By 4 December 2016 0 Comments

பெங்களூர் நகரத்தில் ஒளிந்திருந்த சிவராசனையும் சுபாவையும் நெருங்கிய பொலிசார்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –23)

timthumbவிசாரணையில் மேற்கொண்டு முன்னேற, முன்னேற, பெங்களூர் நகரமே விடுதலைப் புலிகளின் மாபெரும் கூடாரமாகிக்கொண்டிருந்த விஷயம் பிடிபட்டது.

இந்திரா நகர் மட்டுமல்லாமல் தோமலூரிலும் அவர்களுக்கு இன்னொரு மறைவிடம் இருக்கும் விஷயம் தெரியவந்தது.

இதனிடையே, பெங்களூரில் ரங்கநாத் என்ற ஒரு தொழிலதிபரின் லேத் பட்டறையைப் புலிகள் வாங்குவதற்கான பேரம் பேசப்பட்டிருந்தது.

இந்த விஷயம் சி.பி.ஐக்கு முதலில் தெரியாது.

ரங்கநாத்துக்குத் தொழில் நஷ்டம்.

பண நெருக்கடி. புலிகளுக்கோ, ஆயுதங்கள் செய்ய லேத் பட்டறை வேண்டும்.

எனவே இரு தரப்புக்கும் பொதுவான ஒரு பெங்களூர் தமிழ்த் தீவிரவாதி, சுரேஷ் மாஸ்டரையும் ரங்கநாத்தையும் சந்திக்க வைத்து முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார்கள்.

தவிரவும் காயமடைந்த விடுதலைப் புலிகளைத் தங்கவைக்க புத்தனஹள்ளியில் இருந்த ரங்கநாத்தின் வீட்டை அவர்கள் உபயோகிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

அந்த வீட்டில்தான் சிவராசனையும் சுபாவையும் சுரேஷ் மாஸ்டர் தங்கவைத்திருந்தார்.

விடுதலைப் புலிகளைக் குறிவைத்துத் தேடிக்கொண்டிருந்த சி.பி.ஐக்கு, பெங்களூர் தோமலூர் வீட்டைத்தாண்டி நகரமுடியாமல் ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது.

காரணம் இந்த ரங்கநாத். அவர் விடுதலைப் புலி அல்ல. அவரைப் பற்றி எங்களுக்கு யாரும் எந்தத் தகவலும் தந்திருக்கவில்லை.

அப்படியொரு பாதுகாப்பான இடத்துக்கு சிவராசனும் சுபாவும் போய்ச் சேர்ந்த விஷயமெல்லாம் பின்னால் வேறொரு வகையில் தற்செயலாகவே எங்களுக்குக் கிடைத்தது!

கோனனகுண்டே

ரங்கநாத் ஒரு விடுதலைப் புலி அல்ல.

இலங்கைத் தமிழரும் அல்லர்.

ஆனால் ராஜிவ் காந்தி படுகொலையில் தேடப்படும் மிக முக்கியக் குற்றவாளிகளுக்கு அவர் ஏன் அப்படி அடைக்கலம் தரவேண்டும்?

புலிகள் தந்த பணம் காரணமாயிருக்கலாமா என்றால், சிவராசன் இருப்பிடத்தை அவர் சொல்லியிருந்தால், காவல் துறையே அவருக்குப் பல லட்சங்கள் தந்திருக்குமே? நாங்கள் அறிவித்திருந்தோம்.

சிவராசனைக் கண்டுபிடிக்க உதவினால் பத்து லட்சம் ரூபாய்.

சுபாவின் இருப்பிடம் தெரிவித்தால் ஐந்து லட்சம் பரிசு.

பணக்கஷ்டத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் ரங்கநாத்துக்கு இதைவிடப் புலிகள் அதிக பணம் கொடுத்திருக்க முடியாதே.

போலீஸிடம் பயந்து அவர் பேசாதிருந்துவிட்டாரா? என்றால் புலிகள் மீது அவருக்குப் பயமில்லையா?

