By 30 April 2006 0 Comments

விடுதலை இயக்கங்களின் சீரழிவு

கட்சி அல்லது மாற்றுக் கட்சி என்றெல்லாம் கருத்துக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்தில் எது கட்சி? எது மாற்றுக் கட்சி? என்ற பேதம் வெளியில் இருந்து நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்குத் தெரியாது. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பது ஈழத்துப் பாமரர்களுக்கு நன்கு தெரியும். இதை உணர்ந்து கொள்ளாமல் தம்மை விடுதலை இயக்கங்கள் என்று அடையாளமிட்டுக் கொள்ளும் அமைப்புகள் அனைத்தும் பரிதாபத்துக்குரியவையே!

துப்பாக்கிக் கலாசாரத்துக்குப் பயந்தே மனிதம் வாய் மூடி மௌனித்து நிற்கின்றது ஆபிரகாம் லிங்கனின் சனநாயகக் கோட்பாட்டை முழுமையாக உச்சரிக்கும் அமைப்புகள் எவையுமே ஈழத்தில் இல்லை. பூர்சுவாக்கள் சிலரின் பம்பரமாகவே இவ்அமைப்புகள் உள்ளன அவர்களின் குறிக்கோள்களை மறைமுகமாக நிறைவேற்றவே ஈழத்தில் இன்று நடக்கும் அதிகாரப் போட்டிகளாகும். எண்பத்திமூன்றாம் ஆண்டின் ஆடிப் படுகொலைகளைத் தொடர்ந்து விடுதலை நோக்கத்துடன் இளைஞர்கள் வீறு கொண்டெழுந்தது என்பது உண்மை தான். ஆனால் உள்ளே திட்டமிட்ட உட்கட்சிக் கொலைகளும் சகோதரப் படுகொலைகளும் அடிமட்ட உறுப்பினர்களின் அல்லது தொண்டர்களின் அர்ப்பணிப்புகளை, தியாகங்களை ஏற்க மறுத்தமையுமே விடுதலை இயக்கங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
விடுதலை பெற வேண்டுமெனக் கனாக்கண்டு ஈழத்தை நேசித்து போராட்டக் களத்தில் வித்தாகிப் போன வீரமறவர்களின் பெயர்கள் நினைவில் இருந்தே அழிந்து விட்டது தான் உண்மை. நினைத்துப் பார்க்கவே மனம் கனக்கின்றது. ஈழத்தை நேசித்து சுதந்திரமாக தமிழினம் வாழ வேண்டுமென புறப்பட்டு வந்த இளைஞர்களுக்கு அக்காலத்தில் இயக்க வேறுபாடு தெரியவில்லை முதலில் வந்து கருத்துக் கூறிய அமைப்புகளுடன் இணைந்து கொண்டார்கள் வேலைத்திட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்கள் சிங்களப்படை திக்குமுக்காடி நின்றது ஈழவிடுதலைப் போராளிகள் தத்தமது இயக்க அடையாளங்களுடன் ஒன்றித்துப் போராடுவதனை நினைத்து அயல்நாடே வியந்து நின்றது.

இப்படியான நேரத்தில் பாசிச வெறிபிடித்த பிரபாகரன் தானே தமிழீழத்தின் ஏகப் பிரதிநிதியாக இருக்க வேண்டுமென நினைத்து சகோதர இயக்கப் போராளிகளை துரோகிகளென பெயரிட்டு மிருகங்களை வேட்டையாடுவதைப் போன்று சுட்டுக் கொலை செய்து தெருவிலே டயர் போட்டு எரித்ததை என்னவென்று சொல்வது…
புலிகளின் கொலை வெறியில் இருந்து தப்பித்து சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்று குறைந்த வேதனத்தில் பல வருடங்கள் வேலை செய்து விட்டு போராட்ட சிந்தனையை மறந்து தாயகம் திரும்பி திருமணம் செய்து வயிற்றுப் பசிக்காக கூலித்தொழில் செய்து பிள்ளை குட்டிகளுடன் சந்தோசமாக வாழ்ந்த அப்பாவிகள் பலர் புலிகளின் கொலை வெறிக்கு இப்போதும் இரையாகிக் கொண்டிருப்பதை என்னவென்று எடுத்துரைப்பது…

புலிகளின் வெறியாட்டத்துக்குப் பயந்து உயிர் பிழைத்துக் கொள்ள உடனடி நிவாரணமாக ஸ்ரீலங்கா படைமுகாமுக்குள் அடைக்கலம் கோரிய தமிழ் இளைஞர்கள் புலிகளின் பார்வையில் துரோகிகளாக சோடிக்கப்பட்டு சந்தர்ப்பம் பார்த்து கொல்லப்பட்டார்கள். இதனால் பயமடைந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த அப்பாவிகள் வெளியே வரமுடியாமல் துணைப்படைகளாக மாற வேண்டிய துர்ப்பாக்கியம் நிறைந்த சம்பவங்கள் ஏராளம்.

