வெலிக்கடை சிறைச்சாலையில்.. “சராசரி எட்டு அடி அகலம் கொண்ட அறையில் ஆறு பெண்களுடன் தள்ளப்படடேன்: இரவுகள் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தின…!!

Read Time:27 Minute, 52 Second

timthumb• புகையிலை மணமும் கஞ்சா வெறியுமாகக் கண்கள் சொருகிய நிலையிலிருந்த ஆண்கள் ஒவ்வொருவருக்கும் விலங்குபோட்டுப் பெரிய இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

• போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்துபோய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவதும் எத்தனை மோசமான இழிச்செயல்?

• விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தமிழ்ப் பெண்கள் அங்கு விசாரணைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

தொடர்ந்து….

கொழும்பு சி.ஐ.டி.இல் 20.05.2009 தொடக்கம் 29.09.2009வரை நான் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பல்வேறுபட்ட விசாரணைகளுக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தவர்களோடும் தங்கியிருந்தேன். போலி வெளிநாட்டு முகவர்கள், பணமோசடி புரிந்தோர், புலிச் சந்தேக நபர்கள் என இலங்கையின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல ஆண் பெண்கள் அங்கிருந்தனர்.

எனது குடும்பம், விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ் மக்கள் என்ற வட்டத்திற்கு வெளியே பலதரப்பட்ட மக்களுடனும் பழகுவதற்கான சந்தர்ப்பம் அங்குதான் எனக்கு ஏற்படத் தொடங்கியது.

அப்பாவித்தனமான பல பெண்கள் சூழ்நிலை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.

இன்னும் சில பெண்கள் எந்தப் பயமும் இன்றிக் குற்றங்களைச் செய்வதில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர்.

அப்படியானவர்களோடு ஒரு நாளைக் கழிப்பதே ஒரு யுகமாக இருந்தது.

இருபத்து நான்கு மணி நேரமும் எம்மை அடைத்து வைத்திருந்த கூட்டிற்கு வெளியே சி.ஐ.டி. பெண்கள் தொடர்ந்து காவலிருந்தனர். மலசலக் கூடத்திற்கும் குளிப்பதற்கும் அவர்கள் எங்களுடனே கூட வந்து அருகிலே நிற்பார்கள்.

பெண்களைத் தடுத்து வைப்பதற்கான இடம் ஆறாம் மாடியிலிருந்து நாலாம் மாடிக்குத் திடீரென மாற்றப்பட்டது.

ஆண்களைத் தடுத்து வைத்திருந்த இடத்தில் ஒரு கம்பிக்கூடு எமக்கும் ஒதுக்கப்பட்டு அங்கே தங்கிக்கொள்ளும்படி விடப்பட்டோம்.

எந்த மறைப்புகளும் இல்லாத இடத்தில் எப்படித் தங்குவது எனச் சிந்தித்த பெண் பிள்ளைகள் நாங்களாகவே எம்மிடமிருந்த போர்வைகள், பாய்கள் என்பனவற்றைக் கொண்டு மறைப்புக் கட்டிக்கொண்டோம்.

அதனை அவதானித்த அதிகாரிகள் மறுநாள் பெரிய ‘சிப்போட்’ பலகைகளைக்கொண்டு நேர்த்தியான மறைப்பை உருவாக்கியிருந்தனர். இதை எதற்காக இங்கே நான் எழுதுகிறேன் என்றால், ஒருபெண் சிறை சென்று மீள்வது என்பது எமது சமூகத்தில் மிகவும் அவமானத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாலே அந்தப் பெண்களை மானமிழந்து போனவர்களாகக் கருதி ஒதுக்கி வைக்கும் மோசமான மனப்பாங்குகொண்ட மனிதர்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

போர்க்களத்திலே பெண்கள் ஆயதமேந்திப் போராடுவதை ஏற்றுக்கொண்ட சமூகம், அவர்கள் ஆயிரக்கணக்கில் களமுனைகளில் உயிரிழந்தபோது வீராங்கனைகள் எனப் போற்றிய சமூகம், அதே பெண்கள் சிறைகளுக்கும் புனர்வாழ்வு முகாம்களுக்கும் சென்றுவரும்போது மட்டும் அவர்களைத் தரம் தாழ்ந்துவிட்டவர்களாகக் கருதுவது மிகவும் கொடூரமானது.

