நைஜீரியாவில் 75 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை: ஐ.நா. கவலை..!!

Read Time:4 Minute, 43 Second

201611161028038471_un-says-75000-children-in-nigeria-risk-dying-in-months_secvpfஆப்பிரிக்காவின் எண்ணெய்வளம் மிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். 17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்நாட்டில் உள்ள ஏராளமான ஏழை மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு 2 டாலர்களை விட குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போகோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர்.

நைஜீரியாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள முஹம்மது புஹாரி, அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தை அபுஜாவில் இருந்து மைடுகுரி நகருக்கு மாற்றப்போவதாக அறிவித்தார். மைடுகுரியில் போகோஹரம் மற்றும் இதர தீவிரவாத குழுக்கள் பெருமளவிலான தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த முயற்சியை முறியடிக்கும் விதமாக மைடுகுரியில் தீவிரவாதிகள் தங்களது தாக்குதலை அதிகரித்துள்ளனர். இதன்விளைவாக, நாட்டின் பல பகுதிகளில் தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் வீராவேசமாக போரிட்டு வருகின்றனர். போகோஹரம் தீவிரவாதிகள் பல பதுங்குமிடங்கள் தாக்கி அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த மோதலில் இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.

கடந்த 2009-ம் ஆண்டு துவங்கிய போகோஹரம் தீவிரவாதிகளின் ஆயுதப் போராட்டத்துக்கு பின்னர் இருதரப்பு மோதல்களில் இதுவரை 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25 லட்சம் மக்கள் தங்களது இருப்பிடங்களைவிட்டு குடிபெயர்ந்து அகதிகளாக, வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதனால், உள்நாட்டில் விவசாயம் பொய்த்தும், வியாபாரம் நொடிந்தும் நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக சரிந்துள்ளது.

இதன் விளைவாக, வரும் ஜனவரி மாதத்துக்கான உத்தேச மதிப்பீட்டின்படி சுமார் ஒன்றரை கோடி மக்கள் உணவு, உடை உள்ளிட்ட மனிதநேய உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களில் சுமார் 20 லட்சம் பேர் மைடுகுரி நகரில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெகு குறிப்பாக, மனிதநேய உதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் 4 லட்சம் குழந்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவர்களில் சுமார் 75 ஆயிரம் குழந்தைகள் அடுத்தடுத்த மாதங்களில் பட்டினியால் நம் கண்முன்னால் சாகும் பரிதாப நிலை உருவாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய மைய ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லுன்டர்பெர்க் கவலை தெரிவித்துள்ளார்.

நைஜீரியா நாட்டில் உள்ள தனியார் கண்காணிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டில் அன்றாடம் பத்துக்கும் அதிகமான மரணங்கள் பட்டினியால் நிகழ்வதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூசணிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
Next post திண்டுக்கல் அருகே திருமண கார் விபத்து: மாப்பிள்ளையின் பெற்றோர் பலி…!!