வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? கட்டுரை

Read Time:14 Minute, 17 Second

article_1477112167-sanjayகடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார்.

இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னமும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல்க் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை
இரா.சம்பந்தன், பின்னரும் அவ்வப்போது நினைவுபடுத்தியிருந்தார். அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியாது என்பது முன்னரே ஊகிக்கக்கூடிய விடயம்தான்.

ஏனென்றால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு பிரச்சினைக்குச் சில மாதங்களுக்குள் தீர்வைப் பெற்று விட முடியாது. அதைவிட, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இதயசுத்தி, அர்ப்பணிப்பு, துணிச்சல் என்பன சிங்கள அரசியல் தலைமைகளிடம் இருக்கிறதா என்ற சிக்கலும் உள்ளது.

மேலும், இனப்பிரச்சினைத் தீர்வைக் குழப்புவதற்கென்றே காத்திருக்கும் தரப்புகளையும் சமாளிக்க வேண்டும்.

இந்த மூன்றையும் தாண்டி, இந்த அரசாங்கத்தினாலோ, இரா.சம்பந்தனாலோ குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவது ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை.

அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, இதனைச் சாதிக்கலாம் என்பதே
இரா.சம்பந்தனின் எதிர்பார்ப்பாக இருந்தது. இன்னமும் அந்த நம்பிக்கை அவரிடம் இருக்கிறது. ஆனால் இப்போதுள்ள அந்த நம்பிக்கை முழுமையானதா என்று தெரியவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல்க் காலத்தில் இரா.சம்பந்தன், “2016ஆம் ஆண்டுக்குள் ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் எனத் நான் நம்புகிறேன்” என்று தான் வாக்குறுதியைக் கொடுத்திருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனை நிறைவேற்றுவேன் என்றில்லாமல், நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி தான் அது. எனவே, 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது நம்பிக்கை நிறைவேறவில்லை என்ற காரணத்தை அவர் கூறக்கூடும்.

ஆனால், அதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் எதிர்வினை எத்தகையதாக இருக்கும்? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

இந்தப் பின்னணியில், கடந்த வாரம் வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் கலந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரனை நோக்கியே பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

அந்த நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கு சுமந்திரன் அளித்த பதில்களும் இருதரப்பிலும் பரிமாறிக் கொள்ளப்பட்ட வார்த்தைகளும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

சமூக வலைத்தளங்களில் சுமந்திரனை வறுத்தெடுப்பதற்குக் காத்திருக்கும் தரப்பினர் காணொளியாகவும் ஒளிப்படமாகவும் வெளியிட்டுத் தமது கருத்துக்களையும் கருத்துக்கள் என்ற பெயரில் குத்தல்களையும் பரிமாறிக் கொள்கின்றனர்.

ஊடகப் பரப்பில் சுமந்திரனை விமர்சனம் செய்வது ஒரு கலையாகவே மாறியிருக்கிறது. சுமந்திரனின் அரசியல் கருத்துக்கள் சில சமயங்களில் விமர்சனங்களைக் கொண்டதாகவே இருந்தாலும், அவரது வாயைக் கிளறுவதற்கென்றே கூட்டங்களுக்குப் பலரும் செல்கின்றனர் போலவும் தெரிகிறது.

இரண்டு மாதங்களின் பின்னர், அதாவது இரா. சம்பந்தன் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் என வவுனியாக் கூட்டத்தில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அந்தக் கேள்விக்குச் சுமந்திரன் விருப்பத்துடன் பதிலளித்திருக்கவில்லை. அவர், அதனை “இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சொல்கிறோம்” என்று சற்றுக்கோபத்துடன் தான் தட்டிக் கழித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கியும் சம்பந்தனை நோக்கியும் சுமந்திரனை நோக்கியும் கேள்விகளை எழுப்புபவர்களில் பலரும் அரசியல் தீர்வு காணப்படாமைக்கு இவர்களே காரணம் என்று குற்றம்சாட்டும் வகையில் தான் கேள்விகளை எழுப்புகின்றனர். இதுபோன்ற கேள்விகளில் அரசியல் உள்நோக்கமும் இருக்கிறது.

அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல்த் தீர்வு காணும் தற்போதைய முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால், அடுத்த என்ன செய்வது என்ற கேள்வி பலரிடமும் இருப்பதை மறுக்க முடியாது.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அரசியல் வழியில் போராட்டங்களை நடத்தியும் இதுவரையில் எந்த முடிவும் காணப்படவில்லை; ஆயுதவழியில் போராடியும் எந்த முடிவும் காணப்படவில்லை. இது கடந்த காலம் கற்றுத் தந்துள்ள பாடம்.

மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம், ஒருபக்கத்தில் தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்தியிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் அது தொடங்கிய இடத்துக்கே மீண்டும் கொண்டு சென்று விட்டுவிட்டே முடிவுக்கு வந்தது.

அகிம்சை வழியில், அரசியல் வழியில்த்தான் இனித் தமிழரின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்ற கட்டத்தில்தான் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் நிறைவடைந்தது.

