ஓர் இருண்ட காலத்தின் தொடக்கம்…!! கட்டுரை

Read Time:21 Minute, 9 Second

article_1480304103-aasபயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

1979 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமானது, பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களென நிர்வாகத்துறை கருதும் நபர்கள் மீது, அரசாங்கத்தின் இரும்புக்கரம் பாயத்தக்கவாறு நிர்வாகத்துறையின்பால் அதீத அதிகாரத்தைக் குவித்தது.

இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றிக் கருத்தரைக்கும் போது, ‘இலங்கை: அதிகரிக்கும் பிழைகளின் சோகம் (ஆங்கிலம்)’ என்ற தனது நூலில் ‘சட்டவாட்சியின் கீழ் இயங்கும் எந்தவொரு சுதந்திர, ஜனநாயக நாட்டிலும் அமுலிலுள்ள எந்தச் சட்டமும் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு ஒப்பான அதிகாரங்களைக் கொண்டமையவில்லை. எந்தவொரு நாகரீக நாட்டிலும் குறித்த சட்டமிருக்குமானால் அது சட்டப்புத்தகத்தில் காணப்படும் அசிங்கமான கரும்புள்ளியாகும்’ என்று சர்வதேச சட்டவியலாளர் ஆணைக்குழுவின் அறிக்கையில் (1984) குறிப்பிட்டிருந்ததை போல் சீக்ஹார்ட் மேற்கோள் காட்டுகிறார்.

ஆரம்பத்தில் தற்காலிக ஏற்பாடாகவே ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தியபோது, வெறும் மூன்று ஆண்டுகளுக்கான தற்காலிக நடவடிக்கையாகவே இதனைக் கொண்டுவந்தனர். ஆனால், அது அவ்வாறாக அமையவில்லை. 1982 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. இதன்மூலம் தன்னுடைய குடிமக்களையே ‘பயங்கரவாதத்தின்’ பெயரால் ஒடுக்கியாளும் எதேச்சாதிகாரத்தை இலங்கையின் ஆளும் அரசாங்கம் பெற்றுக்கொண்டது.

எதிர்த்து வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விட்டபோது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதனை எதிர்த்து வாக்களித்திருந்தது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி குறித்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை. மாறாகக் குறித்த சட்டமூலத்தினை எதிர்த்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தோடு அவசரகால நிலையும் அறிமுகமானது. இவை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் பலத்தை அதிகரித்ததுடன், அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் வழிசமைத்தது. ஒரு புறத்தில் இதனைத் தேசிய பாதுகாப்புக்கான அவசியப்பாடு எனத் தெற்கு நியாயப்படுத்தியது. மறுபுறத்தில், வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் இதனைத் தமக்கு எதிரான ஒடுக்குமுறையாகவே பார்த்தனர். ஏனெனில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அறிமுகத்தோடு வடக்கில் இராணுவக் குவிப்பு அதிகரித்ததுடன், கெடுபிடிகளும் கடுமையாகின.

புலம்பெயர் தமிழர்கள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அறிமுகத்துக்கும் அதிரடியாக அதிகரித்த கெடுபிடிகளுக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மட்டும் காரணமல்ல; மாறாகச் சர்வதேச அரங்கில் புலம்பெயர் தமிழர்களின் சில நடவடிக்கைகளும் காரணமாக இருக்கலாம் எனக் கருத்துரைக்கும் அரசியல் ஆய்வாளர்களும் உண்டு.

1970 களிலிருந்தே புலம்பெயர் தமிழ் மக்கள் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவினைத் தரத்தொடங்கி விட்டதாகவும் காலவோட்டத்தில் பிரிவினைக்கான போருக்குப் புலம்பெயர் தமிழர் குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆதரவு தரத்தொடங்கியதாகவும் 2010 நவம்பரில் ‘ஒல்கொட் நினைவுப் பேருரை’ ஆற்றிய இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவராகக் கடமையாற்றிய ரவினாத ஆரியசிங்ஹ குறிப்பிட்டிருந்தார்.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியான தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுப்பதில் அன்று மேலைத்தேசங்களில் புலம்பெயர்ந்திருந்த தமிழர்கள் ஆர்வம் காட்டினர். ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, பலரும் சிறிமாவின் ஆட்சியின் கீழான இருள்சூழ் காலத்திலிருந்து மாற்றமொன்றை எதிர்பார்த்தனர்.

