By 11 October 2016 0 Comments

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை: தமிழக அரசியலில் புதிய வியூகங்கள்….!! கட்டுரை

article_1476074526-kasinathதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரை தமிழக அரசியல் களம் வதந்திகளாலும் செய்திக்குறிப்புகளாலும் பரபரப்பாகி வருகிறது. “வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் சார்பில் எச்சரிக்கை விடுக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. அ.தி.மு.க தொண்டர்களும் முன்னணிப் பிரமுகர்களும் அமைச்சர்களும் சென்னை க்ரீம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையை முற்றுகையிட்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா அருகிலிருந்து மருத்துவச் சிகிச்சைகளை சசிகலா நடராஜன் கவனித்து வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட சில அமைச்சர்கள், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட வேறு சில அமைச்சர்கள் என்று முகாமிட்டுள்ளார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் பிரதமர் நரேந்திரமோடி “விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும்” என்று வாழ்த்துச் செய்தி அனுப்பினார். எதிரும் புதிருமாக அரசியல் செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளுக்குள்ளேயே இந்த விடயத்தில் அரசியல் நாகரீகம் துளிர் விட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இப்போது தி.மு.கவின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலினும் “ஜெயலலிதா நலம் பெற்று திரும்ப வேண்டும்” என்று வாழ்த்தினார்கள். ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சி தலைவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் விரைவில் குணம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து வழங்கினார்கள். தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை முதலமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவித்து வருகிறது.

முதலில் ‘சில நாட்களில் வீடு திரும்புவார்’ என்று கூறிய அப்பல்லோ மருத்துமனை, அடுத்து ‘மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் மேலும் தங்கியிருக்க வேண்டும்’ என்று பத்திரிகைக் குறிப்பு வெளியிட்டது. இந்நிலையில் மாநில ஆளுனர் பொறுப்பை வகிக்கும் வித்யாசகர் ராவ் ஒக்டோபர் முதலாம் திகதி முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். பிறகு அவர், ‘முதல்வர் குணம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி’ என்று செய்திக் குறிப்பு வெளியிட்டார். லண்டனிலிருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜோன் பெல் வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். பிறகுதான் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் என்று செய்திகள் வரத் தொடங்கின.

ஆளுநர், மருத்துவமனைக்கு வந்து பார்த்து விட்டுச் சென்ற பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துமனையிலிருந்து முக்கிய மருத்துவர்கள் சென்னை வந்தனர். முதல் ‘ரவுண்ட்’ சிகிச்சை அளித்து விட்டு லண்டன் திரும்பிய ரிச்சர்ட் ஜோன் பெல்லும் திரும்பி வந்தார். இவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசீலித்த பிறகு 7.10.2016 அன்று அப்பல்லோ மருத்துமனை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில் ‘முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆனால், சிகிச்சைக்காக அவர் மருத்துமனையில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சில நாட்களில் திரும்புவார்’ என்பது இப்போது ‘நீண்ட நாட்கள் இருக்க வேண்டும்’ என்று மாறியிருப்பது முதலமைச்சர் விரைவில் உடல் நலம் பெற்றுத் திரும்பி வர வேண்டும் என நினைத்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி அப்பல்லோ மருத்துமனைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரித்து விட்டுச் சென்றிருக்கிறார். ஆரம்பத்தில் அப்பல்லோ மருத்துமனையில் இருந்த கெடுபிடிகளும் தளர்த்தப்பட்டுள்ளது. ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து முதல்வரின் சிகிச்சையை மட்டுமின்றி, அராங்கத்தின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்கள். “முதல்வரின் உடல் நிலை எப்படியிருக்கிறது” என்பது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை, இது “விளம்பரத்துக்காக போடப்பட்ட மனு” என்று கூறிச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் பா.ஜ.கவின் டாக்டர் சுப்ரமண்யசாமி, ‘தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியிருக்கிறார். ராகுல் காந்தி சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்த தினத்தன்று இக்கடிதத்தை சுப்ரமண்யசாமி இந்திய உள்துறை அமைச்சருக்கு எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதைப் பொறுத்து தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும்.

