By 10 October 2016 0 Comments

ஏமன் நாட்டில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை: 140–க்கும் மேற்பட்டோர் பலி…!!

201610100420420358_thousands-march-in-yemen-after-more-than-140-killed-in_secvpfஏமன் நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

சவுதி கூட்டுப்படைகளின் தாக்குதலின்போது தொடர்ந்து அப்பாவி மக்களும் பலியாகி வருவதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 131 பேரும், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் 106 பேரும் கொன்று குவிக்கப்பட்டது, சர்வதேச அளவில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் சனாவில் சமூக நலக்கூடம் ஒன்றில், ஹவுதி அமைப்பினர் நடத்தி வருகிற அரசின் உள்துறை மந்திரியாக உள்ள கலால் அல் ராவிஷானின் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது சவுதி கூட்டுப்படையினர் அங்கு குண்டுமழை பொழிந்தனர். குண்டுகள் தொடர்ந்து விழுந்தபோது, அங்கிருந்தவர்கள் ஓலமிட்டனர். சவுதி கூட்டுப்படையினர் நடத்திய இந்த வான்தாக்குதலில் 140–க்கும் மேற்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 520–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சமீப காலத்தில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என கூறப்படுகிறது. இதுபற்றி ஹவுதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம் கருத்து கூறும்போது, ‘‘இது இனப்படுகொலை’’ என்று குறிப்பிட்டார்.
சவுதியின் நட்பு நாடான அமெரிக்கா கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியா கூட்டணிக்கு அளித்து வருகிற ஆதரவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யத்தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுபற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நெட் பிரைஸ் கருத்து தெரிவிக்கையில், ‘‘சவுதி கூட்டுப்படைகளுக்கு அமெரிக்கா வழங்கி வருகிற ராணுவ ஒத்துழைப்பு என்பது வெற்று காசோலை போன்றதல்ல. கூட்டுப்படைகளுக்கு அளித்து வருகிற ஆதரவு பரிசீலிக்கப்படும்’’ என்று கூறினார்.

ஏமனில் ஐ.நா. சபையின் நிவாரண ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிற ஜாமி மெக்கோல்ட்ரிக் இந்த தாக்குதல் பற்றி வேதனை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘நிவாரண பணியாளர்கள் இந்த தாக்குதலை அறிந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய சர்வதேச நாடுகள் நிர்ப்பந்திக்க வேண்டும். ஏமனில் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

இந்த நிலையில் சனாவில் நடந்துள்ளதாக கூறப்படுகிற இந்த தாக்குதல் பற்றி அமெரிக்க வல்லுனர்களுடன் இணைந்து விசாரணை நடத்தப்படும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதுபற்றி சவுதி கூட்டுப்படையின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஏமனில் உள்ள கூட்டு நிகழ்வுகள் அளவீடு குழுவினருடனும், அமெரிக்க வல்லுனர்களுடனும் சேர்ந்து கூட்டுப்படைகள் உடனடியாக விசாரணை நடத்தும்.

சனாவில் நடந்துள்ள குண்டுவீச்சு மிகவும் வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. ஏற்கனவே மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளிலும், மக்கள் கூடுமிடங்களிலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதை இப்போதும் உறுதி செய்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam