காடாகிப் போன கனவுகள்…!!

Read Time:17 Minute, 20 Second

article_1476275009-unnamedமிக நீண்ட இழுபறிக்குப் பின்னர், சுனாமியால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்காக நுரைச்சோலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பகிர்ந்தளிப்பதற்கான தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், அங்குள்ள வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பி.வணிகசிங்க தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தை இதுவரையும் உரிய பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்க முடியாமல் போனமைக்குப் பின்னால், ஓர் இனவாதச் சிந்தனை இருந்தது என்பதைப் புறந்தள்ளி விட முடியாது. வீணான இடுவம்பு காரணமாகத் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் காரணமாக எப்போதோ பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டிய நுரைச்சோலை வீட்டுத்திட்டமானது, தற்போது சிதைந்து, பழுதடைந்து, காடுகள் வளர்ந்து பயன்படுத்த முடியாதொரு நிலையில் காணப்படுகிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலைப் பிரதேசத்தில் இந்த வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ‘நன்கொடை நிதியம்’ இதற்காக இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 552 மில்லியன் ரூபாயை வழங்கியது. இந்த வீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தம் 2006ஆம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிடம் வழங்கப்பட்டது. அப்போது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பேரியல் அஷ்ரப் பதவி வகித்தார்.

சுமார் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள இந்த வீட்டுத்திட்டத்தில் 500 வீடுகள் உள்ளன. மேலும், ஆண் மற்றும் பெண்களுக்கான தனித் தனிப் பாடசாலைகள், வைத்தியசாலை, சந்தைத்தொகுதி, பொது நிகழ்வுகளுக்கான மண்டபம், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் மற்றும் பஸ் நிறுத்தங்கள் ஆகியவையும் அங்கு உள்ளன. கிட்டத்தட்ட, அதுவொரு ‘குட்டி’ நகரமாகும்.

நுரைச்சோலை வீட்டுத்திட்டச் செயற்பாடுகள் எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த ஒரு தருணத்தில், இடையில் புகுந்தது ஜாதிக ஹெல உறுமய. நுரைச்சோலை வீடுகளை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்குவதற்கு எதிராக அந்தக் கட்சி, உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு, 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 01ஆம் திகதி அப்போதைய நீதியரசர் சரத் என்.சில்வா தலைமையில் வழங்கப்பட்டது. நுரைச்சோலை வீடுகளை தனி இனமொன்றுக்கு வழங்கக்கூடாது என்றும் அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கி மேற்படி வீடுகளை நீதியாகப் பகிர்ந்தளிக்குமாறும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டு 07 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும், நுரைச்சோலை வீடுகள் இற்றைவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை. இப்போது, அங்குள்ள வீடுகளை பகிர்ந்தளித்தாலும், அவை பயன்படுத்தும் நிலையில் இல்லை.

ஜனாதிபதியின் தற்போதைய உத்தரவின் படி, நுரைச்சோலையிலுள்ள 500 வீடுகளில் 303 வீடுகள் முஸ்லிம்களுக்கும் மிகுதியாகவுள்ள 197 வீடுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரியருகிறது.
ஆனால், இந்தத் தீர்மானம் குறித்து முஸ்லிம் தரப்பிலிருந்து விமர்சனங்களும் திருப்தியின்மையும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

நுரைச்சோலை வீட்டுத்திட்டமானது சுனாமியால் வீடுகளை இழந்த முஸ்லிம்களுக்காக நிர்மாணிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வீடுகளை இழந்த பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுக்கு இதுவரையும் வீடுகள் கிடைக்காமல் உள்ளன. ஆனால், இந்த மாவட்டத்தில் சுனாமியால் நான்கைந்து பெரும்பான்மையினத்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆனாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தொகையை விடவும் அதிகமான வீடுகள், பெரும்பான்மையின மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, சுனாமியால் வீPடுகளை இழந்த தமிழ் மக்களுக்கும் போதுமான தொகை வீடுகள் வழங்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு நிலையில், நுரைச்சோலை வீடுகளைப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதே நியாயமாகும் என்று ஒரு தரப்பார் வாதிடுகின்றனர்.

