கடைசி நிமிடத்தில் பயந்த, ‘தற்கொலைதாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –16)

Read Time:20 Minute, 21 Second

timthumb• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்த போது, அவர்கள் வேண்டுமென்றே இலங்கை அரசிடம் அவர்களை ஒப்படைத்து துரோகம் செய்தார்கள்.
• ராஜீவ் காந்தியை ‘நாங்கள் கெலை செய்யவில்லை, நாங்கள் சம்பந்தப்படவில்லை’ யார் செய்தது என்பதை இந்தியக் காவல் துறை கண்டுபிடிக்கட்டும்’ என்று லண்டனிலிருந்து சாவால் விட்ட கிட்டு!!

• ஒரு விஷயம் சொன்னால் வியந்து போவீர்கள். விடுதலைப் புலிகளின் திட்டப்படி, மனித வெடிகுண்டாக ஸ்ரீபெரும்புதூர் சென்ற தணு என்கிற அந்த ஒரு பெண்ணைத் தவிர, அவர்கள் குழுவில் வேறு யாருமே இறந்திருக்கும் வாய்ப்பு கிடையாது.

புலேந்திரன்- பிரபா

இனி..தொடர்ந்து…

உளவுத்துறைகளின் முதன்மையான பணி, நம்முடைய ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து, எச்சரிக்கை அளிப்பதுதான். பல்வேறு இயக்கங்களால், பல்வேறு காரணங்களுக்காக ராஜிவின் உயிருக்கு ஆபத்து உண்டு என்று நன்கு அறிந்த நமது உளவுத்துறை, விடுதலைப் புலிகள் விஷயத்தில் மட்டும் தொடக்கம் முதலே அலட்சியமாகவும் அக்கறை ஏதுமில்லாமலும் நடந்து வந்திருக்கிறார்கள்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் நடந்த அட்டூழியங்களை விவரிக்கும் மிகப் பிரம்மாண்டமான ஆவணம் ஒன்று (ஏற்கெனவே இது குறித்துக் குறிப்பிட்டிருக்கிறேன் சாத்தானின் படைகள் என்ற புத்தகம்.) புலிகள் இயக்கத்தால் தயாரிக்கப்பட்டது.

இரண்டு வால்யூம்களாக வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம், சென்னையில் அண்ணா சாலையில் உள்ள ஓர் அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டது. சி.பி.ஐ. அதனைக் கைப்பற்றியதற்கு முன்னால், அது குறித்த அடிப்படைத் தகவல்கள் கூட ராவுக்கோ ஐபிக்கோ தெரிந்திருக்கவில்லை!

அந்தப் புத்தகம், வெறும் பிரசாரப் புத்தகமல்ல. ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகள் ஏன் கொன்றார்கள் என்பதற்கான காரணங்களை மிகத் துல்லியமாக நாம் அந்தப் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து பெற முடியும்.

ஏப்ரல் 1, 1990 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், I am not against people, I am not against the Indian Government, I am against the former leadership’ ‘நான் இந்திய மக்களுக்கு எதிரானவனோ, நான் இந்திய அரசின் எதிரானவனோ இல்லை, நான் முன்னாள் தலைமைக்கு எதிராக இருக்கிறேன் ‘ என்றுபிரபாகரன் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

இது அனைத்து ரா, ஐ.பி. அதிகாரிகளுக்கும் தெரியும். அப்படியிருந்தும் விடுதலைப் புலிகள் மீது ரா தலைமைக்குத் துளி சந்தேகமும் கிடையாது!

மேற்படி அறிக்கையின் அடிப்படையில்தான் பின்னால், பத்திரிகையாளர் அனிதா பிரதாப் பிரபாகரனை வவுனியா காட்டில் சந்தித்து பேட்டி கண்டபோது, ‘ராஜிவ் காந்தி மீது உங்களுக்கு அப்படியென்ன விரோதம்?’ என்று கேட்டார்.

