By 28 November 2016 0 Comments

லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையும், அதன் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-23) – வி. சிவலிங்கம்..!!

timthumbவாசகர்களே.

சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பி ரொம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள நிர்வாகக் கட்டமைப்பு நீதிமன்ற தலையீட்டால் தோல்வி அடைந்த நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்செய்ய புலிகளுடன் பேச அரசு முயற்சித்தது.

ஆனால் ஒப்பந்தத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை. அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ஒப்பந்தம் சுமுகமாக செயற்படும் என புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இப் பிரச்சனை பேசப்பட்டிருக்கும் தருணத்தில் வெளியுறவு அமைச்சரும், இலங்கை அமைச்சரவையில் மிக முக்கியமான உயர் பதவியை வகித்த தமிழரான லக்ஸ்மன் கதிர்காமர் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி இரவு 11 மணிக்கு புலிகளால் மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இவரது படுகொலை சர்வதேச அளவில் மிகவும் கவனத்தை ஈர்த்திருந்ததை அவரது மரணச் சடங்கில் கலந்துகொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகளின் தொகை சாட்சியமாக அமைந்தது.

இவரது படுகொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்த புலிகள் அது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக செயற்படும் தெற்கிலுள்ள சக்திகளின் செயல் என விளக்கமும் அளித்திருந்தனர்.

ஆனால் அங்கு காணப்பட்ட தடயங்கள் வேறு விதமாக அமைந்திருந்தன.

அமைச்சரின் இல்லத்திற்கு 100 யார் தூரத்தில் அமைந்த வீடு ஒன்றில் ஓர் அறை மிகவும் திட்டமிட்டே அமைக்கப்பட்டது போல் அமைச்சரின் உள்வீட்டு சம்பவங்களை மிக நிதானமாக அறியும் வகையில் யன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன.

துப்பாக்கி பொருத்துவதற்கான முக்காலி அந்த யன்னல் அருகில் விடப்பட்டிருந்தது.

அத்துடன் பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களும் அங்கு கிடந்தன. மிக நீண்ட நாட்களாக திட்டமிட்டு அக் கொலை நிறைவேற்றப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இங்கு கிடைத்தன.

இப் படுகொலை தொடர்பாக அன்றைய மந்திரி சபை பேச்சாளரான நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில் புலிகளின் மறுப்பை தம்மால் ஏற்றுக் கொள்வது கஸ்டமாக உள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் ஜனாதிபதி சந்திரிகா இன்னும் ஒரு படி மேலே போய் விடுதலைப்புலிகளே அப் படுகொலையை மேற்கொண்டனர் என தொலைக் காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

2005ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி அமைச்சரின் மரணச் சடங்கு 12 நாடுகள் தமது உத்தியோகபூர்வ பிரதிநிதிகளை அனுப்பியதோடு மிக அதிகமான ராஜ தந்திரிகளும் கலந்துகொண்டனர்.

இச் சந்தர்ப்பத்தில் நோர்வே தூதுவர் இரு சாராரும் போர்நிறுத்த ஒப்பந்தம் செவ்வனே செயற்பட தமது அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

கதிர்காமரின் படுகொலை நிலமைகளை மேலும் துரிதப்படுத்த உதவியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவது தொடர்பாக நோர்வேயினர் பாலசிங்கத்துடன் பேசியபோது….

உருப்படியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொள்ளவேண்டுமென நோர்வே வெளியுறவு அமைச்சர் வற்புறுத்தினார்.

இவற்றைத் தொடர்ந்து இரு சாராரும் சந்திப்பதற்கு இணங்கினர்.

ஆனால் எங்கு சந்தித்துப் பேசுவது? என்பதில் இழுபறிகள் ஆரம்பித்தன.

ஒஸ்லோவில் சந்திப்பதை இரு சாராரும் விரும்பாத நிலையில் கிளிநொச்சியில் அல்லது கொழும்பில் சந்திக்கவும் தயங்கினார்கள். இறுதியில் நோர்வே தூதுவரின் ஆலோசனையின் அடிப்படையில் இரு சாராராருக்கும் பொதுவான ஓமந்தையில் சந்திக்கலாமா? என வினவினார்.