எனவே, இப்போது இருக்கின்ற ஒரே வழி அரசியல் – ஜனநாயக வழியிலான போராட்டம் மட்டும்தான். இது ஏற்கெனவே
ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களினால் கையாளப்பட்டு தோல்வியில் முடிந்த ஒரு வழிமுறையும் கூட.

மீண்டும் அதே வழிமுறையைத்தான்
இரா.சம்பந்தனும், 2009ஆம் ஆண்டு கையில் எடுத்திருந்தார்.

இந்த அரசியல் வழிமுறையில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவது சுலபமான காரியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே! என்றாலும், சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை வைத்து அவரையும் கூட்டமைப்பையும் தோலுரிக்க வேண்டும் என்பதே பலரதும் ஆசையாக இருக்கிறது.

யார் குற்றியும் அரிசியாக வேண்டும் என்ற மனப்பாங்கு தமிழர் தரப்பில் அரசியலில் உள்ளவர்களுக்கு கொஞ்சமும் கிடையாது. இங்கு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிட்ட வேண்டும் என்பதே முதன்மையான தேவையும் அவசியமுமாகும். அது கூட்டமைப்பினால் சாத்தியமாகுமா அல்லது வேறு தரப்புகளினால் சாத்தியமாகுமா என்பது முக்கியமான விடயமல்ல.

இந்தக் கட்டத்தில் சம்பந்தனையோ, சுமந்திரனையோ, கூட்டமைப்பையோ சந்திக்கு இழுத்து, வாக்குவாதம் செய்வதோ, நையாண்டி செய்வதோ தமிழர் பிரச்சினைக்கான தீர்வை ஒருபோதும் விரைவுபடுத்தாது.

ஏனென்றால், தமிழர் பிரச்சினைக்கான தீர்வு சிங்கள அரசியல் தலைமைகளிடம் இருந்துதான் வரவேண்டுமே தவிர, தமிழர் தலைமைகளிடம் இருந்து அல்ல.

தமிழர் தரப்பில் பிடுங்குப்பாடுகள் அதிகரிக்குமேயானால், பிளவுகளும் பிரச்சினைகளும் ஏற்படுமேயானால், அதன் விளைவுகளைத் தமிழர்களே அனுபவிக்க நேரிடும்.

கடந்த காலங்களில் தமிழர் தரப்புப் பிளவுபட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்கள அரசியல் தலைமைகளே நன்மைகளை அனுபவித்த வரலாறு கண்முன் நிற்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, சம்பந்தனோ, சுமந்திரனோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களில்லை. அதேவேளை, தேவையற்ற விமர்சனங்களும் குழப்பங்களும் தமிழர் தரப்பின் பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொள்ளும் துணிச்சலையும் அதற்கான புதிய உத்திகளையும் சிங்களத் தலைமைகளுக்கு கொடுக்கும்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி ‘எழுக தமிழ்’ நிகழ்வு நடத்தப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்து நின்றது சிங்களத் தலைமைகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

அதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தீர்வு முனைப்புகள் எதிர்க்கப்படுவதையும் அவர்கள் உற்சாகத்தோடுதான் பார்க்கிறார்கள். காரணம் தமிழர்கள் பிரிந்து நிற்கும் சந்தர்ப்பங்களை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதில் அவர்கள் வல்லவர்கள்.

இந்த நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யலாம்?

சிலர், இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்கின்றனர். வேறு சிலர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்கின்றனர். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத போது, பதவி விலகுவது ஓர் அரசியல் நீதிதான்.

ஆனால், இந்தக் கட்டத்தில் சம்பந்தனோ, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ பதவி விலகுவதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்து விடாது. இதுவும் வரலாறு தந்த பாடம். 1983ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, தமிழர் விடுதலைக் கூட்டணியில் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகினர். அதனால் எதனைச் சாதிக்க முடிந்தது?

அதற்குப் பின்னர், 1989ஆம் ஆண்டு சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டு, ஈரோஸ் பெற்றிருந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 1990ஆம் ஆண்டு பதவி விலகினர். இதன் மூலமும் எதையும் சாதிக்க முடியவில்லை.

இந்தக் காலகட்டத்தில் தமிழரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போனதுதான் மிச்சம். அதுபோன்றதொரு நிலையை மீண்டும் ஏற்படுத்துவதால் எதனைச் சாதிக்க முடியும்?

அவ்வாறெனின், தமிழர் தரப்பு எவ்வாறு அரசியல்த் தீர்வு ஒன்றை நோக்கி அரசாங்கத்தையும் சிங்களத் தலைமைகளையும் இழுத்து வரப் போகிறது?

அதுவும் பின்னால் இருந்து இழுத்துக் கொண்டிருக்கும் தரப்புகளையும் சமாளித்துக் கொண்டு, இதனை எவ்வாறு செய்யப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடையம் அருகே நெஞ்சை உருக்கும் காட்சி: இறந்த மான் குட்டியைத் தேடி அலையும் தாய்..!!
Next post ஆண்கள் பெண்களிடம் கொஞ்சமும் வாய் கூசாமல் சொல்லும் பொய்கள்…!!