தனது புத்தனஹள்ளி வீடு தவிர மாண்டியாவில் வேறு இரு இடங்களிலும் அவர் காயமுற்ற விடுதலைப் புலிகளைப் பராமரிக்க வீடு பார்த்துக் கொடுத்திருக்கிறார்!

தெரிந்தே ஒரு பெரிய குற்றத்துக்குத் துணை போவதற்குத் தனியாகக் காரணங்கள் தேடிக்கொண்டிருக்க முடியாது. அது ஒரு மனப்பாங்கு. வினோத விருப்பம்.

தமிழ் உணர்வு என்பது அந்த விருப்பத்தின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.

ஆனால் தெரியாமல் செய்துவிட்ட குற்றம் என்று அதனை வருணிப்பதை என்னால் ஏற்கவே முடியாது. தெரிந்தே செய்த குற்றம்தான்.

ஏன் செய்தார், எது அவரைச் செய்யத் தூண்டியது என்பதைக் காட்டிலும் செய்த காரியத்தின் பரிமாணத்தை அவர் முழுதுமாக உணர்ந்தேதான் செய்தார் என்பதைப் பார்க்க, அவரது குற்றமும் பெரிதே.

இந்திரா நகர் வீட்டில் நடைபெற்ற அதிரடிச் சோதனை, அங்கே இரண்டு விடுதலைப் புலி இளைஞர்கள் சயனைட் அருந்தி இறந்தது பற்றி செய்தித்தாள்களில் பக்கம் பக்கமாகச் செய்தி வர, கர்நாடக மாநிலம் முழுதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது.

நமக்குச் சம்பந்தமில்லாத யாரோ நமது மண்ணில் குற்றம் புரிந்துகொண்டிருக்கிறார்கள், நமக்கு இதனால் ஆபத்து வரும் என்கிற பயம் அவர்களிடையே பரவலாக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, எங்கெல்லாம் தமிழர்கள் இருந்தார்களோ, எங்கெல்லாம் மாநிலத்தில் தமிழ்க்குரல் கேட்டதோ, அங்கெல்லாம் கன்னட மக்கள் கவனமுடனும் கூர்மையாகவும் உற்று நோக்க ஆரம்பித்தார்கள்.

சந்தேகத்துக்கு இடமாக எந்த நடமாட்டம் இருந்தாலும் உடனே காவல் துறைக்கு போன் செய்யத் தொடங்கினார்கள்.

இதன் தொடர்ச்சியாக மாண்டியா மாவட்டத்தில் உள்ள மூதடி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு, சில புதிய மனிதர்கள்மீது திடீரென்று சந்தேகம் உண்டாக ஆரம்பித்தது.

அவர்கள் அந்த கிராமத்துக்குப் புதிதாக வந்திருந்தவர்கள்.

வாடகைக்கு வீடு எடுத்து வந்து தங்கியிருந்தவர்கள்.

சினிமா எடுக்கிறவர்கள் என்பதாக அவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அவர்களுக்கு அப்போது தெரியாது. (சி.பி.ஐக்கும் தெரியாது!) மூதடி போலவே பிரூடா என்ற கிராமத்திலும் அதே போன்ற சில புதியவர்கள் அப்போது வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள்.

அந்தக் கிராமத்து மக்களுக்கும் அவர்கள்மீது லேசான சந்தேகம் இருந்தது. இவர்கள் ஆகஸ்ட் 18ம் தேதி தமது சந்தேகத்தை உள்ளூர் காவல் நிலையத்தில் புகாராகப் பதிவு செய்தார்கள்.

உள்ளூர் போலீசார் இந்த இரண்டு கிராமத்து வீடுகளுக்கும் பரிசோதனைக்காகச் செல்ல, அவர்கள் சற்றும் எதிர்பாராவிதமாக உள்ளே இருந்தவர்கள் சயனைட் கடித்துவிட்டார்கள்.

அப்போதுதான் அவர்கள் விடுதலைப் புலிகள் என்பதே போலீசுக்குத் தெரியும். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூதடியில் இருந்த வீட்டில் ஒன்பது பேர் இருந்தார்கள்.

