By 1 December 2016 0 Comments

இந்திய அரசியலில் திடீர் திருப்பம்: நரேந்திர மோடி எதிர் மன்மோகன் சிங்…!! கட்டுரை

article_1480303869-kasinathகறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை முற்றிலும் அரசியல் மயமாகி விட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் இப்போது கட்சிகளுக்குள் அரசியல் செய்யும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துக் கூட ஆக்கபூர்வமான விவாதங்கள் நடத்த ஆளுங்கட்சியான பா.ஜ.கவும் முன் வரவில்லை; எதிர்கட்சிகளும் முன்வரவில்லை என்பது இந்திய ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது.

அடித்தட்டு மக்கள், ஏழை எளிய மக்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், சிறு தொழில் செய்வோர் அனைவரும் ‘கறுப்புப் பண ஒழிப்பு’ நடவடிக்கையால் ஏற்பட்ட ‘குறுகிய கால வலியிலிருந்து’ (Short term pain), தங்களை மத்திய அரசாங்கம் காப்பாற்றி, ‘நீண்ட காலப் பயனுக்கு’ (long term gain) வழி வகுக்குமா என்ற ஏக்கத்துடனேயே இன்று வரை இருக்கிறார்கள்.

நவம்பர் எட்டாம் திகதி, 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரை மூன்று முறை ‘விதிவிலக்கு அளிக்கும்’ பட்டியல்களை மத்திய அரசாங்கம் அறிவித்து, இத்திட்டத்தால் பாதிக்கப்படுவோருக்கு சில சலுகைகளை வழங்கியிருக்கிறது. முதலில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களைப் பெறலாம் என்று அறிவித்தது.

பிறகு, இந்தச் சலுகை மீண்டும் நவம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சலுகை அனைத்து வகை பரிவர்த்தனைகளிலும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் கோரிக்கை வைத்த நிலையில், டிசம்பர் 15 ஆம் திகதி, மீண்டும் இந்தச் சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

ஆனால், பழைய 1,000 ரூபாய் நோட்டுக்களைப் பெறக் கூடாது. அதற்குப் பதில் இனிப் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டு பரிவர்த்தனைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது, அடித்தட்டு மக்களுக்கும் சிறு தொழில் செய்வோருக்கும் நிவாரணம் என்றாலும், எதிர்க்கட்சிகளைப் பொறுத்தமட்டில் இந்த நடவடிக்கைகளில் திருப்தி அடையவில்லை.

எதிர்க்கட்சிகள், குறிப்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்தப் போராட்டக் களத்துக்கு தலைமை வகிக்கிறார். காங்கிரஸ் கூட அவருக்கு துணை நிற்பது போலவே, இப்போதைக்குக் களத்தில் நிற்கிறது. இந்தத் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தொடங்கிய போராட்டம் காலப்போக்கில், “பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்ல வேண்டும்” என்ற கோரிக்கையாக மாறியது.

“விவாதத்துக்குப் பயந்து எதிர்கட்சிகள் ஓடுகின்றன” என்று இந்தியாவின் நிதியமைச்சர் அருண்ஜேட்லியே குற்றம் சாட்டும் அளவுக்கு எதிர்க்கட்சிகளின் அந்தக் கோரிக்கை அரசியல் தட்ப வெட்பத்தை மேலும் சூடாக்கியது. ஆனால், அனைவரது கோரிக்கையையும் ஏற்று நவம்பர் 24 ஆம் திகதி பிரதமர் மாநிலங்களவைக்கு வந்தார். அவர் வந்து அமர்ந்ததும் முதலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

மிகவும் சுருக்கமான அந்த உரையில், பிரபல பொருளாதார நிபுணர் கெயின்ஸின் கருத்தைத் தன் வாதத்துக்கு துணைக்கு அழைத்துக் கொண்டார். “நீண்டகாலத்தில் இத்திட்டத்தால் பயன் கிடைக்கும் என்று பிரதமர் வாதிடுகிறார். கெயின்ஸின் வார்த்தையில் சொல்வதென்றால் ‘நீண்டகாலம் என்றாலே நாம் இறந்து விட்டோம்’ என்று அர்த்தம்” என்று கூறித் தன் வாதத்துக்கு மெருகேற்றினார். அத்துடன், மன்மோகன் சிங் விடவில்லை; “இந்தக் கறுப்புப்பண ஒழிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் பற்றி பிரதமர் கூறியிருக்கிறார். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்தியதில் மாபெரும் நிர்வாகத் தவறை (Monumental Mismanagment) செய்திருக்கிறது மத்திய அரசாங்கம். தினமும் இத்திட்டம் பற்றிய அறிவிப்புகள் வெளியிடுவதே பிரதமர் அலுவலகம், நிதித்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் செயல்பாடுகளில் உள்ள குழப்பத்தைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாதப்படி, இத்திட்டத்தை ‘திட்டமிடல்’ இல்லாமல் அமல்படுத்தியதால், விவசாய வளர்ச்சி பாதிக்கப்படும்; சிறு தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும்; அமைப்பு சாரா தொழில்கள் பாதிக்கப்படும்; ஏன் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி இரண்டு சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று மாநிலங்களவையில் பட்டியலிட்டுக் காட்டினார்.

