மீண்டும் பூச்சியத்திலிருந்து…!!

Read Time:19 Minute, 14 Second

article_1475552962-untitleஇலங்கையில் இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடுகின்ற முயற்சிகள் மீண்டும் பூச்சியத்திலிருந்து தொடங்கியிருக்கின்றன. சமாதானத்தை விரும்புகின்ற தரப்பினருக்கு இது பெரும் பின்னடைவாகும். குறிப்பாக, தமிழர் சமூகத்துக்கு இந்த நிலைவரமானது மாபெரும் பின்னடைவு. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பினை இழந்து விட்டு, இப்போது 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வடக்கு – கிழக்கை இணையுங்கள் என்று கோரிக்கை விடும் தமிழர் சமூகம், காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பங்களை தவற விட்ட கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

காரணங்களும் காரியங்களும்

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைவினைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அர்ப்பணிப்புகள், அதனை விரும்பிய தரப்பினரால் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, இந்த விவகாரத்தில் ராஜதந்திர அணுகுமுறையோடு விடுதலைப் புலிகள் செயற்படவில்லை. ஆயுதப் பலத்தினால் வடக்கு – கிழக்கு இணைந்த இராஜியத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிற புலிகளின் அதீத நம்பிக்கை அதற்குக் காரணமாக அமைந்தது. ஆகக்குறைந்தது வடக்கு – கிழக்கு இணைப்பினைத் தக்க வைத்துக் கொள்வது தொடர்பில், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் புலிகள் நடந்து கொள்ளவில்லை. அதனால்த்தான் வடக்கு – கிழக்கு இணைப்பு என்கிற விவகாரம், 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் – ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்கிறது.

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, இப்போது கல்லில் நாருரிக்கும் கதையாக மாறியுள்ளது. கிழக்கிலுள்ள முஸ்லிம்களும் சிங்களவர்களும் வடக்குடன் கிழக்கு இணைவதை கடுமையாக எதிர்க்கும் மனநிலையில் உள்ளார்கள். இந்த நிலையில் இது தொடர்பில் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பொன்று கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டால், ஆகக் குறைந்தது 60 வீதமான மக்கள் – இணைப்புக்கு எதிராக வாக்களிக்கும் சாத்தியம் உள்ளது. அதனால், பொதுசன அபிப்பிராயமொன்றின் ஊடாக, வடக்கு – கிழக்கை இணைப்பதென்பது சாத்தியமான விடயமாகத் தெரியவில்லை.

நிலைப்பாடுகள்

எவ்வாறாயினும், வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில், கிட்டத்தட்ட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்ட கருத்தில் உள்ளன.

கிழக்கு மாகாணம் தற்போது இருப்பதுபோல் தனித்தே இருக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா மிகவும் உறுதிபடத் தெரிவித்து விட்டார். குறித்த இரண்டு மாகாணங்களும் இணைந்திருந்தபோது, வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்க வேண்டும் என, கிழக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து உரத்து எழுந்த அரசியல் குரல் அதாவுல்லாவினுடையது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தே இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார். “இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ், 1987ஆம் ஆண்டு வடக்கு – கிழக்கு நிபந்தனையுடன் இணைக்கப்பட்ட போது, கிழக்கு மாகாணத்தவரிடமோ, வடக்கு – கிழக்கில் வாழும் முஸ்லிம்களிடமோ எந்தக் கருத்தும் பெறப்படவில்லை. அதற்கு அந்த மக்கள் அங்கீகாரம் வழங்கவுமில்லை. பின்னர் நீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து வடக்கும் கிழக்கும் வேறாகப் பிரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தற்போதைய ஏற்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுதியான நிலைப்பாடாகும்” என்று, சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் ரிஷாட் கூறியிருந்தார்.

ஆனால், வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இந்த விவகாரத்தில் நழுவல் போக்கினை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறது.

இவ்வாறானதொரு நிலையில், வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கு ஆதரவளிப்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்து விட்டார் என்கிற கதையொன்று அரசியல் அரங்கில் பரவத் தொடங்கியது. இந்தக் கதை தொடர்பில் கூட, எதையும் பேசாமல் கொஞ்சக் காலம் மௌனம் காத்து வந்த ஹக்கீம், கடந்த வியாழக்கிழமையன்று வாய் திறந்தார். “வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் சம்மதம் தெரிவித்து விட்டது என்ற பாணியில் பல விசயங்கள் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் எந்த உண்மையும் கிடையாது” என்று, கண்டியில் வைத்து ஹக்கீம் கூறினார்.

