By 7 November 2016 0 Comments

மகாத்மா காந்தியின் பேரனின் துயரநிலை..!!

201611071234231838_gandhijis-grandson-battles-death-in-penury_secvpfஆங்கிலேயர்களுக்கு எதிராக கடந்த 1929-ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்யாகிரகத்தின்போது, கடற்கரை மணலில் கைத்தடியை பற்றி காந்தியை இழுத்துக் கொண்டு ஓடும் சிறுவனாக, அப்போது பரபரப்பாக பேசப்பட்ட கானுபாய்க்கு இப்போது 87 வயதாகிறது.

காந்தியின் மறைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் மசாஸுசெட்ஸ் நகருக்கு ஜவஹர்லால் நேருவால் அனுப்பி வைக்கப்பட்ட கானுபாய், அங்கு படிப்பை முடித்தார்.

அதன்பின்னர், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’வின் ஆய்வுக் கூடத்தில் போர் விமானங்களின் இறக்கைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, பாஸ்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியவரும் டாக்டர் பட்டம் பெற்றவருமான ஷிவலட்சுமியுடன் கானுபாய்க்கு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் திருமணம் நடந்தது.

அமெரிக்காவில் இந்த தம்பதியர் சுமார் 40 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து வந்தனர். பணத்துக்கு குறைவில்லை என்றாலும், குழந்தை பாக்கியம் இல்லையே என்ற ஏக்கம் அவர்களை வாட்டிய நிலையில், அவர்கள் இருவரும் திடீரென நிராதரவாக உணர்ந்தனர்.

இதையடுத்து, குஜராத்தில் உள்ள உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம் எனக் கருதி கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் இந்தியா திரும்பினார். குஜராத்தில் உள்ள காந்தியின் உறவினர்கள், கானுபாய் தம்பதிக்கு அடைக்கலம் அளிக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த இருவரும் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்தனர்.

அங்கு பராமரிப்பு சரியில்லை என்று வேறொரு இல்லம் மாறினர். இப்படியே கடந்த இரண்டாண்டுகளை கழித்த அவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள குரு விஷ்ரம் விருத் என்ற ஆசிரமத்தை கடந்த ஆண்டு வந்தடைந்தனர்.

இதற்கிடையே, தேசப்பிதாவின் பேரனும் அவரது மனைவியும் முதியோர் இல்லத்தில் தங்கி இருப்பது பற்றி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதுபற்றி விவரம் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்த தம்பதியைச் சந்திக்கும்படி மத்திய கலாசாரத்துறை மந்திரி மகேஷ் சர்மாவை அறிவுறுத்தினார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி அந்த ஆசிரமத்துக்கு சென்ற மத்திய கலாசாரத்துறை மந்திரி மகேஷ் சர்மாவை சந்தித்தார். அப்போது, மகேஷ் சர்மாவின் செல்போனில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கானுபாய் தம்பதி தொடர்புகொண்டு பேசி மகிழ்ந்து, நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து, கானுபாய் தம்பதிக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கும்படி மகேஷ் சர்மாவிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகருக்கு வந்த கானுபாய் காந்தி திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். உடலின் ஒருபக்கம் செயலிழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இங்குள்ள ராதாகிருஷ்ணா ஆலயத்தின் தர்ம ஸ்தாபனத்தால் நடத்தப்படும் ஷிவ்ஜோதி ஆஸ்பத்திரியில் அனாதரவான நிலையில் மரணப்படுக்கையில் கிடப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவரது மனைவிக்கு ஷிவலட்சுமிக்கு தற்போது 90 வயதாகிறது. காது கேளாமை மற்றும் முதுமைசார்ந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவரும் இங்குள்ள ராதாகிருஷ்ணா ஆலய நிர்வாகத்தினரின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இவர்களின் பரிதாபநிலை தொடர்பாக அறியவந்ததும் கானுபாய் காந்தியின் நெருங்கிய நண்பரும் மகாத்மா காந்தியின் சத்தியகிரக போராட்டத்தில் முன்னர் பங்கேற்ற தியாகியின் பேரனுமான திமந்த் பாதியா என்பவர் சுமார் 20 ஆயிரம் ரூபாயை இந்த தம்பதியருக்கு அனுப்பி வைத்து, உதவியுள்ளார்.

’கானுபாயின் நிலையை பற்றி கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு உதவி செய்வதாக முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இன்றுவரை பிரதமரின் அலுவலகத்தில் இருந்தோ, குஜராத் அரசின் சார்பாகவோ எவ்வித உதவியும் செய்யப்படவில்லை.

அதுமட்டுமின்றி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மந்திரிகளோ, அரசியல் கட்சி தலைவர்களோ கானுபாயை நேரில் வந்து பார்க்காதது மட்டுமின்றி, அவரைப்பற்றி விசாரித்து அறிந்துகொள்ளகூட அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று அகமதாபாத் நகரில் வசிக்கும் திமந்த் பாதியா வேதனையுடன் கூறுகிறார்.

வயதான நிலையில் என்னால் அகமதாபாத்தில் இருந்து சூரத்துக்கு அடிக்கடி சென்று அவரை பார்த்துவர முடியவில்லை என்றும் திமந்த் பாதியா கவலையுடன் தெரிவித்தார்.

அதிர்ஷ்டவசமாக மும்பையில் வசித்துவரும் கானுவின் வயதான சகோதரி அடிக்கடி அவரது உடல்நிலை பற்றி விசாரித்து வருகிறார்.

இதேபோல், பெங்களூரில் வசிக்கும் இன்னொரு சகோதரியும் முன்னாள் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினருமான சுமித்ரா குல்கர்னி, சூரத் நகருக்கு வந்து கானுபாயை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்ட ராதாகிருஷ்ணா ஆலய நிர்வாகிகள் இந்த நாட்டுக்கு மகாத்மா காந்தி ஆற்றிய சேவைக்கு கைமாறாக நாங்களே இந்த செலவை கவனித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த செய்திகள் எல்லாம் கடந்த ஒருவார காலமாக சமூகவலைத்தளங்கள் மூலமாக பரவிவரும் நிலையில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தருவதற்காக தனது வாழ்நாளை தியாகம் செய்த மகாத்மா காந்தி பேரனின் துயரநிலையை அறிந்து உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் தேசப்பற்றுமிக்க இந்தியர்களும் கொதிப்படைந்துள்ளனர்.Post a Comment

Protected by WP Anti Spam