அவரது பேச்சை உன்னிப்பாகக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமரைக் கைகுலுக்கி வரவேற்றார். என்றாலும், முன்னாள் பிரதமரின் கருத்து, கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை குறித்த தாக்கத்தை அதிகரித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

விவாதங்களில் பங்கேற்றுப் பேசாத மன்மோகன் சிங்கை, இந்த விவாதத்தில் பங்கேற்க வைத்துக் காங்கிரஸ் கட்சி சாதித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால்தான், மன்மோகன் சிங் காலத்தில்தான் ஊழலும் நிர்வாகக் குளறுபடிகளும் இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச் சென்ற பிரச்சினைதான் கறுப்புப் பணம் என்ற ரீதியில் மத்திய அரசாங்கத்தின் சார்பில் பா.ஜ.க தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

ஆனால், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் குளறுபடிகள் இருக்கின்றன என்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவைப் பேச்சு, மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டது. நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்குக் கரையேற ஒரு வாய்ப்புக் கொடுக்கும் துடுப்பாக இந்தக் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை அமைந்து விட்டது என்பதுதான் இன்றைய இந்திய அரசியல் களத்தின் சூழ்நிலை.

காங்கிரஸ் போலவே, கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் மம்தா பானர்ஜியும் ஆவேசமாக இருக்கிறார்கள். இதற்காகத் தங்கள் பரம எதிரியான கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூடக் கைகோர்த்துப் போராடத் தயார் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்து விட்டது.

திரினாமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஒப்ரியன் மாநிலங்களவையில் பேசும் போது, “எங்களது எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் பிரதமர் தன்னிடம் உள்ள ஏஜென்சி மூலம் எடுக்கலாம். எங்கள் தலைவர் மம்தா பானர்ஜியை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள். ஆனால், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் சாதாரண மக்களைக் காப்பாற்றுங்கள்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்த போது, பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் அமர்ந்திருந்து கூர்ந்து அந்தப் பேச்சை கவனித்தார்.

இதேபோல், உத்தர பிரதேச தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பகுஜன் சமாஜ் வாடி கட்சித் தலைவர் மாயாவதி, “கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை பற்றி பிரதமர் தனியாக மதிப்பிடுகை எடுக்கிறார். உண்மையிலேயே மதிப்பிடுகை எடுக்க விரும்பினால், பதவியிலிருந்து விலகித் தேர்தலை ச் சந்திக்கத் தயாரா” என்று சவால் விட்டார்.

அடுத்து, சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேசும் போது, “கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எடுத்ததால் என் உயிருக்கு அச்சுறுத்தல் என்று பிரதமர் பேசுகிறார். உத்தர பிரதேசத்துக்கு வாருங்கள். உங்கள் உயிருக்கு நிச்சயம் அச்சுறுத்தல் இருக்காது” என்றார்.

இப்படிக் காரசாரமாக விவாதங்கள் மாநிலங்களவையில் காலையில் நடைபெற்றாலும், மாலையில் பிரதமர் அவைக்கு வரவில்லை என்பதைக் காரணம் காட்டி மீண்டும் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையை முடக்கி விட்டன.

அகில இந்திய அரசியலில், ஆளும் பா.ஜ.கவிற்கு எதிரான எதிர்க்கட்சிகள் அணி உருவாகி விட்டது. கறுப்புப் பண விவகாரத்தில் பதில் சொல்ல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தியிருப்பதால், இனி வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அவர் முன்னின்று வழி நடத்துவாரா என்ற கேள்வியும் எழுகிறது.

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை வளர்க்க, ராகுல் காந்தியால் முடியாது என்ற பிரசாரம் காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்ல, காங்கிரஸை நம்பிக் கூட்டணி சேர விரும்பும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னிறுத்துகிறது காங்கிரஸ் கட்சி.

இனிவரும் இரு வருடங்கள், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமல்படுத்துவதால் இந்தியப் பொருளாதாரம் எந்த நிலையை எட்டும்? வளர்ச்சி பெறுமா அல்லது பிரச்சினையைச் சந்திக்குமா? என்ற பரஸ்பர விவாதங்கள் அனைத்து மட்டத்திலும் நடக்கின்றன.

முதல் இரு வருடங்களை முடித்து விட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு அடுத்த காலகட்டம் என்பது 2019 தேர்தலைச் சந்திப்பதுதான். அந்தத் தேர்தலுக்கு முன்பு இந்த இரு நடவடிக்கைகளாலும் பொருளாதாரம் ஸ்திரம்பட்டு நிற்கவில்லை என்றால் நாட்டை பொருளாதார பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற மன்மோகன் சிங்கை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுக்கக் கூடும்.

பாதிப்புக்குள்ளாகும் மக்களும் பா.ஜ.கவுக்கு மாற்றாக அணி உருவாக்க விரும்பும் கட்சிகளுக்கும் மன்மோகன் சிங்கை ஏற்றுக் கொள்வதில் பிரச்சினை இருக்காது. ஆகவே, இனி வரும் காலங்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் முகமாக இருப்பார் என்றே தெரிகிறது.

ஆகவே, கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை இப்போதைக்கு இந்திய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி எதிர் மன்மோகன் சிங் என்ற களத்தைக் கொண்டு வந்து விட்டது. மோடி எதிர் மம்தா பானர்ஜி என்று அமைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் களம் பின்னுக்குப் போயிருக்கிறது என்பதே எதார்த்த நிலைமை.Post a Comment

Protected by WP Anti Spam