இதேவேளை, “எல்லாத் தரப்பினரும் மிகுந்த விட்டுக்கொடுப்போடும், புரிந்துணர்வோடும் விடயங்களைச் சாதிக்க வேண்டியிருக்கிறது. இந்த நாடு பிரிக்கப்பட முடியாதது என்பதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருக்கிறோம். அதிகூடிய அதிகாரப் பகிர்வினை இயலச் செய்ய வேண்டும் என்பதிலும், 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்பதிலும் பூரண உடன்பாடு உள்ளது” என்றும் அதன்போது ஹக்கீம் விபரித்தார்.

எது எவ்வாறாயினும், தமிழர் சமூகத்தின் கோரிக்கையான இணைந்த வடக்கு – கிழக்கு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்தோ, இனப் பிரச்சினைக்காக தீர்வினை எட்டுவதில் முஸ்லிம் காங்கிரஸின் அணுகுமுறை பற்றியோ அங்கு ஹக்கீம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பேணிவரும் மௌனம் குறித்து, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் பேசக் கிடைத்தது. அதன்போது அந்த நபர் சில விடயங்களைக் கூறினார். “வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது எப்படியும் நடக்கப்போகிற காரியமல்ல. எனவே, நடக்காத ஒரு விடயம் குறித்து கருத்துக்களைக் கூறி, பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு மு.கா தலைமை விரும்பவில்லை. அதனால்தான் இந்த மௌனம்” என்று அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.

பெருந்தேசியத்தின் பயம்

எவ்வாறாயினும், வடக்குடன் கிழக்கினை இணைப்பது தொடர்பில் சிங்களப் பெருந் தேசியக் கட்சிகளும் பச்சைக்கொடி காட்டுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த விடயத்தினைச் சொல்வதற்கு பெரியதாக ஆராய்ச்சிகள் தேவையில்லை. சிங்களத் தலைவர்களின் கடந்த கால நடத்தைகள், தமது சமூகத்தின் வாக்கு வங்கிகளைத் தமது கட்சி இழந்து விடக் கூடாது என்கிற எச்சரிக்கை மனப்பாங்கு மற்றும் சிங்கள சமூகத்தில் தமது மதிப்பை இழந்து விடுவோமோ என்கிற பயம் உள்ளிட்ட பல காரணங்களால், வடக்கு – கிழக்கு இணைப்புக்குத் துணைபோக சிங்களத் தலைவர்கள் துணிய மாட்டார்கள் என்பது பரவலான அபிப்பிராயமாக உள்ளது.

இதன் காரணமாக, வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிரான தமது மனநிலையினை, சிங்களப் பெருந்தேசியக் கட்சிகளின் தலைவர்கள், தமது தரப்பிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் வழியாக வெளிப்படுத்துகின்றார்களோ என்கிற ஐயப்பாடும் விமர்சனங்களும் அரசியல் அரங்கில் உள்ளன. இதற்கு ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பில் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்த கருத்து குறிப்பிடத்தக்கதொரு உதாரணமாகும்.

“கிழக்கு மாகாணத்தை வடக்குடன் பலவந்தமாக இணைக்க முடியாது. அவ்வாறு இணைப்பதாயின் கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தினை அறிந்து கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும்” என்று முஜிபுர் ரஹ்மான் கூறியிருக்கின்றார். “எவ்வாறயினும் வடக்கு – கிழக்கு இணைப்பினை கிழக்கு மாகாண மக்கள் விரும்ப மாட்டார்கள்” என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே முஜிபுர் ரஹ்மான் இந்தக் கருத்தினை வெளியிட்டிருந்தார். குறித்த சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது என்பதுதான் இங்கு கவனிப்புக்குரிய விடயமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்து அல்லாத, அல்லது அந்தக் கட்சியின் கருத்துக்கு முரணானதொரு விடயத்தினை, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சியின் தலைமையகத்தில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவிக்க முடியாது. அந்தக் கோணத்தில் பார்த்தால், வடக்கு – கிழக்கு இணைவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. ஆனால், அதனை நேரடியாக அந்தக் கட்சியின் தலைமை நிறைவேற்றாது. வடக்குடன் கிழக்கு இணைய வேண்டுமானால் கிழக்கு மாகாண மக்களின் ஆதரவைக் கோர வேண்டும் என்று அந்தக் கட்சி கூறும். அதற்காக, கிழக்கு மாகாணத்தில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்த வேண்டும் என, ஏதோவொரு வழியினூடாக அந்தக் கட்சி வலியுறுத்தும். அப்படி நடைபெற்றால், கிழக்கு மக்கள் அதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதை ஐ.தே.கட்சி தலைமை மிக நன்கு அறியும்.

