By 7 November 2016 0 Comments

உலகமே பெரும்பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை..!!

201609280853113254_us-election-2016-polls-donald-trump-and-hillary-clinton_secvpfஅமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. ஹிலாரி, டிரம்ப் உச்சக்கட்ட பிரசாரம் செய்கின்றனர். இருவரது பேச்சிலும் அனல் பறக்கிறது.

உலகமே பெரும்பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிக்க தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 69 சதவீதம் பேர் நிச்சயம் இந்த தேர்தலில் ஓட்டு போடப்போவதாக உறுதி அளித்துள்ளனர்.

ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே ஓட்டு போடும் வசதியை பயன்படுத்தி, ஓட்டு போட்டுவிட்டனர்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (70) இடையே ‘நீயா, நானா?’ என்கிற அளவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்தாலும், இருவருக்கும் இடையேயான ஆதரவு வித்தியாசம் குறைவாக இருக்கிறது.

எனவே வாக்காளர்களை இறுதிக்கட்டமாக கவருவதில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிலாரி தனது பிரசாரத்துக்கு பாப் பாடகிகள் பியான்சே, கேத்தி பெர்ரி ஆகியோரை பயன்படுத்தி வருகிறார்.

டிரம்பைப் பொறுத்தமட்டில் நட்சத்திர பிரசாரகர்கள் யாரும் இல்லை என்ற பட்சத்திலும் அவர் தனது குடும்பத்தினரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்.

ஹிலாரி, டிரம்ப் இருவருமே ஒருவர் மீது மற்றவர் ஆவேச குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். அனல் பறக்க பேசுகிறார்கள். அமெரிக்க மக்கள் இருவரது பேச்சுக்களையும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் தீர்ப்பை ஓட்டுச்சீட்டின் மூலம் நாளை வழங்க இருக்கிறார்கள்.

ஹிலாரி, வடக்கு கரோலினா மாகாணத்தின் தலைநகரான ராலே நகரில் தனது கடைசி பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதுபற்றி அவரது பிரசார குழுவினர் கூறும்போது, “தனது இறுதி பிரசாரத்தின்போது ஹிலாரி ஒவ்வொருவருக்கும் பலன் அளிக்கிற வகையில் பொருளாதாரத்தை உருவாக்க வைத்துள்ள திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறுவார். உச்சக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது சாமானிய மக்களுக்கும் பலன் கிடைக்கத்தக்க வகையில், அவர் அமெரிக்கா தொடர்பான தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவார்” என்று கூறுகின்றனர்.

இறுதி பிரசாரத்துக்கு முன்னதாக ஹிலாரி, கணவர் பில் கிளிண்டனுடன் ஒரு பிரமாண்ட கூட்டத்தில் பேசவும் ஏற்பாடு ஆகி உள்ளது. இதில் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் பங்கேற்க உள்ளனர்.

முதலில் இருந்த பின்னடைவான நிலைமையில் இருந்து டிரம்ப் மீண்டும் வந்து இருப்பதையே கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. இது அவருக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.

“ஜனநாயக கட்சியினர் தாங்கள் வலுவாக உள்ளதாக கூறிய இடங்களில் எல்லாம் இப்போது சமனில் உள்ளோம் அல்லது அவர்களை விட முன்னிலையில் இருக்கிறோம். அடுத்து மின்னசோட்டாவுக்கு செல்கிறோம். அங்கு குடியரசு கட்சிக்கு ஆதரவு இருந்தது இல்லை. ஆனால் நாங்கள் வியக்கத்தக்க அளவில் பிரசாரம் மேற்கொள்கிறோம். அடுத்து கொலராடோ செல்கிறோம். அங்கும் அப்படித்தான் சிறப்பான பிரசாரத்தில் ஈடுபடுவோம். ஒவ்வொரு இடத்திலும் முத்திரை பதிப்போம்” என்று டிரம்ப் ஆர்ப்பரித்து சொல்கிறார்.

இப்போது கடைசியாக ‘மெக்கிளாட்சி மாரிஸ்ட்’ கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகி இருக்கிறது. இதில் ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 43 சதவீத ஆதரவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

உதிரிக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் ஆதரவு இல்லாமல் இல்லை. லிபர்டேரியன் கட்சி வேட்பாளர் கேரி ஜான்சனுக்கு 6 சதவீதமும், கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீனுக்கு 2 சதவீதமும், அரசியல் சாசன கட்சி வேட்பாளர் டேரல் கேசிலுக்கு 3 சதவீதமும் ஆதரவு உள்ளது. 2 சதவீதத்தினர் யாருக்கு வாக்கு அளிப்பது என தீர்மானிக்காமல் உள்ளனர்.

அனைத்து முன்னணி தேர்தல் கருத்துக்கணிப்புகளையும் ஆராய்ந்து வருகிற ‘ரியல்கிளியர் பாலிடிக்ஸ்’, குடியரசு கட்சியை விட ஜனநாயக கட்சிக்கு கூடுதலாக 1.7 சதவீத ஆதரவு இருப்பதாக கூறுகிறது.

இறுதிக்கட்டமாக வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காக மிச்சிகன், பென்சில்வேனியா, இயோவா, புளோரிடா, வடக்கு கரோலினா, வெர்ஜீனியா மாகாணங்களில் டிரம்ப் பிரசாரம் செய்ய உத்தேசித்துள்ளார்.

இதே போன்று ஹிலாரியும் ஓஹியோ, நியூஹாம்ப்ஷயர், வடக்கு கரோலினா, மிச்சிகனில் பேச திட்டமிட்டிருக்கிறார்.

இந்த தேர்தலில் ‘பாப்புலர் ஓட்டு’ என்றழைக்கப்படுகிற மக்களின் வாக்குகளை யார் அள்ளினாலும், தேர்தல் சபையின் 538 வாக்குகளில் 270 ஓட்டுகளை பெறுகிறவர்தான், அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியை அலங்கரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.Post a Comment

Protected by WP Anti Spam