சாரதியும் வாகனமும் தவறுகளும்…!!

Read Time:19 Minute, 41 Second

article_1476160263-untit“அசிங்கமானதும் முட்டாள்தனமானதுமான விருப்பு வாக்கு முறைமையினால், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மற்றும் துமிந்த சில்வா ஆகிய இருவரையும் நாம் இழந்து விட்டோம்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்த பண்டார, கடந்த மாதம் தெரிவித்திருந்த கருத்தினைப் பதிவுசெய்து கொண்டு, இந்தப் பத்தியினைத் தொடங்குவது பொருத்தமானதாகும்.

நாட்டில் நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமை தொடர்பில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை காரணமாக, புதியதொரு தேர்தல் முறையினை நோக்கி நகர வேண்டிய தேவை எழுந்துள்ளது. விகிதாசாரத் தேர்தல் முறைமை அறிமுகமாவதற்கு முன்னர், இலங்கையில் காணப்பட்ட தொகுதிவாரி அல்லது அறுதிப் பெரும்பான்மைத் தேர்தல் முறைமையினை – மீளவும் நடைமுறைப்படுத்தும் வகையில், தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படவுள்ளது. நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமையில் காணப்படும் விருப்பு வாக்களிக்கும் செயற்பாட்டினை ஒழித்துக்கட்டுவது, தேர்தல் மறுசீரமைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

தற்போதுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமையானது 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், 1989 ஆம் ஆண்டுதான், முதன்முதலாக விகிதாசாரத் தேர்தலொன்று நாட்டில் நடைபெற்றது. தொகுதிவாரித் தேர்தல்களின் போது – கட்சிகளுக்கிடையில் இருந்து வந்த போட்டித் தன்மையானது, விருப்பு வாக்கு முறைமையின் காரணமாக விஸ்வரூபமெடுத்தது. ஒரே கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் பாரிய போட்டியினையும் சண்டை – சச்சரவினையும் விருப்பு வாக்கு முறைமை ஏற்படுத்தியது. ஐ.ம.சு.கூட்டமைப்பினைச் சேர்ந்த பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர மற்றும் துமிந்த சில்வா ஆகிய இருவரும் மோதிக்கொள்வதற்கு, மேற்படி விருப்பு வாக்கு தேர்தல் முறைமையே அடிப்படைக் காரணமாக இருந்தது என்பதுதான் பெரும்பான்மையோரின் கருத்தாகும். உண்மையும் அதுவாகவே உள்ளது.

ஆனாலும், விகிதாசாரத் தேர்தல் முறைமையானது ஒட்டுமொத்தத்தில் தட்டிக் கழிக்கும் வகையிலானது அல்ல; அதில் நல்ல பல விடயங்களும் உள்ளன. தொகுதிவாரி அல்லது அறுதிப் பெரும்பான்மைத் தேர்தல் முறையிமையில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை, விகிதாசாரத் தேர்தல் முறைமையானது சீர்செய்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தலொன்றின்போது, கட்சிகள் பெற்றுக் கொள்ளும் வாக்கு வீதங்களுக்கு ஏற்ப, அவை பெற்றுக் கொள்ளும் ஆசனங்களின் வீதம் அமைவதில்லை என்பது, தொகுதிவாரி அல்லது அறுதிப் பெரும்பான்மை தேர்தல் முறைமையில் காணப்பட்ட மிகப் பாரிய குறைபாடாக இருந்தது. இதை இன்னும் விளக்கமாக கூறுவதாயின், கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வாக்குகளுக்கு முரணான விதத்தில் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் நிலை, இந்தத் தேர்தல் முறைமையில் காணப்பட்டது.

உதாரணமாக, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் மூலம் இதை விளங்கிக் கொள்ள முடியும்.

அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியானது 31 லட்சத்து 75 ஆயிரத்து 991 வாக்குகளைப் பெற்று 140 ஆசனங்களைக் கைப்பற்றியது. எவ்வாறாயினும் அந்தத் தேர்தலில் 51 வீதமான வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்ட அந்தக் கட்சி, 83 வீதமான ஆசனங்களை பெற்றுக் கொண்டது.

அதேதேர்தலில் 16 இலட்சத்து 83 ஆயிரத்து 753 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனங்களை மட்டுமே பெற்றது. அந்தத் தேர்தலில் 30 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அந்தக் கட்சிக்கு, ஐந்து வீதமான ஆசனங்கள்தான் கிடைத்தன. ஆனால், இதே தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி மூன்று இலட்சத்து 99 ஆயிரத்து 43 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட நிலையில் 18 ஆசனங்களை வெற்றிகொண்டது. அதாவது, ஆறு வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அந்தக் கட்சி, 11 வீதமான ஆசனங்களை தன்வசப்படுத்தியது.