இத்தனைக்கும் மேலாகத் தமிழ்ப் பெண்களின் மானத்தைக் காற்றிலே பறக்கவிட்டு அரசியல் நலன் தேடும் சுயநலமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இறுதிப் போரில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட சகோதரிகள் மட்டுமல்ல, போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே எண்ணுக் கணக்கற்ற பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டே வந்துள்ளனர்.

விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்களில் இருந்தவர்களும்கூட இப்படியான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலும் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆண் உறுப்பினர்களுக்குப் பல போராளிகள் முன்னிலையில் மரண தண்டனைத் தீர்ப்புகள் நிறைவேற்றப்பட்ட சில சந்தர்ப்பங்களும் இருந்தன.

போராட்டங்களுக்கும் யுத்தங்களுக்கும் முகம் கொடுக்கும் சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உயிரழிவுகள் மாத்திரமல்ல, இப்படியான பாலியல் வதைகளும் காலங்காலமாக நடந்தே வந்திருக்கின்றன.

அது மட்டுமல்லாமல் ஒரு பெண் போராடப் புறப்படுகின்றபோது தன்னுடைய தன்மானத்தைக் காத்துக்கொள்ளும் வல்லமையையும் தனக்குள்ளே ஒரு நெருப்பாகப் பற்றவைத்துக்கொள்கிறாள்.

களமுனையிலே ஒரு பெண் போராளி நிற்கும்போது தன்னுடைய உயிர் மட்டுமல்ல, தன்மானமும் இழக்கப்படலாம் என்கிற ஆபத்து அவளுக்குத் தெரிந்தே உள்ளது.

இருந்தும் இனத்தின் ஒரு பொது இலட்சியத்திற்காக அவள் துணிந்து களத்தில் நின்றிருக்கிறாள். அந்த அர்ப்பணிப்பின் நன்மைகளை அனுபவிக்கச் சித்தமாயிருந்த சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வைக் கொச்சைப்படுத்தியே பார்க்கிறது.

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்துகிறது.

போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்துபோய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவதும் எத்தனை மோசமான இழிச்செயல்?

விடுதலைப் போராட்ட வாழ்க்கையிலும் கொடுமையான சிறை வாழ்க்கையிலும் நெருப்பாய்க் கனன்று, தமது மானத்தைப் பாதுகாத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான சக போராளிகளை நானறிவேன்.

கொழும்பு சி.ஐ.டி விசாரணையில் நான்கு மாதங்களாக நீடித்த எனது விசாரணைகள் முற்றுப் பெற்றதன் பின்பு, என்னிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.

மீண்டும் சட்ட வைத்திய அதிகாரியிடம் மருத்துவப் பரிசோதனை அறிக்கை பெறப்பட்டதன் பின்னர் 29.09.2009 அன்று கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதிமுன் ஆஜர்படுத்தப்பட்டேன்.

அவரது உத்தரவின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையின் விளக்க மறியலுக்கு அனுப்பப்பட்டேன். வெலிக்கடை சிறையின் பெண்கள் பகுதியில் எனது சிறைவாழ்வு நீளத் தொடங்கியது.

நான் வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இரவு ஏழு மணி கடந்துவிட்டிருந்தது. அன்றைய நாள் வழக்குக்காக நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டவர்களும் புதிதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுமாகப் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திலிருந்து வெலிக்கடை சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தோம்.

சி.ஐ.டியில் இருந்த நான்கு மாதங்களில் சிங்கள மொழியில் சில வார்த்தைகள் எனக்குப் பரிச்சயமாகியிருந்தனவே தவிர இன்னொருவருடன் பேசுகிற அளவுக்குச் சிங்களம் தெரியாது.

அன்றைய நாள் நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு என்னுடன் கொண்டுவரப்பட்ட அனைவருமே சிங்களப் பெண்களாக இருந்தனர்.