ஆனால், ஜே.ஆர் அரசாங்கம் பதவிக்கு வந்து வெறும் ஒரு மாத காலத்துக்குள்ளாகவே, தமிழ் மக்களுக்கு எதிரான மிகப்பெரும் இனக்கலவரம் நடந்திருந்த நிலையிலும் புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் ஓரங்கட்டப்பட்ட நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜே.ஆர் அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியாகத் தனிநாட்டுக் கோரிக்கை குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்களிடையே வலுவடையத் தொடங்கியது.

மசசூஸட்ஸ் பிரகடனம்

குறிப்பாக, ஐக்கிய அமெரிக்காவில் இருந்த புலம்பெயர் தமிழ் மக்கள், இதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் ஒரு காரியத்தைச் செய்வித்தனர். 1979 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி, மசசூஸட்ஸ் மாநில ஆளுநர் எட்வேர்ட் ஜே. கிங் 1979 மே 22 ஆம் திகதியை ‘ஈழத் தமிழர் தினமாகப்’ பிரகடனம் செய்து வைத்தார். குறித்த பிரகடனத்தில், ‘ஆதி காலத்தில், வேறுபட்ட மொழிகள், கலாசாரம், மதம் மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட பூகோளப் பிராந்தியங்களைக் கொண்ட சிங்களவர், தமிழர் என்ற இரண்டு தேசங்கள் இலங்கையில் காணப்பட்டன. ஆனால், சுதந்திரத்தின் பின்னர் இந்த இரண்டு தேசங்களும் ஒற்றையாட்சி அரசாங்கக் கட்டமைப்புக்குள் அடக்கப்பட்டன. இதன் விளைவாகத் தமிழர்கள் சிறுபான்மையினமாக அடக்குமுறைகளுக்குள்ளாக வேண்டி ஏற்பட்டது’ என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் பிரகடன நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவரான
எம். சிவசிதம்பரம் அமெரிக்கா சென்றிருந்தார்.

மசசூஸட்ஸ் மாநில ஆளுநர் குறித்த பிரகடனத்தைச் செய்ததுடன், அப்பிரகடனத்தின் நகலொன்றை எம். சிவசிதம்பரத்திடம் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. இத்தோடு, இந்தச் செயற்பாடு நின்றுவிடவில்லை. 1981 இல் மசசூஸட்ஸ் மாநில சட்டசபையின் கீழவையில், இலங்கையில் மனிதாபிமானமற்ற அநீதியைச் சந்திக்கும் தமிழ்மக்களின் நிலையைச் சரிசெய்யும் வண்ணம் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அமெரிக்க காங்கிரஸுக்கும் (நாடாளுமன்றம்) அழுத்தம் தரும் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னணியில், மசசூஸட்ஸ் மாநிலத்தின் பொஸ்டன் நகரில் இயங்கிய செல்வாக்குமிகு புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காணப்பட்டது. உண்மையில், இத்தகைய தீர்மானங்கள் அமெரிக்காவின் ஒரு மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படுவதால் எந்தவிதமான பயனும் விளையப் போவதில்லை. ஏனெனில், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது முற்றுமுழுதாக அமெரிக்க மத்திய அரசாங்கத்திடமுள்ள அதிகாரமாகும்.

ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்க மத்திய அரசாங்கத்துக்கும் மிகநெருங்கிய உறவு இருந்தது. ஜே.ஆரின் அமெரிக்க சார்பின் காரணமாக, அவரை ‘யங்கி டிக்கி’ என ஹாஸ்யமாக அழைப்போரும் உண்டு. ஆகவே, மசசூஸட்ஸ் மாநிலத்தின் தீர்மானம் எதனையும் மாற்றிவிடாது, ஆனால், இதற்கு அடையாள ரீதியிலான மதிப்பு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

இது, கிட்டத்தட்ட இந்தியாவின் தமிழ்நாடு மாநில சட்டப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானமொன்றை நிறைவேற்றுவதைப் போன்றது. அடையாள ரீதியிலான அழுத்தம் என்பதைத் தாண்டி, நேரடிப் பயன் எதுவும் விளையப் போவதில்லை. ஆனால், இத்தகைய அழுத்தம் கூட இலங்கையரசாங்கத்தின் மீதான ஒரு கறைதான்.

