புரிந்து கொள்ளப்பட வேண்டிய பூகோள அரசியல்…!! கட்டுரை

Read Time:14 Minute, 53 Second

article_1476422319-sanjayபூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன? தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தியப் பெருங்கடலின் மையத்தில், கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்திருப்பதால், பூகோள அரசியல் மாற்றங்களின் ஒவ்வொரு கட்டத்திலும், இலங்கைத் தீவு அதன் தாக்கத்துக்கு உட்படுகிறது. அதுவே தொடர்ந்தும் நிகழப்போகிறது. இது எவராலும் மாற்றப்பட முடியாத ஒரு விதியாகவே நீளும்.

அகிம்சைப் போராட்டங்களில் இருந்து ஆயுதப் போராட்டத்துக்குத் தமிழர் தரப்பு மாறிய போதே, இந்தப் பூகோள அரசியல் முக்கியத்துவத்தைத் தமிழர் தரப்பு அறிந்திருந்தது.

தமிழரின் ஆயுதப் போராட்டத்துக்குள் இந்தியா வந்ததும், பின்னர், இந்தியாவே அதற்கெதிராகத் திரும்பியதும்கூட இந்தப் பூகோள அரசியலின் தாக்கம்தான்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முழுமையான எழுச்சி, அதன் வீரம், ஈகம், போர்த்திறன், போர் வியூகங்கள், ஆயுதபலம் என்பனவற்றினால் ஏற்பட்டதொன்றாக இருந்தாலும், புலிகளின் வீழ்ச்சியில் பூகோள அரசியலே பிரதான காரணியாக இருந்தது.

பூகோள அரசியல் மாற்றங்களை உள்வாங்கிச் செயற்படத் தவறியமை, புலிகளின் தோல்விக்கு முக்கியமானதொரு காரணியாகச் சொல்லப்படுகிறது.

புலிகளுக்குப் பின்னரும் பூகோள அரசியல் தமிழரின் உரிமைகளுக்கான போராட்டத்துக்குச் சவாலான ஒன்றாகவே மாறியிருக்கிறது.

இலங்கை மீதுள்ள கேந்திர நலன்களால், தமிழர் மீதான சர்வதேசச் சக்திகளின் கவனம் குறைந்து வருவது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ அசுர வளர்ச்சியைக் கண்டார். அது சீனாவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியது.

இந்தியப் பெருங்கடலின் மீதான தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மேற்குலக நாடுகளுக்கு இலங்கை தேவைப்பட்டது. ஆனால் அங்கு ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து நின்ற சீனா அதற்குத் தடையாக மாறிக் கொண்டிருந்தது.

இந்தநிலையில் தனது பக்கத்துக்கு வர மறுத்த மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதை விட வேறு வழி மேற்குலகத்துக்குத் தெரியவில்லை.

அதன் விளைவு, தமிழர்களின் பக்கம் சர்வதேச சமூகத்தின் பார்வை திரும்பியது. போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பது என்ற பெயரில், தலையீடு செய்யத் தொடங்கியது மேற்குலகம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மூலம், மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தலைவலியைக் கொடுப்பதற்கு, அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் தமிழர் தரப்பைப் பயன்படுத்திக் கொண்டன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாகக் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் உச்சமடைந்திருந்த ஒரு கட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ வலியப் போய் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார்.

அந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத ஒரு வியூகம் வகுக்கப்பட்டது. அதில் தமிழர்களும் முஸ்லிம்களும் பங்காளிகளாக்கப்பட்டனர். அதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ இலகுவாகவே வீழ்த்தப்பட்டார்.

அதற்குப் பின்னர், கொழும்பில் அமைந்த ஆட்சி, மேற்குலகிற்குத் தேவையானதைச் செய்யக் கூடியதாக மாறியது. அமெரிக்கா சொல்லுகின்ற வேளைகளில் எல்லாம் தலையாட்டும் வகையில் மைத்திரி – ரணில் அரசாங்கம் செயற்பட்டது.