இவ் இழுபறிகளுக்கு மத்தியில் தேர்தல் நிலமைகள் கவனத்தை ஈர்த்ததால் அவை சாத்தியமாகாமல் போயின.

சகல பிரச்சனைகளுக்கும் ராணுவ அடிப்படையிலான தீர்வை பிரபாகரன் நம்பியதாக பல கதைகளைக் கூற முடியும் என எரிக் சோல்கெய்ம் கூறுகிறார்.

கதிர்காமரின் படுகொலை சமாதான முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்ததாகவும், கதிர்காமர் இருக்கும் வரை பேச்சுவார்த்தைகள் தமக்குச் சாதகமாக அமையப் போவதில்லை என்பதை புலிகள் உணர்ந்து கொண்டனர்.

ஏனெனில் அவரே பல நாடுகளின் மேல் புலிகளைத் தடை செய்யுமாறு அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தார். அதனால் அவரை இலக்கு வைத்திருந்தனர்.

ஆனால் நோர்வே தூதுவரின் கருத்துப்படி தாம் மகிந்தவுடன் பேசியபோது தாம் ஜனாதிபதியாக வந்தால் சமஷ்டித் தீர்வை பிரபாகரன் முன்னிலையில் வைக்கப்போவதாகவும், 6 மாதங்களுக்குள் புலிகளுடன் ஓர் உடன்பாட்டிற்குச் செல்லப்போவதாகவும் அச் செய்தியைப் பாலசிங்கத்திற்கு தெரியப்படுத்துமாறு மகிந்த தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் தூதுவர் கூறுகிறார்.

மகிந்தவின் திட்டங்களை அவதானித்த போது அவர் பிரபாகரனுடன் ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தேர்தலைப் பகிஷ்கரித்த நிகழ்வுகளும் முடிவுகளை ஆராய்வதில் சிக்கலாகவே இருந்தன என்கிறார்.

சந்திரிகா தனது பதவியை இன்னும் ஒரு வருடம் நீடிக்க எடுத்த முயற்சிகள் உயர் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2005ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.

ஆனால் மகிந்த எவ்வாறு செயற்பட்டார்? என்பது இங்கு முக்கியமானது.

ஜே வி பி உடன் ஒப்பந்தத்திற்குச் சென்றார். அவர்கள் சமஷ்டியை எதிர்த்து ஒற்றை ஆட்சியில் நிர்வாகப் பரவலாக்கம் என்றனர்.

2002ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றனர். ஜாதிக கெல உறுமய இனர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை எதிர்த்தனர்.

இந் நிலையில் மகிந்த அமெரிக்கர்களுக்கு கூறியது என்ன? என்பது அமெரிக்க தூதரகம் 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அனுப்பிய தகவலில் வெளியானது.

ஜனாதிபதி வேட்பாளராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியால் அறிவிக்கப்பட்டதும், மகிந்தவிற்கு அமெரிக்க தூதுவரிடமிருந்து கொளரவிக்கும் தொலைபேசி அழைப்புச் சென்றது.

அவ் அழைப்பின்போது அமெரிக்க தூதுவர் ஜே வி பி உடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், அவ் ஒப்பந்தம் சமாதான முயற்சிகளுக்கு எதிராக காணப்படுவதாகவும், அவ் ஒப்பந்தம் சர்வதேச ஆதரவைப் பெற்ற ஒன்று என்பதைத் தெரிவித்தார்.

இதற்கு அதைப்பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும், தேர்தலுக்கு அவர்கள் ஆதரவு தேவை எனவும், அவர்களைக் கையாள்வதில் தனக்கு அனுபவம் உண்டு எனவும் அதனால் அவர்களுக்கு எது தேவையோ அதற்கு தான் ஆதரிப்பதாக தெரிவித்தாகவும் கூறினார்.