“சிறைச்சாலை எனப் பெயர் பொறிக்கப்பட்டதும் ஜன்னல்களுக்குக் கம்பிவலை பொருத்தப்பட்டதுமான நீல நிறப் பேருந்து வெலிக்கடை சிறை மதில்களுக்குள் நுழைந்தது.

அங்கே முதலாவதாக இருப்பது வெலிக்கடை சிறையின் பிரதான பகுதி.

அந்த இடத்தில்தான் அனைவரும் பதிவுசெய்யப்படுவது வழக்கம். ஆண்களின் சிறைப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள இடம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

தண்டணை வழங்கப்பட்ட கைதிகள் வெள்ளை நிற உடைகளுடன் காணப்பட்டனர். எங்களை ஏற்றிவந்த பேருந்திலும் சில ஆண்களைக் கொண்டு வந்திருந்தனர்.

புகையிலை மணமும் கஞ்சா வெறியுமாகக் கண்கள் சொருகிய நிலையிலிருந்த ஆண்கள் ஒவ்வொருவருக்கும் விலங்குபோட்டுப் பெரிய இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

பெண்களுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அதே பேருந்தில் ஏற்றப்பட்டு அருகிலேயே அமைந்திருக்கும் பெண்கள் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டோம். இரு பெரிய இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் இன்னொரு உலகம் விரிந்து கிடந்தது.

இரவு நேரமாகிவிட்டபடியால் கைதிகள் அனைவரும் அடைக்கப்பட்டிருந்தனர். உள்ளே கொண்டு வரப்படும் கைதிகளை உடற்பரிசோதனை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் கடற்படை அலுவலர்கள் எனது உடைமைகளையும் என்னையும் பரிசோதனை செய்தனர்.

வெறுப்படையச் செய்யும் சிறையின் கொடுமைகளில் ஒன்றான உடற்பரிசோதனை என்ற அருவருப்பை அன்றே அனுபவிக்கத் தொடங்கினேன். சிறைச்சாலையில் தங்குமிடத்தின் கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பப்பட்டோம்.

கால் வைக்க இடமிருக்கவில்லை. அவ்வளவு சன நெருக்கடியாக இருந்தது. உட்கார்ந்துகொண்டும் படுத்துக்கொண்டும் சலசலவென்று கதைத்துக்கொண்டும் பெண்கள் நிறைந்துபோயிருந்தனர்.

என்னை உள்ளே தள்ளிக் கதவைப் பூட்டிவிட்டுச் சிறை அதிகாரி போய்விட்டார். நான் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றேன். ஒரே இரைச்சலாக இருந்தது.

ஏற்கனவே என்னை அறிந்திருந்த ஒரு பெண் எனது பையை வாங்கிக்கொண்டு, தனது இடத்திற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்.

சற்று நேரத்திற்கு இந்த இடத்தில் இருங்கள். நான் போய் லீடரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். எனக் கூறிச் சென்றார்.

கொழும்பு சி.ஐ.டியில் நானிருந்தபோது பழகிய சில தமிழ்ப் பெண்களும் அங்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஓடிவந்து என்னுடன் கதைத்தார்கள்.

உண்பதற்காகத் தம்மிடமிருந்த பிஸ்கட்டுக்களையும் ஒரு போத்திலில் தண்ணீரையும் தந்தார்கள். காலையிலிருந்து எதுவுமே உண்ணாத காரணத்தால் வயிறு பசியில் எரிந்துகொண்டிருந்தது.

வேகமாகச் சாப்பிட்டு முடித்தேன். லீடரைக் கூட்டிக் கொண்டு வந்து புதிதாக வந்த கைதிக்குப் படுக்க ஒரு இடம் ஒதுக்கிக் கொடுக்கும்படி அந்தப் பெண்கள் கூறினார்கள்.

ஒரு குள்ளமான தோற்றத்துடன் இருந்த சிங்களப் பெண்தான் லீடர் ஆவர்.

போதை மருந்து விற்ற காரணத்திற்காகப் பல வருடக்கணக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகப் பின்னர் அறிந்தேன்.

அவர் எனக்காக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுக்கும்படி அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கூறினார். தனக்குப் பக்கத்தில் இடம் இல்லை என அவர் மறுத்துச் சத்தம் போட்டு ஏசத் தொடங்கினார்.

லீடரும் பதிலுக்கு ஏசினார்.

அதன்பின் என்னை அந்த இடத்திலே இருக்கவிடுவது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

“உங்களது உடுப்புகளை மடித்து ஒரு தலையணையாக செய்துகொள்ளுங்கள்.

இங்கே ஒரு சிறிய தலையணை வைக்க மட்டும்தான் இடம் தருவார்கள். அதிலேதான் நீங்கள் படுத்துறங்குவது தொடக்கம் உங்களது பொருட்களையும் வைத்துக்கொள்ள வேண்டும்” என அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் எனக்குக் கூறினார்கள்.

மேலும் சிறைச்சாலையில் நான் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் எடுத்துச் சொன்னார்கள்.

“இங்கிருக்கும் நடைமுறைகளை சரிவரக் கடைபிடிக்காவிட்டால் கிடைக்கும் ஏச்சுப் பேச்சுக்களைத் தாங்கிக்கொள்ள முடியாது. பார்த்து நடந்துகொள்ளுங்கள்” என வற்புறுத்தினார்கள்.

நான் கவலையுடன் சுற்றுமுற்றும் பார்த்தேன். இன்னும் எத்தனைக் காலத்திற்கு இப்படியிருக்க வேண்டிவருமோ என நினைத்துக்கொண்டேன்.

ஆனால் இரண்டு வருடமும் ஒன்பது மாதங்களும் அந்தச் சிறைச்சாலை ஒரு பல்கலைக்கழகம் போல மனித வாழ்வின் இன்னொரு பக்கத்தை எனக்குக் கற்றுத் தந்தது.

ஒரு மனிதனை மகா ஞானியாக்கவும், மகா கெட்டவனாக்கவும் சிறைச்சாலையினால் முடியும் என்ற உண்மையை அங்கேதான் அறிந்துகொண்டேன்.

பொதுவாகவே பெரும்பாலான சமூகங்கள் சிறை மனிதர்களை அவமானச் சின்னங்களாகக் கருதிப் புறக்கணிப்பதன் காரணமாக அவர்களுடைய மனவுணர்வு களைப் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

அதனால்தான் அவர்கள் தாங்களே ஒரு தனிச் சமூகமாகித் தமது நியாய அநியாய சிந்தனைகளோடு சிறையுலகைத் தமது ஆளுகைக்குட்படுத்தி தமக்கான வாழ்வின் எல்லையை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

“சிறைக் கைதிகளும் மனிதர்களே” என்ற அந்தச் சிறைவாசகத்தினுள் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் மிகவும் ஆழமானவை.

நான் வெலிக்கடை சிறைக்குச் சென்ற முதல் நாள் எனக்கு முப்பத்திரண்டாவது இலக்கமுடைய கொட்டுவையில் படுக்க இடம் கிடைத்தது.

அது நான் அமர்ந்திருந்த கொட்டுவைக்கு அடுத்த கொட்டுவைதான்.

ஒரு கோடுதான் எல்லை. அதாவது கட்டடம் கட்டும்போது நிலம் வெடிக்காமலிருப்பதற்காக இடப்படும் சிமெண்ட் இடைவெளி, அதுதான் கொட்டுவைகளாகப் பிரிக்கும் அடையாளம்.

நான் நகர்ந்து அடுத்த கொட்டுவைக்குச் சென்றுவிட்டேன். ஆனால் படுக்க இடம் எடுப்பதுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது.

ஏற்கனவே அங்கிருந்த கைதிகளுக்கே இடம் பெரிய பிரச்சனையாக இருக்கும்போது என்னையும் சேர்த்துக்கொள்ள அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு முஸ்லிம் பெண், தமிழ்ப் பேசக்கூடியவர். மிகுதி அனைவரும் சிங்களப் பெண்கள்.