பிரூடா வீட்டில் எட்டுப்பேர். ஆக, பதினேழு பேர். இவர்களுள் பன்னிரண்டு பேர் போலீசைப் பார்த்த மாத்திரத்தில் சயனைட் சாப்பிட்டு இறந்துவிட, மிச்சமிருந்த ஐவரும் மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டார்கள்.

விஷயம் பெரிதாகிவிட்டது. எத்தனை சயனைட் மரணங்கள்! கர்நாடக காவல் துறை அதிகாரிகள் குழு உடனே மாண்டியாவுக்குச் சென்றது.

விசாரணையில், அந்த இரு வீடுகளையும் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தவர் தொழிலதிபர் ரங்கநாத் என்பது தெரியவந்தது. ரங்கநாத்? அப்போதுதான் அந்தப் பெயர் எங்கள் கவனத்துக்கே வருகிறது.

தமிழ்ப் பெயர்.

ஆனால் இலங்கைத் தமிழர் வைத்துக்கொள்ளும் விதமாக இல்லை.

தவிரவும் அவர் ஒரு தொழிலதிபர் என்று சொல்லப்பட்டது. அவர் தொடர்புடய ஒரு பெங்களூர் முகவரியும் கிடைத்தது.

அதற்குமேல் தாமதிக்காமல் அவரது தொழிற்சாலை, புத்தனஹள்ளி வீடு என்று அடுத்தடுத்து முகவரி பிடித்து அவரை நெருங்க போலீசுக்கு அதிக அவகாசம் பிடிக்கவில்லை.

ஆனால் பெங்களூர் போலீஸ், புத்தனஹள்ளி வீட்டுக்குச் சென்ற சமயம் அவர்கள் அங்கிருந்து தப்பித்து, ரங்கநாத்தின் மனைவி மிருதுளாவின் சகோதரர் வீட்டுக்குப் போயிருந்தார்கள்.

அதையும் அன்றே தேடிக் கண்டுபிடித்து அன்று (ஆகஸ்ட் 18) மாலையே மிருதுளாவைப் பிடித்தார்கள்.

மனைவியை அங்கே விட்டுவிட்டு கோனனகுண்டேவுக்குத் தனியே புறப்பட்டுப் போன ரங்கநாத்தை உள்ளூர்ப் பெண்மணி ஒருவர் அடையாளம் கண்டு, காவல் துறையிடம் சொல்லிவிட, தப்பியோட முயன்ற அவரையும் கைது செய்தார்கள்.

ராஜிவ் கொலைவழக்கில் எங்களிடம் வாக்குமூலம் அளித்த அத்தனை பேரைக் காட்டிலும் ரங்கநாத்தின் மனைவி மிருதுளா தாமாக விரும்பி அளித்த வாக்குமூலம் என்னைப் பொருத்தவரை மிகவும் முக்கியமானது.

இந்த வழக்கில் இந்தப் பெண்மணி ஒரு முக்கியமான பாத்திரம்.

தமது கணவரின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, பதினாறு நாள்கள் விடுதலைப் புலிகளுக்கு அவர் அடைக்கலம் அளித்திருந்தார்.

போலீசைக் கண்டதும் மடை திறந்த வெள்ளம் போல் தனது மனத்தில் இருந்த அத்தனையையும் ஒப்பித்துவிட்டார்.

வாக்குமூலங்கள் அனைத்தையும் அப்படியே உண்மையென்று எந்தக் காவல் அதிகாரியும் நம்பிவிட மாட்டார்.

ராஜிவ் கொலை வழக்கில் எங்களுக்கு வாக்குமூலம் அளித்த அத்தனை பேருமே ஓரளவு உண்மையையும் தாங்கள் தப்பிப்பதற்கான சாத்தியங்கள் உள்ள இடங்களை ஃபோக்கஸ் செய்யும் விதமாகவும்தான் பேசியிருந்தார்கள்.

