10 ஏவுகணைகளைச் செலுத்தி ஈரான் சோதனை!

Read Time:4 Minute, 59 Second

Iran.2.jpgஈரான் நாட்டு ராணுவம் 10 ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தியிருக்கிறது. இவை அனைத்தும் 80 கிலோ மீட்டர் முதல் 250 கிலோ மீட்டர் வரை உள்ள இலக்குகளை மட்டுமே தாக்கவல்ல குறுகிய தொலைவு ஏவுகணைகளாகும். இவற்றின் முகப்பில் அணுகுண்டுகளை வைத்து எடுத்துச் செல்ல முடியுமா என்பதை ஈரான் தெரிவிக்கவில்லை.

ஈரானின் கஷான் பாலைவனப்பகுதியில் இச் சோதனை நடந்தது. 10 ஏவுகணைகளை நடமாடும் செலுத்து வாகனத்திலிருந்து ஏவுவதை ஈரான் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ஏவுகணைக்கு “”சாகே” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பார்சி மொழியில் சாகே என்றால் மின்னல் என்று பொருள்.

ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ரகசியமாக ஈடுபடுவதாகவும், அதன் அணு ஆய்வு மையங்களை சர்வதேச அணுவிசை ஏஜென்சியின் ஆய்வுக்குத் திறந்துவிடவில்லை என்றால் அதன் மீது பொருளாதார, ராணுவத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரிவரும் வேளையில் ஈரான் இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

10 ஏவுகணைகளை மட்டும் அல்ல, அமெரிக்காவின் பொறுமையையும் ஈரான் சோதித்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் காலை வைத்த அமெரிக்கா அடுத்து ஈரானிலும் நுழைய சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா, சீனா போன்ற நாடுகள் ரத்துஅதிகாரத்தை ஈரானுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் என்பதால் அமெரிக்கா பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறது.

இந் நிலையில் அமெரிக்காவைச் சீண்டும் வகையில் தனது ராணுவத்தின் பலத்தைக் கூட்டவும், எல்லா பிரிவுகளையும் போருக்குத் தயார் நிலையில் வைத்திருக்கவும் இத்தகைய சோதனைகளில் ஈரான் ஈடுபட்டிருக்கிறது. ஈரானின் மொத்தமுள்ள 30 மாநிலங்களில் 14 மாநிலங்கள் ஏதாவது ஒரு ராணுவப் பயிற்சிக் களமாக இப்போது திகழ்கின்றன. அமெரிக்கா தன் மீது படையெடுத்தால் தக்க பதிலடி கொடுக்கத் தயார் என்று அறிவிப்பதற்காகவே இந்தச் சோதனைகளில் ஈரான் தீவிரம் காட்டுகிறது.

சோதித்த 10 ஏவுகணைகளையும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரித்ததாக ஈரான் கூறிக் கொள்கிறது. இவை எல்லாமே, “”அசெம்பிள்ட் செட்”தான் என்று மேற்கத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ விமான விபத்து: தலைநகர் தெஹ்ரானின் வட-கிழக்குப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய போர் விமானம் விழுந்து நொறுங்கியது. அதற்குள் விமானி பாராசூட் உதவியுடன் வெளியே குதித்துவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் விமானம் விழுந்து நொறுங்கியது என்று தெரிவிக்கப்பட்டது.

சமீபகாலமாக ஈரானில் போர்ப் பயிற்சியில் ஈடுபடும் விமானங்கள் இப்படி விழுந்து நொறுங்குவது வழக்கமாகி வருகிறது. இதற்கெல்லாம் அமெரிக்க அரசு விதித்த, ராணுவத் தடைதான் காரணம் என்று ஈரான் அரசு குற்றஞ்சாட்டுகிறது.

ஈரானில் 1979-ல் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டு ஆட்சி அதிகாரம் மதத்தில் தீவிரப் பற்று கொண்டவர்களின் கைகளுக்குப் போயிற்று. அப்போது அமெரிக்கா, ஈரான் மீது தடையை விதித்து, அமல் செய்தது. அதனால் ஈரானின் போர் விமானங்களுக்கு உதிரி பாகங்களும் இதர பொருள்களும் கிடைக்கவில்லை. அதிலிருந்து விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க கள்ள சந்தையில் புலிகளுக்காக ஆயுதங்கள் கொள்முதல்-13 பேர் நிïயார்க் நகரில் கைது
Next post வன்னிப்புலிகளின் வடமுனை முகாம் மீது TMVPஅதிரடி முற்றுகைத் தாக்குதல். ஐவர் பலி, மூவர் கைது