வட இலங்கையில் முகமாலைப் பகுதியில் மோதல்

Read Time:5 Minute, 23 Second

Jaffna.2.jpgஇலங்கையின் வடக்கே ஏ 9 வீதியின் முகமாலை சோதனைச்சாவடிக்கு அருகில் நாகர்கோவில் பிரதேசத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புதிய மோதல்கள் நடைபெற்று வருவதாக வடபகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பளை பிரதேசத்தை நோக்கி படையினர் மோட்டார் மற்றும் ஷெல் தாக்குதல்களையும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்தும் பளை பகுதியை நோக்கி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், யாழ்ப்பாணம் பிரதேசத்தில் அதிகாரபூர்வமற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இதனால் பளை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் கிளிநொச்சி நகரப்பகுதிக்கு இடம்பெயரத் தொடங்கியிருப்பதாக கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகர்கோவிலுக்கு ஓரளவு சமீபமான வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் இன்று மாலை 5.45 மணி தொடக்கம் தொடர்ச்சியாக பீரங்கித் தாக்குதல் நடத்தப்படுவதற்கு அறிகுறியாக வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறான வெடிச்சத்தங்கள் இடைக்கிடை கேட்பதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அது சுமார் அரை மணித்தியாலத்தில் நின்று விடுவதாகவும், வழமைக்கு மாறாக இன்று தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதானது அப்பகுதியில் மோதல்கள் இடம்பெறுவது போலவே தெரிகின்றது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அரச படைகள் இன்று மாலை 5.45 மணி முதல் பளை பகுதியை நோக்கி புதிய இராணுவ முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினர் முகமாலைப் பகுதியில் வலிந்து தாக்குதலை மேற்கொண்டு, முன்னகர முயல்வதாக விடுதலைப்புலிகள் கூறும் குற்றச்சாட்டினை மறுக்கும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல மேஜர் உபாலி ராஜபக்ஸ, இது விடுதலைப்புலிகளின் பொய்ப் பிரச்சாரம் என்றும் கூறினார்.

ஆனால் நாகர் கோயில் பகுதியில் விடுதலைப் புலிகளே தமது பகுதி மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

படையினர் வலிந்து மேற்கொண்டுள்ள முன்னேற்ற நடவடிக்கையை முறியடிப்பதற்காக தமது படையணிகள் பளை பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தென்மராட்சியின் முக்கிய இராணுவ தளங்கள் அமைந்துள்ள எழுதுமட்டுவாள், கிளாலி, புலோப்பளை, உசன், கொடிகாமம், கச்சாய் போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்களுக்கு அருகில் இருக்க வேண்டாம் என்று விடுதலைப் புலிகள் தமது வானொலி ஊடாக அறிவித்துள்ளனர். பளை பகுதியில் தொடர்ச்சியாக பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக கிளிநொச்சி நகரப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஷெல் தாக்குதல்களில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் பளை பகுதியிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்துள்ளதாக கிளிநொச்சி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பளை பகுதியில் இடம்பெறுகின்ற ஷெல் தாக்குதல்கள் காரணமாக பளையில் உள்ள மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவரும் கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியதுறையினர் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விமானங்களை தகர்க்க அல் காய்தா சதி?
Next post பிரதமர் கொய்சுமி போர்க்கோவிலுக்கு செல்லக்கூடாது: ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை