By 25 October 2016 0 Comments

காணாமல் போகும் குளம்…!! கட்டுரை

article_1476852585-kuduvilநீர் என்பது ஒரு தேசத்தின் செல்வமாகும். அதுவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டுக்கு நீரின் தேவை இரட்டிப்பானது. அதனாலேயே, எமக்கு அருகிலுள்ள இந்தியாவில் காவேரி ஆற்றின் நீரைப் பங்கு போட்டுக்கொள்வதில், இரண்டு மாநிலங்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், எமது நாட்டில் நீரைத் தருகின்ற ஆறு, நதி, குளங்கள் குறித்தும் அவற்றைப் பராமரிப்பது தொடர்பிலும் நாம் பெரிதாக அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.

எமது நாட்டை மன்னர்கள் ஆட்சி செய்தபோது, அவர்களில் அதிகமானோர்; குளங்களை அமைப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். மகாசேன மன்னன் 16 குளங்களை நிர்மாணித்ததாக வரலாறு கூறுகிறது. அவற்றில் மின்னேரியாக்குளம் பிரதானமானது. அதேபோன்று பராக்கிரமபாகு மன்னன், பராக்கிரமபாகு சமுத்திரத்தை நிறுவினார். கந்தளாய்க்; குளத்தை சோழகங்க தேவன் என்கிற இயற்பெயரைக் கொண்ட குளக்கோட்டன் எனும் மன்னர் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இப்படி நிர்மாணிக்கப்பட்ட குளங்கள் ஒருபுறமிருக்க, இயற்கையாக அமைந்த குளங்களும் எமது நாட்டில் கணிசமாக உள்ளன. அவ்வாறானவற்றில் ஒன்றே இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குடுவில் குளமாகும்.

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ளது குடுவில் எனும் கிராமம். 175 குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது குடுவில் குளம். இயற்கையாக அமைந்துள்ள இந்தக் குளம், அந்தப் பிரதேசத்தின் செல்வமாகும்.

நன்னீர் மீனவர்களுக்கும் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் குடுவில் குளம் பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், 40 க்கும் மேற்பட்ட தோணிகளைக் கொண்டு, தினமும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். குடுவில் குளத்தில் கிடைக்கும் மீன்களுக்கு அந்தப் பகுதியில் கிராக்கி அதிகமாகும். அந்த மீன்கள் நல்ல ருசியானவை என்று கூறுகின்றனர். இன்னொருபுறம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களுக்குத் தேவையான நீரை குடுவில் குளத்திலிருந்தே விவசாயிகள் பெற்றுவந்தனர்.

இப்படி பெரும் வளமாகத் திகழ்ந்த குடுவில் குளம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சோபையை இழந்துவிட்டது என அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குடுவில் குளம் இப்போது பெரும் புதர்களாலும் பற்றைகளாலும் நீர்த் தாவரங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுக் காணப்படுகிறது. அங்கு ஒரு குளம் இருப்பதையே கண்டுகொள்ள முடியாமல் உள்ளது. கிட்டத்தட்ட குடுவில் குளம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

குடுவில் குளத்தை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த 40 தோணிகளில் ஒரேயொரு தோணி மட்டுமே இப்போது அங்கு தொழிலில் ஈடுபட்டு வருகிறது. பற்றைகளும் நீர்த் தாவரங்களும் வளர்ந்து நிற்கும் குளத்தில், தோணியின் மூலம் பயணித்து மீன்பிடிப்பதில் பெரும் சிரமங்கள் உள்ளதாக நாம் சந்தித்த மீனவர்கள் கூறுகின்றனர். இதனால், தமது வாழ்வாரத்துக்கான வருமானத்தை மீன்பிடித் தொழில் மூலம் அந்தக் குளத்தில் பெற்றுவந்த ஏராளமான மீனவர்கள், இப்போது அந்த வருமானத்தை இழந்து நிற்கின்றார்கள்.

இன்னொருபுறம் குடுவில் குளத்திலிருந்து நீரைப் பெற்று, நெற்செய்கையில் ஈடுபட்டுவந்த விவசாயிகளும் தற்போது பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். பெரும் புதர்களாலும் பற்றைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட குளத்திலிருந்து விவசாயத்துக்கான நீரைச் சாதாரணமாகப் பெற்றுக்கொள்வதில் தாம் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணசபையின் விவசாயத் திணைக்களத்தினுடைய நிர்வாகத்தின் கீழ் குடுவில் குளம் உள்ளது. அதனால், குறித்த திணைக்களத்தினரே இந்தக் குளத்தைப் பராமரிக்க வேண்டியவர்களாக உள்ளனர். ஆனால், அந்தக் குளம் பற்றைகளாலும் புதர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, பயன் பெற முடியாத நிலையில் உள்ளபோதும், அதனைத் திருத்தியமைப்பதில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தாமல் உள்ளமை குறித்து குடுவில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இரு தடவைகள் இந்தக் குளத்தைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 2001ஆம் ஆண்டு ஒரு திட்டத்தின் கீழ் குடுவில் குளம் புனரமைக்கப்பட்ட அதேவேளை, 2015ஆம் ஆண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. சுமார் 68 இலட்சம் ரூபாய் செலவில் கடந்த வருடம் இந்தக் குளத்தைப் புனரமைப்புச் செய்யும் செயற்பாடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகின்ற போதும், அவ்வாறு ஒரு புனரைமப்பு வேலை நடைபெற்றமைக்கான எந்தவித அடையாளமும் இங்கு தெரியவில்லை. குடுவில் குளத்தில்; முழுக்க புதர்களும் அதே பற்றைகளுமே காணப்படுகின்றன.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கமும் வெளிநாட்டு நிறுவனங்களும் வழங்குகின்ற நிதி, முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கு கடந்த காலங்களில் குடுவில் குளத்தில் ‘புனரமைப்புப் பணி’ எனும் பெயரில் நடைபெற்ற செயற்பாடுகள் உதாரணமாக உள்ளன என்று அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். 68 இலட்சம் ரூபாயைச் செலவு செய்து, கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளின் ஒரு சுவட்டினைக் கூட, குடுவில் குளத்தில் காண முடியவில்லை.

அம்பாறை மாவட்டமானது நெற்செய்கை விவசாயத்தில் முன்னணியிலுள்ள ஒரு பிராந்தியமாகும். நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 20 சதவீதத்தை அம்பாறை மாவட்ட விவசாயிகளே வழங்குகின்றனர். ஆனால், இதற்காக அந்த விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் ஏராளமானவையாகும்.

குடுவில் குளத்திலுள்ள நீரை நம்பி, நெற்செய்கையை மேற்கொள்ளும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளுக்குச் சொந்தமான விவசாயிகள் உள்ளனர். ஒரு காலத்தில் அந்தக் குளத்திலிருந்து பிரச்சினைகள் எவையுமின்றி நீரைப் பெற்றுக்கொண்டவர்கள், இப்போது பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புதர்களும் பற்றைகளும் ஆக்கிரமித்துள்ள குளத்திலிருந்து தேவையான அளவு நீரைத் தேவையான காலத்தில் பெற்றுக்கொள்வது என்பது முடியாத காரியமாக உள்ளது என்று நாம் சந்தித்த விவசாயிகள் கூறுகின்றனர்.

நெற்செய்கையில் உரிய காலங்களுக்கு நீர் கிடைக்காமல் போகுமாயின், உரம் இடுதல் மற்றும் நாசினிகளை விசிறுதல் போன்றவற்றில் தடைகள் ஏற்படும். இதனால், நெற்பயிற்கள் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதோடு, விளைச்சலிலும் பாரியளவு வீழ்ச்சி ஏற்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குடுவில் குளமானது பற்றைகளாலும் புதர்களாலும் நிறைந்து காணப்படுகின்றமையால், அந்தக் குளத்தின் எல்லையை அடையாளம் காண்பதில் சிரமங்கள் உள்ளன. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் பலர், குடுவில் குளக்கரையை அண்டியுள்ள காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களை அண்டியுள்ள பல பகுதிகள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்களும் இவ்வாறான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. ஆறு மற்றும் குளக் கரைகளை மண் மூடி நிரப்பி, அவற்றைக் காணியாக்கி ஆக்கிரமிப்புச் செய்யும் நடவடிக்கைகளை அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் காண முடியும். இயற்கை

வளத்தை அழித்து, தமக்குச் சொந்தம் அற்ற நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்யும் இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோமானாவை எனத் தெரிந்துகொண்டும், பலர் அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர். குளங்களும் ஆறுகளும் இலங்கை போன்ற ஒரு விவசாய நாட்டுக்கு மிகவும் முக்கியமானவையாகும். கடந்த காலத்தில் ஆயிரம் குளங்களை நிர்மாணிக்கும் திட்டமொன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. கோடிக்கணக்கான பணத்தொகையைக் கொட்டிப் புதிய குளங்களை நிர்மாணிப்பதை விடவும், இருக்கின்ற குளங்களை முறையாகவும் தொடர்ச்சியாகவும் பராமரித்து வந்தாலே, இப்போதைக்குப் போதுமானதாகும். அவ்வாறான பராமரிப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுதல் அவசியமாகும். இலாபத்தை மட்டும் நோக்காகக் கொண்ட கொந்தராத்துக்காரர்களிடம் குறித்த நடவடிக்கைகள் கையளிக்கப்படுவதில் எவ்வித பிரயோசனமும்; இருக்காது.

குடுவில் குளத்தைப் புனரமைக்க வேண்டும் என்பதில் அப்பிரதேச மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இது தொடர்பில் அந்தப் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, அரசியல்வாதிகள் பலரையும் சந்தித்து வந்தனர். ஆனால், அதற்குரிய பிரதிபலன் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூரை குடுவில் பிரதேச மக்கள் அண்மையில் சந்தித்து, குடுவில் குளத்தைப் புனரமைப்புச் செய்வதற்கான உதவிகளைப் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீருக்காக அலையும் எத்தனையோ பிரதேசங்களை இன்றும் நாம் கண்டு கொண்டிருக்கின்றோம். ஆனால், நூறு ஏக்கர் பரப்பில் ஒரு குளம் இயற்கையாகக் கிடைக்கப் பெற்றும், அதனைப் பராமரிப்பதில் அக்கறை அற்ற எம்மவர்களின் அலட்சிய மனப்பாங்கானது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இன்னொருபுறம், அபிவிருத்தி எனும் பெயரில் பெருந்தொகை நிதியைச் செலவு செய்து கட்டடங்களைக் நிர்மாணித்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் உண்மையான அபிவிருத்திகள் எவை என்பதை அடையாளம் கண்டு செயற்படுதல் அவசியமாகும்.

நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கைக் காணிகளுக்கு நீரை வழங்குவதோடு, ஏராளமான மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கான தொழிலைச் செய்கின்ற இடமாகவும் அமைந்துள்ள குடுவில் குளத்தைப் புனரமைப்புச் செய்வதே உண்மையான அபிவிருத்தியாக அமையும். ஆனால், எதைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாமல், எதைச் செய்யக் கூடாதோ அவற்றை நாம் செய்துகொண்டிருக்கின்றோம். மட்டுமன்றி, அவற்றுக்கு அபிவிருத்தி என்று நாம் பெயர்களையும் வைத்து வருகின்றோம். இயற்கையாக அமைந்துள்ள ஆறுகளின் கரையோரங்களை மண்ணிட்டு நிரப்பி, அங்கு கொங்கிறீட் வீதிகளை அமைத்து, மின்சாரக் கம்பங்களையும் நிறுத்திவிட்டு, இயற்கையை தாங்கள் அழகுபடுத்தி விட்டதாகக் கூறிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கணிசமாக உள்ளனர்.

இயற்கையைப் பாதுகாப்பதில் எமது மூதாதையர்களுக்கு முரணாக நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இயற்கையை உதாசீனப்படுத்தத் தொடங்கியதிலிருந்து ஏராளமான அழிவுகளை நாம் சந்தித்து வருகின்றோம். ஆனால், அவற்றிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவே இல்லை. கோடி ரூபாய்களைக் கொட்டி செலவு செய்தாலும், சில பிரதேசங்களில் ஒரு கிணற்றைக் கூட அமைக்க முடியாது. ஆனால், 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு குளத்தைப் பாதுகாப்பதில் அக்கறை அற்றுச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எம்மவர்களின் அலட்சியம் கண்டனத்துக்கு உரியதாகும். எமக்கு இயற்கையாகக் கிடைத்த ஏராளமான செல்வங்களை நாம் இழந்து விட்டோம். எமது பொறுப்பற்ற தன்மையும் அலட்சியங்களுமே அதற்குக் காரணங்களாகும். அந்தத் தொடர்ச்சியில் குடுவில் குளத்தையும் நாம் இழந்து விடக்கூடாது.Post a Comment

Protected by WP Anti Spam