பிரபாகரன் அதற்கு ஐந்து அடுக்குகளாகக் காரணத்தைச் சொல்லியிருந்தார்.

1. இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது எங்கள் கொள்கைக்கு விரோதமானது.

2. அப்படியும் நான் ராஜிவை நம்பினேன்.

இந்தியா எமது மக்களுக்கு நல்லது செய்யும் என்று உளமார எண்ணி, அதையே எங்கள் மக்களுக்கும் எடுத்துச் சொல்லி (சுதுமலைக் கூட்டம்) ஒப்பந்தத்தை விருப்பமில்லாவிட்டாலும் ஏற்றோம்.

3. அந்த நம்பிக்கையை, திலீபனை இறக்கவிட்டு வேடிக்கை பார்த்த இந்திய ராணுவத்தின் மெத்தனம் சிதைத்துவிட்டது. இந்திய அரசும் வாய் திறக்காமல் இருந்துவிட்டது.

4. எங்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லிவிட்டு, எங்களிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களைப் பிற ஈழ இயக்கங்களுக்கு அளித்தார்கள்.

5. இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் வேண்டுமென்றே இலங்கை அரசிடம் அவர்களை ஒப்படைத்து துரோகம் செய்தார்கள்.

ராஜிவ் காந்தி வரை தொடர்புகொண்டு, நான் அவர்களை விடுவிப்பதற்காகப் போராடினேன். பலனில்லை.

என் கமாண்டர்கள் சயனைட் அருந்தி உயிர்விட வேண்டியதாயிற்று.

ஐ.பி.கே.எஃப் இலங்கைக்கு அனுப்பப்பட்டது, இலங்கைத் தமிழரின் நலனுக்காக அல்ல.

தன் அண்டை நாட்டு விஷயத்தில் தன்னுடைய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்க முற்றிலும் சுயநலமுடன் இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முயற்சியே அது என்று அழுத்தம் திருத்தமாக அந்தப் பேட்டியில் பிரபாகரன் பேசியிருப்பார்.

முத்தாய்ப்பாக, ‘அவர் என் எதிரி’ என்றே குறிப்பிடுவார்.

ஏப்ரல் 10, 1990ல் வெளியான அந்தப் பேட்டியைப் படித்த எந்த ஒரு உளவுத்துறை அதிகாரியும் ராஜிவுக்கு எதிரான சக்திகளின் பட்டியலில் விடுதலைப் புலிகளை முதலிடத்தில் வைப்பார்கள்.

ஆனால் படுகொலைக்குப் பிறகு சி.பி.ஐக்குச் சரியான ஆதாரங்கள் கிடைத்து நாங்கள் வழக்கில் முன்னேறத் தொடங்கிய சமயத்திலும் ‘விடுதலைப்புலிகள் இதனைச் செய்திருக்க மாட்டார்கள்’ என்று ராவின் தலைவர் சொல்கிறார் என்றால் நமது உளவுத்துறையை எந்தளவு நம்மால் நம்ப இயலும்?

எப்போது தமிழ்நாட்டில் துணிகரமாக வந்து இறங்கி பத்மநாபாவைக் கொன்றுவிட்டுத் திரும்பினார்களோ, எப்போது அடுத்த குறி வரதராஜப் பெருமாள் என்று முடிவு செய்து திரும்பவும் ஆள் அனுப்பினார்களோ, எப்போது தமிழகத்தில் தனக்கென ஓர் உளவு அமைப்பு தேவை என்று முடிவு செய்து முருகனையும் அவரது டீமையும் அனுப்பிவைத்தார்களோ, அப்போதே முடிவு செய்துவிட்டார்கள் அடுத்த இலக்கு ராஜிவ் காந்தி என்று.

அக்டோபர் 1990ல் தீர்மானித்து ஜனவரியில் ஆள்களை அனுப்பத் தொடங்கி மே மாதம் திட்டமிட்டபடி காரியத்தை முடித்தது விடுதலைப் புலிகள்.

