அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும்…!! கட்டுரை

Read Time:14 Minute, 57 Second

article_1479829865-prujothஎதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(!) உள்ளிட்ட விடயங்களை முதன்மையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் மாத்திரம் போதாது, நாட்டு மக்களின் அங்கிகாரமும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்று உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

பொது வாக்கெடுப்பை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சில மனத்தடைகள் உண்டு. அதாவது, மக்கள் மீதான வாழ்க்கைச் சுமையைப் புதிய அரசாங்கமும் அதிகரித்திருக்கின்றது. அத்தோடு, அடிப்படைவாத, இனவாத சக்திகள் மீளவும் தங்களின் ஆதிக்கப் பயணத்தை தென்னிலங்கையில் ஆரம்பித்துள்ளன.

இந்தத் தருணத்தில் தென்னிலங்கை மக்கள் வாக்களிப்பின் போது, குறிப்பிட்டளவு அதிர்வினை அரசாங்கத்துக்கு எதிராகக் காட்டலாம். அவ்வாறான நிலை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கட்சிக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும். இதனால், பிளவுண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஒன்றிணைவதற்கும் பலம்பெறுவதற்கும் வாய்ப்புகள் உருவாகும்.

அது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான பற்றுதலில் இருந்து விலகி ஒட்டுமொத்தமாகச் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களையும் நம்பிக்கையையும் புதிதாக உருவாக்கலாம். இதனை, ரணில் விக்ரமசிங்க உணராதவர் அல்ல. அதன்போக்கில் அவர் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது தொடர்பில் விலகியிருக்கவே விரும்புவார்.

ஆனாலும், சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளின் போக்கில், பொது வாக்கெடுப்பு ஒன்றினூடாக மக்களின் அங்கிகாரம் பெற்ற அரசியலமைப்பினை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற ‘பிடி’ அவரைச் சுற்றி இறுகியிருக்கின்றது.

கடந்த காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புகள் போன்று, பொது மக்களின் அங்கிகாரமற்றது என்கிற அடையாளச் சிக்கல் புதிய அரசியலமைப்பிலும் விழுந்துவிடக் கூடாது என்கிற விடயமும் ரணில் விக்ரமசிங்கவை நோக்கி, பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது. அதுதான், புதிய அரசியலமைப்பு தொடர்பிலான உப குழுக்களின் இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும் போது, அவரைப் பொது வாக்கெடுப்பு பற்றிய உறுதிப்பாட்டினையும் வெளியிட வைத்திருக்கின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தளவில் புதிய அரசியலமைப்பு மற்றும் பொது வாக்கெடுப்பு தொடர்பில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கி நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை வழங்குவதாகக் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டு மக்களிடம் வாக்குறுதியளித்து, வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு அதனை நிறைவேற்ற வேண்டிய தேவை உண்டு.

அதன்போக்கில், புதிய அரசியலமைப்பினை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அவரைச் சுற்றியிருக்கின்றது. ஆனால், அவர் தவிர்ந்து கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கோ அது அவ்வளவு முக்கியமான விடயம் அல்ல. மாறாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியில் இருந்து விலகி, புதிய அரசாங்கம் ஒன்றினைத் தனித்து அமைப்பதே பிரதான இலக்கு. அதற்கான வாய்ப்புகளைப் பொது வாக்கெடுப்புக்குப் பின்னரான சூழல் பிரதிபலிக்கலாம் என்கிற நம்பிக்கையும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு உண்டு.

அப்படிப்பட்ட நிலையில், சுதந்திரக் கட்சிக்குப் பொது வாக்கெடுப்பு என்பது களத்தினைப் பரீட்சிப்பதற்கான ஒரு வாய்ப்பு என்கிற அளவில்தான் முக்கியத்துவம் பெறுகின்றது. அதில் வென்றாலும் தோற்றாலும் அவ்வளவு சேதாரங்கள் இல்லை.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தோல்வி என்பதோ, குறிப்பிட்டளவான பின்னடைவு என்பதோ அடுத்த பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் குறித்த நம்பிக்கைகளை முற்றாகத் தகர்த்துவிடும் வாய்ப்புக்கள் அதிகம். ஆக, தென்னிலங்கையில் பொது வாக்கெடுப்புப் பற்றிய நிலைப்பாடு அதிகம் இவ்வாறுதான் இருக்கப் போகின்றது.

இந்த இடத்தில், பொது வாக்கெடுப்பினைத் தமிழ்த் தேசிய அரசியல் சூழல் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்கிற கேள்வி முக்கியமானது. ஏனெனில், இந்தப் பொது வாக்கெடுப்பும் அதற்கு முந்தைய சூழலும் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தக் கூடியன. புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பகிர்வு விடயமே தமிழ்த் தேசிய அரசியலில் பிரதானமாக நோக்கப்படப் போகின்றது. இந்தச் சூழ்நிலையில் அவை பற்றி விவாதிக்க வேண்டிய விடயம் நிறைய உண்டு.

பௌத்தத்துக்கான முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சி என்கிற விடயங்களை விலக்காது அதற்குள்ளேயே அதிகாரப் பகிர்வு என்கிற விடயத்தினையே புதிய அரசியலமைப்பும் முன்வைக்கவுள்ளது. கிட்டத்தட்ட தற்போதுள்ள மாகாண முறையினைத் தாண்டிய சில அடைவுகளை அரசியல் தீர்வு என்கிற விடயமாகப் புதிய அரசியலமைப்பு, தமிழ் மக்களிடம் கொண்டு வரலாம்.

எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி, அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது. அதில், அதிகாரப் பகிர்வு எவ்வாறு அமையும் என்கிற பருமட்டான வடிவம் வெளியிடப்பட்டுவிடும். அதன் பின்னரான அரசியலமைப்பு சபையின் (நாடாளுமன்றத்தின்) வாதப்பிரதிவாதங்கள், எவற்றை இறுதியாக அனுமதிக்கப் போகின்றது என்கிற கேள்வியும் உண்டு.

ஆனால், புதிய அரசியலமைப்பு மற்றும் அதில் உள்ளடக்கப்பட வேண்டிய அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் அதீத அக்கறையோடு கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது கூறிப்பிட்டிருந்தார்.

இரா.சம்பந்தன், தமிழ் மக்களைப் பொறுத்திருக்கும் படியும், அமைதி பேணுமாறும் கோருவது வழமை. ஆனால், முதலாவது இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டுப் பொது வாக்கெடுப்பு ஒன்றுக்கான சூழல் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரப் பகிர்வு தொடர்பில் கவனம் செலுத்திக் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று கோரியிருக்கின்றார்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வொன்றை, தென்னிலங்கை அவ்வளவு இலகுவில் தராது என்கிற உணர்நிலை வெள்ளந்தியான மனிதர்களிடத்திலேயே இருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் எதிர்த்தரப்புக்கள் தலையெடுப்பதற்கான சூழல் பொது வாக்கெடுப்பு காலத்தில் எழலாம் என்று தெரிந்தும் இரா.சம்பந்தன், பொதுமக்களை நோக்கிக் கருத்துகளை முன்வைக்குமாறும், கவனம் செலுத்துமாறும் கோருவது கவனிப்புக்குரியது. இது, இரண்டு விதங்களில் நோக்கப்பட வேண்டும்.

அதில், பொது வாக்கெடுப்புக்குத் தமிழ் மக்களைத் தயார்ப்படுத்தல் ஒன்று; அரசியலமைப்புச் சபை விவாதங்களின் போது, தமிழ் மக்களின் கருத்துக்களைப் பெருவாரியாக எழவைத்து, அதிர்வுகளை உண்டாக்குவது இரண்டாவது. இந்த இரண்டு விடயங்களில் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர் இருப்பு சார்ந்தது. மற்றையது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் அடைவுகளுக்கான நகர்வு சார்ந்தது.

புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு என்கிற விடயம் சில அடைவுகளைக் கொண்டிருக்கும் என்பதில் எம்.ஏ. சுமந்திரன் தீவிரமான நம்பிக்கையோடு இருக்கின்றார். அது, இறுதித் தீர்வாக அமைந்துவிடும் என்று தமிழ் மக்களில் யாரும் கருதவில்லை. ஏன், இரா.சம்பந்தனோ, எம்.ஏ. சுமந்திரனோ கூடக் கருதவில்லை.

ஆனால், அதனை ஓர் அடைவாகக் கொண்டு, அடுத்த கட்டங்களை நோக்கி நகர்வது தொடர்பிலான நம்பிக்கையோடு இயங்குகின்றார்கள். ‘மென்வலுக்காரர்கள்’ என்கிற சமூக ஊடகங்களின் நக்கல், நையாண்டி தொடர்பிலான வாதத்தினையும் பெரும் பூரிப்போடு சுமந்திரனை ஏற்றுக் கொள்ளவும் வைத்திருக்கின்றது. அதற்கு, இடைக்கால அறிக்கைகள் மீதான அவரது நம்பிக்கையும் காரணமாகும்.

இந்த இடத்தில், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி எழுகின்றது. ஏனெனில், தெளிவாக பொது வாக்கெடுப்பினை நோக்கித் தமிழ் மக்களை வரவழைத்து அதில் வெற்றிபெறும் உத்தியில் கூட்டமைப்பு ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சுமணரத்தின தேரர் யாரைத் தாக்குவார்? என்ன தூசண வார்த்தைகளைப் பாவிப்பார்? என்று எதிர்பார்த்துக் கொண்டு சிலதரப்புக்கள் காத்திருக்கின்றன.

முக்கியமான தருணமொன்றில், அதாவது கடந்த பொதுத் தேர்தல் போன்றதொரு களத்தினைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கூட்டமைப்புக்கு எதிரான தரப்பும் சந்திக்கவிருக்கின்றன. ஆனால், இந்தமுறை தனிப்பட்ட கட்சி வெற்றிகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் அடைவின் வெற்றி சார்ந்து சிந்திக்க வேண்டும். அதற்கு, நியாயமான விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்புக்கு அழுத்தங்கள் கொடுக்கும் அளவுக்கான ஆற்றுகைகளைச் செய்யவும் வேண்டும். மாறாக, கூச்சல்களை எழுப்பிப் பயனில்லை.

அண்மையில் இளம் அரசியல் நோக்கர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர் கூறினார், “தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு ஒட்டுமொத்தமாக இன்னும் சில காலத்துக்குள் வடக்கு, கிழக்குக்குள் சுருக்கப்பட்டுவிடும். அதற்குத் தமிழ் மக்களும் கட்சிகளும் தயாராக வேண்டும். அதற்கு, முதலில் தற்போதுள்ள சூழலை வென்றெடுக்க வேண்டும். அது, புதிய அரசியலமைப்பினூடு வரும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் அதிக அடைவுளை வென்றெடுப்பதில்தான் தங்கியிருக்கின்றது” என்றார்.

அவரின் கூற்று கவனிக்கப்பட வேண்டியதுதான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்…!!
Next post வறுமையில் வாடிய குடும்பம்: ஓடி வந்து உதவிய நடிகர் விஷால்…!!