அப்போது அவ் ஒப்பந்தம் நோர்வேயினரை அதிலிருந்து நீக்குவதாக கூறுகிறதே? எனக் கேட்டபோது அம் முயற்சியை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது என மகிந்த கூறினார்.

அவ்வாறானால் பிரதமர் அது தொடர்பாக பகிரங்க அறிக்கையை வெளியிட்டாலென்ன? என தூதுவர் வினவியுள்ளார்.

தான் அவ்வாறு செய்தால் தேர்தலில் தோல்வி அடைய நேரிடும் எனவும், 98 சதவீதமான தெற்கிலுள்ள சிங்கள மக்கள் நோர்வேஜியர்கள் புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக நம்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இப் பின்னணியில் நோர்வேயில் இடம்பெற்ற தேர்தலில் சோல்கெய்ம் சார்ந்திருந்த இடதுசாரிக் கட்சியான தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அதன் காரணமாக சோல்கெய்ம் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இலங்கைத் தேர்தலும் சூடு பிடித்த நிலையில் கூட்டுத் தலைமை நாடுகள் அமெரிக்காவில் சந்தித்தன.

கதிர்காமரின் படுகொலையைக் கண்டித்த இந் நாடுகள் இச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு மிகவும் அமைதியோடு செயற்பட்டதைப் பாராட்டினர்.

விடுதலைப்புலிகள் தாம் சமாதான முயற்சிகளில் அக்கறை இருப்பதை உடனடியாக தமது செயற்பாடுகளில் காட்டவேண்டுமெனவும், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வின் மூலமே நிரந்தர தீர்வை எட்ட முடியும் எனவும் தெரிவித்தனர்.

இவ் அறிக்கை வெளியாகிய 10 நாட்களில் புலிகள் மீதான பிரயாணத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விதித்தது.

கதிர்காமரின் படுகொலையைத் தொடர்ந்து இம் முடிவு எடுக்கப்பட்டதாக காணப்பட்டது. அத்துடன் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடவும் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் வெளியாகியது.

இச் செய்தி புலிகள் தரப்பினர் மத்தியில் பெரும் கலக்கத்தை அளித்தது.

இவ் உத்தரவு சமாதான முயற்சிகளைப் பெரிதும் பாதிக்கும் எனவும், சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குலைந்துள்ளதாகவும் தமிழ்ச் செல்வன் அறிக்கை விடுத்தார்.

ஒக்டோபர் 6ம் திகதி நோர்வே தூதுவர் தமிழ்ச்செல்வனைச் சந்த்தித்தபோது தடை தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால் அச் சந்திப்பில் மிகவும் கடுமையான தொனியில் புலிகளின் நடவடிக்கைகளை தாம் விமர்ச்சித்ததாக தூதுவர் பின்னர் தெரிவித்துள்ளார்.

தேர்தலின்போது ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்தும் வைத்திருக்கும் போக்கைக் கைவிடுமாறும், பி ரொம் கட்டுமானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை நிறுத்துமாறும் சந்திரிகா தனது கட்சி மூலமாக மகிந்தவிற்கு வேண்டுகோள் விடுத்தும் அவை சாத்தியமாகவில்லை.

பதிலாக தாம் பிரபாகரனுடன் நேரடியாக பேசப் போவதாகவும், மூன்று மாதங்களுக்குள் தேசிய உடன்பாட்டை எட்டப் போவதாகவும் மகிந்த தெரிவித்தார்.

ஆனால் நிலமைகள் தலைகீழாக மாறின. 2005ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ம் திகதி வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் என்ற பெயரில் மக்கள் திரட்டப்பட்டனர்.

சுமார் 2 லட்சம் மக்கள் திரண்டனர். தமிழர் தாயகத்திலிருந்து ராணுவமே வெளியேறு என்ற கோஷங்கள் ஒலித்தன. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. சிங்களப் பகுதிகளிலும் அரசியல் போக்குகள் புதிய வடிவமெடுத்தன.

( மேலும் தொடரும் )Post a Comment

Protected by WP Anti Spam