முதலமைச்சரின் உடல்நிலை ஒரு புறமிருக்க அவர் மருத்துமனையில் இருப்பதால் காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை சிக்கலாகியிருக்கிறது. “காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், திடீரென்று அந்த வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்பு கூறி விட்டது. இதனால் போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்துள்ளன. அதிமுகவில் உள்ள 50 எம்.பிக்களும் காவிரி பற்றி முறையிட பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்க முயற்சித்து அதுவும் நிறைவேறவில்லை. இதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் இன்று நடத்த முடியாமல் போய் விட்டது. உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று முன்னேற்பாடுகள் நிகழ்ந்த நேரத்தில் திடீரென்று தி.மு.க தொடுத்த வழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. இதுபற்றி அப்பல்லோ மருத்துமனையில் முகாமிட்டிருக்கும் ஒரு முன்னாள் அமைச்சர், “முதல்வர் மருத்துவமனையில் இல்லாமல் இருந்திருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திருக்கும்; உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்கும் அளவுக்கு சூழ்நிலை செல்ல அனுமதித்து இருக்க மாட்டார்” என்று கூறி வருத்தப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் இப்போது அ.தி.மு.கவின் நிகழ்காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் சோதனை ஓட்டத்தில் வைத்திருக்கிறது. இதனால்த்தான் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியே அப்பல்லோ மருத்துமனைக்கு வந்து பார்த்து விட்டுச் சென்றுள்ளார். அதேநேரத்தில் இக்கட்டுரை எழுதும் வரை மத்திய பா.ஜ.க அமைச்சர்கள் (தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தவிர) யாரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க வரவில்லை; அதேபோல் பிரதமர் நரேந்திரமோடியும் வரவில்லை. ஒரு வேளை பாகிஸ்தானுடன் ஏற்பட அசாதரணமான சூழல் பிரதமரின் சென்னைப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தாலும், ராகுல் காந்தி வந்து விட்டுச் சென்றுள்ளதால் இனிவரும் நாட்களில் பிரதமர் நரேந்திரமோடியும் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூடும். அதேநேரத்தில் இந்தச் சந்திப்புகளுக்கு அரசியல் பின்னணி இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.

பல தேர்தல்களாக தமிழக அரசியலில் அ.தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அமையவில்லை. குறிப்பாக 2001 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏறக்குறைய 15 வருடங்கள் அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் இல்லை. சோனியா காந்திக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டது. அதற்கு மேலும் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.கவிற்கோ காங்கிரஸ் போன்ற கட்சியின் கூட்டணி தேவையில்லை என்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்ட பிறகு அக்கட்சிக்கு தமிழகத்தில் வாக்கும் இல்லை; வாக்கு வங்கிக்கும் தலைவர்களும் இல்லை. அதனால் நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் போதிய இடங்களைப் பெறமுடியவில்லை. அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக வந்திருக்கும் திருநாவுக்கரசர் அ.தி.மு.கவிலிருந்து வந்தவர்.

அ.தி.மு.க மீது அதிக விசுவாசம் உள்ளவர். முதல்வர் ஜெயலலிதா நலத்துடன் திரும்பி வர வேண்டும் என்று திரும்பத் திரும்ப அவர் அளித்த பேட்டிகளே அதற்கு சாட்சியமாக இருக்கிறன. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி விசாரிக்க பிரதமர் நரேந்திரமோடி வரவில்லை என்பதை காரணமாக வைத்து மீண்டும் அ.தி.மு.க- காங்கிரஸ் உறவை மீட்டு எடுக்க முடியுமா என்று யோசிக்கிறார் ராகுல் காந்தி. அதன் தொடக்கம்தான் ராகுல் காந்தியின் அப்பல்லோ மருத்துமனை ‘விஸிட்’.

இதை பா.ஜ.க உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா மருத்துமனையில் இருக்கின்ற இந்த நேரத்தில் காங்கிரஸை விட அ.தி.மு.கவுக்கு பா.ஜ.கதான் மிகவும் முக்கியம். ஏனென்றால் அக்கட்சிதான் மத்தியில் ஆட்சியிலிருக்கிறது. ஆளுனர் மூலம் அ.தி.மு.க ஆட்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்றாலும் அது மத்திய அரசாங்கத்தினால்தான் முடியும். ஆகவே ‘ராகுல் விஸிட்’ பற்றி பா.ஜ.க அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், விரைவில் பிரதமர் நரேந்திரமோடியே கூட சென்னைக்கு வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து உடல் நலம் விசாரிக்கலாம்.

இந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் 89 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. எது எப்படியிருந்தாலும் முதலமைச்சரின் உடல்நிலை தமிழக அரசியலில் புதுவிதமான வியூகங்களுக்கு வித்திட்டுள்ளது. முதல்வர் உடல் நலம் சீராகி வீடு திரும்புவதும், அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் காலத்தில் மாநிலத்தில் நடக்கும் அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக திறமையும் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களுக்கு விதை போடும்!Post a Comment

Protected by WP Anti Spam