எவ்வாறாயினும், இப்போதைக்கு நுரைச்சோலை வீடுகளைப் பகிர்ந்தளித்தாலே போதும் என்கிற மனநிலையைக் கொண்டவர்களும் இருக்கின்றனர். பெருந்தொகை நிதியில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வீட்டுத்திட்டமானது, யாருக்கும் பிரயோசனமின்றி அழிவடைந்து போவதை விடவும், மக்களுக்குப் பயனாகட்டும் என்று நினைக்கின்றமையே அதற்கான காரணமாகும்.

ஆனால், தற்போதைய நிலையில் அந்த வீடுகளைப் பெற்றுக்கொள்வோர் உடனடியாக அவற்றைப்; பயன்படுத்தும் நிலையில் இல்லை. அங்குள்ள வீடுகளிலிருந்த கதவுகளிலிருந்து பெறுமதியான பொருட்களெல்லாம் களவாடப்பட்டுள்ளன. வீட்டுத்திட்டம் முழுக்க காடு வளர்ந்துள்ளது. மேலும், வீடுகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதனால், அங்கு பாரியதொரு புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதற்குப் பெருமளவான நிதி தேவைப்படும்.

இந்த நிலையில், நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு நிதி கிடைத்தாலும், குறித்த வீடுகளைப் புனரமைப்புச் செய்வதற்கு கணிசமான காலம் எடுக்கும். அதன் பின்னரே அங்கு மக்கள் குடியேற முடியும்.

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. அதன் எல்லையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தீகவாபி கிராமம் உள்ளது. தீகவாபி, ஒரு பெரும்பான்மையினக்; கிராமமாகும். ஆனால், அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும் முஸ்லிம் பிரதேசங்களாகும். இதனால், தீகவாபியை முன்னிறுத்தி அங்கு எல்லைப் பிரச்சினைகள் தொடர்ச்சியாக எழுந்துகொண்டு வருகின்றன. முஸ்லிம் கிராமங்களின் எல்லைகளுக்குள் அரச இயந்திரத்தின் துணை கொண்டு, தீகவாபி தனது எல்லைகளை நகர்த்துவது வாடிக்கையான விடயமாகும். மேலும், புனித பூமி எனும் பெயரில் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகள் அபகரிக்கப்பட்டு தீகவாபியுடன் இணைக்கப்பட்டுமுள்ளன.

இவ்வாறானதொரு, நிலையிலேயே நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பில் தீகவாபி அச்சம் கொண்டது. தனது எல்லையில் முஸ்லிம்களை குழுமையாகக் கொண்டதொரு குடியிருப்பு உருவானால், அது தனக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்று அந்தக் கிராமம் எண்ணியது. இந்தப் பின்னணியிலேயே, நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய வழக்குத் தாக்கல் செய்தது. நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் தற்போதைய நிலைக்கு அந்த வழக்கே காரணமானது.

நுரைச்சோலை வீடுகளை முஸ்லிம்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் கடந்த ஆட்சியாளர்கள் விருப்பம் கொண்டிருக்கவில்லை. அதனால், நுரைச்சோலை விடயத்தில் அவர்கள் இழுத்தடிப்புகளைச் செய்துகொண்டு வந்தனர். பல தடவை, நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறிச் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி நினைத்திருந்தால், நுரைச்சோலை வீடுகளை உரிய பயனாளிகளுக்கு வழங்குமாறு அப்போதே உத்தரவிட்டிருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் போனமைக்கு முன்னாள் ஜனாதிபதிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் காணப்பட்ட நெருங்கிய உறவும் ஒரு காரணமாக இருந்தது.

எவ்வாறாயினும், நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஒரு நிலைவரத்தை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் மிக முக்கியமான பங்கை ஆற்றியிருந்தன என்பதை மகிழ்ச்சியோடு இங்கு பதிவு செய்துகொள்ள முடியும். நுரைச்சோலை வீடுகளை உரியவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதன் அவசியத்தை வலிறுத்தி பல தடவைகள் செய்திகளையும் கட்டுரைகளையும் ‘தமிழ் மிரர்’ வெளிக்கொண்டு வந்திருந்தது. குறிப்பாக, கடந்த வருடம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி, தமிழ் மிரரில் ‘ஆறாத காயம்’ எனும் தலைப்பில் நாம் எழுதிய கட்டுரை இங்கு நினைவுகொள்ளத்தக்கதாகும்.