புதிதாக வந்த கைதியான என்னைத் தங்களுடன் சேர்த்துத் தங்கவைத்துக்கொள்ள அவர்கள் எவருக்குமே விருப்பமில்லாத காரணத்தால் அவர்களுடன் என்னைத் தங்கிக்கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்ற லீடர் பெண்ணை ஆளுக்காள் ஏசத் தொடங்கினார்கள்.

அந்தக் கொட்டுவையில் இருந்த பெண்களுக்கும் ஒரு லீடர் இருந்தார். ஒரு சொல்கூடத் தமிழ்த் தெரியாது; கை அசைவுகளின் மூலம் என்னுடன் பேசினார்.

தன்னருகே எனக்குப் படுத்துக்கொள்ளும்படி ஒரு சிறிய இடத்தை ஒதுக்கித் தந்தார்.

ஒரு கொட்டுவையின் அளவு சராசரி எட்டு அடி அகலம் தான் இருக்கும். அங்கே ஆறு பெண்கள் படுத்துக்கொள்ள வேண்டும்.

சிறிது உயரமானவர்கள் கால் நீட்டிக்கொண்டு படுக்க முடியாது. நிமிர்ந்து படுப்பதற்கு இடம் போதாது.

இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு படுக்க முடியாது. எப்படித்தான் சமாளித்துக்கொண்டு படுத்தாலும் பக்கத்தில் படுத்திருப்பவருடன் தட்டாமல் முட்டாமல் படுக்கவே முடியாது.

திரும்பிப் படுக்க முடியாது. நுளம்பு கடித்துவிட்டால் அவசரமாகத் தட்டிவிட முடியாது.

இத்தகைய நெருக்கடிகளுக்கிடையே உறங்குவதே ஒரு பெரிய சாதனையாக இருந்தது. தினசரி படுக்கை விரிக்கும் நேரத்தில் அருகருகே இருப்பவர்கள் சண்டை போட்டுக்கொள்வது வழக்கமென்பதை அடுத்த நாளே தெரிந்துகொண்டேன்.

உண்மையில் சிறை வாழ்வின் நுட்பங்களை அறிந்து என்னை அதற்கேற்ப சரிப்படுத்திக்கொள்வது சாதாரண விடயமாக இருக்கவில்லை.

அந்த நேரத்தில் எனக்குள்ளே இருந்த பொறுமை பற்றி நானே வியந்துகொண்டேன். யார் என்னதான் பேசினாலும் நான் பேசாமலே இருக்கக் கற்றுக் கொண்டேன்.

என் தலையணையைத் தலைக்கு வைத்து ஒரு கட்டையைப் போல் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொள்வேன்.

இரவைப் பகலாக்கும் சக்திவாய்ந்த மின்விளக்குகள் விடியும்வரை ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். கண்ணைக் கூசவைக்கும் அந்த வெளிச்சத்திலிருந்து விடுபடுவதற்கு முகத்தினைச் சிறிய துணி யொன்றினால் மூடிக்கொள்ளுவேன்.

எனையறியாமலே கண்ணயர்ந்துகொண்டு செல்லும்போது, பக்கத்திலிருப்பவர்கள் எவராவது மெதுவாகச் சுரண்டுவார்கள்.

“சரிந்து படு, இடம் போதாது” அவள் சொல்வதைக் கேட்காவிட்டால் ஏச்சுவாங்க வேண்டி வரும் என்ற பயத்துடன் மெதுவாகச் சரிந்து படுக்கும்போது, “சரியாதே சரியாதே நிமிர்ந்து படு” என இன்னொருத்தி சத்தம் போடத் தொடங்கிவிடுவாள்.

ஆரம்பத்தில் எனக்குப் பயமாகவே இருந்தது. நான் பதற்றத்துடன் பெரும்பாலும் எழுந்து அமர்ந்துகொள்வேன். சில நேரங்களில் நடுச் சாமத்திலும்கூட உரத்துக் கத்திச் சண்டை போடுவார்கள்.

நான் முகத்தை மூடிக்கொண்டு சுவரருகே ஒண்டிக்கொண்டிருப்பேன். எத்தனையோ இரவுகள் விடியும்வரை ஒரு பொட்டு உறக்கம் கொள்ளாது விழித்தபடியே கழித்திருக்கிறேன்.