இந்த நிலையில், புதிய தேர்தல் முறைமையொன்றினை உருவாக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இது, தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைகளைக் கொண்ட கலப்பு முறைத் தேர்தல் முறைமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய தேர்தல் முறைமையில் விருப்புவாக்கு முறை காணப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறை அல்லது தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக, நாட்டில் உரத்துப் பேசப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் அது தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றன. தேர்தல் மறுசீரமைப்பானது பெரும்பான்மையினருக்கும் பெரிய கட்சிகளுக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் அதேவேளை, சிறுபான்மையினருக்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி விடலாம் என்கிற அச்சம், சிறுபான்மை அரசியல் கட்சிகளிடத்தில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக, தற்போதுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமையினை மாற்றுவது தொடர்பில், இலங்கையிலுள்ள சிறிய மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் கடந்த வருடம் ஒன்றுகூடி, தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

ஆனாலும், ஆளும் தரப்பிலுள்ள இரண்டு பெருந் தேசியக் கட்சிகளும் இணைந்து, தேர்தல் மறுசீரமைப்பு ஒன்றுக்குத் தயாராகி விட்டன. இந்த நிலையில், அதனை எதிர்த்து வெற்றிபெற முடியாது என்கிற நிலையொன்று உருவாகியுள்ளது. எனவே, தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பில் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் – தமது முன்மொழிவுகளைச் சமர்பிக்கத் தொடங்கியுள்ளதோடு, இது தொடர்பில் தமது கட்சியினரைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், கடந்த சனிக்கிழமை தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பான செயலமர்வொன்றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் நடத்தியது. அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் இருந்தவர்களும் இந்தச் செயலமர்வில் கலந்துகொண்டனர். அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம் மற்றும் கலாநிதி சுஜாதா கமகே உள்ளிட்டோர் அந்நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.

குறித்த செயலமர்வில் கலந்துகொண்டவர்கள் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் தமக்குள்ள கேள்விகளையும் சந்தேகங்களையும் தெரியப்படுத்தி அதற்கான பதில்களைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தனர். கேள்விகளுக்கான பதில்களை நிகழ்வில் சிறப்புரையாற்றியோர் வழங்கினர்.

தொகுதிவாரி தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்தப்படுமானால், கட்சிக்கான அந்தஸ்து குறைவடைந்து, தனிநபர்களின் ஆதிக்கம் மேலெழுந்து விடும். அதாவது காலப்போக்கில் கட்சிக்கான பெறுமானம் இல்லாமல் போய்விடும் என்கிறதொரு அச்சம், அந்தச் செயலமர்வில் ஒருசிலரால் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, சிறுபான்மைக் கட்சிகள் தமது பிரதிநிதித்துவங்களை இழக்கும் நிலைவரம் தொகுதிவாரி தேர்தல் முறைமையில் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய பங்குபற்றுநர் ஒருவர் “1976 ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் ஒன்பது முஸ்லிம்களை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். ஆனால், அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கு எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் துணியவில்லை. முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும், அப்போது நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. அப்படி யாரும் இருந்திருந்தால், அதற்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பார்கள்” என்கிற அர்த்தப்பட, தனது கருத்தினை முன்வைத்தார்.

இதன்போது, அந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட மற்றொரு பங்குபற்றுநர் இதற்கு மாற்றமான கருத்தொன்றினை அங்கு பதிவுசெய்தார். “முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலும், மாகாணசபையிலும் இருக்கத்தக்கதாகத்தான் அவர்களின் ஆதரவுடன் ‘திவிநெகும’ சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் பிரதம நீதியரசர் சிராந்தி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் அதனை ஆதரித்தார்கள். மேலும், 18ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளித்தார்கள். இவற்றினையும் மனதில் கொள்ள வேண்டும்” என்று அந்தப் பங்குபற்றுநர் தெரிவித்தார்.

இரண்டு வகையான கருத்துக்களையும் முன்வைத்த மேற்படி நபர்கள் இருவரும் சட்டத்தரணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி இரண்டு கருத்துக்கள் தொடர்பிலும், கலாநிதி சுஜாதா கமகே தனது கருத்தினை முன்வைத்துப் பேசினார். “தேர்தல் முறைமையினை நாம் ஒரு வாகனமாக எடுத்துக் கொள்வோம். தற்போது இந்த வாகனம் எரிபொருளில் இயங்குகிறது. அதாவது விகிதாசார முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் மறுசீரமைப்பின் மூலமாக மேற்படி வாகனத்தை நாம் எரிபொருளிலும், மின்சாரத்திலும் இயங்கும் வகையிலான ‘ஹைபிரிட்’ முறைக்கு மாற்றிக்கொள்ளப் போகின்றோம். அதாவது, விகிதாரசாரமும் – தொகுதிவாரிமுறையும் கொண்ட கலப்பு முறையொன்றினை உருவாக்கப் போகின்றோம்.