படுகொலைச் சம்பவம் நடந்து முடிந்தபிறகு, உடனடியாக லண்டனில் அப்போது இருந்த கிட்டு, ‘நாங்கள் செய்யவில்லை, நாங்கள் சம்பந்தப்படவில்லை’ என்று அறிக்கைகள் விட்டுக்கொண்டே இருந்தார்.

அதன் எதிரொலியாகத்தான் ராவின் தலைவரும் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.

இந்த எரிச்சல் ஒருபுறம் இருக்க, அதே கிட்டு தனது அறிக்கையொன்றில், ‘நாங்கள் செய்யவில்லை. யார் செய்தது என்பதை இந்தியக் காவல் துறை கண்டுபிடிக்கட்டும்’ என்றும் சொல்லியிருந்தார். இந்தச் சொற்களில் தெரியும் அகம்பாவத்தின் பின்னணி மிகவும் சுவாரசியமானது.

கண்டிப்பாகத் தாங்கள்தான் செய்தோம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். அது வெறும் நம்பிக்கையல்ல. கொலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டதே அத்தனை சாமர்த்தியமாகத்தான்.

மிகுந்த புத்திசாலித்தனத்துடன், சற்றும் பிசகாத கவனத்துடன், எங்கும் பிழைகளோ, பிசிறுகளோ இல்லாமல்தான் திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது.

ஒரு விஷயம் சொன்னால் வியந்துபோவீர்கள். விடுதலைப் புலிகளின் திட்டப்படி, மனித வெடிகுண்டாக ஸ்ரீபெரும்புதூர் சென்ற தணு என்கிற அந்த ஒரு பெண்ணைத் தவிர, அவர்கள் குழுவில் வேறு யாருமே இறந்திருக்கும் வாய்ப்பு கிடையாது.

குறிப்பாக, ஹரி பாபு. ஹரி பாபு அடிபட்டுச் செத்துப் போனது மிகவும் தற்செயலான ஒரு நிகழ்வு.

மேடையில் மாலை அணிவித்து, அதை அவர் கீழே இருந்து புகைப்படம் எடுத்திருப்பாரேயானால் ஒரு பிரச்னையும் இல்லை. ராஜிவ் காந்தியும் தணுவும் மட்டுமே இறந்திருப்பார்கள்.

புலிகளின் திட்டப்படி மற்ற அனைவரும் தப்பித்து, அந்தப் புகைப்பட ஆதாரம் கூடக் கிடைக்காமல் இன்றுவரை சி.பி.ஐ. அலைந்துகொண்டிருக்கும்.

மாறாக, ராஜிவ் வருகை தாமதமாகி, சிவப்புக் கம்பளப் பகுதியிலேயே மாலை அணிவிக்கும் வைபவம் அரங்கேற, அதிலும் எங்கே பிசகிவிடப் போகிறதோ என்று கடைசி நிமிடத்தில் பயந்த தணு, ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க, சரியாகப் படம் பிடிக்க வேண்டுமே என்கிற பதற்றத்தில் ஹரி பாபு நெருங்கி வந்து கமராவை உயர்த்திப் படமெடுக்க, திட்டமிட்ட சமயத்துக்கு முன்னாலேயே குண்டு வெடித்து ஹரி பாபுவும் இறந்து போனார்.

திரும்பவும் சொல்கிறேன், ஹரி பாபு இறக்க நேரிடும் என்று புலிகள் எதிர்பார்க்கவில்லை.

சி.பி.ஐயிடம் வாக்குமூலம் அளித்த நளினி கூட இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ராஜிவ் படுகொலை அளித்த அதிர்ச்சியைக் காட்டிலும் ஹரி பாபு இறந்த துக்கம் அவர்களுக்குப் பெரிதாக இருந்திருக்கிறது.