இவ் அப்பாவிகளை இன்று வரை தொடர்ந்து புலிகள் வேட்டையாடிக் கொண்டே இருப்பதால் அவர்களது சனநாயகத்தின் பரிமாணம் நன்குபுலனாகின்றது. மன்னிப்பு என்பது உதட்டளவில் மாத்திரம் தானா?

விடுதலைப் புலிகளிடத்தில் முரண்பட்டு பிரிந்து சென்ற கருணாஅம்மான் தனிநபரென கூறப்பட்டு பின்னர் கருணா குழுவாகி இப்போது கட்சியொன்றுக்குத் தலைவராகவும் உருவாகியுள்ளார் இவ்வளவுக்கும் காரணமாக இருந்த விடயம் புலிகளின் அதிகார வெறியேயாகும்.

போராட்ட களத்தில் எதிரியை மண்டியிட வைக்க வேண்;டுமென்பதற்காக துணிந்து போரிட்டு ரணமாகி வித்தாகிப் போன மாவீரர்கள் ஒரு பக்கம் சர்வாதிகார நோக்கத்தில் அப்பாவிகளை துரோகிகளாகவும் விரோதிகளாகவும் கருதி கொன்றொழித்ததால் உருவாகிய மாவீரர்களின் பட்டியல் இன்னொரு பக்கம.; இதை எந்தளவுக்கு இவ் விடுதலை அமைப்புகளை வழி நடத்தியவர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்களோ தெரியாது. ஆனால் மரணித்த மறவர்களின் பெயர்ப் பட்டியல் இவர்களின் கைவசம் இருக்கின்றதா என்பதே பெரிய கேள்விக் குறியாகும். இயக்கத் தலைவர்கள் எனத் தம்மை பறை சாற்றிக் கொள்ளும் மனிதர்கள் சுத்தமான தங்களது நாவினால் வீரமரணமாகிய இம் மறவர்களின் பெயர்ப் பட்டியல் எம் கைவசம் இருக்கின்றது என ஓங்கிக் கூறுவார்களா?

இந்த வினாவுக்கு இந்திய அமைதிப் படையுடன் கைகோர்த்து தமிழ்த் தேசிய இராணுவம் எனும் படையை உருவாக்கி பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை முகவரி இல்லாமலும் உயிரோடு இல்லாமலும் தமிழர் பாரம்பரியத்தை மாற்றியமைத்து இன்று எதுவுமே தெரியாதவர்கள் போன்று விடுதலைப் புலிகள் அமைப்பில் பிரமுகர்களாக வீற்றிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், போன்றவர்களும் வரதராஜப்பெருமாள், சித்தார்த்தன், பரந்தன் ராஜன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் பதிலிறுப்பார்களா? பாவம் முதற்சாடிய மூவரும் தங்களது இயக்கத்தின் தலைவரின் படத்தினை திருப்பிப் பார்க்கத் திராணியற்று புலிகளின் விசுவாசிகளாக இருப்பதனை என்னவென்று எழுதுவது! அந்தந்த அமைப்புசார்ந்த வீரமறவர்களினது படங்களை தங்களது காரியாலயத்திலும் இணையத்தளங்களிலும் இணைத்துக் கொள்வார்களா? அத்துடன் மரணத்தின் காரணத்தையும் சேர்த்துக் கொள்வார்களா?

விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அமைப்புகளும் இதுவரை முழுமையாக மரணித்த வீரர்களின் படங்களைச் சேர்த்துக் கொண்டதாகத் தகவல் இல்லை. என்றாலும் விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புகளை விட ஒரு படி மேலே போய் மரணித்த மாவீரர்களை மதிக்கின்றார்கள் கௌரவம் செய்கின்றார்கள். இவ்விடயம் வரவேற்கக்கூடியது. இதனை மற்றைய கட்சிகளும் பின்பற்றினால் மரணித்த மறவர்களின் ஆத்மாக்கள் நிச்சயம் புனிதம் அடையும்: இப்புனிதர்களை கட்சித் தலைமைகள் புனிதப்படுத்துமா.

இப்படியான சீர்கேடுகளே தியாக உணர்வோடு போராடப் புறப்பட்டு வந்த இளைஞர்களை திசைதிருப்பியது என்றால் அதில் மிகையாகாது. தொடர்ந்து ஈழவிடுதலை எனும் நோக்கோடு இவ்வமைப்புகள் செயற்படுமாயின் எதிர்காலத்தில் இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்பது உண்மை. ஜனநாயக உரிமைகளை ஏற்காமையும் அப்பாவி உயிர்களுக்கு மதிப்பளிக்காமையும் ஈழ தேசத்துக்குச் கிடைத்த சாபக் கேடேயாகும். இப்படியாகச் சீரழிந்த ஈழத்தை வென்றெடுப்பது ஈழ விடுதலை இயக்கங்கள் அனைத்தினதும் தலையாய கடமையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளினால் அனைத்து விடுதலை இயக்கங்களையும் ஒன்றிணைத்து நடத்தும் போராட்டமே இறுதி இலக்கை அடையும்.

www.athirady.comPost a Comment

Protected by WP Anti Spam