‘திவிநெகும’ சட்ட மூலத்துக்கு ஆதரவளித்ததும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவாக கைகளை உயர்த்தியதும் 18 ஆவது சட்டத் திருத்தத்துக்கு சம்மதம் தெரிவித்ததும் வாகனத்திலுள்ள தவறல்ல. அது – சாரதியின் பிழையாகும். அதாவது, மேற்படி விடயங்களுக்கு ஆதரவளித்தமையானது தேர்தல் முறைமையிலுள்ள தவறல்ல; தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பிழையாகும். எனவே, மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது, சரியானவர்களைத் தெரிவுசெய்தல் வேண்டும். இது தொடர்பில் வாக்காளர்கள் விழிப்பாக இருத்தல் அவசியமாகும்” என்று அவர் கூறினார்.

தேர்தல்களின் போது தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பது இங்கு கவனிப்புக்குரியதாகும். ஆனாலும், பெருவாரியானவர்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்தல்களில் தெரிவு செய்யும்போது தவறிழைத்து விடுகின்றனர். ஏதோ ஒன்றில் லயித்து, அல்லது ஏதோ ஒன்றுக்காக விலை போவதன் மூலமாக, கணிசமான வாக்காளர்கள் தமது சரியான பிரதிநிதிகளைத் தேர்தல் மூலம் தெரிவு செய்வதில் தவறிழைத்து விடுகின்றனர்.

இன்னொருபுறம், தேர்தலில் களமிறக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளும் முழுமையான அவதானம் செலுத்துவதில்லை. பண வசதியினையும் அடியாட்களையும் கொண்ட நபர்களுக்கு அநேகமாக வேட்புமனுக்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறான நபர்கள் தேர்தலில் வெற்றிபெற்று உயர்சபைக்குச் செல்வதன் மூலம் எந்தவித நல்ல மாற்றங்களும் நிகழ்ந்து விடுவதில்லை.

தேர்தல்களில் வேட்புமனு ஒன்றினை வழங்கும் போது, வேட்பாளர் தொடர்பில் கட்சிகள் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ‘மார்ச் 12 பிரகடனம்’ வலியுறுத்துகின்றது. பிரதேச சபை, மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு வழங்கும்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அளவுகோல்கள் குறித்து ‘மார்ச் 12 பிரகடனம்’ விபரிக்கின்றது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ‘மார்ச் 12 பிரகடனத்தினை’ ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை நபர்களுக்கு வழங்கும்போது, பின்வரும் விடயங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் அவதானம் செலுத்த வேண்டும் என, ‘மார் 12 பிரகடனம்’ வலியுறுத்துகின்றது. வேட்புமனு வழங்கும் நபரொருவர்,

01) குற்றவியல் சார்ந்த தவறொன்றுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அல்லது ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு உள்ளாகாதவராக இருந்தல் வேண்டும்.

02) இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பில் தவறிழைக்காதவராக இருத்தல் வேண்டும்

03) மதுசாரம், போதைவஸ்து, சூதாட்டம், விலைமாதர் தொடர்பில் ஈடுபாடு அற்றவராகவும் நாட்டின் நல்லிருப்புக்கு பங்கம் விளைவிக்கும் வியாபாரத்தில் ஈடுபடாதவராகவும் இருந்தல் வேண்டும்.

04) சுற்றாடல் ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடாதவராக இருத்தல் வேண்டும்.

05) அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யாத ஒருவராக இருத்தல் வேண்டும்.

06) நாட்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய நிதிசார் ஒப்பந்தங்களில் ஈடுபடாதவராக இருத்தல் வேண்டும்.

07) வேட்புமனு கையளிக்கின்ற வேட்பாளர் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தின் குடியிருப்பாளராக இருத்தல் வேண்டும்.

என்பவை உட்பட, மேலும் பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ‘மார்ச் 12 பிரகடனம்’ குறிப்பிடுகின்றது.

ஆனால், எந்தவொரு அரசியல் கட்சியும் இது விடயத்தில் முழுமையான அவதானம் செலுத்துவதில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

அரசியல் கட்சிகள் அவதானம் செலுத்தவில்லை என்பதற்காக, பொதுமக்களும் இதுவிடயத்தில் பொடுபோக்காக இருந்து விடக்கூடாது.

தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் தவறிழைப்பவர்கள்தான், சாரதியில் பிழைகளை வைத்துக்கொண்டு, வாகனம் குறித்து தவறாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா?
Next post அலாரத்தால தலை துண்டான கம்பனி பொறுப்பில்ல… ஆமா…!! வீடியோ