By 23 November 2016 0 Comments

முட்டை உடைந்து விட்டது; ‘பொரியல்’ கிடைக்குமா? கட்டுரை

article_1479829439-kasinathகறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை இந்திய அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது’ என்று நவம்பர் எட்டாம் திகதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு, இந்திய நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

2014 பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில், ‘வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்போம்’ என்பது தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் பிரசாரத்தின் பொழுது, “வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் செலுத்தப்படும்” என்று அப்போதைய பா.ஜ.கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி அறிவித்தார்.

தமிழகத்தில் அண்ணா எப்படி “ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி” என்று கூறி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை 1967 இல் அமைத்தாரோ, அதே பாணியில் மோடியின் இந்த “15 இலட்சம் வைப்பு” வாக்குறுதி மூலம் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை வீழ்த்தி, பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியை அமைத்தார்.

பிரதமராகப் பொறுப்பேற்றதும் ‘கறுப்புப் பணத்தை மீட்பதற்கு’ ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட ​ஆலோசனைக் குழுவை அமைத்தார். பா.ஜ.க தலைமையிலான அமைச்சரவையின் முதல் தீர்மானம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு, கறுப்புப் பண மீட்பில் பெரிய சாதனை எதையும் நிகழ்த்த முடியாமல் பா.ஜ.க ஆட்சி இரு வருடங்கள் ஓடிப் போனது. இந்த நிலையில் பா.ஜ.கவின் வேறு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, மதச் சார்பின்மைக்கு விரோதமான சில நடவடிக்கைகள் அக்கட்சிக்குப் பல மாநிலங்களிலும் செல்வாக்கைப் பெற்றுத் தர மறுத்தது.

‘மேக் இன் இந்தியா’ என்ற பிரசாரத்தை முன்னிறுத்திப் பல செயல் திட்டங்களை பிரதமர் மோடி வகுத்தாலும், பா.ஜ.கவில் உள்ள மற்ற அமைப்புகள் முன்னிறுத்திய முழக்கங்கள் பிரதமரின் செயல் திட்டத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

அதனால் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க அரசாங்கம் எதிர்பார்த்தது போல் சாதிக்க வில்லை என்ற எண்ணம் பரவத் தொடங்கியது. குறிப்பாக, காங்கிரஸின் பலவீனம் மட்டுமே பா.ஜ.கவின் பலம் என்ற நிலை உருவானது. அக்கட்சிக்குள் மேற்கொள்ளப்பட்ட மதிப்பிடுகை முடிவுகள், பா.ஜ.கட்சிக்கான செல்வாக்கு 2014 க்கும் 2016 க்கும் இடையில் குறைந்திருப்பதை வெளிப்படுத்தியிருந்தது.

இது போன்ற சூழ்நிலையில்தான், ‘சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டமூலம்’ விவகாரத்தில் பா.ஜ.க நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை. காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் மற்றக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைத்த பா.ஜ.கவுக்கு சோதனையாக அமைந்தது. பின்னர், வேறு வழியின்றிச் ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’ என்ற பழமொழி போல், காங்கிரஸின் உதவியைப் பெற்று, சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இப்படிப் பிரதமர் மோடியின் தலைமைக்கு உள்ள செல்வாக்குக்குச் சோதனை வந்து விடுமோ என்ற அச்சம் பா.ஜ.கவில் உள்ள மூத்த தலைவர்களுக்கு ஏற்பட்டது. அதன் விளைவுதான், முதலில் பாகிஸ்தான் மீதான ‘சேர்ஜிக்கல் அற்றாக்’! தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பா.ஜ.க எந்த மாதிரியான நடவடிக்கைக்கும் தயார் என்பதை பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தியது ஒரு புறமிருக்க, காங்கிரஸ் அரசாங்கத்தை விட பா.ஜ.க அரசாங்கம், அதிலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் தீவிரவாதத்தை அடக்குவதில் அதிக உறுதியுடன் இருக்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொடுக்க நினைத்தது.

அதில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்தது என்பது உண்மை. என்றாலும், பா.ஜ.க தலைவர்கள் அந்த ‘சேர்ஜிக்கல் அற்றாக்குக்கு’ கொடுத்த விளம்பரம் மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெறவில்லை.

தீவிரவாத ஒழிப்பில் எடுத்த பெயரைக் கறுப்புப் பண ஒழிப்பிலும் எடுத்து விட வேண்டும் என்று நினைத்தார் பிரதமர் மோடி. அதனால்தான் திடீரென்று “500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது” என்று அறிவித்தார். ஒரு வகையில் இது பா.ஜ.க அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கை என்றாலும், இரு வருடங்கள் கழித்து இப்போது திடீரென்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என்றே அனைவரும் எண்ணுகிறார்கள்?

இந்த அறிவிப்புக்கு அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் உள்பட முதலில், “திட்டம் வரவேற்கக் கூடியது; ஆனால், அவசரம் ஏன்?” என்ற கேள்வியை எழுப்பின.

ஆனால், நாட்கள் நகர நகரத் திட்டத்தினால் மக்கள், வங்கிகள் முன்பும் வங்கி ஏ.ரி.எம் நிலையங்கள் முன்பும் மிகப்பெரிய வரிசையில் நிற்பதைப் பார்த்து, அனைத்துக் கட்சிகளுமே கடுமையாக, இந்தக் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை எதிர்க்கத் தொடங்கி விட்டன.