அவசரகால நிலையின் பயங்கரம்

இலங்கையில் தமிழர்களிடையே விடுதலைக்கான வேட்கை ஒன்று உருவாகுமானால், அதனை ஒடுக்கப்படும் ஓர் இனக்கூட்டத்தின் இனவிடுதலைக்கான போராட்டமாக அன்றி, பயங்கரவாதமாகச் சித்தரிப்பதே இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாக அமையும் என்பதோடு, பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது என்ற பெயரில், தமிழ் இளைஞர் இயக்கங்களை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அவசியம் என்ற காரணங்களுக்காக, தேசிய பாதுகாப்பு எனும் பதாகையின் கீழ் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்ட அறிமுகமும் அவசரகால நிலைப் பிரகடனமும் அரசாங்கப் படைகளுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்கியது. தமிழ் இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறியப்படவேண்டும் என்பதில் ஜே.ஆர் ஜெயவர்த்தன உறுதியாக இருந்தார் எனத் தன்னுடைய ‘இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும் (ஆங்கிலம்)’ என்ற நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.

அவசரகால நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு சில நாட்களிலேயே வடக்கில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் காணாமல் போவதும் ஆரம்பமாகத் தொடங்கின. சர்வதேச மன்னிப்புச் சபையின் 1982 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 1979 ஜூலையில் வடக்கில் பரமேஸ்வரன், இராஜேஸ்வரன், ராஜாக்கிளி, பாலேந்திரன் ஆகிய நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் போயுள்ளார்கள். அவர்கள் உடல்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதே தினம் கைது செய்யப்பட்ட இந்திரராஜா என்ற இளைஞர், மறுநாள் படுகாயங்களுடன் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதற்கு மறுதினம் உயிரிழந்துள்ளார். அவரது மரண விசாரணை அறிக்கையில் ‘பொலிஸாரால் தாக்கப்பட்டதற்கான சான்றுகளுண்டு’ என்று நீதவான் குறிப்பிட்டுள்ளதை தனது நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினதும் அவசரகால நிலையினதும் பயங்கரத்தை சர்வதேச மன்னிப்புச் சபையின் 1980 ஆம் ஆண்டு அறிக்கையானது ‘அவசரகால நிலைப் பிரகடனத்தின் பின்னர் எதேச்சாதிகாரமான கைதுகளும் தடுத்துவைப்பும் தொடர்ந்து இடம்பெற்றதுடன் சித்திரவதையும் திட்டமிட்டுக் கையாளப்பட்டது…..

அவசரகால நிலையின் கீழ் கைது செய்யப்பட்ட ஆறு இளைஞர்கள் பொலிஸாரின் பிடியில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மூவரின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சித்திரவதைக்கு எதிரான, எதேச்சாதிகாரக் கைதுக்கும் தடுத்து வைப்புக்கும் எதிரான மனித உரிமைகள் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுச் சில மாதங்களிலேயே கடுமையாக மீறப்பட்டுள்ளது’ என்று பதிவு செய்கிறது.

தமிழர்களுக்கு எதிரான விசமப் பிரசாரம்

ஒருபுறத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்ததுடன், மறுபுறத்தில் சிங்கள மக்களிடையே தமிழ் மக்களுக்கெதிரான இனத்துவேசப் பிரசாரம் அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அமைச்சர் சிறில் மத்யு இந்தப் பிரசாரத்தின் பிதாமகராக இருந்தார்.

1979 இல் சிறில் மத்யுவின் ‘சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுக!’ என்ற துண்டுப் பிரசுரமும் ‘புலி என்பது யார்?’ என்று தலைப்பிட்ட இன்னொரு துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டது. இவை சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தைப் பற்றிய பிரசாரத்தை முன்னெடுத்ததுடன், தமிழினத்தின் மீதான வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் விதைப்பதாக அமைந்தது.