இதன் மூலம், அமெரிக்கா மற்றும் மேற்குலகிற்கு பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவின் மீதான பிடிமானம் அதிகரித்தது.

இந்தச் சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை விடவும், போர்க்குற்ற மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்ற அறத்தை விடவும், கொழும்பில் அமைந்துள்ள தமக்கு இசைவான அரசாங்கத்தைப் பாதுகாப்பதே, அமெரிக்காவின் முதன்மையான தேவையாக மாறியிருக்கிறது.

இத்தகைய நிலையில் போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக்கூறல், தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எல்லாமே, முக்கியத்துவத்தை இழந்து விட்டன.

இலங்கையின் அபிவிருத்தியும் அதன் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் தான், அமெரிக்காவுக்கு முக்கியமான தேவையாக மாறியிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் எப்போது பொருளாதார ரீதியாகப் பலமிழந்து போகிறதோ அப்போதே, ஆட்சி அதிகாரத்தை அது பறிகொடுக்க ஆரம்பித்து விடும் என்பதை அமெரிக்கா அறியும்.

அதனால்தான், எப்படியாவது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக சீனா போன்ற போட்டி நாடுகளுடன் இணைந்து, இலங்கை செயற்படுவதற்கும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் அனுமதி அளித்திருக்கின்றன.

ஒரு பக்கத்தில் அமெரிக்காவுக்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் பலமானதாக இருக்க வேண்டிய அவசியம் காணப்படுகிறது. மற்றொரு பக்கத்தில், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இலங்கைக்கும் அமெரிக்காவின் ஆதரவு தேவைப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில், சர்வதேச சமூகத்தை நம்பியிருந்த தமிழர்கள் நடுத்தெருவுக்கு வந்து நிற்கின்றனர்.

பூகோள அரசியல் நிலையைப் புரிந்து கொண்டாலும் சரி, புரிந்து கொள்ளாவிட்டாலும் சரி, இலங்கைத் தீவில் தமிழர்களின் நலன் சார்ந்து சர்வதேச சமூகம் செயற்படும் என்று எதிர்பார்ப்பது கடினமானது.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழர்களுக்குச் சார்பாக வீசியது போன்ற காற்று எல்லா நேரங்களிலும் வாய்க்காது. அதுபோலவே அத்தகைய காற்று நிலையானதாகவும் இருக்காது.

இந்தியா, அமெரிக்கா, சீனா என்று முக்கியமான மூன்று வல்லரசுகளும் செல்வாக்குச் செலுத்தும் கேந்திரமாக இலங்கைத் தீவு விளங்குகின்ற நிலையில், இந்த நாடுகளின் செல்வாக்குச் சமநிலையில் எப்போது குழப்பம் ஏற்படுகிறதோ அத்தகைய கட்டத்தில்தான் தமிழர்களின் பக்கம் சர்வதேச கவனம் திரும்பும்.

1980களின் தொடக்கத்தில்
ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக மாறிய போது, கொழும்பை வழிக்குக் கொண்டு வருவதற்காகவே, இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம், தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் கொடுத்துப் பலப்படுத்தியது.

கொழும்பு அரசாங்கத்தை தமது கைக்குள் கொண்டு வரும் வரையில் தான், தமிழர்கள் மீதான இந்தியாவின் கரிசனை நீடித்தது. இந்திய – இலங்கை உடன்பாட்டுக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் இந்தியப்படைகளின் நிலைகொள்ளலை உறுதிப்படுத்துவதற்காகவே, மாகாண ஆட்சி முறை ஒன்றை உருவாக்கி, அதற்குப் பாதுகாப்பு அளிக்கவும் இந்தியா முன்வந்தது.

அதுபோலவே, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சீனாவின் பக்கம் சாய்ந்த போது, அந்த ஆட்சியைத் தோற்கடிக்க இந்தியாவும் மேற்குலகமும் விரும்பின. இம்முறை யாரும் யாருக்கும் ஆயுதங்களைக் கொடுக்கவில்லை.