பலபேரின் வாக்கு மூலங்களைத் தனித்தனியே வாங்கும்போது ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்ப்போம். அனைவரது வாக்குமூலமும் பொருந்திப் போகும்

இடங்களை மட்டுமே உண்மை என்பதாக எடுத்துக்கொள்வது வழக்கம்.

வித்தியாசங்கள் இருக்குமிடங்களை வட்டமிட்டு, திரும்பவும் துப்புறவாக விசாரிக்கத் தொடங்குவோம்.

இதுதான் நடைமுறை. ஆனால் மிருதுளா அளித்த வாக்குமூலம், முற்றிலும் வேறு வகையானது.

தன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த ரகசியங்களை எப்படியாவது இறக்கிவைத்தால் போதும் என்கிற தவிப்புடன் அவர் பேசினார். அவரது பேச்சில் பொய் இல்லை.

அது அவர் கண்ணிலேயே தெரிந்தது. சிவராசன் கூட்டத்தினரை நெருங்குவதற்கு இறுதியில் எங்களுக்கு உதவி செய்தது மிருதுளாதான். அந்தப் பதினாறு நாள் நரக அனுபவம் குறித்து அவர் விவரித்த தகவல்கள்தாம்.

நடந்ததை இப்படி வரிசைப்படுத்தலாம்: பெங்களூரில் விடுதலைப் புலிகள் தங்குவதற்கும் சிகிச்சை எடுப்பதற்கும் சில மறைவிடங்கள் வேண்டியிருந்தன.

அதனை ஏற்பாடு செய்வதற்காக அலைந்துகொண்டிருந்த சமயம், ரங்கநாத்தைப் பற்றி உள்ளூர் திராவிடர் கழகப் பிரமுகர்கள் சிலர் மூலம் சுரேஷ் மாஸ்டருக்குத் தெரியவந்திருக்கிறது.

நலிந்த தொழிலதிபர் ரங்கநாத். பணத்தேவையால் அல்லாடிக்கொண்டிருந்த ரங்கநாத். தமிழர். தவிரவும் தமிழ் உணர்வாளர்.

எனவே அவரை நெருங்கவும் உதவி கோரவும் பெரிய சிரமங்கள் இருக்கவில்லை.

ரங்கநாத்துக்கு புத்தனஹள்ளியில் ஒரு வீடும் கோனனகுண்டேவில் ஒரு வீடும் இருந்தன.

புத்தனஹள்ளி வீட்டைத்தான் சிவராசன் குழுவினர் தங்குவதற்கு அவர் அளித்திருந்தார். மிருதுளாவுக்கு இது பிடிக்கவில்லை.

ஆனாலும் கணவரின் வற்புறுத்தலால் பேசாமல் இருந்திருக்கிறார்.

அந்த வீடுகள் போதாமல், மாண்டியாவில் மலைப்பகுதியில் வேறு இரண்டு வீடுகள் எடுக்கவும் ரங்கநாத் முன்னின்று ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த வீடுகளில் பல விடுதலைப் புலிகள் வந்து தங்க ஆரம்பித்தார்கள்.

சென்னையிலிருந்து வெளியேற வழி தேடிக்கொண்டிருந்த சிவராசனையும் சுபாவையும் ஒரு டேங்கர் லாரியில் ஒளித்துவைத்து பெங்களூருக்கு அனுப்ப ஆவன செய்த திருச்சி சாந்தன், அவர்களை இந்த ரங்கநாத்தின் புத்தனஹள்ளி வீட்டில்தான் தங்க வைத்திருந்தார்.

(ஏற்பாடுகள் செய்தது, சுரேஷ் மாஸ்டர்.) வீட்டுக்கு வரும்போது ரங்கநாத்துக்கு அவர்கள் சிவராசன், சுபா என்பது தெரியாது.

அதாவது ராஜிவ் கொலையாளிகள் என்பது தெரியாது. ஆனால் பேப்பரில் புகைப்படங்கள், தொலைக்காட்சி செய்திகள் பார்த்தபிறகு, கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறோம் என்கிற மெல்லிய பதற்றம் உருவாகியிருக்கிறது.