நான் சிறைக்குச் சென்ற மறுநாள் காலை அலுவலகத்திற்குக் கூப்பிட்டு ஒரு சிறிய கடதாசி மட்டையில் எனது றிமாண்ட் இலக்கமும் வாட் இலக்கமும் கொட்டுவ இலக்கமும் எழுதித் தந்தார்கள்.

அலுவலகத்திலும் நீண்டகாலத் தண்டனை பெற்ற கைதிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருந்தது. பெண் சிறைக் காவலர்களை ‘நோனா’ என அழைக்க வேண்டும்.

அந்த நோனாக்களுக்கு நல்லவிதமாக நடந்துகொள்கிறோமோ இல்லையோ ‘சீனியர் கைதி’களுக்கு நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும்.

அப்படியில்லாத புதிய கைதிகளின் பாடு அதோ கதிதான். சிறையின் முழுக் கட்டுப்பாட்டு அதிகாரங்களும் நடைமுறையில் சீனியர் கைதிகளிடம்தான் இருப்பது வழக்கம்.

ஒரு சிறிய கம்பிக் கூட்டுக்குள் மாதக்கணக்காக அடைந்து கிடந்த காரணத்தால் விறைத்துப்போன கை கால்கள், சிறை வளாகத்திற்குள் கொஞ்சம் உலவித் திரிந்ததும், இரண்டு நாட்களுக்கும் மேலாகப் பயங்கர நோவும் உளைவுமாக இருந்தது.

மழையும் வெயிலும் தெரியாத கட்டடக் குகைக்குள்ளிருந்து வெலிக்கடைக்குப் போனதன் பின்பு உயரமான மதில்களைத் தாண்டி வரும் வெளிக்காற்றைச் சுவாசித்தேன்.

சிறு வயதிலிருந்தே இரவு வானத்தை நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. மாலை நேரத்தில் சிறைக் கதவுகள் பூட்டப்படும் வரை மாலைநேர வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.

உயிரைப் பிழியும் கடந்தகால நினைவுகள் கரும்மேகங்களாக எப்பொழுதும் என்னைச் சுற்றி மிதந்துகொண்டேயிருப்பதுபோல உணர்ந்தேன்.

அதிகம் தனிமை தேடி அமர்ந்துகொண்டேன். உறக்கம் வராத இரவுகள் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தின.

இடைவிடாத தலைவலியும் மனப் பாரங்களுமாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மன நோயாளியாகிக் கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கே வர ஆரம்பித்திருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தமிழ்ப் பெண்கள் அங்கு விசாரணைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களில் பல வயதான பெண்மணிகளும் இருந்தார்கள். காலையில் சிறைக் கதவு திறந்ததுமே நெருக்கடி மிகுந்த குளியலிடத்திற்குச் சென்று குளித்து முழுகித் திருநீறு, சந்தனம், குங்குமம் அணிந்துகொண்டு கோவில் வாசலிலே நிற்பார்கள்.

விடுதலைப் புலிப் போராளிகளைத் தமது சொந்தப் பிள்ளைகளாகக் கருதி உதவிசெய்த பல தாய்மார் அந்தப் போராளிகளால் இனங்காட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

திருமணம் முடித்த இளம் தாய்மார் சந்தேக நபர்களாகச் சிறைவைக்கப் பட்டிருந்தனர். நான் போயிருந்த காலத்தில் இரண்டு பெண்கள் தமது குழந்தைகளுடன் இருந்தனர்.

மூன்று வயது ஆண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தையும் தமது தாய்மாருடன் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

இதனைவிட விடுதலைப் புலி உறுப்பினர்கள் அல்லாத பல இளம் பெண்கள் திருமண வயதில் அங்கிருந்தனர்.

தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜிம் செல்பவர்கள் புரோட்டீன் பவுடரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!
Next post கொழும்பு புறநகரப் பகுதியில் பதற்றம் நால்வர் பலி! அச்சத்தில் மக்கள்..!!