மாறாக, தமிழ் மக்களின் வாக்குகளை ஆயுதமாக மாற்றிக் கொண்டனர். போரில் இழைக்கப்பட்ட அநீதிகளால் கொதித்துப் போயிருந்த தமிழ்மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டன.

முன்னர் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து சமநிலை குழம்பிய போது, இந்தியாவின் தலையீடு ஏற்பட்டது. மீண்டும் சீனாவின் பக்கம் சாய்ந்து சமநிலை மாறிய போது, அமெரிக்காவும் இந்தியாவும் தலையிட்டன.

ஆக, இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ சார்பில்லாத வகையில் சமநிலை மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுகின்ற ஒவ்வொரு தருணத்திலும் அந்தக் குழப்பங்களைத் தீர்ப்பதற்கான கருவிகளாகத் தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்தியாவும் அவ்வாறே பயன்படுத்தியது; அமெரிக்காவும் அவ்வாறே பயன்படுத்தியது. இதுவரையில் சீனா தமிழர்களைப் பயன்படுத்த முன்வரவில்லை. அதன் வெளிவிவகாரக் கொள்கையில் அரசாங்கம் அல்லாத தரப்புகளைப் பெரும்பாலும் அங்கீகரிப்பதில்லை என்பது, இதற்கு முக்கியமானதொரு காரணம்.

இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம்தான், தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாக நீண்டு செல்வதற்கு முக்கியமான காரணம்.

எல்லாத் தரப்புகளும் தமது தேவைகளுக்காகத் தமிழர்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருந்தாலும், தமிழர்களின் தேவைகளையும் அரசியல் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதில்லை.

இந்தப் பூகோள அரசியல் நிலையானது, தமிழரின் உரிமைப் போராட்டங்களுக்கு முக்கியமான சவால் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுதான், தமிழரின் உரிமைப் போராட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்களை முன்னகர்த்த வேண்டும்.

இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாமல் – அதன் நலன்களுக்கும் இடையூறாக அமையாமல், அமெரிக்காவையும் ஒதுக்கித் தள்ளாமல், அதன் தயவையும் பெற்றுக் கொண்டு, சீனாவையும் அரவணைத்துக் கொண்டு தமிழர்களால் ஒரு நிலையான அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பது அவ்வளவு இலகுவானது அல்ல.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த மு.திருநாவுக்கரசு எழுதிய அரசியல் யாப்பு தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆய்வாளர் நிலாந்தன், எதிர்க்காற்றில் பயணம் செய்வது எப்படி என்று விபரித்திருந்தார்.

எதிர்க்காற்றில் பயணித்தவர்கள் அழிந்து போனதையும் எதிர்க்காற்றுடன் சேர்ந்து பயணம் செய்தவர்கள் எங்கேயோ அள்ளுண்டு போனதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதிர்க்காற்றுடன், அவ்வப்போது முட்டியும் வெட்டியும் ஓடுகின்ற ஒரு வித்தையை அதற்கு அவர் உதாரணமாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது இலகுவானது அல்ல; உடனடியாகச் சாத்தியமானதும் அல்ல; காலதாமதம் ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இந்த உதாரணத்தின் மூலம், ஒன்றை விளங்கிக் கொள்ள முடியும். தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்பது உடனடியாகச் சாத்தியமற்றது என்பதே அது.

பூகோள அரசியலையும் தாண்டி தமிழர்கள் ஒரு தீர்வை எட்ட வேண்டுமானால், அதற்கு முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையும் சாதுரியமும் தமிழர்களிடமும் தமிழர் தலைமைகளிடமும் இருக்கிறதா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள்…!!
Next post காதலிக்கும் போது கண்டிப்பாக நிறுத்தக்கூடாத விஷயம்…!!