச்சுக்களாலும், குண்டு வீச்சுக்களாலும் ஒரே பதட்டம். எங்கும் பீதிநிலவியது.

‘ஏனைய இயக்கங்களை தடை செய்யாமல் விட்டிருந்தால், அவர்களும் நின்றிருப்பார்களே’ என்று மக்கள் புலிகள் மீதும் குற்றம்சாட்டத் தொடங்கினார்கள்.

அச்சுவேலிப்ப பகுதியில் பதுங்குகுழி ஒன்றுக்குள் இந்த மக்கள் வெளியே கொண்டுவரப்பட்டு இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 9பேர் அதில் பலியானார்கள்.

மே 23ம் திகதி பலாலி இராணுவ முகாமில் இருந்து முன்னேறிய இராணுவத்தினர் பின்வாங்கிச் செல்வது போல போக்குக் காட்டினார்கள்.

தமது தாக்குதலால் படையினர் பின்வாங்கிச் செல்வதாக புலிகள் நினைத்துக் கொண்டிருக்க தமது பிரதான நடவடிக்கையை ஆரம்பிப்பதுதான் படைத்தரப்பின் தந்திரம்.

15 ஆயிரம் படைகள்

மே 18ம் திகதி முதல் மே 25ம் திகதி வரை படையினர் தந்திர நாடகம் தொடர்ந்தது.

புலிகளை களைப்படையச் செய்வதும், படையினரின் பிரதான முன்னேற்றப் பாதையில் இருந்து புலிகளை வேறு திசைகளுக்கு இழுத்துச் செல்வதும் தான் படையினரின் திட்டம்.

உண்மையில் மிகவும் கச்சிதமான திட்டம்தான். இத்திட்டத்துக்கு மொசாட்டின் ஆலோசனை இருந்தபோதும், நேரடியாக படைகளை வழி நடத்தியவர்கள் மூன்று பேர்.

அப்போது பிரிகேடியர் தரத்தில் இருந்த டென்சில் கொப்பேகடுவ, பிரிகேடியர் ஜெரி டி சில்வா (முன்னால் இராணுவத்த தளபதியாக இருந்தவர்), கேணல் விஜயவிமலரத்ன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக அப்போதிருந்தவர் ஜெனரல் ஆட்டிகல. முப்படைத்தளபதியாக இருந்தவர் ஜெனரல் சிறில் ரணதுங்கா. (இவர் தான் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் இருந்தவர்).

மிகவும் இரகசியமாகவும், கச்சிதமாகவும் ஒரு இராணுவ வலை விரிக்கப்பட்டிருப்பதை மே 25ம் திகதி விடியும் வரை புலிகள் அறிந்திருக்கவில்லை.

உண்மையில் வடபுலப் போர் வரலாற்றில் அதற்கு முன்னரும், இன்று வரையும் காணாத அருமையான யுத்த தந்திரம் அது.

வடமராட்சியில் இருந்த பிரபாகரனுக்கும், புலிகள் அணிகளுக்கும் தமக்கு மிக சமீபமாகவுள்ள தொண்டமானாறு இராணுவமுகாமில் ஒரு பெரும் படை தயாராகிக்கொண்டிருப்பது கடைசி நிமிடம் வரை தெரியாது.

கிட்டத்தட்ட 15 ஆயிரம் இராணுவத்தினரைக் கொண்ட படையணி தொண்டமானாறு இராணுவ முகாமில் பூரண தயாரிப்போடு வடமராட்சியை இரவோடு இரவாக கைப்பற்றும் திட்டத்தோடு ஆயத்தமானது.

பிரபாகரன் வல்வெட்டித்துறையில்தான் தங்கியிருக்கிறார் என்பதும், தங்கியிருந்த வீடு தொடர்பான தகவலும் டென்சில் கொப்பேகடுவவின் கையில் இருந்தது.

பிரபாகரனை வல்வெட்டித்துறையில் இருந்து வெளியேறாமல் சுற்றிவளைத்து பிடித்துவிட வேண்டும் என்பதும் பிரதான குறி.

மே 26ம் திகதி இரவு

தொண்டமானாறு முகாமில் இருந்து நான்கு முனைகளில் படையினர் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையில் இறக்கப்பட்டனர்.

வல்வெட்டித்துறையில் உள்ள ஒரு வீட்டில் பிரபாகரனுக்கு தன்னை நோக்கி படைநகர்வது அப்போது தெரிந்திருக்கவில்லை.

தொண்டமானாறு முகாமிற்கு சமீபகமாகவுள்ள காவலரண்களில் விரல்விட்டு எண்ணத்தக்க புலிகளே காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

ஆயிரமாயிரம் படையினர் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

கோயில் சந்தை என்ற பகுதியில் ஈரோஸ் இயக்க அலுவலகம் ஒன்று இருந்தது. உள்ளே ஈரோஸ் உறுப்பினர்கள் தூக்கத்தில் இருந்தனர்.

பருத்தித்துறைக்குப் பொறுப்பான ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் முரளி தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பப்பட்டார். தூக்க கலக்கத்தோடு கண்ணைத் திறந்து பார்க்கிறார் முரளி.

துப்பாக்கிகளை நீட்டிபடியே பச்சை உடைகளோடு இராணுவத்தினர் அவரையே பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.

(தொடர்ந்து வரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று முதல் மின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு…!!
Next post முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?