இதேபோன்று, மறுபுறத்திலுள்ள ஜனாதிபதி தலைமை வகிக்கும் ஐ.ம.சு.கூட்டமைப்பும் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஆதரவளிப்பதென்பது சாத்தியங்கள் குறைந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா ‘சுதந்திர கிழக்கு’ எனும் பெயரில், வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக தொடர் பிரசாரங்களை நடத்துவதன் பின்னணியில் ஜனாதிபதியின் ஆசீர்வாதம் உள்ளதாக ஊடகங்களில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளன. மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்பில், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி பங்காளியாக இணைந்த கையோடு, ‘சுதந்திர கிழக்கு’ என்கிற தொடர் பிரசாரத்தை அதாவுல்லா மேற்கொள்ளத் தொடங்கியமை இந்தச் சந்தேகம் உருவாகக் காரணமாகியது. அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டினை தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவுக்கு, அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது என்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கதாகும்.

இல்லாத உறுதி

இவ்வாறானதொரு நிலையில், “வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமாக இருந்தால், அரசியல் ரீதியாக நாங்கள் உறுதி செய்த விடயங்களில் எவ்வித இழப்பீடும் இல்லாமல், வடக்கு – கிழக்கு மக்கள் அனைவரும் அனுபவிக்கக் கூடிய அரசியல் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் சம்மாந்துறையில் நடைபெற்ற சிறுவர் நிகழ்வு ஒன்றில் வைத்துத் தெரிவித்துள்ளார்.

சிலவேளை, மு.கா ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் வாழும் காலத்தில், அவர் முன்வைத்த தனியலகுக் கோரிக்கையினை மனதில் வைத்துக் கொண்டு, மன்சூர் இப்படிப் பேசினாரோ தெரியவில்லை. ‘இணைந்த வடக்கு – கிழக்கில், முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அதிகார அலகு’ என்கிற அஷ்ரப்பின் கோரிக்கையானது, அவர் வாழும் காலத்திலேயே விமர்சனங்களுக்குள்ளானது. இப்போது, அந்தக் கோரிக்கை காலாவதியடைந்து விட்டது என்கிற வாதங்கள் – முஸ்லிம் சமூகத்துக்குள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சொல்லாத பொறிமுறை

இதேவேளை, வடக்கு – கிழக்கு இணைப்பானது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பூரண சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என்று தாம் கூறிவருவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளமை இங்கு கவனிப்புக்குரியது. “2010ஆம் ஆண்டு தொடக்கம் நாங்கள் முன்வைத்து வருகின்ற தேர்தல் விஞ்ஞாபனங்களில் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென தெட்டத் தெளிவாகக் கூறி வருவதுடன், அந்த இணைப்பானது, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பூரண சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறோம்” என சுமந்திரன் விபரித்திருக்கின்றார்.

ஆனாலும், மேற்படி இணைப்புத் தொடர்பில் – கிழக்கு முஸ்லிம்களின் பூரண சம்மதத்தினை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது பற்றியோ, அதைத் தெரிந்து கொள்வதற்கான பொறிமுறை என்ன என்பது குறித்தோ சுமந்திரன் பேசவில்லை. வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் கிழக்கு முஸ்லிம்களின் விருப்பத்தினை அறிந்து கொள்வதாயின் அங்கு ஒரு பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதுவதே மிகப் பொருத்தமான வழிமுறையாக இருக்கும். ஆனால், அதனை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து தெரியவில்லை.

எவ்வாறாயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடுகின்ற முயற்சிகள் மீண்டும் பூச்சியத்தினை வந்தடைந்தமைக்கான காரணங்கள் குறித்து தற்போதைய காலகட்டத்தில் ஆராயப்படுதல் அவசியமாகும். ஒவ்வொரு தரப்பும் தம்மை சுய விமர்சனம் செய்து கொள்வதனூடாக, இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடுகின்ற முயற்சிகளில் தாம் விட்ட தவறுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். தவறுகளை சுயமாக அடையாளம் காண்பதற்கும், பின்னர் அதனை ஏற்றுக் கொள்வதற்கும் ‘வேறொரு’ மனம் வேண்டும்.

அந்த மனத்தினை நாம் பெற்றுக் கொள்ளாதவரை, பூச்சியத்திலிருந்து நகர முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கான மச்ச பலன்கள்…!!
Next post நயன்தாராதான் என் பொண்டாட்டி – விறகுவெட்டி சொன்ன பகீர் தகவல்.!!