இது இவ்வாறிருக்க, நுரைச்சோலை வீடுகளைப் பெறுவதற்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் விடயத்தில் அனைத்துத் தரப்புக்களும் விழிப்பாக இருத்தல் அவசியமாகும். அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான பயனாளிகளைத் தெரிவுசெய்தபோது, கடந்த காலங்களில் பல்வேறு விதமான மோசடிகள் இடம்பெற்றிருந்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான பொறுப்பைப் பெற்றிருந்த அதிகாரிகள், தமக்கும் தமது உறவினர்களுக்கும் வீடுகளை ஒதுக்கிக் கொண்ட ஏராளமான கதைகள் உள்ளன. இவ்வாறு அதிகாரிகளால் நியாயமற்ற முறையில் பெறப்பட்ட வீடுகள், பாவனையின்றி பாழடைந்து கிடப்பதை இன்றும் பல இடங்களில் காணலாம்.

எனவே, இதுபோன்ற திருகுதாளங்கள் நுரைச்சோலை வீடமைப்புத் திட்டத்தில் இடம்பெற்று விடக்கூடாது என்பதை வலியுத்துகின்றோம். நுரைச்சோலை வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயரும் அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட விதமும் வெளிப்படைத்தன்மையாக இருப்பதோடு, அவை பொதுமக்களின் பார்வைக்கு இடப்படுதலும் அவசியமாகும். மேலும், அவ்வாறான தெரிவு தொடர்பில் யாருக்கேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அந்த ஆட்சேபனைகளை எழுத்து மூலம் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசமும் வழங்கப்படுதல் வேண்டும். எனவே, இந்த விடயத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளும் அக்கறை செலுத்த வேண்டும் என இந்தக் கட்டுரை வலியுறுத்துகிறது.

இதேவேளை, நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை புனரமைப்பதற்கான நிதியை வெளிநாட்டு நிறுவனங்களினூடாக பெற்றெடுக்கும் நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், தற்போதுள்ள நிலையில் நுரைச்சோலை வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்குவதில் எந்தவிதப் பயனும் இல்லை. வீடுகளைப் பெற்றுக்கொள்வோரால், அவற்றைப் பயன்படுத்தவும் முடியாது. எனவே, அந்த வீட்டுத்திட்டத்தை புனரமைத்து பயனாளிகளை துரிதமாகக் குடியேற்ற வேண்டிய பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம், இந்த வீடுகளை பகிர்ந்தளிப்பதில் காட்டப்பட்ட அக்கறையின்மையும் காலதாமதமுமே அவை சேதமடைவதற்கும் பாழடைவதற்கும் காரணமாகும். எனவே, அதற்குக் காரணமானவர்களே, அதைத் திருத்திக் கொடுக்க வேண்டும்.

ஆனால், நுரைச்சோலை வீடுகளைப் புனரமைத்துக் கொடுத்தல் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் எனத் தெரியவில்லை. நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பகிர்ந்து கொடுப்பதிலேயே இவ்வளவு இழுபறிகள் இருக்கின்ற நிலையில், திரும்பவும் ஒரு தடவை வெளிநாடுகளிடமிருந்து நிதியைப்; பெற்று, அதன் மூலம் அந்த வீடுகளைப் புனரமைத்துக் கொடுப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுமா எனத் தெரியவில்லை.

ஆனால், பகிர்ந்தளிக்கப்படும் வீடுகளை புனரமைத்துக் கொடுக்காது விட்டால், அவற்றைப் பெற்றுக்கொள்வோர், அந்த வீடுகளைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.

எனவே, நுரைச்சோலை வீடுகளை வழங்குவதில் ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். அந்த அர்த்தத்தை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி…!!
Next post வெளிச்சத்துக்கு வரப்போகும் பெர்முடாவின் ரகசியம்…!! வீடியோ