இத்தகைய பிரசாரங்கள் இலங்கையில் சிங்கள மக்கள், அப்பாவித் தமிழ்மக்கள் மீது சந்தேகமும் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொள்ளும் நிலையை உருவாக்கின. இந்த வெறுப்பு வெறுமனே வடக்கு-கிழக்கு வாழ் தமிழர்கள் மீது மட்டுமல்லாது, இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டது. சிறில் மத்யு போன்றவர்கள், இலங்கையின் மொத்த வியாபாரத் துறையை இந்திய வம்சாவளித் தமிழர்கள் முழுமையாகக் கைப்பற்றி விட்டார்கள் என்ற விசமப் பிரசாரத்தினை முன்னெடுத்தார்கள்.

தன்னுடைய அமைச்சரினதும் கட்சி ஆதரவாளர்களினதும் இத்தகைய பிரசாரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது இருந்ததன் மூலம், இத்தகைய விசம நடவடிக்கைகளுக்கு ஜே.ஆர் மறைமுகமாகவேனும் ஆதரவு தந்தார் என்பதுதான் யதார்த்தம்.

வரலாற்றுத் தவறு

சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்ட முயற்சிகள் எடுக்கப்படும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தலுக்கு முன்பதான வாக்குறுதி இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தோடு, புதிய அரசியலமைப்பும் தமிழ் மக்கள் வேண்டிய மொழியுரிமையையோ, சமத்துவத்தையோ, அதிகாரப் பகிர்வையோ வழங்கவில்லை. மாறாக, சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டுவதாகவே அமைந்தது.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கத் தொடங்கியிருந்தது. இதனை நியாயப்படுத்த, தமிழ் இளைஞர்கள் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தமை தவறு என்று பலர் சொல்வார்கள். ஆனால், சுதந்திர இலங்கையின் வரலாற்றை நாங்கள் மீட்டுப் பார்த்தால், சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கியதன் மூலம் இனப்பிரச்சினையைத் தோற்றுவித்தது இலங்கை அரசாங்கம் என்பதை மறுக்கமுடியாது.

அந்தப் பிரச்சினையைக் கூட தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவதன் மூலம் எந்தவொரு சிக்கலுமின்றி தீர்த்திருக்க முடியும். 1956 இல் தமிழ்த் தலைமைகள் வேண்டியதும் மொழிச் சமத்துவத்தைத்தான். ஆனால், அதனைச் செய்வதற்கு தொடர்ந்து வந்த எல்லா அரசாங்கங்களும் தவறிவிட்டன.

தொடர்ந்தும் மொழிப் பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்களின் வேலைவாய்ப்புக்கள் பறிக்கப்பட்டு, மொழிவாரி தரப்படுத்தல் அறிமுகப்படுத்தி தமிழ் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டு, பௌத்தம் மட்டும் முதன்மை மதமாக்கப்பட்டு, இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அம்மக்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சி எடுக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கெதிராகக் கலவரம் என்ற பேரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு அவர்களது இருப்புகள் அழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இந்நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாக உணரச் செய்யப்பட்டதன் விளைவுதான் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்கச்செய்தது என்பதை மறந்துவிடக்கூடாது.

தமிழ்த் தலைமைகள் ஒவ்வொருமுறையும் விட்டுக்கொடுப்புகளுக்கும் சமரசங்களுக்கும் தயாராகவே இருந்தனர். ஆனால், அந்தச் சமரசங்கள் மறுக்கப்பட்ட நிலையில்தான் தனிவழி அரசியலையும் பிரிவினையையும் கோர வேண்டிய தேவை தமிழ்த் தலைமைகளுக்கு ஏற்பட்டது.

ஆகவே, இந்த வரலாற்றை மறந்துவிட்டு, ஆயுதப் போராட்டத்தை அணுகுதல் என்பது அரசியல் அபத்தமாகும். இவை ஆயுதப் போராட்டத்துக்கான நியாயப்படுத்தல் அல்ல; மாறாக வரலாறு கோடிட்டுக்காட்டி நிற்கும் நிதர்சனங்கள்.

( அடுத்த வாரம் தொடரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில் கைகலப்பு: குஷ்பு மன்னிப்பு கேட்க ரஞ்சனி வலியுறுத்தல்…!!
Next post பிறப்பில் ஏற்படும் தழும்புகள் மறைய சூப்பரான டிப்ஸ்…!!