காங்கிரஸுக்கு வலுவான தலைமை இல்லாததால் இந்தப் போராட்டம் ஓர் அகில இந்தியப் போராட்டமாக மாறவில்லை. ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தலைமையில் போராட்டம் களை கட்டி விட்டது. பா.ஜ.க ஆளாத மாநிலங்களில், பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் ஓரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும் இந்தக் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் திணறுவதும், பழைய நோட்டுக்களை மாற்ற விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளும் காலப் போக்கில் அந்த முதல்வர்களையும் எதிர்கட்சிக் கூட்டமைப்பின் பக்கம் கொண்டு வந்து சேர்த்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அகில இந்திய அளவில் கறுப்புப் பண ஒழிப்பை எதிர்த்துப் போராடுவது ‘மம்தா தலைமை’யில் உள்ள அணியா? ‘காங்கிரஸ் தலைமை’யில் உள்ள அணியா? என்ற கேள்விகள் பிறந்திருக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இப்பிரச்சினை குறித்து விவாதிக்க முடியாது என்பதால், ராகுல் காந்தி கறுப்புப் பண ஒழிப்புக் குறித்த நடவடிக்கைகளில் சந்தேகத்தை எழுப்புகிறார். முன்பு, நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், “முட்டைப்பொரியல் போட முடிவு எடுத்து, முட்டையை பா.ஜ.க அரசாங்கம் உடைத்து விட்டது. இனி முட்டையும் திரும்ப வராது; பொரியலும் கிடைக்காது. இப்படியான நிலைமையில்த்தான் இருக்கிறது பா.ஜ.க அரசாங்கத்தின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை” என்று ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேவை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விவரித்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சர் சொன்னதில் தவறில்லை என்றே, மக்கள் படும் அவதியைப் பார்த்தால் தெரிகிறது. வங்கிகளில் பணம் எடுப்பது குறித்து இதுவரை மூன்று முறை விதிகளை மாற்றிவிட்டது இந்திய ரிசர்வ் வங்கி. முதலில் 4,000 ரூபாய் வரை மட்டும் எடுக்கலாம் என்றார்கள்; பின்னர் 4,500 ரூபாய் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது 2,000 ரூபாய்தான் எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

முதலில் அடையாள அட்டை போதும் என்று கூறப்பட்டது; பின்னர் வங்கி அட்டையும் ‘ஆதார்’ அட்டையும் வேண்டும் என்று கூறப்பட்டது. இப்போது அதுவும் போதாது, பணம் எடுக்க வருவோருக்கு ‘மை’ வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனால் எல்லாம் நிலை குலைந்து நிற்பது கிராமப் பொருளாதாரம் என்பதை மத்திய அரசாங்கம் உணர மறுத்து விட்டது, என்பதுதான் எதிர்கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

குறிப்பாக, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள், சிறு வியாபாரிகள், கிராமத் தொழிலாளர்கள் என எல்லோருமே ஸ்தம்பித்து நிற்கிறார்கள். இந்தியாவில் உள்ள பணப்புழக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய்களில் ஏறக்குறைய 86 சதவீதம் நோட்டுக்கள். இந்தச் சதவீத நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்ததால், அதற்கு ஏற்றபடி வங்கிகள் மூலம் பணத்தைக் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.

ஆகவே, இன்றைய திகதியில் ‘கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்’ என்ற நல்ல திட்டம், செயல்படுத்தும் விதத்தில் சேதாரம் அடைந்து நிற்கிறது என்பதுதான் அனைத்து எதிர்கட்சிகளின் நிலைப்பாடு. ஏன், ஆளும் பா.ஜ.கவில் உள்ள பிரபல பத்திரிக்கையாளர் அருண்சோரி போன்றவர்கள் கூட இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

‘தேன் கூட்டில் கைவைத்த கதை’யாக, இப்போது மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் நின்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் ‘இமேஜ்’தான் பா.ஜ.கவின் ‘இமேஜ்’ என்ற நிலையில், இப்போது இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள குழப்பம், மக்கள் படும் அவதி, பொருளாதாரத் தேக்க நிலைமை எல்லாமே இனி வரும் காலங்களில் தேசிய அளவில் ‘அரசியல் கூட்டணிக்கு’ அச்சாரம் போடும் நிலை உருவாகியிருக்கிறது.

பிரதமர் மோடிக்கு எதிராக நிறுத்தப்படப் போகின்ற தலைவர் யார் என்பதுதான் இப்போது காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் உள்ள சிக்கல். ஏனென்றால், ‘ராகுல் காந்தி’யை அப்படி முன்னிறுத்த முடியாது என்று பல கட்சிகளும் உணருகின்றன. ஆகவே, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தலைமையை மீண்டும் மன்மோகன்சிங் கொடுப்பாரா? மம்தா பானர்ஜி கொடுப்பாரா? ஏன் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுப்பாரா? என்ற கேள்விகள் பிறந்திருக்கின்றன.

இக்கேள்விகளுக்கான பதில் கிடைத்தவுடன் பா.ஜ.கவுக்கு எதிரான அணி அகில இந்திய அளவில் உருவாகும் என்றே தெரிகிறது. ‘எங்களுக்கு எதிராக யாரும் இல்லை’ என்ற நினைப்பில் இருந்த பா.ஜ.கவுக்கு ‘கறுப்புப் பண ஒழிப்பு’ நடவடிக்கை பெரிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது. பா.ஜ.கவுக்கு எதிரான புதிய அணி உருவாகும் பாதை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதே இன்றைய அரசியல் எதார்த்தம்.Post a Comment

Protected by WP Anti Spam