எந்த வகையிலும் அடையாளம் காண முடியாதபடி திட்டத்தை வகுத்திருக்கிறோம் என்கிற பெருமிதம்தான் கிட்டுவின் அறிக்கையில் வெளிப்பட்டிருந்தது.

சி.பி.ஐ அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டது. ‘இந்திய காவல் துறை முடிந்தால் கண்டுபிடிக்கட்டும்’ என்று சொன்னாரல்லவா? அதைத்தான் செய்தோம்.

சதித்திட்டத்தின் தொடக்கப்புள்ளியில் இருந்து இறுதிவரை அவர்கள் சென்ற பாதை, சிந்தித்த விதம், செய்த காரியங்கள், சந்தித்த இடர்ப்பாடுகள், அனைத்தையும் மீறி திட்டத்தை எப்படிச் செய்து முடித்தார்கள், யார் யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று ஓர் இண்டு இடுக்கு விடாமல் துருவித் துருவிக் கண்டுபிடித்துக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தினோம்.

ஹரி பாபுவின் கேமரா, எங்களுக்கு விடுதலைப் புலிகளைச் சுட்டிக்காட்டியது என்றால், நளினி பிடிபட்டு, அவரளித்த வாக்குமூலங்களின் மூலம் வழக்கின் அனைத்து முடிச்சுகளும் அவற்றை அவிழ்க்கும் சூத்திரங்களும் பிடிபட்டன. என்னைப் பொருத்தவரை ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணை என்பதை வெற்றிகரமாக முடித்து வைத்தவர் நளினிதான்.

பிறகு முருகன் மற்றும் சின்ன சாந்தன். அவர்கள் அளித்த விவரங்கள்தாம் இந்த வழக்கின் வேர்களைக் கண்டடைய எங்களுக்கு மிகவும் உதவி செய்தன. இனி, சதித்திட்டம் எவ்வாறு உருவானது என்பதைப் பார்க்கத் தொடங்கலாம்.

நளினி என்றொரு பெண்

நளினிக்கு அப்போது வயது 27. அவரது தந்தை ஒரு ரிடையர்ட் சப் இன்ஸ்பெக்டர். ஏதோ பிரச்னை, மனைவியிடமிருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார்.

நளினியின் தாய் பத்மாவுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் நளினி தவிர, பாக்கியநாதன் என்ற மகனும் கல்யாணி என்ற இன்னொரு மகளும் உண்டு. அவர் மயிலாப்பூர் கல்யாணி நர்சிங் ஹோமில் நர்ஸாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ராயப்பேட்டை முத்தையா கார்டன் வீதியில் அவர்கள் வசித்துவந்தார்கள். நளினியின் சகோதரர் பாக்கியநாதன் 1987-88 ஆண்டுக் காலக்கட்டத்தில் சுபா சுந்தரம் ஸ்டுடியோவில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அவருக்கு விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளும் நட்பும் ஏற்பட்டது.

பிறகு ஸ்டுடியோ பணியில் இருந்து விலகி, கொஞ்சநாள் ஸ்டேஷனரி பொருள்களை வாங்கி விற்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அதன்பின் பேபி சுப்பிரமணியத்தின் அச்சுக்கூடத்தை ‘பிபிஎல் ஆல்ரவுண்டர்ஸ்’ என்கிற புதிய பெயரில் எடுத்து நடத்த ஆரம்பித்தார்.

இந்தக் காலக்கட்டத்தில் நளினி தன் குடும்பத்தாரிடமிருந்து பிரிந்து, தனியே வில்லிவாக்கத்தில் வீடு எடுத்து வசிக்க

ஆரம்பித்திருந்தார். குடும்பப் பிரச்னைகள் என்று பொதுவாகக் காரணம் சொல்லப்பட்டாலும், நளினியின் தந்தை அடிக்கடி அவரைப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததுதான் முக்கியமான காரணமாயிருந்ததாக நளினி எங்களிடம் சொல்லியிருக்கிறார்.