அவரது மனைவி மிருதுளாவுக்கு இது முற்றிலும் பயத்தையும் கலவரத்தையும் கொடுத்திருக்கிறது.

அவர்களை உடனே வெளியேறச் சொல்லி அவர் தம் கணவரிடம் கேட்க, அவர் ஏதேதோ சொல்லி, சமாதானப்படுத்தியிருக்கிறார்.

இந்திரா நகர் வீட்டில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக, செய்தி வெளியே வந்துவிட, சிறப்புப் புலனாய்வுக்குழு பெங்களூருக்கு மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துவிட்ட விஷயம் ரங்கநாத்துக்குப் புரிந்துவிட்டது.

மாண்டியா கிராமத்தில் நிகழ்ந்த பன்னிரண்டு சயனைட் மரணங்களை மறுநாள் பேப்பரில் படித்ததுமே அவருக்குத் தீர்மானமாகி விட்டது. எப்படியும் மாட்டிக்கொள்வோம்.

‘அவர்கள் மோப்பநாய் மாதிரி நம்மைத் துரத்துகிறார்கள். இங்கும் வந்து விடுவார்கள்.

உடனே புறப்பட வேண்டும்’ என்று மிருதுளாவிடம் சொல்லிவிட்டுத்தான் புத்தனஹள்ளி வீட்டிலிருந்து கிளம்பி, கோனனகுண்டே வீட்டுக்குப் போயிருக்கிறார்கள்.

முன்தினம் வரை அவர்கள் புத்தனஹள்ளியில் சிவராசன் குழுவினர் தங்கியிருந்த வீட்டில்தான் இருந்திருக்கிறார்கள். விஷயம் கைமீறிக்கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்திருந்தது.

மிருதுளாவால் ஏதாவது பிரச்னை வரலாம் என்று சிவராசனுக்குத் தெரிந்திருந்தது.

உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவரை (மிருதுளாவுக்கு ஆஸ்துமா தொந்தரவு) மருத்துவமனைக்குப் போகக்கூட அனுமதிக்கமாட்டேன் என்று சிவராசன் கூறியிருக்கிறார்.

ரங்கநாத், தாம் பார்த்துக்கொள்வதாகச் சொல்லித்தான் மிருதுளாவை வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார்.

மருத்துவமனைக்குப் போய்விட்டு அங்கிருந்து புத்தனஹள்ளி வீட்டுக்கு அவர்கள் செல்ல, அதற்குள் மாண்டியா சம்பவம் தெரிந்துவிட்ட படியால் கோனனகுண்டேவில் வாடகைக்கு எடுத்த புதிய வீட்டுக்குப் போகும்படியானது. நடந்தது இதுதான்.

கர்நாடகக் காவல் அதிகாரிகள் மிருதுளாவிடம், இப்போது சிவராசனும் சுபாவும் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டார்கள். ‘கோனனகுண்டே வீட்டில்தான் இருக்கிறார்கள். என்னோடு வந்தால் காட்டுகிறேன்!’ என்று அவர் சொன்னார்.

அந்த ஆகஸ்ட் 18ம் தேதி இரவை மறக்கவே முடியாது.

ஒரே ஒரு போலீஸ் ஆபீசரை மட்டும் ஒரு வாடகை காரில் அழைத்துக்கொண்டு மிருதுளா கோனனகுண்டேவுக்குச் சென்றார்.

சிவராசன் பதுங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு வீட்டின் பாத்ரூமிலிருந்து அந்த அதிகாரி பார்த்தார்.

மே 21ம் தேதி இரவு தப்பித்துக் காணாமல் போன சிவராசன், சுபா மட்டுமல்லாமல் நேரு என்கிற இன்னொரு விடுதலைப் புலி உறுப்பினர், சுரேஷ் மாஸ்டர், ரங்கன், அம்மன், ஜமுனா ஆகியோரும் அந்த வீட்டில்தான் அப்போது இருந்தார்கள்!

தொடரும்…Post a Comment

Protected by WP Anti Spam