அவர் அப்போது அடையாறில் இருந்த அனபாண்ட் சிலிக்கான்ஸ் என்னும் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். மாதச் சம்பளம் 1700 ரூபாய். ஏப்ரல் 1990ல் நளினி தனியே போய்விட்டார். ஆனால் அதற்கு முன்னமே அவருக்கு பாக்கியநாதனின் நண்பராக முத்துராஜா அறிமுகமாகியிருந்தார்.

முத்துராஜா மூலம் அறிமுகமான சங்கரி என்கிற பெண்ணுடன் நுங்கம்பாக்கத்தில் அவர் தங்கியிருந்த பெண்கள் ஹாஸ்டல் ஒன்றில் பத்து நாள்கள் சேர்ந்து தங்கிவிட்டு, பிறகு குடும்ப நண்பரான சகுந்தலா என்பவர் (இவர் வில்லிவாக்கத்தில் வசித்துக்கொண்டிருந்தார்) வீட்டில் சில காலம் இருந்துவிட்டு, அதன் பிறகுதான் வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வாடகைக்கு வீடெடுத்து வசிக்கத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் தம் வீட்டாருடன் பெரிதாகத் தொடர்புகள் இல்லாமல் தனியாக இருந்த நளினியைப் பார்க்க ஜனவரி 91 முதல் அவரது இளைய சகோதரி கல்யாணி அடிக்கடி வில்லிவாக்கத்துக்கு வரத் தொடங்கினார்.

பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அப்படி ஒரு நாள் நளினியைச் சந்திக்க அவரது அலுவலகம் வரும்போது, தனது தோழி பாரதி என்னும் பெண்ணையும் முருகன் என்று இன்னொரு நபரையும் கல்யாணி, நளினியின் வீட்டுக்கு அழைத்து வந்தார். முருகனை தாஸ் என்கிற பெயரில் அறிமுகம் செய்துவைத்தார்.

பாரதி, ஒரு பேயிங் கெஸ்டாக நளினியின் அம்மா வீட்டில் தங்கியிருக்கும் விஷயம் நளினிக்குத் தெரியும்.

கூடுதல் வருமானத்துக்காக அப்படியொரு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கல்யாணி, இம்முறை முருகனும் தங்கள் வீட்டில்தான் தங்கியிருப்பதாகச் சொன்னாள். முத்துராஜா மூலம் அறிமுகமானார் என்றும் சொன்னாள்.

முருகன் எளிமையாக இருந்தார். அடக்கமாக, கனிவாகப் பேசினார். ‘நீங்கள் ஏன் உங்கள் வீட்டுக்கே திரும்பச் சென்று வசிக்கக் கூடாது? எந்த வீட்டில் பிரச்னையில்லை? அதற்காகப் பெற்றோரை, சகோதரர்களை விட்டுவிட முடியுமா?

எல்லா பிரச்னைகளும் தீரும். சந்தோஷமாக இருங்கள்.’

முதல் சந்திப்பிலேயே நளினிக்கு அவரது பேச்சும் பழகும் விதமும் பிடித்துப் போனது. அன்றைக்கு அவர்கள் நான்கு பேரும் பாரிஸ் கார்னருக்குச் சென்று ஷாப்பிங் செய்தார்கள்.

சாப்பிட்ட பிறகு வில்லிவாக்கத்தில் உள்ள நளினியின் வீட்டுக்கே வந்து தங்கினார்கள். புதிய அறிமுகம். புதிய நட்பு. நன்றாகத்தான் இருந்தது நளினிக்கு. அதன்பின் நளினியின் அடையாறு அலுவலகத்துக்கு முருகன் அடிக்கடி வந்து போகத் தொடங்கினார்.

தொடரும்..
-ராகோதமன்-

தொடரும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரில் மூழ்கி ஒருவர் பலி…!!
Next post 1000 தடவை கண்டாலும் தெவிட்டாத காட்சி… யப்பா என்ன அழகுடா சாமி? வீடியோ